ராஜாராம் யாரந்தப் பெண் என்று
கேட்டவுடன் யசோதாவின் முகம் உடனடியாக மலர்ந்தது. முந்தைய
களைப்பு காணாமல் போனது. “என்னடா அர்ஜுன், அவன் சொல்றது
சரி தானா? யாரந்த பொண்ணு?”
மைதிலியும் உள்ளேயிருந்து சமையல் வேலையை
விட்டு விட்டு வெளியே வந்து விட்டாள். “அர்ஜுன்! நீ சொல்லவேயில்லை...”
அர்ஜுன் தன்னுடைய பாழாய்ப் போன வெட்கத்தை
நொந்து கொண்டான். முதலில் அம்மா அப்பாவிடம் கீதாவைப் பற்றிச் சொல்லாமல் இவர்களிடம்
சொல்வது சரியல்ல என்று அவனுக்குத் தோன்றியது. “இன்னும்
எதுவும் முடிவாகலை. ஆன பிறகு சொல்றேன்.” என்றான்.
யசோதா சொன்னாள். “சீக்கிரம்
முடிவு பண்ணுடா. முடிவான பிறகு நான் ஞானமூர்த்தி கிட்ட பேசறேன்.”
“சரி பாட்டி” என்ற அர்ஜுன், அவர்கள்
மறுபடியும் அவனுடைய திருமணம் பற்றிப் பேச ஆரம்பிக்கும் முன் தன்னுடைய கட்டுரைக்கான
பேட்டியைத் தொடர்ந்தான். எதிர்க்கட்சித் தலைவராக வாசுதேவன் இருந்த காலத்திலும், முதலமைச்சராக
அவர் இருந்த காலத்திலும் நடந்த சுவாரசிய நிகழ்வுகளைப் பற்றி அவன் கேட்டான். ராஜாராம்
நிறைய சுவாரசிய நிகழ்வுகளைச் சொன்னார். அவருடைய நினைவு
சக்தி, வழக்கம் போல் அவனைப் பிரமிக்க வைத்தது. ஆட்களுடைய
பெயர், தேதிகள், இடங்களின் பெயர்கள்
ஆகியவற்றை அவர் மிகச்சரியாய் நினைவு வைத்திருந்தார். ஒரு நிகழ்வைப்
பற்றி அவர் சொல்வாரேயானால் அந்த நிகழ்வின் போது யாரெல்லாம் இருந்தார்கள், என்ன சொன்னார்கள்
என்பதையெல்லாம் கூட பல காலம் கழித்தும் சரியாக அவர் நினைவு கூர்வது அவனுக்குப் பேராச்சரியமாக
இருந்தது. எல்லாமே அவருக்கு சரளமாக வந்தது. எதற்கும்
அவர் திணறவோ, யோசிக்கவோ இல்லை.
இதற்கு முன்பு ஒரு முறை அவரிடம் அவன்
ஆச்சரியமாகக் கேட்டிருக்கிறான். “எப்படி சித்தப்பா இவ்வளவு கச்சிதமாய் எல்லாத்தையும் ஞாபகம்
வெச்சிருக்கீங்க.”
“அதெல்லாம்
பெரிய விஷயம் இல்லைடா. முதல்ல நமக்கு அதை ஞாபகம் வெச்சிக்கணும்னு அக்கறை வேணும். அப்புறமா
தகவல்கள் ஒன்றோடு ஒன்றை மனசில் ஏதாவது வகையில் இணைச்சு வெச்சுக்கணும். அதன் பிறகு
நாம எப்போ அந்த விஷயத்துல ஒரு பகுதியை எடுத்தாலும், தானாக மற்றதெல்லாம்
நினைவுக்கு வந்துடும். அக்கறையும், மனசுல ஒழுங்குபடுத்தி
இணைச்சு வெச்சுக்கறதும் இருந்தால், எதையும் ஞாபகப்படுத்திக்கறது
ரொம்ப சுலபம்.” என்று அவர் சொல்லியிருக்கிறார்.
அவனும் அதைப் பின்பற்றி இருக்கிறான். அவரளவு
கச்சிதமாக இல்லா விட்டாலும் அவனும் ஓரளவு நன்றாக நினைவுபடுத்திக் கொள்கிறான். அவனுடைய
வேலையில் அது பெரிய உதவியாகவும் இருக்கிறது. ஆனால் அவர்
ஈடுபாடு காட்டும் துறைகளும், விஷயங்களும் ஏராளம். அத்தனையிலும்
அவர் நினைவு வைத்துக் கொள்வது பேராச்சரியம் தான்...
வாசுதேவன் முதல்வராக இருந்த காலத்தில் மூத்த அமைச்சராக இருந்த தணிகாச்சலம் தான், வாசுதேவனுக்குப் பின் முதல்வரானவர். அவர் இப்போதைய முதலமைச்சரின் தந்தை. அக்காலத்திலேயே இளைய அமைச்சராக இருந்த ரத்தினம் அடுத்து முதலமைச்சரானவர். அவர்களைப் பற்றியும் அர்ஜுன் ராஜாராமிடமும், யசோதாவிடமும் கருத்துகள் கேட்டான். இருவருக்கும் இருவர் மேலும் நல்லபிப்பிராயம் இல்லை. வாசுதேவனுக்கு இணையாகப் பேசக்கூட தணிகாச்சலமும், ரத்தினமும் தகுதியில்லாதவர்கள் என்றே யசோதாவும், ராஜாராமும் கருத்து தெரிவித்தார்கள். யசோதா தன் கருத்தைச் சொல்லும் போது இழிவான ஒன்றைப் பேசுவது போல முகத்தைச் சுளிக்கவும் செய்தாள். ஆனால் அப்படிப்பட்டவர்களை மாறி மாறி ராஜாராம் ஆதரித்து வந்தது ஏன் என்று அர்ஜுனுக்குப் புரியவில்லை. ராஜாராம் ஒரு முறை தனியாக விரிவாகப் பேசலாம் என்று சொல்லியிருந்தாரல்லவா, அப்போது பதில் கிடைக்கலாம் என்று அர்ஜுனுக்குத் தோன்றியது.
பேட்டியை முடித்துக் கொண்டபின் அர்ஜுன் ராஜாராமிடம் அவரது ஆக்ஸ்ஃபோர்டு
பயணத்தைப் பற்றிக் கேட்டான்.
மிகச் சிறப்பாகவும், திருப்தியாகவும் இருந்தது
என்று தெரிவித்த ராஜாராம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் என்பது ஒரு பரந்த வளாகத்தில் இருக்கும் பெரிய கட்டிட அமைப்பு
கிடையாது என்ற சுவாரசியத் தகவலைச் சொன்னார்.
ஆக்ஸ்ஃபோர்டு என்பது சிறிய நகரம் என்றும் அந்த நகரத்திற்குள் பல கட்டிடங்களில்
பல்கலைக்கழகத்தின் பல துறைகள் இருக்கின்றன என்றும் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பேச்சரங்கங்கள்,
தங்கும் விடுதிகள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள்
என்று நகரமெங்கும் அந்தப் பல்கலைக்கழகம் பரவியிருக்கிறது என்பதை ராஜாராம் விவரித்தது, அர்ஜுனுக்குப்
புதிய தகவலாய் இருந்தது அவன் சுவாரசியமாய் அதைக் கேட்டுக் கொண்டான். அவர் அங்கு
ஆற்றிய சொற்பொழிவு பற்றியும் கேட்டான். அவர் சொல்வதை அவன்
கூர்ந்து உண்மையான ஆர்வத்துடன் கவனித்துக் கேட்பதை யசோதா அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அவர் இருந்திருந்தால்
இதையெல்லாம் எவ்வளவு பெருமிதத்தோடு பார்த்திருப்பார்!’
மைதிலி வந்து சொன்னாள். “செவிக்குணவு
போதும். கொஞ்சம் வயிற்றுக்கும் உணவு கொடுங்க. வாங்க.”
மைதிலியின் வெஜிடபிள் பிரியாணி வழக்கம்
போல் மிகவும் ருசியாக இருந்தது. அர்ஜுன் நன்றாகச் சாப்பிட்டதில் மைதிலிக்குப் பரம திருப்தி. சாப்பிடும்
போது மைதிலி நித்யா பற்றிக் கேட்டாள்.
அர்ஜுன் புன்னகையுடனும், பெருமிதத்துடனும் சொன்னான். ”ஊம் இருக்கா. சரியான வாய். பேசியெல்லாம்
நாம ஜெயிக்க முடியாது.”
மைதிலி சொன்னாள்.
“அது நல்லதுடா. பொண்ணுங்களுக்கு அது முக்கியமா
வேணும். அதில்லாம வாயில்லா பூச்சியா இருந்தால் கஷ்டம் தான்.”
ராஜாராம் சிரித்துக் கொண்டே சொன்னார். “ஆனா வாய் அதிகமா இருந்தா,
புருஷனுக்கு வாழ்நாள் பூரா கஷ்டம் தான். அதையும்
நாம ஒத்துக்கணும்.”
மைதிலி முறைக்க அர்ஜுன் சித்தப்பாவுடன் சிரிப்பில் கலந்து கொண்டான்.
சாப்பிட்டு முடிந்தவுடன் அர்ஜுன் யசோதாவிடம் சொன்னான். “பாட்டி, எனக்கு தாத்தா அறையைப் பார்க்கணும். கொஞ்சம் நேரம் அங்கே
உட்கார்ந்து பழசு எதாவது ஞாபகம் வருதான்னு பார்க்கணும்.”
யசோதா கண்கலங்க சொன்னாள். “போடா. போய் உட்கார்ந்து
பாரு. அங்கே தான் அதிகமாய் உன்னை மடியில வெச்சுகிட்டு விளையாடிகிட்டு
இருப்பார். அவர் ஆத்மா எங்கே இருந்தாலும் உன் கிட்ட பேசும்….”
அர்ஜுன் வாசுதேவன் அறைக்குப் போனான். அங்கே அவருடைய ஆளுயர புகைப்படம்
இருந்தது. கம்பீரமான தோற்றம். சாத்வீகமான
முகம். அந்தப் புகைப்படத்தில் தெரிந்த அவர் கால்களைத் தொட்டு
வணங்கி விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அறையில் அவர்
உட்கார்ந்து வேலை பார்த்த மேசை, அவருடைய புத்தக அலமாரி,
பீரோ, சோபா - எல்லாவற்றையும்
சிறிது நேரம் அர்ஜுன் பார்த்தான். எதுவும்
அவனுக்கு அவரை நினைவுபடுத்தவில்லை. ஆனால் ஏனோ அங்கே
அமர்ந்திருக்கையில் அவன் மனம் அமைதியாகியது.
ராஜாராம் அவன் அறியாமல் அறைக்கு வெளியேயிருந்து
அவனையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார். அவன் பின்புறம்
தான் அவருக்குத் தெரிந்தது. அவனைப் பார்த்து விட்டு தந்தையின் புகைப்படத்தையும் ஒரு முறை
பார்த்து விட்டு சத்தமில்லாமல் வந்து தாய்க்கு எதிரில் அமர்ந்து கொண்டார். ஆனால் இருவரும்
ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்தார்க:ள்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அர்ஜுன்
பாட்டியிடம் சொன்னான். “எனக்கு தாத்தா கூட இருந்த எதுவுமே நினைவுக்கு வரலை பாட்டி. ஆனா மனசு
அமைதியாயிருக்கு. நீங்க சொன்ன மாதிரி தாத்தாவோட ஆத்மா என் ஆத்மா கிட்ட பேசி
என்னை அமைதிப்படுத்தியிருக்குமோ?”
ஈரமான கண்களுடன் அர்ஜுனைப் பார்த்த
யசோதா தலையசைத்தாள். அர்ஜுன் கிளம்புகையில் நித்யாவுக்கு என்று
ஒரு டிபன் பாக்ஸில் ‘வெஜிடபுள் பிரியாணியை மைதிலி கட்டிக் கொடுத்தாள்.
ராஜாராம் கேட்டார்.
“இனி எப்படா வர்றே?”
“வர்றேன்
சித்தப்பா.”
“சீக்கிரமே
வாடா. நான் அப்பவே சொன்ன மாதிரி உன் கிட்ட நான் நிறைய பேச வேண்டியிருக்கு.”
“கண்டிப்பா
வர்றேன் சித்தப்பா. பை பாட்டி.... பை சித்தி....”
மூவரும் அவனை வாசல் வரை சென்று வழியனுப்பினார்கள். அர்ஜுனுக்கு
மனம் நிறைவாயிருந்தது. எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தனித்தனி
வீடுகளில் இருந்தாலும் அவர்கள் குடும்பம் மிக அன்பானது என்று அவனுக்குத் தோன்றியது.

No comments:
Post a Comment