குமரேசன் அன்று காலை வேலைக்கு வந்த
போது துறவிகள் யாரும் வேலைக்கு வந்திருக்கவில்லை. அவர்கள் ஒன்பது மணிக்கு மேல் தான் வருவார்கள்.
அவனுக்குச் செய்ய வேண்டிய வேலையை ஒதுக்கிய கல்பனானந்தா அவனிடம் ஒரு பரபரப்பை
உணர்ந்தாள். அவனுக்கு ஷ்ரவனிடம் பேச என்னவோ இருக்கிறது என்பது
அவளுக்குப் புரிந்தது. அது சரி என்று நிரூபிப்பது போல் குமரேசன்
துறவிகள் வரும் நேரம் நெருங்க நெருங்க அவ்வப்போது அவர்கள் வரும் திசையைப் பார்த்துக்
கொண்டிருந்தான்.
ஷ்ரவன் வேலைக்கு வந்தவுடனேயே அவனிடம் கல்பனானந்தா தாழ்ந்த குரலில்
சொன்னாள். “மருதகாசிக்கு
உங்களிடம் எதோ சொல்ல வேண்டி இருக்கிறது என்று நினைக்கிறேன் ஷ்ரவன். அவர் வேலையும், உங்கள் வேலையும்
முடிகிற சமயத்தில் பக்கத்தில் வரும் படி உங்களுக்கு வேலையை ஒதுக்குகிறேன்”
”நன்றி சுவாமினி” என்று சொல்லி
ஷ்ரவன் நகர்ந்தான். ஷ்ரவன் வேலையை
ஆரம்பித்தவுடனேயே அவனைத் தூரத்திலிருந்து பார்த்த குமரேசன், ஷ்ரவன் அவனைக் கவனித்த போது
சோம்பல் முறித்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தான்.
சுற்றி வந்து கொண்டிருந்த மூன்று கண்காணிப்பாளர்களுக்கும் எந்த
விதமான சந்தேகமும் வராதபடி அவர்கள் இருவரும் தங்கள் வேலையை சிரத்தையுடன் செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் இடையே ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்ளக்கூட இல்லை.
கல்பனானந்தா சொன்னபடி ஷ்ரவன் சாப்பிடக் கிளம்பும் நேரத்திற்கு
சற்று முன் இருவரும் அருகே வேலை செய்யும் படி நேர்ந்தது. சற்றுத் தொலைவில் இருந்த
கண்காணிப்பாளனுக்குத் தெரியாதபடி, குமரேசன் குனிந்து வேலை செய்து
கொண்டே தாழ்ந்த குரலில் சொன்னான். “சேலம் சந்திர மோகன் காணாமல்
போன நான்கு நாள் கழிச்சு, இங்கே வேலை செய்துகிட்டிருக்கும் கலிப்பாக்கம்
சுந்தரகுருங்கற ஆள் பேரில் தன்னோட சில நிலங்களை ரொம்ப கம்மி விலையில் விற்றிருக்கார்.”
ஷ்ரவன் கேட்டான்.
“ரெஜிஸ்ட்ரர் ஆபிஸ்ல செக் பண்ணீங்களா?”
“ஆமாம். ஆனால் அங்கே சந்திரமோகன் நேர்ல போகலை.
யாரோ ஒரு பவர் ஆஃப் அட்டர்னி மூலம் இந்த விற்பனை நடந்திருக்கு.”
சொல்லிவிட்டு குமரேசன் போய் விட்டான். இருவரும்
பேசும் போது ஒரு முறை கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவுமில்லை.
சைத்ரா பார்த்த கொலை பற்றியும், பின் ஆனதைப் பற்றியும்,
ஷ்ரவன் இரண்டு நாட்களில் சிறிது சிறிதாக கல்பனானந்தாவிடமிருந்து அறிந்து
கொண்டிருந்தான். எப்போதும்
ஓரிரு நிமிடங்களுக்கு மேல் கல்பனானந்தா அவன் அருகில் இருக்கவில்லை. அப்படி இருந்ததும் அடிக்கடி
நிகழவில்லை. மற்றவர்களை விட அவனிடம் அதிகம் பழகுவது போல் தெரியாமல்
அவள் மிகக்கவனமாகப் பார்த்துக் கொண்டாள்.
கல்பனானந்தா சொன்னதையும், குமரேசன் சொல்வதையும் வைத்துப் பார்க்கையில்,
சைத்ரா பார்த்த கொலை சந்திரமோகனுடையதாய் இருந்திருக்குமோ என்ற சந்தேகம்
மெல்ல ஷ்ரவனின் மனதில் எழுந்தது.
குமரேசன் வேலையை முடித்துக் கொண்டு
கிளம்பினான். மதிய
வெயில் மண்டையைப் பிளப்பது போல் கடுமையாக இருந்தது. ஏழை தோட்டத் தொழிலாளியாகப் போட்ட வேடத்திற்கு
ஏற்ற மாதிரி சைக்கிளில் போவது இந்தக் கடும் வெயிலில் சித்திரவதை தான். இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலமாகச் சீக்கிரம் ஷ்ரவனின் துப்பறியும் வேலை
முடிந்து விட்டால், பழையபடி வழக்கமான வேலையைப் பார்க்கலாம் என்று
நினைத்தபடியே சென்று கொண்டிருக்கையில் எதிரில் அவனுடைய போலீஸ் நண்பன் ஒருவன் பைக்கில்
வந்தான். கூர்ந்து பார்த்துக் கொண்டே வந்த அவன் “நண்பா என்ன கோலம்டா இது…” என்று சத்தமாகச் சொல்லி பைக்கை
குறுக்கே நிறுத்தினான்.
நண்பனைப் பார்த்துப் புன்னகைத்த குமரேசன் அவனிடம் பேசுவதற்கு
முன், இயல்பான
எச்சரிக்கையின் காரணமாய் சுற்றிலும் பார்த்த போது சில அடிகள் தள்ளி காரிலிருந்து கண்ணன்
அவர்களையே பார்ப்பது தெரிந்தது. திடுக்கிட்ட குமரேசன் என்ன செய்வது
என்று புரியாமல் ஒரு கணம் திகைத்தான். அவனுடைய நண்பன் சுந்தர்
போலீஸ் சீருடையில் இருந்தது நிலைமையை மேலும் ஆபத்தாக்கியிருப்பது அவனுக்குப் புரிந்தது.
“எல்லாம் காலம் செய்த கோலம் தான் நண்பா” என்று குமரேசனும்
சத்தமாய்ச் சொல்லி விட்டு பல்லைக் கடித்துக் கொண்டு தாழ்ந்த குரலில் சொன்னான்.
“டேய் நான் மாறு வேஷத்துல இருக்கேன். கொஞ்சம் அடக்கி
வாசி. பக்கத்துல ஒருத்தன் கார்ல இருந்து பார்த்துகிட்டேயிருக்கான்.
திரும்பாதே. யதார்த்தமாய் எதாவது பேசு.”
சுந்தர் நிலைமையைப் புரிந்து கொண்டான். “என்னடா இந்த நேரத்துல இந்த வெயில்ல சைக்கிள்ல
போயிட்டிருக்கே”
யதார்த்தமாய் பேசச் சொன்னால் வில்லங்கமாய் பேசுகிறானே என்று
எண்ணிய குமரேசன் சமாளித்தான்.
“உனக்கென்னடா போலீஸ் உத்தியோகம். வசதியாய் பைக்ல
போறே. நான் தோட்டக்காரன். சைக்கிள் தான்
கதி. நான் வெயில் நிழல் பார்க்க முடியுமா. இப்ப தான் வேலை முடிஞ்சு போறேன். வீட்டுல எல்லாம் சௌக்கியம்
தானே?’
“சௌக்கியம் நண்பா.” என்ற சுந்தர், தானும் நண்பன் காட்டிய வழியில் சமயோசிதமாய்ப் பேச முயற்சி செய்தான்.
“அதைச் சொல்லலைடா. வெயில் குறையற வரைக்கும் வெய்ட்
பண்ணி கிளம்பியிருக்கலாமேன்னு தான் கேட்டேன்.”
“ரெண்டு மணிக்கு தான் டூட்டி முடியுது. நான் என்னடா பண்றது?”
சுந்தருக்கு அதற்கு மேல் எப்படிப் பேச்சைக் கொண்டு போவது என்று
தெரியவில்லை. “சரிடா. எனக்கும் ட்யூட்டிக்கு நேரமாச்சு. இன்னொரு நாள் பேசுவோம். சீக்கிரம் வீடு போய்ச் சேரு”
என்று சொல்லி விட்டு பைக்கில் வேகமாகப் போனான்.
குமரேசன் கண்ணனைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளாமல் தானும் கிளம்பினான்.
கண்ணனும் காரைக் கிளப்பினார். அவர் அங்கிருந்த
பெட்டிக் கடையில் பீடா வாங்கிக் கொண்டு காரில் ஏறிக் கிளம்புகிற நேரத்தில் தான் எதிரில்
வந்து கொண்டு இருந்த மருதகாசியைக் கவனித்தார். மருதகாசி
அவர் காருக்கருகே வருகையில் தான் ஒரு போலீஸ்காரன் மருதகாசியை இடைமறித்து “நண்பா என்ன கோலம்டா இது…”
என்று சொன்னது அவர் காதில் விழுந்தது.
மருதகாசி அவரைப் பார்த்து விட்டதையும் அவர் கவனித்தார். அதற்குப் பிறகு அவர்கள்
பேசிக் கொண்டது இயல்பாய் இருப்பது போல் தோன்றினாலும் ஏதோ ஒன்று இடித்தது. அதாவது பின்பு பேசியது எதுவும், ஆரம்பத்தில் அந்த போலீஸ்காரன் சொன்ன “நண்பா என்ன கோலம்டா இது…”க்கு பொருந்துகிற மாதிரி அவருக்குத் தோன்றவில்லை. வித்தியாசமான தோற்றத்தில் வந்தால்
தானே இப்படிக் கேட்கத் தோன்றும்?
அவர் யோகாலயத்துக்கு வந்து பாண்டியனிடம் விஷயத்தைச் சொன்ன போது
பாண்டியன் யோசித்தார். ஒரு தோட்டக்காரனுக்கும், ஒரு போலீஸ்காரனுக்கும் இடையே
நட்பு இருக்கக்கூடாது என்பதில்லை. இருவரும் அக்கம்பக்கத்தில்
வசித்திருக்கலாம். அல்லது பள்ளியில் ஒன்றாய் படித்து பின் ஒருவன்
படிப்பு வராமல் நின்று தோட்டக்காரனாய் ஆகியிருக்கலாம். ஆனாலும்
அந்தப் பழைய நட்பு தொடர்ந்திருக்கலாம். எல்லாம் சரி தான்.
ஆனால் அந்தப் போலீஸ்காரன் “என்ன கோலமிது?”
என்றும் ”ஏன் இந்த வெயில் நேரத்தில் சைக்கிளில்
போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டதும் அவருக்கும் இயல்பாய்
படவில்லை. ஒருவேளை மருதகாசி போலீஸ் ஒற்றனோ?
கண்ணன் இன்னொரு விஷயத்தையும் நினைவு கூர்ந்தார். “ஒரு நாள் ஏதோ ஒரு சீட்டுல
இருந்த போன் நம்பரையும் அவன் வெறிச்சு பார்த்துகிட்டு இருந்திருக்கான். அந்தப் போன் நம்பரை அடிச்சுப் பார்த்தப்போ, அப்படி ஒரு
நம்பர் இல்லவே இல்லைன்னு தெரிஞ்சுது. ஆனாலும் இன்னைக்கு நடந்ததையும்
வெச்சுப் பார்க்கறப்ப அவன் மேல சந்தேகம் வருது.”
அதைக் கேட்ட பிறகு பாண்டியன் அதிகம் யோசிக்கவில்லை. “அப்படின்னா அவனை உடனடியாய்
வேலையிலிருந்து நிறுத்திடு கண்ணன். அவன் நல்லவனாவே இருந்துட்டு
போகட்டும். சந்தேகத்தைக் கிளப்பற ஆள்கள் நமக்கு வேண்டவே வேண்டாம்”
என்று பாண்டியன் தீர்மானமாகச் சொன்னார்.
(தொடரும்)
என்.கணேசன்


No comments:
Post a Comment