அர்ஜுன் இருவர் முகமாற்றத்தையும் பார்த்து ஒரு கணம் திகைத்தான். அவன் சொன்னதில் இவர்கள் இருவரும் பாதிப்படைய என்ன காரணம் இருக்கக்கூடும் என்று அவன் மனம் ஆலோசித்தது.
இருவரில் வேகமாக பழைய மலர்ச்சிக்கு
மாறியவர் ராஜாராம் தான். “ஏதாவது ஞாபகம் வந்துச்சாடா?”
“ஒன்னும்
வரலை சித்தப்பா. நினைவு தெரிஞ்ச பிறகு இங்கே வந்து விளையாடினது எல்லாம் ஞாபகம்
இருக்கு. அதுக்கு முன்னாடி நடந்த எதுவும் ஞாபகம் வரலை.”
“மூனு வயசுல
நடந்தது எல்லாம் எப்படிடா ஞாபகம் வரும். யாருக்கும் அந்த
வயசுல ரொம்ப பாதிக்கிற மாதிரி எதாவது நடந்திருந்தா தான் ஞாபகம் இருக்கும். இல்லாட்டி
மனம் தானாக அதையெல்லாம் மறந்துடும்”
“நான் தாத்தா
ஞாபகமாவது வருதான்னு யோசிச்சேன். அதுவும் வரலை”
யசோதா குரல் கரகரக்கச் சொன்னாள். “அவர் எப்பவுமே
உன்னைத் தூக்கி தூக்கி வெச்சுக்குவார். ராஜாராமைக் கூட
அப்படி அவர் தூக்கிகிட்டதா எனக்கு ஞாபகம் இல்லை. கடைசியா
ஆஸ்பத்திரிக்குப் போறதுக்கு முன்னாடி கூட உன்னைத் தூக்கி கொஞ்சம் நேரம் வெச்சிகிட்டு
தான் போனார். அப்பவெல்லாம் அவருக்கு உடம்புக்கு ரொம்பவே முடியலை. ஆனாலும்
உடனடியா கிளம்பாம உன்னை எடுத்து கொஞ்சிட்டு பிறகு தான் போனார்...”
ராஜாராமின் கண்களும் ஈரமாவதை அர்ஜுனால் கவனிக்க முடிந்தது. அந்த வீட்டில் வாசுதேவன் உயிரோடிருந்த கடைசி தருணங்களை அவர்கள் இருவரும் மனதில் திரும்பவும் ஒளிபரப்பிப் பார்க்கிறார்கள் என்று அர்ஜுனுக்குத் தோன்றியது.
அர்ஜுன் சொன்னான்.
“அம்மாவும் அதைச் சொன்னாங்க.”
இருவர் முகங்களும் உடனடியாக இறுகியதையும் அர்ஜுன் கவனித்தான். அம்மா பற்றிச் சொன்னவுடன்
ஏன் இருவர் முகங்களும் இறுகுகின்றன?
இருவரில் ராஜாராம் தான் இப்போதும் முதலில்
மீண்டார். பழையபடி அவர் முகம் மலர்ச்சிக்கு மாறியது. யசோதா ஹால்
ஜன்னல் வழியே தெரிந்த மரத்தை வெறித்த பார்வை பார்த்தாள். மைதிலி
கேட்டாள். “என்ன சாப்பிடறடா காபி, டீ, ஜுஸ்”
“அதெதுவும்
வேண்டாம் சித்தி. அதெல்லாம் சாப்பிட்டா நீங்க செஞ்சிருக்கற வெஜிடபிள் பிரியாணியைக்
காலி செய்ய முடியாது.”
மைதிலி வாஞ்சையுடன் புன்னகைத்தாள். அவன் சாப்பிட
வருகிறான் என்று சொன்னவுடனேயே அவனுக்குப் பிடித்த வெஜிடபிள் பிரியாணியைச் செய்ய வேண்டும்
என்று முடிவெடுத்திருந்தாள். அவனுக்கு அவள் செய்யும் வெஜிடபுள் பிரியாணி என்றால் மிகவும்
பிடிக்கும். அவள் கண்டிப்பாக அதைச் செய்திருப்பாள் என்று யூகித்து அவன்
நிச்சயமாய்ச் சொன்னது அவளுக்குப் பிடித்திருந்தது. அவர்களுக்குப்
பிள்ளைகள் இல்லாததால் அர்ஜுனையும், நித்யாவையும் தான்
அவள் பிள்ளைகளாக நினைக்கிறாள். அவர்களும்
அவளைத் தாயாகத் தான் பார்க்கிறார்கள்...
ராஜாராம் சொன்னார். “உன்னோட
கட்டுரை விடிவெள்ளில படிச்சேண்டா. ரொம்ப நல்லா எழுதியிருந்தாய்.”
அவர் தன்னுடைய பல வேலைகளுக்கு நடுவில்
அவனுடைய கட்டுரையைப் படித்திருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “தேங்க்ஸ்
சித்தப்பா”
ராஜாராமின் செக்ரட்டரி தயக்கத்துடன்
வந்து நின்றார். ராஜாராம் பார்வையாலேயே என்ன என்று கேட்க அவர் சொன்னார். “அமைச்சர்
கதிரேசன் வந்திருக்கார்.”
அமைச்சர் கதிரேசன் மாநில நிதியமைச்சர். ராஜாராம்
யோசனையுடன் சொன்னார். “நான் அப்பாயின்மெண்ட் எதுவும் தரலையே.”
“இல்லை. அவர் கட்சி
அலுவலகத்திற்கு வந்தாராம். வழியில் உங்களையும் பார்த்துட்டு போலாம்னு....”
“நான் பிசியாய்
இருக்கேன்னு சொல்லு. ரொம்ப முக்கியமான விஷயம்னா அப்புறமா ஃபோன்ல பேசச் சொல்லு.”
தலையசைத்த செகரட்டரி போய் அமைச்சர்
கதிரேசனிடம் சொன்னார். “சார் பிசியாய் பேசிகிட்டு இருக்கார். ரொம்ப முக்கியமான
விஷயம்னா அப்புறமா ஃபோன்ல பேசச் சொன்னார்.”
வரவேற்பறையில் அமர்ந்திருந்த கதிரேசன்
முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் அவர் ஒன்றும் சொல்லாமல் எழுந்தார். “சார் யார்
கூட பேசிகிட்டிருக்கார்?”
“அவங்க அண்ணா
மகன் கூட பேசிகிட்டிருக்கார்.”
கதிரேசன் சிறிது நினைவுபடுத்திக் கொண்டு
சொன்னார். “பத்திரிக்கை நிருபராய் இருக்காரே அந்தத் தம்பியா?”
“ஆமாம். அவரே தான். தப்பாய்
நினைக்க வேண்டாம். சார் அவரோட குடும்பத்தாரோட இருக்கறப்ப வேற யாரையும் சந்திக்க
விரும்பறதில்லை..”
கதிரேசனுக்கு தமிழக அரசியல் களத்தின்
மூத்த குடும்பமாகக் கருதப்படும் வாசுதேவனின்
குடும்பம் என்றும் புரியாத புதிராகவே இருந்திருக்கிறது. வாசுதேவனின்
பிள்ளைகள் ஞானமூர்த்தியும், ராஜாராமும் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் நேரில்
சந்தித்துக் கொள்கையில் இருவரும் மிக ஒற்றுமையாய்த் தான் தோன்றுவார்கள். ராஜாராம்
அண்ணனுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தாலும் பொதுவெளியில் அண்ணனுக்கு எதிராக ஒரு வார்த்தை
பேசியதில்லை. அதே போல் ஞானமூர்த்தியும் தம்பிக்கு எதிராக எந்தக் கருத்தையும்
சொன்னதில்லை. இப்போது இவரும் தம்பி பையனிடம் பேசுவதை ஐந்து நிமிடம் நிறுத்தி
கதிரேசனைச் சந்திக்கத் தயாராக இல்லை..
விமல் அவனுடன் பேசிக் கொண்டிருந்த துறவி சிறிது நேரம் வாய்மூடக்
காத்திருந்தான். அந்தத் துறவி தைத்திரீய உபநிடதம் பற்றி உற்சாகத்துடன் பேசிக்
கொண்டிருந்தார். அவர் பேசியதில்
சத்தியமாக அவனுக்கு எதுவும் புரியவில்லை. தமிழ் அல்லது ஆங்கிலத்தில்
பேசியிருந்தாலே அவனுக்குப் புரிந்திருக்காது. அவரோ ஹிந்தியில்
பேசினார். வாய்ப்பு கிடைத்தால் ஹிந்தி சினிமா அல்லது ஹிந்தி சீரியலிலும்
நடிக்கும் ஆசை அவனுக்கு இருந்ததால் அவன் ஹிந்தியை நன்றாகப் பேசக் கற்றிருந்தான். அவனுக்கு
ஹிந்தியில் சாதாரணப் பேச்சைப் பேசவும், பேசினால் புரிந்து
கொள்ளவும் முடியவும். ஆனால் ஹிந்தியின் ஆன்மீகச் சொற்கள் அவனுக்குப் பழக்கமானவை
அல்ல. மேலும் அவனுக்கும் ஆன்மீகத்திற்குமே இடைவெளி அதிகம். ஆன்மீகத்தில்
இருப்பவர்களிலுமே கூட உபநிடதம் பற்றியெல்லாம் பேசும் ஆட்கள் மிகவும் குறைவு. பேசினால்
கேட்பவர்களும் குறைவு என்பதால் தன்னிடம் பேசக் கிடைத்த விமலை அந்தத் துறவி லேசில் விடுவதாக
இல்லை.
ஒரு சின்ன இடைவெளி கிடைத்தால் அதைப்
பயன்படுத்திக் கொள்ள விமல் ஆவலாக இருந்தான். அந்தத்
துறவி புதுடெல்லிவாசி. இன்ஸ்பெக்டர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அவர் பெயர்
ராஜ்நாத். அவருடைய ஒரே மகன் குடும்பத்தோடு ஜெர்மனியில்
இருக்கிறான். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடைய அவர், மனைவி காலமான
பிறகு துறவியாகி, விமல் இருக்கும் ஆசிரமத்திற்கு சென்ற வருடம்
வந்து சேர்ந்தவர். அவரிடம்
அவனுக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது.
அவர் களைப்பில் சிறிது நிறுத்தி மூச்சு விட்ட போது அவன் சொன்னான். “சுவாமி. நீங்கள் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை.”
அவன் எல்லாவற்றையும் உண்மை என்று சொல்லி விட்டதால் எதைச் சொல்கிறீர்கள்
என்று அவர் கேட்கவில்லை. விமல் அவர் அடுத்ததாய் எதையாவது பேச ஆரம்பிப்பதற்கு முன் அவசரமாய்ச் சொன்னான்.
”நான் ஒரு சிக்கலில் இருக்கிறேன்
சுவாமி”
“சொல்லுங்கள் சுவாமி என்ன சிக்கல்” என்று ராஜ்நாத் ஆர்வமாகக் கேட்டார்.
விமல் சொன்னான்.
“நான் குடும்ப வாழ்க்கையில் விரக்தி வந்து துறவியாகி இங்கே வந்திருக்கிறேன்.
வரும் போது என்னுடைய மொபைல் போனை உடைத்து சிம்மையும் உடைத்து எறிந்து
விட்டு வந்தேன். இனி குடும்பத்தில் யாருடனும் பேசவும் எனக்கு
விருப்பமில்லை. அந்தப்
போனில் நான் பேசினால் அவர்களுக்கு நான் இருக்கும் இடம் தெரிந்து விடும் என்று பயப்பட்டு
தான் அதைச் செய்தேன். இப்போது எனக்கு ஒரு சிக்கல்”
“என்ன சிக்கல்?”
“நான் என் சொத்தையும் பணத்தையும் ஒரு டிரஸ்டுக்கு எழுதிக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன்.
அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையை அவ்வப்போது
சொல்வதாகவும் தெரிவித்து விட்டு வந்திருக்கிறேன். இப்போது அவர்களிடம்
பேச எனக்கு ஒரு போன் தேவைப்படுகிறது.”
“அதனாலென்ன என் மொபைல் போனைத் தருகிறேன். நீங்கள் அதில்
பேசிக் கொள்ளலாம்.”
“ஓரிரண்டு
முறை பேசுவதானால் நான் உங்கள் மொபைல் போனில் பேசலாம். ஆனால் நான்
தந்து விட்டு வந்திருப்பது சுமார் ஏழரை கோடி ரூபாய் என்பதால் நான் தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல வேண்டி
வரும். அதனால் எனக்கு நிரந்தரமாகவே ஒரு மொபைல் போன் தேவைப்படுகிறது...”
ராஜ்நாத்தின் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. ஏழரை கோடி
சொத்தை தர்மம் செய்து விட்டு வந்திருக்கும் புண்ணியாத்மாவாக அவர் அவனைப் பார்த்தார்.
விமல் தொடர்ந்து சொன்னான்.
“... எனக்கு ஒரு மொபைல் போனும் எண்ணும் வேண்டும். மொபைல்
போனையாவது எந்தக் கடையிலாவது வாங்கிக் கொள்ளலாம். ஆனால் புதிய
எண்ணை வாங்குவது தான் எப்படி என்று தெரியவில்லை. என் பெயர்
விலாசம் தந்தால் என் குடும்பத்தினர் எதிர்காலத்தில் எப்படியாவது அதைத் தெரிந்து கொள்ளும்
வாய்ப்பிருக்கிறது. பெயர் விலாசம் தராமல் எப்படியாவது ஒரு மொபைல் சிம் பெற வழி
இருக்கிறதா?”


Many thanks
ReplyDelete