என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, August 25, 2025

யோகி 117

 

ஷ்ரவனும், முக்தானந்தாவும் அன்றிரவும் மனம் விட்டுப் பேசிக் கொண்டார்கள். ஷ்ரவன் யோகாலயம் பற்றிப் பொதுவாக மற்றவர்கள் எழுப்பியிருந்த சந்தேகங்களை அவரிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டான்.

 

சுவாமிஜி இங்கே வெளிநாட்டு ஆள்களை சட்ட விரோதமாய் தங்க வைத்திருப்பதாகப் புகார் சொல்லப்படுகிறதே, அது உண்மையா?”

 

தெரியவில்லை ஷ்ரவன். அவர்கள் கடைக் கோடியில் இருக்கிறார்கள். இந்தப் பக்கம் அவர்கள் அதிகம் வருவதுமில்லை.”

 

இங்கே தரும் தீர்த்தத்தில் எதையோ கலந்து தருகிறார்கள். அதனால் தான் இங்கே வரும் துறவிகள் அடிமை போல் ஆகி விடுகிறார்கள். அவர்கள் இங்கிருந்து வெளியேறச் சம்மதிப்பதில்லை என்றெல்லாம் சிலர் சொல்கிறார்களே, அது எந்த அளவு சரி?” 

 

அதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீயும் தான் இங்கே வந்திருக்கிறாய். உனக்கும் தீர்த்தம் தருகிறார்கள், நீ அப்படி ஆகி விடவில்லையே.”

 

எனக்கு ஒன்றும் அப்படி ஆகவில்லை. ஆனால் இந்தப் புகார் சொல்லப்படுவது பணக்கார வீட்டு இளைஞர்கள், பெண்கள் பற்றி தான். அப்படி அடிமைப்படுத்தி அவர்கள் இங்கேயே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். என்னிடம் கண்ணனும் ஆரம்பத்தில் கேட்ட கேள்விகளில் எனக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளக் கேட்ட கேள்விகள் அதிகம். நான் சொத்துக்கள் அதிகம் இல்லை என்றதும் அவர் சுவாரசியம் இழந்து விட்டதாய் எனக்குத் தோன்றியது. ஒருவேளை எனக்கு சொத்து அதிகம் இருந்திருந்தால் அது போன்ற தீர்த்தம் எனக்கும் கிடைத்திருக்குமோ?”

 

முக்தானந்தாவின் முகத்தில் வருத்தம் தெரிந்தது. விரக்தியுடன் அவர் சொன்னார். “யோகாலயம் ஆரம்பிக்க முதல் முதலில் சொத்தை எழுதித் தந்தது நான் தான். அதற்குப் பின் தான் எங்கள் குழுவிலிருந்த நண்பர்கள் சிலர் தங்கள் சொத்தையும் எழுதித் தந்தார்கள். எங்களிடம் அப்போது பிரம்மானந்தா சொன்னார். “ஒரு காலத்தில் யோகாலயம் உலகம் பூராவும் பெருமையாய் பேசப்படும். அப்போது உங்கள் தியாகம் வீண் போகவில்லை என்று நீங்கள் கண்டிப்பாய் உணர்வீர்கள்.” ஆனால் இப்போதோ, பார்ப்பதும் சரியில்லை, கேள்விப்படுவதும் சரியில்லை. நாங்கள் அன்றைக்குச் செய்தது இப்போது தியாகமாகத் தெரியவில்லை, முட்டாள்தனமாகத் தான் தெரிகிறது. சில சமயம் எல்லாவற்றுக்கும் பாண்டியன் தான் காரணம் என்று எனக்குத் தோன்றும். அவனால் தான் பிரம்மானந்தா இப்படி மாறிப் போனாரோ என்று நினைப்பேன்..”

 

ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “தங்கமும், தேக்கும் சேற்றில் விழுந்து, எத்தனை காலம் அங்கேயே கிடந்தாலும், சிறிதும் தரம் குறைவதில்லை சுவாமிஜி. மிக உயர்ந்த மனிதர்களும் யாராலும், எந்த சந்தர்ப்பத்தாலும் தங்களுடைய தரத்தை இழப்பதில்லை. சுற்றியுள்ள சூழலும், மனிதர்களும் எப்படி இருந்தாலும், நம் அனுமதியில்லாமல் எதுவும், யாரும் நம்மை மாற்ற முடியாதல்லவா?”

 

உண்மை ஷ்ரவன்

 

பிரம்மானந்தாவைப் போல் கல்பனானந்தாவும் மாறி விட்டதாய் உங்களுக்குத் தோன்றவில்லை அல்லவா?”

 

இல்லை ஷ்ரவன். அதற்குக் காரணம் அவள் பிரம்மானந்தா அளவுக்கு, பாண்டியனிடம் நெருக்கமாய் இல்லை என்பதாகவும் இருக்கலாம்.”

 

இன்றைக்கு நான் அவரிடம் சொன்னதை எல்லாம் அவர் பாண்டியனிடம் கண்டிப்பாகச் சொல்வார் என்று எனக்குத் தோன்றுகிறதே. நெருக்கமாய் இல்லாமலிருந்தால் அதைச் சொல்லும் வாய்ப்பில்லையே.”

 

முக்தானந்தா சொன்னார். “அவர்கள் சொல்லித் தான், அவள் நீ சொல்வதை எல்லாம் காது கொடுத்தே கேட்கிறாள். நீ அவளுடன் பேசுவதை எவனாவது கண்டிப்பாய் பார்த்து, பாண்டியனிடம் சொல்லாமலிருக்க மாட்டான். அதனால் அவள் அவர்களை அனுசரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.”

 

அப்படியானால் நான் யாருக்கும் தெரியாமல் அவரிடம் ஏதாவது ரகசியமாய்ச் சொன்னாலோ, கேட்டாலோ அதை அவர் அவர்களுக்குத் தெரிவிக்க மாட்டாரா?”

 

முக்தானந்தா சொன்னார். “தெரிவிக்க மாட்டாள் என்று தான் என் உள்மனம் சொல்கிறது ஷ்ரவன்.”

 

அப்படித் தெரிவித்தால் அவரும் மாறி விட்டதாய் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்என்று யோசனையுடன் தெரிவித்த ஷ்ரவன் அதை இன்று கண்டுபிடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தான்.  ஏனென்றால் அவனுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அது முக்கியமாய்த் தெரிய வேண்டும்!

 

றுநாள் காலை அலுவலக அறையில் ஷ்ரவனுக்குப் புதிதாக எதையும் கண்டுபிடிக்கும்படியான தகவல்கள் இருக்கவில்லை. அன்றோடு அந்த வேலையும் முடிகிறது. அன்றிரவு பிரம்மானந்தாவோடு, அந்த வேலையைச் செய்து வரும் இளந்துறவியும் திரும்பி வருகிறார். அதனால் நாளை காலை முதல் அவர் தன் வேலையை கம்ப்யூட்டரில் தொடர்வார். ஷ்ரவனும் நாளை காலை முதல் தோட்ட வேலையைத் தொடர வேண்டியிருக்கும்.

 

வழக்கம் போல் கண்ணனும் வந்து சுமார் பத்து நிமிடம் அவனுடன் அமர்ந்திருந்தார் என்றாலும் அவர் புன்னகையோடு நிறுத்திக் கொண்டார். எந்தக் கேள்வியும் அவனைக் கேட்கவில்லை. எதுவும் சொல்லவுமில்லை. பாண்டியனிடமிருந்து ஏதாவது எதிர்வினை இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ஷ்ரவனுக்கு அது ஏமாற்றமாக இருந்தது. கல்பனானந்தா அந்தச் செய்தியை பாண்டியனிடம் சொல்லவில்லையா? சொல்லியும் பாண்டியன் ஏன் அமைதியாக இருக்கிறார்? அவர் உடனடியாக தேவானந்தகிரியைத் தொடர்பு கொண்டிருப்பாரோ? தேவானந்தகிரியிடமிருந்து வேறெதாவது ஆலோசனை வந்திருக்குமோ? இல்லை, பிரம்மானந்தாவின் வரவுக்காக பாண்டியன் காத்துக் கொண்டிருக்கிறாரோ? ஷ்ரவனின் மனதில் பல கேள்விகள் அலைமோதின...

 

பாண்டியன் மிக அவசியமான விஷயங்களுக்கு அல்லாமல், மற்றவற்றிற்கு  பிரம்மானந்தாவிடம் அனுமதியோ, ஆலோசனையோ கேட்பதில்லை. ஷ்ரவன் விஷயத்தையும் அவர் மிக அவசியமான விஷயமாக நினைக்கவில்லை. அதனால் வெளியூர் சென்றிருக்கும் பிரம்மானந்தாவை அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

 

ஓநாய் சுதந்திரமாய் உலாவுவது மட்டுமல்லாமல் ஏதோ விஷம வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது என்பது ஷ்ரவன் மூலம் தெரிந்த பின் அவரால் அமைதியாய் இருக்க முடியவில்லை. அதனால் என்ன விளைவுகள் விளையும், அதன் பாதிப்புகள் எப்போது தெரியவரும் என்பது தெரியவில்லை. பாதிப்புகள் ஏற்பட்ட பிறகு பரிகாரம் தேடுவதை விட இது பற்றிய விவரங்களை உடனுக்குடன் ஷ்ரவன் மூலம் தெரிந்து கொண்டு அதற்கேற்றது போல் நடந்து கொள்வது உத்தம்ம் என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. தேவைப்பட்டால் விவரங்களை தேவானந்தகிரியிடம் தெரிவித்து அவரிடமிருந்து ஆலோசனை பெறலாம். அவசரம் என்றால் அவரை இங்கு வரவழைக்கலாம்...

 

பிற்பகலில் தோட்ட வேலைக்குச் சென்ற ஷ்ரவனுக்கு கல்பனானந்தா இன்னொரு தனிப்பகுதியில் வேலையை ஒதுக்கினாள். அப்பகுதியில் அவனைத் தவிர வேறு எந்தத் துறவியும் வேலையில் இல்லை. அதைக் கவனித்த போது, இன்றும் அவன் எதாவது சொல்வதானால் தயக்கமில்லாமல் தைரியமாகச் சொல்லட்டும் என்று தான் அப்படி ஒதுக்குப் புறமாக வேலையை ஒதுக்கியது போல் ஷ்ரவனுக்குத் தோன்றியது.

 

அன்று மாலையில் அவன் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது கல்பனானந்தா அவன் எதிர்பார்த்தபடியே வந்தாள். அவன் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்து, வேலையில் சில ஆலோசனைகளையும் சொன்னாள். அவள் சொன்னபடி ஷ்ரவன் செய்தான்.

 

திடீரென்று ஷ்ரவன் அவளிடம் கேட்டான். “சுவாமினி, நீங்கள் யோகிஜி தவிர வேறு எந்த நிஜ யோகியையாவது சந்தித்திருக்கிறீர்களா?”

 

மின்னல் தாக்கியது போல் கல்பனானந்தா அதிர்ந்தது தெரிந்தது. அவன் இதுவரையில் கவனித்ததில் அவளும் பாண்டியனைப் போலவே அமைதி இழப்பவள் அல்ல.  அப்படிப்பட்டவள் இந்தச் சாதாரண கேள்வியால் ஏன் அதிர்ச்சி அடைகிறாள்? இதே கேள்வியை அவன் முக்தானந்தாவிடம் கூடக் கேட்டிருக்கிறான். ஆனால் அவர் அதிர்ச்சியடையவில்லை. வருத்தத்துடன் இல்லையென்று பதில் அளித்தார். கல்பனானந்தா அதிர ஒரே காரணம் அப்படி ஒரு யோகியை அவள் நேரில் சந்தித்திருக்கிறாள் என்பதாகவே இருக்க வேண்டும்!

 

கல்பனானந்தா சுற்றிலும் பார்த்தாள். கண்காணிக்கும் ஒரு ஆள் தூரத்தில் தான் இருந்தான். அவள் சிரமப்பட்டு தன்னை சுதாரித்துக் கொள்வது ஷரவனுக்குத் தெரிந்தது.

 

அவள்ஆம்”, “இல்லைஎன்று பதிலளிக்காமல் அவனிடம் திகைப்புடன் கேட்டாள். “ஏன் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டீர்கள்?”

 

ஷ்ரவன் சாதாரணமாகச் சொன்னான். “சும்மா தான் சுவாமினி

 

அவள் அவனையே கூர்ந்து பார்த்து விட்டு ஒரு பதிலும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டாள். ஷ்ரவன் ஆபத்தை உணர்ந்தான்.


(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. இந்த நாவலின் பெயர் "யோகி"...
    போலி யோகி அடிக்கடி வருகிறார்...
    நிஜ யோகி மற்றவர்கள் எப்போதாவது பேசப்படுகிறார்...

    ReplyDelete