என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, February 12, 2026

சதுரங்கம் 5

 

கீதா அர்ஜுனின் அறிவுக்கூர்மையையும், ஒரு சூழ்நிலையில் பலரும் கவனிக்கத் தவறும் சூட்சுமங்களைக் கவனிக்க முடிந்த அவனது பிரத்தியேகத் திறமையையும் நன்றாக அறிவாள். அவள் திகைப்புடன் கேட்டாள். “எப்படி சொல்கிறாய் அர்ஜுன்?”

 

அர்ஜுன் தாழ்ந்த குரலில் சொன்னான். “ஆளுங்கட்சியின் சோஷியல் மீடியா ஐ.டி விங் ஆள்கள்ல முக்கியமானவன் இங்கே வந்திருக்கான் பார்த்தியா?”

 

அவளும் அந்த ஆளைப் பார்த்திருந்தாள். அவன் பெயர் ப்ரேம். ஆனால் அவள் அவன் வந்ததற்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கவில்லை. “அதனாலென்ன?”

 

அவன் சாதாரணமாய் ஆளுங்கட்சிக்கு சம்பந்தமில்லாத எந்த இடத்திற்கும் வராதவன். அவன் இங்கே வந்திருக்கான்னா, ஆளும் கட்சிக்கு இதுல எதோ சம்பந்தம் இருக்குன்னு அர்த்தம்

 

சரி. அதனால…?”

 

இது தற்கொலையாய் இருந்தா இவங்க முக்கிய ஆள் யாராவது அதைத் தூண்டியிருக்கலாம். இல்லாட்டி இது கொலையாய் இருக்கலாம். அதுக்கு ஆளுங்கட்சி ஆள் எவனாவது காரணமாய் இருக்கலாம்.”

 

எப்படி சொல்றே?”

 

அதெல்லாம் கேட்காதே. அது அப்படித்தான்அந்தப் போலீஸ் அதிகாரியும் பொய் சொல்றார். அவர் கண்டிப்பாய் இந்த வீட்டு சிசிடிவி கேமரா ரெக்கார்டிங்கைப் பார்த்திருக்கிறார். ஆனால் அதுல எதோ பிரச்சனை இருக்கு போல. அதனால தான் அதை ஒத்துக்க மாட்டேங்கறார்.”

 

கீதா புன்னகைத்தாள். இப்போதாவது ப்ரேம் இங்கே வந்திருப்பதும், போலீஸ் அதிகாரி சிசிடிவி பதிவுகளைப் பார்க்கவில்லை என்று பொய் சொல்லியிருப்பதும் அர்ஜுனுடைய இந்த யூகத்திற்குக் காரணம் என்று சொல்லலாம். ஆனால் ஒரு படியிலிருந்து ஐந்தாவது படிக்குத் தாவுவது போன்ற யூக வேலையையும் அர்ஜுன் அவ்வப்போது செய்வான். ஒரு நிகழ்விலிருந்து, தன் உள்ளுணர்வால் நாலைந்து படி தாண்டிய ஒரு முடிவுக்கு அவன் உடனடியாகப் போய் விடுவான். ஏன், எப்படி என்று கேட்டால் சில சமயங்களில் அவன் அதை ஒரு கணிதக் கோட்பாட்டை விவரிப்பது போல படிப்படியாய் விவரிப்பான். ஆனால் சில சமயங்களில் அதை அவனுக்கே விவரிக்கத் தெரியாது. ”அது அப்படித்தான்என்பான். ஆனால் அவன் சொல்வது சரி தான் என்பதை, தொடரும் சம்பவங்கள் பின்னொரு நாள் நிரூபிக்கும்.

 

அவன் அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு பைக்கில் அங்கிருந்து பத்திரிக்கை ஆபிசிற்கு விரைந்தான். அவன் போவதையே பார்த்துக் கொண்டு இருந்த கீதா பெருமூச்சு விட்டாள். இது போன்ற விஷயங்களில் எல்லாம் அதிபுத்திசாலியாக இருந்து எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் அவன் அவளுடைய காதலை மட்டும் புரிந்து கொள்ளாதவனாக இருக்கிறான். மூன்று வருடங்களாக அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகி வருகிறார்கள். பழக ஆரம்பித்து ஆறே மாதங்களில் அவள் அவனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவனைப் பொருத்த வரை அவள் ஒரு நல்ல தோழி தான். காதலை அவளாக அவனுக்குத் தெரிவிக்கவில்லை. ஆனால் காதல் மறைக்கும் விஷயமும் அல்லவே. உள்ளுணர்வால் பெரிய பெரிய ரகசியங்களைக் கண்டுபிடிக்க முடிந்த அவன், அவள் மனதில் இருப்பதை எப்படிக் கண்டுபிடிக்காமல் இருக்கிறான் என்பது அவள் ஆச்சரியப்படும் இன்னொரு விஷயம்.

 

மேலும் இந்த மூன்றாண்டுப் பழக்கத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் முதல் முறையாக அவளை அவன் தன் வீட்டுக்கு அழைத்திருக்கிறான். அன்று அவனுடைய பிறந்தநாள். அழைக்கும் போதே அவன் தங்கை நித்யாஉன் நண்பர்களைக் கண்டிப்பாக அழைத்துத் தான் ஆக வேண்டும்என்று வற்புறுத்தியதாகவும், அதனால் அழைப்பதாகவும் சொன்னான். அவளுக்கு சப்பென்று போய் விட்டது.

 

அன்று அந்தப் பிறந்த நாள் விழாவில் அவளும், அவனுடைய ஆபிஸ் நண்பன் ஒருவனும் தான் வெளியாட்கள். அர்ஜுனுடைய அப்பாவும், தங்கையும் அவளுடன் மிக அன்பாகப் பழகினார்கள். ஆனால் அவனுடைய அம்மா அவள் வரவை அவ்வளவாக விரும்பாதது போல் கீதாவுக்குத் தோன்றியது. சொல்லும்படியாக வெளிப்பார்வைக்குக் காரணங்கள் தெரியவில்லை. ஆனால் அர்ஜுனின் தந்தை, தங்கை இருவரிடம் தெரிந்த  அன்பு அவன் தாயிடம் இருக்கவில்லை. யோசித்துப் பார்த்தால் அர்ஜுனின் அம்மா, அர்ஜுனின் ஆபிஸ் நண்பனுடன் கூட நன்றாகப் பேசியதாய் கீதாவுக்கு நினைவில்லை. 

 

ஒருவேளை அர்ஜுனின் அம்மா அவர்கள் வீட்டு அந்தஸ்துக்கு அவன் நண்பர்கள் சமமில்லாதவர்கள் என நினைக்கிறாளோ என்று கூட கீதாவுக்குச் சந்தேகமாக இருந்தது. ஏனென்றால் அர்ஜுனுடைய குடும்பம், தமிழகத்தின் நீண்ட கால அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பம். அவனுடைய தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகியாவும், சுதந்திரத்திற்குப் பின் எதிர்க்கட்சித் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர். அவனுடைய அப்பா இன்று ஒரு அரசியல் கட்சித் தலைவர் மட்டுமல்ல மிகச் சிறந்த வக்கீலும் கூட. அவனுடைய சித்தப்பா தமிழக அரசியலில்கிங் மேக்கர்என்று அழைக்கப் படுபவர். இப்போதைய முதலமைச்சரும், இதற்கு முந்தைய முதலமைச்சரும் அவர் தயவால் முதலமைச்சரானவர்கள் தான்.

 

அர்ஜுன் அவள் வீட்டுக்கும் ஒரே ஒரு தடவை தான் வந்திருக்கிறான். அதுவும் அவள் பல முறை கட்டாயப்படுத்திய பிறகு ஒரு நாள்.  அவளுடைய வீட்டில் அவள் அம்மாவும், அப்பாவும், தம்பியும் அவன் வரவில் பெரிதாக மகிழ்ச்சியடைந்தார்கள். அவனும் அவர்களுடன் அன்பாகப் பேசினான். அம்மா அவன் போனவுடன் ரகசியமாய் கீதாவைக் கேட்டாள். “அவனைக் காதலிக்கிறாயா நீ?”

 

அப்படியெல்லாம் இல்லைம்மா. அவன் எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட் மட்டும் தான்என்று சொன்ன போது அவள் மனம் வலித்தது. அவன் அப்படித் தான் அவளை நினைக்கிறான் என்கிற போது அவளும் அப்படித் தானே சொல்ல முடியும். ஒருவேளை அவன் வேறு யாரையாவது காதலிக்கிறானோ என்னவோ? அதனால் தான் அவள் உணர்வுகள் அவனை எட்டவில்லையோ?

 

அவள் ஸ்கூட்டியைக் கிளப்பிய போது அவள் மனதில் கனம் கூடியிருந்தது.

 

ப்ரேம் நிருபர்கள் அனைவரும் கலைந்து சென்ற பிறகு அந்த விசாரணை போலீஸ் அதிகாரியிடம் சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினான். அவன் நர்மதா பற்றி நிறைய தகவல்கள் சேர்த்திருக்கிறான். அதில் உள்ள சில தகவல்களை மட்டும் அவன் பயன்படுத்திக் கொள்ளப் போகிறான். நர்மதா வாழ்க்கையில் ஏன் விரக்தி அடைந்தாள், விரக்தியில் அவள் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறியது என்பதை மக்கள் கூடிய சீக்கிரம் அறியப் போகிறார்கள். பலரும் அவளுக்காகப் பரிதாபப்படப் போகிறார்கள்.  வழக்கமாக அவன் அரசியலுக்காக பயன்படுத்தும் அனைத்தையும் இதற்குப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதில் ஐந்து சதவீதம் பயன்படுத்துவதே போதும். அடுத்து ஒரு சுவாரசியமான அல்லது வேதனையான நிகழ்வு வரும் வரை தான் நர்மதாவைப் பற்றி மக்கள் நினைக்கப் போகிறார்கள். அந்த வகையில் நர்மதா சீக்கிரமே மறக்கப்படவிருப்பவள் தான். அது வரை அவள் தினசரிப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தினசரி வந்து கொண்டு இருப்பாள்.

 

நர்மதாவின் காதலன் விமல் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. அவன் உயிருக்குப் பயந்து எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறான் போலத் தெரிகிறது. அவன் இப்படி தலைமறைவாகவே இருப்பது தான் அவனுக்கும் நல்லது. அவன் பொதுவெளிக்கு வந்து தேவையில்லாத விஷயங்களைப் பேசினால் அவள் தற்கொலைக்கே அவன் தான் காரணம் என்று கூட பலரையும் நம்ப வைத்து விடலாம்.

 

எல்லாம் தெளிவாக இருந்தாலும் ப்ரேமுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரியவில்லை. இப்படியெல்லாம் செய்வது யாரைக் காப்பாற்ற என்பது மட்டும் அவனுக்குத் தெரியவில்லை.  மேலிடத்திற்கு மிகவும் வேண்டப்பட்ட யாரோ ஒரு முக்கியஸ்தராக அந்த நபர் இருக்க வேண்டும். அந்த நபர் யாராக இருக்கலாம் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்குத் தெரிவது மட்டுமல்ல, அவன் அனுமானிக்க முயல்கிறான் என்பது மேலிடத்திற்குத் தெரிந்தாலும் அது ஆபத்து தான். நர்மதா போய்ச் சேர்ந்த இடத்திற்கு வேகமாகப் போய்ச் சேர விருப்பமில்லாததால் அந்த முக்கியஸ்தர் பற்றிய சிந்தனையை அவன் அதற்கு மேல் வளர்த்தவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்



1 comment: