என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, February 5, 2026

சதுரங்கம் 4


ர்ஜுனும், கீதாவும் நர்மதாவின் வீட்டருகில் நீண்ட நேரம் இருந்தார்கள். நர்மதாவின் தற்கொலை குறித்து தங்கள் பத்திரிக்கைகளில் பிரசுரிக்க குறிப்புகளையும், புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்கள். நர்மதா வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரித்ததில் முக்கியமாய்ச் சொல்லும்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. பணக்காரர்கள் அதிகமாக வசிக்கும் அந்தப் பகுதியில் யாரும் யாருடனும் அதிகம் பேசிக் கொள்வதும் இல்லை என்பது தெரிந்தது. நர்மதாவின் வேலைக்காரியை வீட்டிற்குள்ளே போலீஸார் விசாரித்துக் கொண்டு இருந்ததால் அவளிடம் பேச முடியவில்லை. வேலைக்காரியைப் பார்த்துப் பேச அவர்களுடன் மற்ற நிருபர்களும் காத்திருந்தார்கள்.

 

அர்ஜுன் கீதாவிடம் சொன்னான். “பசிக்குது. காலைல சாப்பிடல.”

 

ஏன்?”

 

டிபன் ரெடியாயிட்டிருந்துச்சு. நீ கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னவுடனே நான் உடனே கிளம்பி இங்கே வந்துட்டேன். நீ சாப்பிட்டியா?”

 

இல்லை. வீட்டுல டிபன் ரெடியாத் தான் இருந்துச்சு. ஆனா நான் சாப்பிடலை. எங்கம்மா கூட சண்டை.”

 

அர்ஜுன் புன்னகையுடன் கேட்டான். “ஏன்?”

 

எப்ப பார்த்தாலும் அட்வைஸோ அட்வைஸ். என் ரூமை நான் எப்படி வெச்சிருந்தா அவங்களுக்கென்ன? வயசுப் பொண்ணு இப்படி மோசமா வெச்சிருக்கறதான்னு ஒரே திட்டு

 

அர்ஜுனின் புன்னகை விரிந்தது. ”சரி வா. பக்கத்து ஓட்டல்ல சாப்பிட்டுட்டு வந்துடலாம்.”

 

இருவரும் ஓட்டலை நோக்கி நடக்க ஆரம்பிக்கையில் கீதா அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து விட்டுச் சொன்னாள். “உன்னை மாதிரி பசங்களுக்கு பிரச்சனையே இல்லை. அம்மாக்களே எல்லா வேலைகளையும் பண்ணிடுவாங்க. பொண்ணுகளுக்குத் தான் அதைச் செய், இதைச் செய்யின்னு தொந்தரவு. உன் தங்கச்சியையும் உங்கம்மா அப்படி தான் திட்டுவாங்களா?”

 

நித்யா எங்கப்பா மாதிரி. இருக்கற இடமும், செய்யற வேலையும் எப்பவுமே ஒழுங்காவும், சுத்தமாவும் இருக்கும். அதனால அம்மாக்கு அந்த விஷயத்துல அவளைத் திட்ட வாய்ப்பே இல்லை.”

 

கீதா சொன்னாள். “உன் தங்கச்சி மாதிரி பொண்ணுங்க தான் என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு எதிரிகளே. ’அவளைப் பாரு. அவளும் உன்னை மாதிரி பொண்ணு தானே. அவ எவ்வளவு ஒழுங்கா சுத்தமா வெச்சிருக்கா பாரு. அவளப் பார்த்தாவது கத்துக்கோன்னு ஒரு ஸ்டேண்டர்ட் டயலாக் எப்பவும் வரும். அம்மா கிட்ட திட்டு வாங்காத பொண்ணு ஒருத்தி இருக்கான்னா அது ஆச்சரியம் தான்.”

 

அர்ஜுன் சொன்னான். “அவளும் திட்டு வாங்குவா. ஆனா அது வேற விஷயங்களுக்காய் இருக்கும்....”

 

ஓட்டலுக்குள் நுழைந்து அமர்ந்தார்கள். டிபன் ஆர்டர் செய்த பின் கீதா சொன்னாள். “ஆனா உன்னை உங்கம்மா எதுக்காகவும் அதிகமா திட்டமாட்டாங்க தானே.”

 

அர்ஜுன் தலையசைத்தான். ‘பேசினால் தானே திட்டுவதற்கு!’ கீதா சொன்னாள். “எல்லா வீட்டுலயும் பசங்களுக்கு நிறைய தனி சலுகைகள், அம்மா கிட்ட இருந்து செல்லம், எல்லாமே...”

 

அர்ஜுன் விரக்தியுடன் புன்னகைத்தான். வெளியே சொல்லிக் கொள்ளவும் முடியாத கஷ்டங்களின் கனம் அதிகம்...

 

சாப்பிடும் போது கீதா தன் தம்பிக்கு வீட்டில் அளிக்கப்படும் கூடுதல் சலுகைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அர்ஜுனின் மன கனம் கூடிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் சொன்னான். “கீதா, சும்மா புலம்பாம வேற எதாவது உருப்படியா பேசறியா

 

கீதா அவனைப் பரிதாபமாய் பார்த்துச் சொன்னாள். “ரொம்பப் புலம்பறேனா. எல்லாம் எங்கம்மா இன்னைக்குக் காலைலயே ஆரம்பிச்சு வெச்சது. சாரி அர்ஜுன். இனி பார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் இருக்கப் போறேன்...”

 

அர்ஜுன் புன்னகைத்தான். அவள் நாளையும் புலம்பத் தான் போகிறாள். ஆனால் எதிர்க்கருத்து சொன்னாலே முகமும், மனமும் மாறி விடும் உலகில், எதிர்க்கருத்தாக இருந்தாலும், அது சரி என்று தோன்றினால் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் இவள் குணம், பலரிடமும் இல்லாத அரிதான குணம். அவன் தங்கைக்கு அடுத்தபடியாக, பழக மிக சௌகரியமாக உணரும் பெண் இவள் தான். ஒளிவு மறைவு இல்லாமல், ஈகோ இல்லாமல் இருப்பதற்காகவே அவனுக்கு அவளை மிகவும் பிடிக்கும்.   

 

சாப்பிடுகையில் இருவரும் அவர்களுடைய பரஸ்பர நண்பர் ஒருவரது வீட்டில் நடந்த ஒரு சுவாரசிய நிகழ்வைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் சாப்பிட்டு விட்டு மறுபடியும் நர்மதா வீட்டுக்கு வந்த போது நர்மதா வீட்டு வேலைக்காரி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

 

பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களின் நிருபர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். திடீரென்று முக்கியத்துவம் கிடைத்த புளங்காகிதத்தில் அவள் இருந்தது, பார்க்கையிலேயே தெரிந்தது. பலரும் அவளிடம் பல கேள்விகள் கேட்க அவள் விரிவாகப் பதில் சொன்னாள்.

 

என் பெயர் சாவித்திரிங்க. நான் நர்மதாம்மா கிட்ட நாலு வருஷமா வேலை பாக்கறேங்க.  என் கிட்டே ரொம்ப அன்பாய் இருப்பாங்க...”

 

இது பொய். எத்தனை வேலை செய்தாலும் நர்மதாவைத் திருப்திப்படுத்த முடியாது என்பது தான் சாவித்திரியின் அனுபவம். நர்மதா எதிலும் குற்றமும், குறையும் சொல்லிக் கொண்டே இருப்பாள், அடிக்கடி எரிந்து விழுவாள் என்பது தான் நிஜம். ஆனால் இறந்து போனவர்களைப் பற்றி கெட்டதாய் எதுவும் சொல்லக் கூடாது என்பது சாவித்திரியின் உறுதியான அபிப்பிராயம். ஏனென்றால் இறந்தவர்கள் தெய்வமாகி விடுகின்றார்கள் என்று அவள் தாய் அடிக்கடி சொல்வாள். அதனால் நர்மதாவின் தவறுகளைச் சொல்வது தெய்வக்குற்றம் ஆகி விடலாம்...

 

“... ரெண்டு நாளாவே நர்மதாம்மா ஒரு மாதிரியா தான் இருந்தாங்க. ஆனாலும் இப்படி முடிவெடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லைங்க...” சொல்லச் சொல்ல சாவித்திரியின் கண்கள் கலங்கின. அழுகை, கோபம், சிரிப்பு, சோகம் எல்லாமே நொடிப்பொழுதில் அவளுக்கு வந்து விடும். அவ்வப்போது உணரும் உணர்ச்சிகளே அந்தந்த சமயங்களில் பிரதானம் என்று நினைக்கும் பெரும்பாலான அடித்தள மக்களின் மனநிலையில் இருப்பவள் தான் அவளும். அதை அவளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அர்ஜுன் புரிந்து கொண்டான். அவன் சாவித்திரியைப் போன்ற பலரைப் பார்த்திருக்கிறான். ஒரே மனநிலையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணி வாழ்க்கையை அவர்கள் சிக்கலாக்கிக் கொள்வதில்லை.

 

அவளுக்குச் சொல்ல அதிகம் இருக்கவில்லை. வெளி கேட் மற்றும் உள்கதவின் சாவிகள் அவளிடமும், நர்மதாவிடமும் தான் இருக்கின்றன. சில சமயங்களில் நர்மதா வெளியூர் சென்றிருப்பாள். சில சமயங்களில் காலையில் மிகத் தாமதமாகத் தான் எழுந்திருப்பாள். அதனால் சாவித்திரி தன்னுடைய நேரத்தில் வந்து வீட்டைச் சுத்தம் செய்து விட்டுப் போக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்றும் அவள் வீட்டுக்குள் போனவுடன் நர்மதாவைப் பார்க்கவில்லை. வீட்டைப் பெருக்கிக் கொண்டே நர்மதாவின் அறைக்கும் வந்த போது தான் அவள் நர்மதா மின்விசிறியில் கயிறு கட்டி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறாள். பின் தான் போலீஸுக்குப் போன் செய்திருக்கிறாள்.

 

நர்மதாவின் நெருங்கிய உறவினர்கள், நட்புகள் பற்றி நிருபர்கள் கேட்டார்கள். சாவித்திரி அறிந்த வகையில் நர்மதாவின் தங்கை ஒருத்தி ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள் என்றும் வேறு உறவினர்கள் பற்றித் தனக்குத் தெரியாது என்றும் சொன்னாள். நட்பின் வகையில் நர்மதாவின் வீட்டுக்கு விமல் என்பவர் எப்போதாவது வருவார் என்றும் அவள் சொன்னாள்.

 

எல்லாம் சொல்லி முடித்து மைக், கேமிராக்கள் விலகிய போது சாவித்திரி ஆர்வத்துடன் ஒரு நிருபரிடம் கேட்டாள். ”டிவில எத்தனை மணிக்கு இதைக் காட்டுவீங்க?”

 

அந்த நிருபருடன் அர்ஜுனும் புன்னகைத்தான். அவன் பார்வை மேலோட்டமாய் அங்குள்ளவர்களைப் பார்த்தபடி உலாவி, திடீரென்று ஓரிடத்தில் நின்று தங்கியது. அந்த இடத்தில் இருந்த நபரை அர்ஜுன் கூர்ந்து கவனித்தான்.

 

சிறிது நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து விசாரணை போலீஸ் அதிகாரி வர அவன் பார்வை அவர் பக்கம் நகர்ந்தது. வந்த போலீஸ் அதிகாரி நிருபர்களிடம் சொன்னார்.  வாழ்க்கை வெறுத்து விட்டது. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு யாரும் காரணமல்லஎன்று நர்மதா எழுதியிருப்பதாக நம்பும் ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது. வீட்டிலிருந்து எந்தப் பொருளும் காணாமல் போன மாதிரி தெரியவில்லை. அதனால் தற்கொலை என்று தான் இப்போதைக்கு நினைக்க வேண்டியிருக்கிறது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கிடைத்த பின் தான் எதையும் உறுதியாகச் சொல்ல் முடியும்.”

 

அர்ஜுன் கேட்டான். “சிசிடிவி கேமிரா ரெக்கார்டிங் எல்லாம் பார்த்தீங்களா சார்?”

 

அந்தக் கேள்வி அவரைத் தர்மசங்கடப்படுத்தியது போல் தெரிந்தது. அவர் அவசரமாய்ச் சொன்னார். “அதெல்லாம் இனிமே தான் நிதானமாய் பார்க்கணும். இப்போதைக்கு இவ்வளவு தான்.”

 

நிருபர்கள் கலைய ஆரம்பித்தார்கள். கீதாவிடம் அர்ஜுன் மெல்ல சொன்னான். ”இது தற்கொலை மாதிரி தெரியலை கீதா 

 

கீதா திகைத்தாள்.

 

(தொடரும்)

என்.கணேசன்

No comments:

Post a Comment