சிகரம் தொட்ட அகரம்-2
நிறைய
படிக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும், நோபல் பரிசு வாங்க வேண்டும்
என்றெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்த ஒரு அறிவு கூர்மை மிக்க பெண்ணை படிக்க
விடாமல், படிப்பை நிறுத்தி, பதினேழு வயதிலேயே திருமணம் செய்து வைக்க வீட்டார்
முடிவெடுத்தால் அந்தப் பெண்ணிற்கு எப்படி இருக்கும்? கல்கத்தாவைச் சேர்ந்த சந்தா
சவேரி (Chanda
Zaveri) என்ற வட இந்தியப் பெண்ணிற்குத் தலையில் இடியே
விழுந்தது போலத் தான் இருந்தது. என்ன சொல்லியும் வீட்டார் கேட்காமல் திருமணம்
நிச்சயித்து விட்டார்கள்.
கனவுகள் மட்டும் இருந்து உலக அனுபவம் அதிகம் இல்லாத
சந்தா சவேரி இந்த திருமண ஏற்பாட்டில் இருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிக்க
ஆரம்பித்தாள். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் கல்கத்தா வீதி ஒன்றில் வெயிலின்
கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்த கரேன் என்ற ஒரு அமெரிக்கப் பெண்ணை
மருத்துவமனையில் சேர்க்க சந்தா சவேரி அந்தப் பெண்ணின் கணவர் டேவிடிற்கு உதவி
இருக்கிறாள். அதன் மூலம் கரேனும் டேவிடும் அவளுக்கு நட்பாகி இருக்கிறார்கள்.
அமெரிக்கா திரும்பும் முன் அமெரிக்கா வந்தால் பாஸ்டனில் வசிக்கும் தங்களைச்
சந்திக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
திருமணத்திலிருந்து தப்பிக்க வழிகளை யோசிக்க ஆரம்பிக்கையில்
சந்தா சவேரிக்கு அந்த அமெரிக்க தம்பதிகளின் நினைவு வந்தது. அவர்கள் ஸ்பான்சர்
செய்தால் அமெரிக்கா செல்ல விசா கிடைக்கும் என்ற எண்ணம் வர அவர்களுக்குப் போன்
செய்து பேசினார். டேவிட் ஸ்பான்ஸர் கடிதம் அனுப்பவே, சந்தா சவேரி வீட்டை விட்டு
வெளியேறினார். தன்னிடம் இருந்த வைரத்தோடுகளை விற்று விமான டிக்கெட் வாங்கி அமெரிக்காவில்
பாஸ்டன் நகருக்குப் போனார்.
பட்டப்படிப்பு இல்லாத காரணத்தால் சந்தா சவேரிக்கு நல்ல
வேலை கிடைக்க அமெரிக்காவில் வாய்ப்பு இருக்கவில்லை. ஒரு மூதாட்டிக்குப்
பணிப்பெண்ணாக முதல் வேலையில் சேர்ந்தார். அவர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே
அந்த மூதாட்டி இறந்து போனார். 17 வயதேயான சந்தா சவேரிக்கு என்ன செய்வதென்றே
தெரியவில்லை. வெளிநாட்டில் இருக்கும் அந்த மூதாட்டியின் மகனுக்குப் போன் செய்த
போது அவர் சவக்கிடங்கிற்குப் போன் செய்யச் சொல்லி இருக்கிறார். புதிய தேசம், புதிய
இடம், இது போன்ற இக்கட்டான நிலை எல்லாவற்றையும் எப்படியோ சமாளித்து முடித்த
அவருக்கு சில நாட்களில் இன்னொரு மூதாட்டியிடம் பணி செய்யும் வேலை கிடைத்தது.
முதல் நாளிலேயே அந்த மூதாட்டி அசைவ சமையல் செய்யச் சொல்ல
சந்தா சவேரிக்கு உதறல் எடுத்தது. முட்டை கூட சாப்பிட சுத்த சைவ குடும்பத்தவரான
அவருக்கு அசைவ சமையல் செய்யத் தெரியாது என்று அறிந்த அந்த மூதாட்டி
கடையிலிருந்தாவது வாங்கித் தரச் சொல்லி இருக்கிறார். கடையும் எங்கே இருக்கிறது
என்று தெரியாது என்று கேள்விப்பட்ட மூதாட்டிக்கு கோபத்திற்குப் பதிலாக அந்தச் சிறு
பெண்ணிடம் கருணை பிறந்திருக்க வேண்டும். பலவற்றைக் கற்றுத் தந்து தன் மகளைப் போல
அவளைப் பார்த்துக் கொண்டார். படிக்க ஆசைப்பட்டு வீட்டை விட்டு ஓடி வந்தவள் என்று
தெரிந்த பின் 30000 அமெரிக்க டாலர் தொகை தந்து மேற்படிப்புக்கு வேண்டிய
அடிப்படைக் கல்வியை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்பியும்
வைத்திருக்கிறார்.
படித்து முடித்து வந்த சந்தா சவேரியை டேவிட் தன்
மாமனாரிடம் அறிமுகப்படுத்த அந்தப் பெண்ணிடம் தெரிந்த ஆர்வமும், இலட்சிய தாகமும்
அவரையும் கவர்ந்தது. அவர் சந்தா சவேரியைத் தன் மகளாக தத்து எடுத்துக் கொண்டு
தன்னுடன் கலிபோர்னியாவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு மேற்படிப்பு படித்த சந்தா
சவேரியை அவர் இடையில் இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர் குடும்பத்தாருடனும்
இணக்கத்தையும் ஏற்படுத்தித் தந்தார்.
மேற்படிப்பை முடித்த சந்தா சவேரி அடுத்தபடியாக இரு முறை
(1954 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில்) வேதியியலில் நோபல் பரிசு பெற்ற லினஸ் பாலிங்க்
(Linus Pauling) என்பவரிடம்
உயிர்-வேதியியல் (biochemistry) ஆராய்ச்சிக் கூடத்தில் பணிபுரிய விரும்பினார். ஆனால் லினஸ் பாலிங்க்
தன் ஆராய்ச்சிக் கூடத்தில் அங்குள்ள உபகரணங்களைக் கழுவி வைக்கும் பணியைத் தவிர
வேறு எந்தப் பணியும் இல்லை என்று கூறி விட்டார்.
அமெரிக்காவில் மிக அதிக மதிப்பெண்கள் வாங்கி மேற்படிப்பை முடித்திருந்த
சந்தா சவேரி சிறிதும் யோசிக்காமல் ”சரி, அந்த
வேலையையாவது தாருங்கள். உங்களிடம் ஏதாவது வேலை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறி வேலைக்குச் சேர்ந்து விட்டார். ஆராய்ச்சி செய்து முடித்து
விட்டு ஆராய்ச்சியாளர்கள் சென்ற பின் அங்கு சென்று அந்த உபகரணங்களைக் கழுவி சுத்தம்
செய்து கொண்டே தன் கவனிக்கும் திறனால் நிறைய தெரிந்து கொண்டார். அவர் அறிவுத்
திறமையையும், ஆர்வத்தையும் லினஸ் பாலிங்க் கவனித்தார்.
90 வயது ஆகியிருந்த அவருக்கு, தான் இனி அதிக காலம் வாழ மாட்டேன் என்று
தோன்ற ஆரம்பித்திருந்திருந்ததால் சாவதற்கு முன் தன் அனுபவ அறிவை அந்த இளம்
பெண்ணிற்குச் சொல்லிக் கொடுத்து விடத் தோன்றியது. நான்கு ஆண்டுகள் சந்தா
சவேரிக்குக் கற்பித்து விட்டு அவர் காலமானார்.
அவரிடம் கற்றதை அடிப்படையாக வைத்து மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து B2 Actigen என்ற தோல் சம்பந்தமான
மருந்தை முதன்முதலில் கண்டு பிடித்தார். ஆரம்பத்தில் மூதாட்டிகளுக்குப் பணி விடை
செய்கையில் படுத்த படுக்கையாக இருக்கும் நபர்கள் முதுகெல்லாம் புண்கள் ஆவதைப்
பார்த்து மனம் வருந்தி இருந்த அவர் தொடர்ந்து செய்த ஆராய்ச்சிகளில் தோல்
புண்ணாகாமல் இருக்கும் மருந்துகள்/க்ரீம்கள், தோல் சுருக்கங்கள் இல்லாமல்
இருக்கும் மருந்துகள்/க்ரீம்கள் கண்டு பிடித்தார். அவருடைய கண்டுபிடிப்புகளை அவரே
தயாரித்து விற்பனை செய்யும் Activor என்ற கம்பெனியை ஆரம்பத்தார்.
சிறிது காலம் கழித்த பின் Actiogen என்ற கம்பெனியை லாஸ்
ஏஞ்சல்ஸில் ஆரம்பித்தார். அதன் பின் அவர் தன் வாழ்வில் திரும்பிப்பார்க்க வேண்டி
இருக்கவில்லை. கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விட்டார். இன்று பல நூறு கோடிகள் வியாபாரம்
நடக்கும் நிறுவனமாக அது உள்ளது.
செல்வந்தர் வீட்டு மகளாய் பிறந்து சீரும் சிறப்புமாக வளர்ந்து வந்த
பெண் தன் இலட்சியத்திற்காக எடுத்துக் கொண்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வேலைக்குச்
சேர்ந்த முதல் நாளிலேயே அந்த வீட்டு மூதாட்டி இறந்ததை அபசகுனமாக நினைத்து அவர்
தளர்ந்திருந்தாலும், பணிப்பெண் வேலைகள் தன் அறிவுத் திறமைக்கு உகந்தது அல்ல என்று
நினைத்திருந்தாலும் இன்று நமக்கு அவரைத் தெரியாமல் போயிருக்கும். அவர்
பணிப்பெண்ணாக வேலை பார்த்தது கல்வி கற்று முடியும் வரை மட்டும் அல்ல. மேற்படிப்பு
படித்து முடித்த பின்னும் அந்த வேலையை லினஸ் பாலிங்கின் ஆராய்ச்சிக் கூடத்தில்
அவர் செய்யத் துணிந்தது அவருடைய அறிவு தாகத்தையும், வெற்றிக்காக எந்த உழைப்பையும்
செய்யத் தயங்காத உறுதியையும் காட்டுகிறது.
இன்று
மிகப் பெரிய நிறுவன அதிபராக இருந்த போதும் அவர் தன் ஆராய்ச்சிகளை விடவில்லை.
அதற்கு அவர் இப்போதும் முக்கியத்துவம் தருகிறார். அதே நேரத்தில் எல்லா
நேரமும் ஆராய்ச்சி, வியாபாரம் என்று அதிலேயே மூழ்கி விடாமல் சந்தா சவேரி தனக்கு
மிகவும் பிடித்த ஓவியம் தீட்டுதல், அர்ஜெண்டினாவின் டாங்கோ நடனம் ஆகியவற்றிற்கும்
நேரம் ஒதுக்கிக் கொள்கிறார்.
இலக்கை அடைய செய்ய நேர்கிற எந்த நேரான வேலையும் கீழானதல்ல. ”வெற்றிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை என்ன ஆனாலும் சரி கண்டிப்பாகச் செய்தே
ஆக வேண்டும் என்று உறுதியாக இருப்பது தான் வெற்றிக்கான ஒரே வழி” என்கிறார் சந்தா சவேரி. ”சூழ்நிலைகளில் அது
சரியில்லை, இது மாற வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால் எதுவும்
முடியாது” என்கிறார் அவர்.
அகரத்தில் இருந்து சிகரம் வரை செல்ல
விரும்பும் எவருக்கும் இதுவல்லவோ மிகப் பெரிய பாடம்!
-
என்.கணேசன்
இலக்கை அடைய செய்ய நேர்கிற எந்த நேரான வேலையும் கீழானதல்ல. ”வெற்றிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை என்ன ஆனாலும் சரி கண்டிப்பாகச் செய்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருப்பது தான் வெற்றிக்கான ஒரே வழி” என்கிறார் சந்தா சவேரி. ”சூழ்நிலைகளில் அது சரியில்லை, இது மாற வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால் எதுவும் முடியாது” என்கிறார் அவர்.
ReplyDeleteஒரு இலக்கை நோக்கி ஓடியவர்! தலைப்பு கச்சிதமான பொருத்தம். அவர் சொல்வது சரியாகத் தான் இருக்கும்.அதை எங்களுக்கு சொன்ன உங்களுக்கு நன்றி.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் !
ReplyDeleteஉத்வேகம் கொடுக்கிற அருமையான பதிவு!
ReplyDelete