சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 25, 2018

இருவேறு உலகம் – 106


விஸ்வத்தின் சக்திகளுக்கான பயணம் இனிமையாய் இருக்கவில்லை. ஆரம்பத்தில் தேடிப் போன குருவே அவனை சீடனாக ஏற்றுக் கொள்ளவில்லை. மவுண்ட் அபுவில் சதானந்தகிரி சுவாமிஜியிடம் ஆர்வத்துடன் வேண்டி நின்ற தருணம் இப்போதும் அவன் மனதில் பசுமையாகவே இருக்கிறது. அவர் மறுத்து விட்டார். அவரது மறுப்பு ஏமாற்றமாக இருந்தாலும் கூட அவன் தேடலைத் தடுத்து நிறுத்தி விடவில்லை. வாழ்க்கையில் ஒரு கதவு மூடியவுடன் எல்லாமே முடிந்து விட்டது என்று ஓய்ந்து போகும் ரகம் அல்ல அவன். அடுத்தடுத்த கதவுகளைத் தட்டிப் பார்ப்பதில் அவனுக்குச் சலிப்போ தயக்கமோ இருக்கவில்லை. சில கதவுகள் திறந்தன. ஒவ்வொரு இடத்திலும் உள்ளே நுழைந்தவன் தனக்குச் சொல்லிக் கொடுத்தவரை விட ஒரு படி உயராமல் வெளியே வந்ததில்லை.

ஒரு நாளுக்கு அவன் மூன்று மணி நேரங்களுக்கு மேல் உறங்கியதில்லை. காலத்தை அவனுக்குப் பயனில்லாத விஷயங்களில் வீணாக்கியதில்லை. தேவைக்கு அதிகம் பேசியதில்லை. தேவைக்கு அதிகமாகப் பேசியதைக் கேட்டதும் இல்லை. சிந்தித்தான். பேரறிவாளர்களின் சிந்தனைகளைப் படித்தான். அந்த சிந்தனையைத் தன் சிந்தனையாகப் பதியவைத்துக் கொண்டு மறுபடி அதிகம் சிந்தித்தான். அந்த சிந்தனை தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் வரை அந்த சிந்தனையாகவே வாழ்ந்தான். அந்த ஜிப்ஸி பற்ற வைத்து விட்டுப் போன அக்னி எரிமலை ஜுவாலையாய் எரிந்து கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை கூடிக் கொண்டே வந்ததே ஒழிய தணிந்ததோ குறைந்ததோ இல்லை.

ஓரளவு உயர்சக்திகளைத் தன் வசமாக்கிக் கொண்ட பின் மவுண்ட் அபுவுக்கு மறுபடி போனான். சதானந்தகிரி சுவாமிஜியின் ஆசிரமத்தில் அவரையே அவன் சக்திகளால் கட்டிப்போட்டான். மனிதர் பிரம்மப் பிரயத்தனம் செய்தும் அவரை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. முடிவில் முடியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டு முயற்சியை நிறுத்திக் கொண்ட பின் தான் அவரைக் கட்டவிழ்த்து விட்டு வந்தான். தன் சக்தியை அடுத்தவர்களுக்கு நிரூபிக்க அவன் அதன்பின் எப்போதும் விளையாட்டாய் முயற்சி எடுத்ததில்லை.


அவன் இப்படி  வளர்ந்து வரும் சமயத்தில் பலரும் இன்னொரு மனிதரைப் பற்றிப் பேசினார்கள். ‘மாஸ்டர்’ என்றே அவரை அழைத்தார்கள். அவர் இருந்த சக்தி வாய்ந்த ரகசிய ஆன்மிக இயக்கத்தைப் பற்றிப் பேசினார்கள். அந்த இயக்கத்தின் அங்கத்தினர்கள் பெரிய பெரிய பதவிகளிலும், பெரிய பெரிய நிலைகளிலும் இருப்பதைச் சொன்னார்கள். அறிவுஜீவிகள் இருக்கும் இயக்கம் என்றும் இந்த உலகத்தின் நன்மைக்காகவே இயங்கும் இயக்கம் என்று சொன்னார்கள். ஏகப்பட்ட சொத்துக்கள் அந்த இயக்கத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். முக்கியமாய் அறிவு, அதிகாரம் என்ற இரு வார்த்தைகள் அவனை மிகவும் ஈர்த்தன.

விஸ்வத்தின் அடுத்த இலக்காக அந்த இயக்கம் அமைந்தது. ஒரு மாத காலம் அந்த இயக்கத்தைப் பற்றியும் மாஸ்டரைப் பற்றியும் அறிய வேண்டிய தகவல்கள் எல்லாவற்றையும் அறிந்தான். பின் ஒரு நாள் மாஸ்டரை தூரத்தில் இருந்து கவனிக்கப் போனான். மாஸ்டர் அப்போது ரிஷிகேசத்தில் தன் குருவுடன் தங்கியிருந்தார். அந்தக் குடிலுக்கு அருகில் ஒரு அழகான தோட்டத்தை மாஸ்டர் அமைத்திருந்தார். அந்தச் செடிகளுக்கு அவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கையில் தான் விஸ்வம் மாஸ்டரை முதல் முதலில் பார்த்தான். அவன் பார்த்த அடுத்த கணமே மாஸ்டர் அவன் இருந்த பக்கம் திரும்பினார். மின்னல் வேகத்தில் ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்ட விஸ்வம் மாஸ்டரின் உணர்வுகளின் நுட்ப நிலையை முதல் பார்வையிலேயே உணர்ந்து கொண்டான். சாதாரணமாய் பார்த்த முதல் கணத்திலேயே தான் பார்க்கப் படுவதை அறிய முடிந்த அவர், அவன் தன் சக்தி அலைகளைப் பிரயோகப்படுத்தி இருந்தால் கண்டிப்பாக அவனை அந்த சக்தி அலைகளிலேயே ஊடுருவி முழுவதுமாய் அறிந்திருப்பார். வாழ்க்கையில் முதல் முறையாகத் தனக்கு இணையான ஒரு மனிதரை விஸ்வம் சந்தித்திருப்பதாய் உணர்ந்தான்.

அந்த இயக்கத்தில் சேர்வதற்கு முன் தன்னை முழுமையாகத் தயார்ப்படுத்திக் கொண்டு தான் வந்தான். இயக்கத்தின் ஒரு ஆன்மிக உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு ஆன்மிகத்தில் மிக ஈடுபாடு இருப்பதாகவும், உலக நன்மைக்கே ஆன்மிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நம்புவதாகவும் அவரிடம் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் தங்கள் இயக்கத்தின் நிலைப்பாடுகளாகவே இருப்பதை உணர்ந்த அந்த உறுப்பினர் தங்கள் இயக்கத்தில் அவனைச் சேர்த்து விட்டார். முதல் முறை மாஸ்டர் இல்லாத சமயமாகத் தான் அந்த உறுப்பினருடன் குருவைச் சந்திக்கப் போனான். அங்கு போவதற்கு முன் தன் எண்ண அலைகளையும், சக்தி அலைகளையும் மறைத்துக் கொண்டு போனான்.

தாமிரத் தாம்பாளத்தில் பழங்கள், பூக்கள், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை எல்லாம் எடுத்துக் கொண்டு, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு பரமசாதுவாய் வந்த விஸ்வத்தை குரு சந்தேகப்படவில்லை. அதற்குக் காரணமும் இருக்கவில்லை. அவரும் ஓரளவு சக்தி அலைகளில் தேர்ச்சி பெற்றவர் தான் என்றாலும் அவனைச் சந்தேகப்படாததால் அவனை அலசப் போகவில்லை. அப்படி அலசியிருந்தாலும் கண்டுபிடித்திருக்க முடியாதபடி விஸ்வம் மறைத்து தான் வைத்திருந்தான். அவனுக்கு ஆசி வழங்கி இயக்கத்தில் சேர்த்துக் கொண்டார்.  

இந்த அலைகளைப் படிக்கும் சக்தி படைத்தவர்கள் கூட, கவனத்தோடு அதற்கு முயன்றால் தான் படிக்க முடியும். இல்லாவிட்டால் அவற்றை அறிந்து கொள்ள முடியாது. எதிரே ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருந்தாலும், அது எழுதப்பட்டிருக்கும் மொழியில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அதைத் திறந்து படித்தால் மட்டுமே ஒருவர் அதில் எழுதியிருப்பதை அறிய முடியும் அல்லவா? அதே போல் தான் அடுத்தவரை அறிய முடிவதும். எத்தனை தான் யோகசக்திகளே பெற்றிருந்தாலும் கவனத்தை அதன் பக்கம் திருப்பாத வரை அதன் முழுத்தன்மையை அறிய முடியாது. இதை விஸ்வம் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். முக்கியமாய் மாஸ்டரை நெருங்கி வரும் போதெல்லாம் அவர் கவனம் முழுமையாய் தன் பக்கம் வராதபடி பார்த்துக் கொண்டான். ஓரளவாவது வந்தே தீரும் என்ற முக்கியமான சூழ்நிலைகளில் மேலான சக்தி கவசம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டே வந்தான். இயல்பிலேயே நுட்பமான உணர்வுகள் கொண்ட அவர் அவன் விஷயத்தில் சந்தேகமோ, ஆர்வமோ கொள்ளாதபடி விஸ்வம் மிகவும் கவனமாக இருந்தான். அவனுடன் இருக்கும் சந்தர்ப்பங்களில் ஒரு முறையாவது அவர் முழுமையான கவனத்தோடு சக்தி அலைப் பிரயோகத்தை அவன் மீது ஏற்படுத்தியிருந்தால் அது அந்தக் கவசத்துடன் மோதித் திரும்புவதை அவர் கண்டிருப்பார். மிக மிகக் கவனத்துடன் அப்படி நடந்து விடாதபடி விஸ்வம் பார்த்துக் கொண்டான்.

பெரும்பாலும் மாஸ்டரின் கவனம் எல்லாம் ஆன்மிகத்திலும், தத்துவத்திலும், இயற்கையின் ரகசியங்களை அறிவதிலுமேயே இருக்கும். குருவிடம் அவர் இருக்கும் போது அதிகமாய் அவர் பேசுவதும் ஆர்வம் காட்டுவதும் அவற்றில் தான். தவறியும் அது சம்பந்தமாக அவரிடம் அவன் பேசியதில்லை. அந்த ஆர்வம் மூலமாகத் தன் மீது அவர் கவனம் திரும்புவதை அவன் விரும்பவில்லை. சில நாட்கள் பலரோடு ஒருவனாகவே அந்த இயக்கத்தில் இருந்து வந்த விஸ்வம் மெல்ல அவர்கள் இயக்கத்தின் கணக்கெழுதும் போது சேர்ந்து கொண்டான். காலப் போக்கில் தன்னிடமே முழுக்கணக்கு எழுதும் வேலையும் வருமாறு பார்த்துக் கொண்டான்.

மிகச்சில சந்தர்ப்பங்களில் மாஸ்டருடன் நெருங்கி இருக்க வேண்டிய சூழல்களில் அவன் தன் அலைகளை அவருக்கு அடையாளம் காட்டி விடாமல் இருக்க தீவிர சக்தி சாதகம் செய்து விட்டு பின்னரே அவரிடம் வருவான். பின் அடுத்த கட்டமாக மாஸ்டர் ஏதாவது ஒன்றில் ஆழமாக இருக்கையில் அவர் அறியாமல் அவர் எண்ண அலைகளை சில வினாடிகள் படிக்க ஆரம்பித்தான். வினாடிகள் நிமிடங்களின் அளவில் நீண்டால் அவர் அதை உணர்ந்து விடுவார். அந்த அளவு அவர் உணர்வுகள் சூட்சுமமானவை. எனவே மிக கவனமாக அவரிடம் வினாடிகளின் அளவில் மட்டுமே அவன் பரிசோதனைகளை நடத்தியிருக்கிறான். அவன் தன் வாழ்க்கையில் மிக அதிகமாக சக்திகளை செலவிட்டது மாஸ்டர் விஷயத்தில் தான்.

ஒவ்வொரு சக்தியையும் செலவிடுவது பெரிதல்ல. அதை மீண்டும் நிரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கு சாதகம் செய்ய வேண்டும். அதனாலேயே அனாவசியமாய் தன் சக்திகளை அவன் விரயம் செய்ததில்லை. சாதாரண வழியிலேயே ஒன்றைச் செய்ய முடியுமானால் அதை அந்த சாதாரண வழியிலேயே செய்வான். ஒருபோதும் சக்திப் பிரயோகம் செய்து சக்தியை வீணாக்கியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே, தேவைப்படும் அளவில் மட்டுமே சக்தியைச் செலவு செய்தவன் மீண்டும் சாதகம் செய்து சக்தியைத் தன்னில் நிரப்பிக் கொள்ளாமல் உறங்கச் சென்றதில்லை.  அதைச் செய்வதில் அவன் களைத்துப் போனதில்லை.   

இந்த சக்திகளை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்வதாய் உத்தேசம், உன் கடைசி இலக்கு தான் என்ன என்று எத்தனையோ ஆசிரியர்கள் அவனிடம் கேட்டிருக்கிறார்கள். அவன் தன் கடைசி இலக்கை அவர்களிடம் சொன்னதில்லை. அவர்களிடம் மட்டுமல்ல அவன் யாரிடமும் சொன்னதில்லை. அவன் மட்டுமே அதை அறிவான். அவன் இலக்கு நிறைவேறும் போது இந்த உலகமும் அதை அறியும். அவன் விதியை எழுதிக் கொண்டிருக்கும் அவன் ஒரு நாள் இந்த உலகத்தின் விதியையும் எழுத ஆரம்பிப்பான்.

(தொடரும்)
என்.கணேசன் 

5 comments:

  1. Superb sir. A great novel with a powerful villain. Loved every line of this chapter.

    ReplyDelete
  2. மதிவதனிOctober 25, 2018 at 6:31 PM

    என்ன சார் இப்படி ஸ்ட்ராங்கான ஒரு வில்லன் கிட்ட க்ரிஷையும், ஹரிணியையும் மாட்ட விட்டிருக்கீங்க. ஏலியனும் இல்லை. என்ன செய்து விஸ்வத்தை அவர்கள் சமாளிக்கப் போகிறார்கள்?

    ReplyDelete
  3. ஆழ்மன சக்தியை அடையும் முறை பற்றி.... நீங்கள் கூறிய அனைத்தையும்.... விஸ்வம் பின்பற்றுகிறான்...கூடவே ஜாதகம் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறான்...நிறைய புத்தகங்கள் படிக்கிறான்...

    எனக்கு என்னமோ.. "விஸ்வம் என்கிற மர்ம மனிதன் என்.கணேசன் ஐயாவோட சீடனாக இருப்பானோ?" என்ற சந்தேகம் ஏற்படுகிறது....

    ReplyDelete
  4. o my god! my heart is beating uncontrollably due to this power villan against Krish!

    ReplyDelete
  5. Very calculative Viswam....
    உலகத்தின் விதியை மாற்றுவதால் அவனின் விதியும் மாறுமோ....?

    ReplyDelete