என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, February 16, 2026

யோகி 143

 

றுநாள் காலை வாய்ப்பு கிடைக்கையில் ஷ்ரவன் கல்பனானந்தாவிடம் சொன்னான். “நூலகத்தில் உங்களைச் சந்திக்க வர வேண்டும். எப்போது வந்தால் கூட்டம் அதிகம் இருக்காது?”

 

இரவு உணவு நேரத்துக்கு முன் வந்தால் யாரும் இருக்க மாட்டார்கள். நானும் வேறு யாராவது துறவியும் மட்டும் தான் இருப்போம். ஆனால் அங்கே கண்காணிக்கும் ஆட்கள் இல்லா விட்டாலும் காமிராக்கள் அதிகம்.”

 

அது பரவாயில்லை. நான் உங்களிடம் சொன்ன இரண்டு மெயில் ஐடிகள் தரவேண்டியிருக்கிறது. நான் ஏதாவது நூலுக்கு நடுவில் வைத்து விடுகிறேன். நீங்கள் பிறகு எடுத்துக் கொள்ளுங்கள்.”

 

அப்படி நூலுக்குள் வைப்பதையும் காமிரா பதிவு செய்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்க நினைத்த கல்பனானந்தா, பின் அது அனாவசியம் என்று விட்டு விட்டாள். அவன் எல்லாவற்றிலும் மிகவும் கவனமாய் தான் இருக்கிறான்.  அது அவனுடைய இரத்தத்தில் ஊறியே இருக்கிறது. அவள் சொன்ன நேரத்தில் இன்னொரு அனுகூலம் இருக்கிறது.  அது நூலகத்தை மூடும் நேரம். அவன் மின்னஞ்சல் முகவரி வைத்த புத்தகத்தை வேறு யாராவது எடுத்துக் கொண்டு விட வாய்ப்பில்லை

 

கல்பனானந்தா லேசாகத் தலையசைத்தாள்.

 

பாண்டியனின் ஆட்கள் முழு வீச்சுடன் யோகியைத் தேட ஆரம்பித்தார்கள். யோகி என்றதும் யோகாலயாவில் இருக்கிறார் என்று அவர்களிடமே சொன்னவர்கள் அதிகம். இந்தச் சிக்கலால் கண்ணன் யோகி என்ற வார்த்தையைத் தவிர்ப்பது நல்லது என்று சீக்கிரமாகவே முடிவெடுத்தார். சாந்த சொரூபியான, மிக அமைதியான தோட்டக்காரக் கிழவர் என்று சொல்லி ஆட்களிடம் தேடச் சொன்னார்.  சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் தோட்டங்கள் வைத்திருப்பவர்களிடம் விசாரித்த போது இரண்டு பேர் ஒரு நர்சரித் தோட்டத்தில் அப்படிப்பட்ட ஒரு கிழவர் சில மாதங்களாக வேலை செய்து வருகிறார் என்று சொன்னார்கள். வேறொரு பகுதியிலிருக்கும் ஒரு நபரும் அப்படியே சொன்னார். பெரும்பாலும் அவர்கள் தேடும் நபர் அவராகவே இருக்க வேண்டும் என்று கண்ணனுக்குத் தோன்றியது.

 

அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டது மாலை நேரமாக இருந்தது. நர்சரி மாலை ஐந்தரைக்கே மூடப்படுவதால் அந்தக் கிழவர் வசிக்கும் பகுதிக்கே சென்று பார்க்க கண்ணன் முடிவு செய்தார். விசாரித்த போது,  அந்தக் கிழவர் சேரிப் பகுதியில் ஒரு குடிசையில் வசிப்பவர் என்பது தெரிந்தது. நல்ல வேளையாக அந்தக் குடிசைக்கு எதிரில் இருசக்கர வாகனங்களைப் பழுது பார்க்கும்வர்க்ஷாப்ஒன்று இருந்தது. கண்ணன் ஒரு பழைய பைக்கை எடுத்துக் கொண்டு அங்கே போனார். அங்கு ஏற்கெனவே இரண்டு வண்டிகள் பழுதுபார்க்க இருந்தன.

 

கண்ணன் பைக்கில் இருக்கும் குறைகளைச் சொல்லி விட்டு, “அவசரமே இல்லை. அந்த இரண்டு வண்டிகளை முடித்து விட்டு இதைப் பாருங்கள் போதும். நான் காத்திருக்கிறேன்என்று சொல்லி விட்டார்.

 

வருபவர்கள் எல்லாம் அவசரப்படும் இக்காலத்தில் அவசரமேயில்லை என்று சொல்லிக் காத்திருக்கச் சம்மதித்த அந்தத் துறவியை கடைக்காரர் வியந்து பார்த்தார். ‘என்ன இருந்தாலும், பெரிய மனுஷன், பெரிய மனுஷன் தான்’. கண்ணன் அங்கிருந்த ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டார்.

 

அங்கு அமர்ந்திருந்த இரண்டு மணி நேரத்தில் எதிர்க் குடிசைக்கு வெளியே ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த கிழவரை முழுமையாக கண்ணனால் ஆராய முடிந்தது.

 

இரண்டு மணி நேரம் கழித்து அவர் பாண்டியனை அலைபேசியில் அழைத்தார். அவர் அழைத்த போது பாண்டியன் பிரம்மானந்தாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

 

கண்ணன் சொன்னார். “ஐயா, அந்த தோட்டக்காரக் கிழவரைக் கண்டுபிடிச்சுட்டோம்.”

 

பாண்டியன் முகம் மலர, பிரம்மானந்தாவும் கேட்கட்டும் என்றுஸ்பீக்கரை ஆன்செய்தார். ”விவரமாய் சொல்லு

 

கண்ணன் சொல்வது பிரம்மானந்தாவுக்கும் கேட்டது. “ஒரு நர்சரி தோட்டத்துல வேலை பண்றார். பக்கத்து ஏரியால ஒரு குடிசைல இருக்கார். பக்கத்துல எல்லார் கிட்டயும் விசாரிச்சேன். அந்த ஆள் பாவம், ரொம்ப சாது, எப்பவும் சாந்தமாய், அமைதியாய் இருப்பார்னு சொல்றாங்க. கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்த அந்த ஆளை ரெண்டு மணி நேரம் நானும் கவனிச்சேன். நான் கவனிச்சப்பவும் அப்படித் தான் இருந்தார். கஞ்சா அடிச்சவங்க சுத்தி என்ன நடந்தாலும் கண்டுக்காமல் அவங்க உலகத்துல மயங்கிப் போய் இருப்பானுக இல்லையா, அந்த மாதிரி தான் இந்த ஆள் கஞ்சா சாப்பிடாமலேயே இருக்கார். சுத்தியும் நடக்கறது எல்லாம் அந்த ஆளுக்குப் புரியுதா, இல்லையான்னும் சந்தேகமாய் இருக்கு…”

 

அந்தக் கடைசி வாக்கியம் கேட்டவுடன் பிரம்மானந்தாவுக்கு மூளையில் மின்னல் வெட்டியது போல் இருந்தது. கண்ணன் அந்தக் கிழவரைக் கச்சிதமாகக் கணித்து விட்டதாய் தோன்றியது. என்ன நிலைமையில் இருக்கிறோம் என்று புரியாமல் ஏதோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்கிற பித்தராகத் தான் அவருக்கும் அந்தக் கிழவரைக் கணிக்கத் தோன்றியது.  அந்தப் பித்தரை சிவசங்கரன் யோகியாகப் பார்த்தது தான் வேடிக்கையிலும் வேடிக்கை...

 

பிரம்மானந்தா சொன்னார். “கண்ணன் சரியாத் தான் சொல்றான்.”

 

பாண்டியன் கண்ணனிடம் கேட்டார். “அந்த ஆளை இங்கே கூட்டிகிட்டு வர முடியுமா?”

 

கண்ணன் யோசித்து விட்டுச் சொன்னார். “அந்த ஆள் ராத்திரி நேரத்துல வாக்கிங் போகிறதுண்டாம். அப்ப வேணும்னா கேட்டுப் பார்க்கலாம். வர மாட்டேன்னா குண்டு கட்டாய் தூக்கிப் போட்டுகிட்டும் வரலாம்...”

 

அப்படியே செய். அந்த ஆளோட கிளம்பி வர்றப்ப எனக்கு போன் பண்ணு.”

 

பிரம்மானந்தாவுக்கு அந்தக் கிழவரை இங்கே அழைத்து வருவது பிடிக்கவில்லை. ஆனால் வேண்டாம் என்று பாண்டியனிடம் சொல்வதற்கு அவரிடம் சரியான காரணங்கள் இல்லை.

 

ரவு உணவுக்குச் செல்வதற்கு சற்று முன் ஷ்ரவன் நூலகத்துக்குக் கிளம்பினான். நூலகத்தில் கல்பனானந்தாவும், வேறொரு பெண் துறவியும் அங்கு இருந்தார்கள். வேறு யாரும் இல்லை. சற்று நேரத்தில் நூலகம் மூடப்படும் என்பதால் அந்தப் பெண் துறவி மேசையில் இருந்த புத்தகங்களை எடுத்து அலமாரிகளில் அந்தந்தப் பகுதிகளில் அடுக்கிக் கொண்டிருந்தார்.

 

ஷ்ரவன் கல்பனானந்தாவிடம் சொன்னான். “தாமதமாக வந்ததற்கு மன்னிக்க வேண்டும் சுவாமினி. இரவு நேரங்களில் சில சமயம் உறக்கம் சரியாக வருவதில்லை. அதனால் படிக்க ஏதாவது புத்தகம் எடுத்துக் கொண்டு போகலாம் என்று வந்தேன்.”

 

கல்பனானந்தா புன்னகையுடன் சொன்னாள். “தாமதமாகி விடவில்லை ஷ்ரவனானந்தா. நூலகத்தை மூட இன்னும் 15 நிமிடங்கள் இருக்கின்றன.  அதற்குள் ஒரு நூலை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.” சொல்லி விட்டு ஒரு அலமாரியை நோக்கி கை காட்டினாள்.

 

அது கடைசி அலமாரி. அந்தக் கடைசி அலமாரியின் ஒரு பகுதி கண்காணிப்பு காமிராவுக்கு தென்படும் கோணத்தில் இருந்தாலும், அதன் மறுகோடி அந்த அளவு தெளிவாகத் தெரிய வாய்ப்பில்லை என்பதை கணப்பொழுதில் ஷ்ரவன் கண்டுபிடித்து விட்டான். அப்பகுதியில் விளக்கு வெளிச்சமும் சற்றுக் குறைவாகத் தான் இருந்தது.

 

நன்றி சுவாமினி.” என்று சொல்லி விட்டுப் போய்ப் புத்தகங்களை அவன் பார்க்க ஆரம்பித்தான். புத்தகங்களை அடுக்கும் பெண் துறவி எதிர்ப்புறம் இருந்த அலமாரிகளில் கடைசி அலமாரிப் பக்கம் இருந்தாள். அவள் அவனைப் பார்க்கும் வாய்ப்பு இல்லை. புத்தகங்களைப் பார்த்துக்கொண்டே இரண்டாம் வரிசையில் கடைக்கோடியில் இருந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்த ஷ்ரவன் கைக்குட்டையை எடுத்து முகம் துடைக்கும் சாக்கில் கைக்குட்டையோடு மின்னஞ்சல் முகவரிச் சீட்டையும் எடுத்தான். அந்தச் சீட்டு பல மடங்காய் மடிக்கப்பட்டு இருந்ததால் தெளிவாகத் தெரிய வாய்ப்பேயில்லை. பிரித்திருந்த புத்தகத்தில் மின்னல் வேகத்தில் வைத்து புத்தகத்தை மூடி அலமாரியில் வைத்துக் கொண்டே முகத்தையும் துடைத்துக் கொண்டான். பின் அதன் அருகே இருந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்து அதில் கவரப்பட்டவனாகக் காட்டிக் கொண்டு புன்னகையுடன் கல்பனானந்தாவிடம் வந்தான்.

 

புத்தகத்தை அவனிடம் நீட்டியபடி முணுமுணுத்தான். ”கடைசி அலமாரி இரண்டாவது வரிசை கடைசி புத்தகம்

 

கல்பனானந்தா காதில் விழுந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை. அவன் எடுத்த புத்தகத்தை வாங்கி கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டு அந்தப் புத்தகத்தை அவனிடம் நீட்டினாள். புன்னகையுடன் பெற்றுக் கொண்டு ஷ்ரவன் கிளம்பினான்.

 

கல்பனானந்தா எழுந்து விளக்குகளை அணைத்துக் கொண்டே போனாள். ஷ்ரவன் புத்தகத்தை எடுத்த இடம் இருட்டாகியது. இருட்டில் இரண்டாவது வரிசையில் கடைசிப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தாள். துண்டுச் சீட்டு கிடைத்தது. அதை எடுத்து உள்ளாடையில் மறைத்துக் கொண்டாள். அவளும் அந்தப் பெண் துறவியும் நூலகத்தைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.


(தொடரும்)

என்.கணேசன்



1 comment: