பாண்டியனுக்கு விஸ்வகீர்த்தி மேலும் முழு நம்பிக்கை வரவில்லை. விஸ்வகீர்த்தி
புகழ் பெற்றவராக இருந்தார். அவருக்கு நிறைய பக்தர்கள் இருந்தார்கள் என்பதெல்லாம் அவரைப்
பெரிதாகக் கவரவில்லை. பிரம்மானந்தாவும் புகழ் பெற்றவர், அவருக்கும்
லட்சக்கணக்கில் பக்தர்கள் இருக்கிறார்கள். இறைவனின்
அவதாரம் என்றும் சொல்கிறார்கள். அதில் தான் அவர்கள் வியாபாரம் நடக்கிறது. ஆனால் ஒரு
யோகியின் காலடி மண் தேவைப்பட்ட போது அவர்களே வேறிடத்தில் அல்லவா தேடவேண்டி வந்தது. பிரம்மானந்தா
யோகியாய் சொல்லப்படுவது போல் விஸ்வகீர்த்தி மந்திரவாதியாய் சொல்லப்படுகிறாரோ என்ற சந்தேகம்
பாண்டியனுக்கு வந்து தொலைத்தது.
விஸ்வகீர்த்தியிடம் அவர் அலைபேசியில்
ஹிந்தியில் பேசிய போது பீடிகை எல்லாம் பெரிதாக இருந்தது. அவர் சொன்ன
தொகை இரண்டு லட்சமாக இருந்தது. அவருக்கு மாகாளி அருள் இருப்பதாகவும், மாகாளி
அவருக்கு அடிக்கடி காட்சி தருவாள் என்றும் அவர் சொன்னது பாண்டியனுக்கு அவர் மேல் இருந்த
நம்பிக்கையைக் குறைத்தது. இன்னொரு பிரம்மானந்தாவை இங்கே வரவழைக்கிறோமோ என்ற சந்தேகத்தை
ஏற்படுத்தி விட்டது. கூடுதலாக விசாரித்ததில் சிலர் உயர்வாகவும், சிலர் குறைவாகவும்
அபிப்பிராயம் சொன்னார்கள். இப்படி ஒரு நிலைமை வரும் என்று பாண்டியன் எதிர்பார்த்திருக்கவில்லை. தகுந்த
ஆள் இருந்தால் அவர் கோடிக் கணக்கில் செலவு செய்யவும் தயாராக இருக்கிறார். பணம் அவருக்கு
ஒரு பொருட்டே அல்ல. ஆனால் தகுதி வாய்ந்த ஆட்கள் அரிதாகவும், போலிகள்
மலிவாகவும் காணக்கிடைப்பது இக்காலத்தின் சாபக்கேடு என்று அவருக்குத் தோன்றியது.
வியாழக்கிழமை காலையில் விஸ்வகீர்த்தி
தன் சீடர்கள் இருவருடன் யோகாலயம் வந்து சேர்ந்தார். விஸ்வகீர்த்தியைப்
பார்த்தவுடன், பாண்டியனுக்கு தேவானந்தகிரி மேல் வந்த நம்பிக்கை அவர் மேல் வரவில்லை.
விஸ்வகீர்த்தி தேவானந்தகிரி போல் அவராக எந்த விஷயத்தையும் கண்டுபிடித்துச்
சொல்லவில்லை. “மகாகாளி ஏவல் சக்தி இங்கே பீடித்திருக்கிறது என்று
சொல்கிறாள்” என்று பொதுவாகச் சொல்ல, அதற்கே
அந்தச் சீடர்கள் இருவரும் பெரியதொரு அருள்வாக்கு கிடைத்து விட்டது போல் வியப்புடன்
பார்த்தார்கள். பாண்டியனாகவே ஏவல்சக்தியின் தொந்தரவுகளைச் சொன்னார்.
விஸ்வகீர்த்திக்குக் கண்டுபிடிக்கத் தெரியாவிட்டாலும், பிரச்சினை இதுவென்று தெளிவாகச் சொன்னால் அதற்கு பூஜை செய்து சரியாக மந்திரித்து
தாயத்து கட்டி பிரச்சினை வராத மாதிரி பார்த்துக் கொண்டால் போதும் என்று அவருக்குத்
தோன்றியது.
விஸ்வகீர்த்தி செய்த பூஜைகள் வேறு விதமாக இருந்தன. வரைந்த படங்களும் யந்திரங்களும்
கூட வித்தியாசமாய் இருந்தன. அர்த்த ஜாமத்தில் பூஜை செய்து இனி
ஒரு மண்டலம் முடியும் வரை பிரச்சினை இல்லை என்று அவர் உறுதியாகச் சொல்லி தாயத்தைக்
கட்டினார். பழைய தாயத்தை கழற்றி விடலாம் என்று அவர் தைரியம் சொன்னாலும்
பாண்டியன் பழைய தாயத்தைக் கழற்றவில்லை.
வெள்ளிக்கிழமை அதிகாலை விஸ்வகீர்த்தியும், அவருடைய
சீடர்களும் போய் விட்டார்கள். பாண்டியனுக்கு அந்தத் தாயத்து தேவானந்தகிரியின் தாயத்து போலவே
சக்தி வாய்ந்ததாய் இருக்கும் என்ற நம்பிக்கை பத்து சதவீதமே இருந்தது. விஸ்வகீர்த்தியைப் பற்றி உயர்வாய்ச் சொன்ன பக்தர்கள் வாக்கு
உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டும் அந்த அதிசயம் சம்பவிக்கலாம் என்று தோன்றியது.
ஆனால் பிரம்மானந்தா நம்பிக்கையோடு இருந்தார். நான்கைந்து
பேர் பெயரைச் சொல்லி அந்தப் புத்திசாலிகள் எல்லாம் காரணமில்லாமல் விஸ்வகீர்த்தியைப்
பாராட்டியிருக்க மாட்டார்கள் என்று சொன்னார். அதில் பாண்டியனுக்கு
நம்பிக்கையில்லை. புத்திசாலிகளும், விருப்பு
வெறுப்பு இல்லாமல் கூர்ந்து கவனித்து அலசினால் தான் எந்த உண்மையையும் புரிந்து கொள்ள
முடியும். நம்பி விட்டுக் கவனித்தால், நல்லது
மட்டுமே அவர்களுக்கும் தெரியும்.
தன் அளவு பாண்டியன் நம்பிக்கையோடு இருக்காதது
பிரம்மானந்தாவுக்கு ஏமாற்றமாய் இருந்தது. ”ஏன் பாண்டியன்
சந்தேகப்படுகிறாய்?”
“எல்லாத்துக்கும்
தயாராய் இருக்கறது தான் சரி யோகிஜி” என்று சொன்ன பாண்டியன்
தனதறைக்குச் சென்று விட்டார். யோசிக்க அவருக்குத் தனிமை தேவைப்பட்டது. நிறைய யோசித்தார். நிறைய விஷயங்கள்
நினைவுக்கு வந்தன. பலவற்றுடன், அவரால் இறந்தவர்கள்
நினைவுக்கு வந்தார்கள். யார் வம்புக்கும் அவராகப் போனதில்லை. வம்புக்கு
வந்தவர்களுக்கு அவர் தயவு தாட்சணியமும் காட்டியதில்லை. அது தவறென்று
இப்போதும் தோன்றவில்லை. சைத்ராவை
மட்டும் தவிர்த்திருக்கலாம் என்று சில சமயங்களில் தோன்றியதுண்டு. இப்போதைய
நிலைமைக்குக் கூட அவள் தான் மூலகாரணம் என்று அவர் உள்ளுணர்வு சொன்னது. “என்னை மாதிரி
நீயும் மரணத்துக்குக் காத்துகிட்டிருக்கற நாள் வரும். அந்த நாள்
ரொம்ப தூரத்துல இல்லை.” என்று அவள் ஆணித்தரமாய் சொன்ன போது அவர் ஏளனமாய் சிரித்தார். அறிவாளியான அவருக்கு,
அவள் சொன்ன மாதிரி நடக்க வாய்ப்பிருப்பது போல அப்போது தெரியவில்லை.
ஆனால் வாழ்க்கை மிக விசித்திரமானது. அது சிறிதும்
எதிர்பார்க்க முடியாத சூழல்களையும் கண நேரத்தில் உருவாக்கி விடக்கூடியது. அந்த சமயங்களில் ஒருவன்
சேர்த்த செல்வமும், பெற்றிருக்கும் பேரறிவும், இருக்கின்ற உயர்ந்த நிலைமையும் கூட
அவனுக்கு உதவாமல் போய் விடலாம். அதை இந்தக் கணத்தில் அவர் உணர்கிறார்.
அவரிடம் எல்லாம் இருக்கிறது. எதற்கும் குறைவில்லை. நள்ளிரவு வரை எதை வேண்டுமானாலும்
செய்ய அவருக்கு அவகாசம் இருக்கிறது. ஆனாலும் அவரால் திருப்திகரமாய்
ஒன்றும் செய்ய முடியவில்லை. உண்மை நிலவரம் என்னவென்று அவருக்கு,
முந்தைய மண்டல காலம் முடியக்கூடிய இன்றைய நள்ளிரவில் தான் தெரியும்.
புதிய தாயத்து வேலை செய்யா விட்டாலும் தேவானந்தகிரியையே சில நாட்களில்
வரவழைத்து விட முடியும் என்றாலும், அந்தச் சில நாட்களுக்குள்
அவர் நிலைமை சரிசெய்ய முடியாத நிலைமைக்குப் போயிருக்கும். அவர்
சுகுமாரன் நிலைமையையே உதாரணமாய் பார்த்திருக்கிறார்…. அப்படியொரு
நிலைமை வந்தால் அவர் உயிர் வாழ விரும்பவில்லை.
அவர் இறந்து விட்டால் பிரம்மானந்தாவைத் தவிர அதிகமாய் வருத்தப்படுபவர்கள்
யாருமில்லை… அதனால் பிரம்மானந்தாவிடம் போய் தன் முடிவைச் சொல்லி விடைபெற்று வர வேண்டும்
என்று ஆரம்பத்தில் பாண்டியனுக்குத் தோன்றியது. ஆனால் பிரம்மானந்தா கசப்பான நிஜங்களை ஏற்றுக்
கொள்ள முடிந்தவர் அல்ல. அதிகமாக கற்பனைகளில் வாழ்பவர் அவர். வருத்தமானாலும்,
புரிதலோடு விடைகொடுப்பதற்குப் பதிலாக, முடிவை மாற்றிக்
கொள்ள வைக்க அவர் மன்றாடலாம். ஒருவேளை, நள்ளிரவு வரை உள்ள காலம், பாண்டியனின் கடைசி காலமாக இருந்தால்
அதில் துக்கம், புலம்பல், வேதனையை பிரம்மானந்தாவுடன்
இருந்து நிரப்பிக்கொள்ள பாண்டியன் விரும்பவில்லை.
திடீரென்று அந்த நிஜ யோகியின் நினைவு வந்தது. பணமோ, வாழ்க்கை சௌகரியங்களோ இல்லா விட்டாலும் ஒவ்வொரு கணமும் மலர்ச்சியோடும் நிறைவோடும்
அந்தக் கிழவர் வாழ்வது நினைவுக்கு வந்தது. கணக்கெடுத்தால் அது
போன்ற நிறைவான கணங்கள் தன் வாழ்க்கையில் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தார்.
பெரிதாக எதுவும் நினைவுக்கு வரவில்லை. வேறு யோசனைக்கு
கவனத்தைத் திருப்புகையில் ஷ்ரவன் அவர் நினைவுக்கு வந்தான். அவரையே
ஏமாற்றிய வெகுசிலரில் அவனும் ஒருவன்… இன்னொரு நபர் இங்குள்ள கருப்பு
ஆடு. அனேகமாக அந்தக் கருப்பு ஆடு கல்பனானந்தாவாக இருக்க வாய்ப்பு
இருப்பதாகத் தோன்றியது. நள்ளிரவு தாண்டியும் உயிரோடிருந்தால்
முதல் வேலையாக அவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். அப்படி
உயிரோடிருக்கா விட்டால் அவர்களை இப்போது நினைப்பதே வீண் தான்.
பீரோவில் இருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து தன் இருக்கையில்
அவர் அமர்ந்து கொண்டார். ஒரு காகிதத்தில் தற்கொலைக்கான காரணத்தை இப்படி எழுதினார். “என் நிர்வாகத்தின் கீழ் யோகாலயத்தில் தவறுகள் நடந்திருப்பதை என்னால் தாங்கிக்
கொள்ள முடியவில்லை. குற்றவாளிகள் பிடிபட்டாலும், என் கவனக்குறைவின் காரணமாக யோகாலயத்திற்குக் கிடைத்திருக்கும் அவப்பெயர் என்னை
வேதனைப் படுத்துகிறது. தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்று நான்
தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் எந்த விதத்திலும்
காரணமல்ல. யோகிஜியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.”
என்று எழுதிக் கையெழுத்திட்டார். இனி தேவையில்லாத
விசாரணையோ, கேள்விகளோ, தேடலோ இங்கிருக்காது.
காகிதத்தை மடித்து டைரியில் வெளியே தெரிகிற மாதிரி சொருகி
வைத்து விட்டு, அவர் கடிகார முள்ளைப் பார்த்துக்
கொண்டே இருந்தார்.
பழைய தாயத்து அணிந்ததிலிருந்தான மண்டல காலம் முடிந்த பிறகு அவர் ஜன்னல் வழியே பார்க்க
ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் வாசலில் தீ உமிழும் கண்களுடன் ஓநாய் தெரிந்தது. புதிய தாயத்து வேலை செய்யவில்லை என்பது தெரிந்து விட்டது. அதற்கு மேல் அவர் யோசிக்கவில்லை. இனி தாமதிப்பதில் அர்த்தமில்லை.
எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது. துப்பாக்கியை எடுத்து நெற்றிப் பொட்டில்
வைத்து சுட்டுக் கொண்டார்.
(தொடரும்)
என்.கணேசன்

Ppppaaaa,, pandiyan starting la irunthe avaruku nu oru ethics la eh vaazhnthutaar, ippo saagum bothum different aana thought la avaroda mudiva eduppaar nu yosikkala...
ReplyDeleteSuperb narrative sir..
பாண்டியன் கடைசி வரை திருந்தாத ஜென்மம்..இன்றைக்கும் தேசத்தில் இருந்து கொண்டே துரோகம், செய்பவர்கள் போல..
ReplyDeleteKarma has started playing on them.Many thanks
ReplyDeleteபிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்
ReplyDeleteதிடீர்ன்னு முடிஞ்ச மாதிரி இருக்கு.. பிரமாண்டமான முடிவை எதிர்ப்பார்தேன் :(
ReplyDeleteபாண்டியன் புத்திசாலி தனத்தையும்,பிரம்மானந்தா மேல் உள்ள விசுவாசத்தையும் கடைசிவரை விடவில்லை.
ReplyDelete
ReplyDeleteஆனால் வாழ்க்கை மிக விசித்திரமானது. அது சிறிதும் எதிர்பார்க்க முடியாத சூழல்களையும் கண நேரத்தில் உருவாக்கி விடக்கூடியது. அந்த சமயங்களில் ஒருவன் சேர்த்த செல்வமும், பெற்றிருக்கும் பேரறிவும், இருக்கின்ற உயர்ந்த நிலைமையும் கூட அவனுக்கு உதவாமல் போய் விடலாம்.
அருமையான ஆழ்ந்த விடயங்கள். இங்குதான் நாம் சேர்த்து வைத்த கர்மா நமக்கு உதவும்.
பாண்டியன் ஒரு சரியான மனிதர். தனக்கு சரி என்று முடிவு செய்வதை மறு ஆய்வு செய்ய கூட அவர் நினைப்பது இல்லை.
ReplyDeleteதான் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவையும் மறு ஆய்வு செய்ய வில்லை.
தவரான carector என்றாலும் அவரை பிடிக்கிறது.