காலையில் யோகாலயத்தின் அலுவலக அறைக்கு ஷ்ரவன் போன போது முன்
தினம் போலவே கண்ணன் அங்கே அமர்ந்திருந்தார். வணக்கம்
தெரிவித்த ஷ்ரவனிடம் அவன் தங்கியிருக்கும் அறை வசதியாக இருக்கிறதா என்றும் கூட இருப்பவர்கள்
யாரெல்லாம் என்றும் விசாரித்தார். அறை வசதியாக இருக்கிறது என்றும், உடன் இருப்பது
சுவாமி முக்தானந்தாவும், சுவாமி சித்தானந்தாவும் என்றும் ஷ்ரவன் சொன்னான்.
கண்ணன் நினைவு கூர்ந்து சொல்வது போல் சொன்னார். ”சுவாமி சித்தானந்தாவுக்கு டைப்பாய்டு காய்ச்சல் என்று கேள்விப்பட்டேனே?”
ஷ்ரவன் சொன்னான். “ஆமாம் சுவாமிஜி. திடீரென்று நேற்று அவருக்குக் காய்ச்சல் வந்து அதிகமாகியும் விட்டது. ஆஸ்பத்திரியிலேயே இரவு தங்குவது நல்லது என்று டாக்டர் சொன்னார்...”
“சுவாமி முக்தானந்தாவால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லையே” என்று அவனைக் கூர்ந்து பார்த்தபடி கண்ணன் கேட்டார்.
“இல்லை... பாவம், வயதாகி விட்ட அவருக்கு உறக்கம் தான் வருவதில்லை போல... சில சமயம் நள்ளிரவிலும் ஏதாவது சொல்கிறார். நான் முதல் நாள் என்னிடம் தான் ஏதாவது பேசுகிறாரோ என்னவோ என்று நினைத்து எழுந்தேன். எனக்கு ஆச்சரியமும் கூட. நாமே எதாவது கேட்டால் கூட தந்தி வாசகம் மாதிரி தான் ஓரிரண்டு வார்த்தைகள் தான் அவர் பேசுகிறார். அப்படிப்பட்டவர் இப்போது ஏன் பேசுகிறார் என்று நினைத்தேன். பிறகு பார்த்தால் அவர் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கிறார். அதுவும் தத்துவார்த்தமான வசனங்கள். இரண்டு நாளில் பழகி விட்டது. அவர் பேசினாலும் விழித்துக் கொள்வதில்லை. நேற்று கூட அவர் எதோ பேசுவது கனவில் கேட்பது போல் கேட்டதையும் மீறி எனக்கு ஆழ்ந்த உறக்கம் ” என்று புன்னகையுடன் ஷ்ரவன் சொன்னான்.
கண்ணன் ஷ்ரவன் சொன்ன பதிலில் முழு திருப்தியடைந்தார். ஏதாவது கேட்டால் கூட தந்தி வாசகம் போலத் தான் முக்தானந்தா பதில் சொல்கிறார் என்ற தகவல் தான் அவருக்கு வேண்டியிருந்தது. அவன் சொல்வது பொய்யல்ல என்பது இன்று அவனும், முக்தானந்தாவும் காலை உணவுக்குச் சென்ற போதே அவருக்குத் தெரிந்தது. இருவரும் ஒன்றாகத் தான் அறையிலிருந்து வெளி வந்தார்கள் என்றாலும், சாப்பிடப் போகும் போதும், வரும் போதும், இருவரும் பேசிக் கொள்ளவில்லை. சாப்பிட அமரும் போதும் முக்தானந்தா வழக்கம் போல் தனியாகத் தான் ஒரு ஓரமாக உட்கார்ந்து சாப்பிட்டார். அவர் அவனுடன் அமர்ந்து சாப்பிடவில்லை என்பதும் இருவருக்குள்ளும் திடீர் நட்பு எதுவும் உருவாகி விடவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
ஷ்ரவன் வேலையை ஆரம்பித்து ஐந்து நிமிடங்கள் கழிந்த பின் அங்கிருந்து கண்ணன் கிளம்பினார்.
பாண்டியனும் கண்ணன் சொன்ன தகவல்களால் திருப்தி அடைந்தார். ஏதாவது பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது என்று தோன்றிய போதெல்லாம், ஒவ்வொரு முறையும் சோதித்துப் பார்த்திருந்தும் ஏன் ஷ்ரவனின் மேல் அவருக்கு சந்தேகம் வருகிறது என்று அவருக்கே புரியவில்லை. யோசித்துப் பார்க்கையில் இந்த மாந்திரீக செய்வினை தான் அவருக்குக் காரணமாகத் தோன்றியது. பழைய தைரியத்தைக் கொஞ்சம் இது களைந்து விட்டது. இந்த தாயத்து மட்டும் இல்லை என்றால் தூங்கியிருக்கவும் முடியாது என்னுமளவு நிலைமை இருக்கும் போது எத்தனை எச்சரிக்கையாக இருந்தாலும் போதாது என்று அவர் எண்ணிக் கொண்டார்.
டாக்டர் சுகுமாரன் மூன்று நாட்களுக்கு ஒரு முறை போன் செய்து
தன்னுடைய பரிதாபகரமான நிலையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். தாயத்து கழுத்தில் கட்டியிருப்பதால்
அவர் வீட்டில் நாய்க்கு வீட்டின் முன்பகுதியில் வரச் சுதந்திரம் இல்லையாம்.
அதை அவருக்குத் தாங்க முடியவில்லையாம். மனிதர்களைப்
பற்றி சிறிதும் கவலைப்படாத சுகுமாரனின் இந்த நாய்ப் பாசம் பாண்டியனுக்கு வேடிக்கையாக
இருந்தாலும், டாக்டராலும் முன்பு போல கம்பீரமாகவும், நிம்மதியாகவும் இருக்க முடியவில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளாமல்
இருக்க முடியவில்லை.
சற்று முன் தான் இன்ஸ்பெக்டர் செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தகவல் அவருக்கு வந்திருந்தது. இடமாற்றம் ஆகி அந்த ஆள் போனது திருநெல்வேலியா தூத்துக்குடியா என்று அவருக்குச் சரியாக நினைவில்லை. அங்கே போயும் ஆவி பேய் தொந்தரவால் பாதிக்கப்பட்டு கடைசியில் பைத்தியமே பிடித்து விட்டதாம். வினோதமாக நடந்து கொள்கிறாராம், ஆவேசப்படுகிறாராம். கூச்சல் போடுகிறாராம். அவர் பின்னால் யாரோ ஒரு பெண் ஆவி இருப்பதைச் சிலரால் பார்க்க முடிந்திருக்கிறதாம். முன்பெல்லாம் இப்படி யாராவது சொல்லி இருந்தால் அவர் வயிறு குலுங்க சிரித்திருப்பார். ஆனால் இப்போது சிரிப்பு வரவில்லை.
எல்லாவற்றையும் சேர்த்து யோசிக்கையில் சைத்ராவுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் யாரும் இப்போது நிம்மதியாக இல்லை என்ற உண்மை நிலைமை அவரைச் சுட்டது. அவர் வாழ்க்கையில் கற்ற மிக முக்கிய பாடம் பிரச்சினைகளை வளர்த்தாமல் ஆரம்பத்திலேயே தீர்த்துவிட வேண்டும் என்பது தான். அது தான் சுலபம். அப்படி ஆரம்பத்திலேயே பிரச்சினையை அறிந்து தீர்த்து விடத்தான் இங்கே வேவு பார்க்க அவர் இத்தனை ஆட்களை வைத்திருக்கிறார். பிரச்சினைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து தீவிரமடைய அனுமதிக்கவே கூடாது…
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரச்சினைகள் ஒவ்வொன்றாகச் சேர்ந்து கொண்டே போகின்றன. முதலில் கருப்பு ஆடு. அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்ததாக ஏவல் சக்தி என்று தேவானந்தகிரி சொல்லும் ஒரு ஓநாய். அதை விரட்ட முடியாது, உங்களைப் பாதிக்காத மாதிரி தாயத்து கட்டி விடுகிறேன் என்று சொல்லி தேவானந்தகிரி அவரைப் பாதுகாக்கப்பட்ட போதும், அந்த ஓநாய் சுதந்திரமாக அங்குமிங்கும் உலாவுவதைப் பார்க்க முடிந்ததாய் ஷ்ரவன் சொல்கிறான். வெளியே கண்காணிக்கும் ஆட்கள் இருப்பது அடுத்த பிரச்சினை. இப்படி பிரச்சினைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொண்டு போவதை அவரால் சகிக்க முடியவில்லை. ஆனால் எதிரி யாரென்று நிச்சயமாகத் தெரிந்து விட்டால் எதிரியோடு பிரச்சினைகளையும் அவரால் ஒரேயடியாகத் தீர்த்துக்கட்ட முடியும். ஒரு சின்ன துப்பு கிடைத்தாலும் அவரால் மீதியைக் கண்டுபிடித்து விட முடியும். அந்தத் துப்புக்காக பாண்டியன் காத்திருக்கிறார்…
ஷ்ரவன் இன்றும் வேலைப்பட்டியலைப்
பார்ப்பதும், கம்ப்யூட்டரில் டைப் செய்வதுமாகத் தான் வெளிப்பார்வைக்குத்
தெரிந்தான். ஆனால் இடையிடையே தன்னுடைய தேடுதல் வேலையையும் செய்தான். சைத்ராவுக்கு
வேலைகள் ஒதுக்கப்பட்டு இருந்த நாட்களில் 206 அறை எண்ணில் உள்ள
வேறு யாருக்கு என்ன வேலை ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதைப் பார்த்தான். அந்த நாட்களில்
அந்த அறையில் வேறு இருவர் இருந்ததை அவனால் கண்டுபிடிக்க முடிந்தது. ஒருத்தி
அபிநயானந்தா, இன்னொருத்தி கவிதானந்தா. அபிநயானந்தாவுக்கு
யோகாலயத்தின் விளம்பர வேலை ஒதுக்கப்பட்டு இருந்தது. அவள் இணைய
தளத்தில் யோகாலயத்தின் சிறப்புகளையும், பிரம்மானந்தாவின்
பெருமைகளையும் சொல்லும் கட்டுரைகளையும், யூட்யூப் என்னும்
காணொலிகளையும் இணையத்தில் உருவாக்கிக் கொண்டிருப்பவள் என்பது தெரிந்தது. அவளுக்கு
இடையிடையே நூலக வேலையும் தரப்பட்டு இருந்தது.
பிரம்மானந்தா பெண்களின் அமைப்புகளில் சொற்பொழிவு செய்யச் சென்றால் அவருடன் செல்லும் வேலை கவிதானந்தாவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. பெண்களின் அமைப்புகளிலிருந்து யோகாலயத்துக்கு யாராவது பெண் பிரதிநிதிகள் வந்தால் அவர்களை வரவேற்று, ஆவன செய்யும் ஒருங்கிணைப்பாளர் பணியும் அவளுக்கு இடையிடையே தரப்பட்டு இருந்தது.
அவர்கள் இப்போது எந்த அறைகளில் தங்கியுள்ளார்கள் என்று ஷ்ரவன் பார்த்தான். அபிநயானந்தா 240லும், கவிதானந்தா 220லும் தற்போது தங்கி இருக்கிறார்கள். ஒருவருமே ஒரே தளத்தில் இல்லை. ஒருத்தி மேல் தளத்திலும், இன்னொருத்தி கீழ் தளத்திலும் வசிக்கிறார்கள். ஷ்ரவன், அவர்கள் எப்போது 206லிருந்து வேறு அறைகளுக்குச் சென்றார்கள் என்பதைப் பார்த்தான். சைத்ராவுக்கு வேலைகள் ஒதுக்கியதை நிறுத்தியதிலிருந்து ஒரு வாரம் கழித்து தான் அவர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். முக்தானந்தா சொன்னதை வைத்துப் பார்க்கையில் ஒரு வார காலம் அவர்கள் என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்பதைக் கண்காணித்து விட்டுப் பின் அறைகளை மாற்றியிருக்கிறார்கள். தற்போது அறை எண் 206ல் வேறு மூவர் வசிக்கிறார்கள்...
(தொடரும்)
என்.கணேசன்
சைத்ரா விசயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் நிம்மதியாக இல்லை...
ReplyDeleteஆனால், பிரம்மானந்தாவுக்கு பெரிதாக பிரச்சினை வரவில்லை...எனில்,இதில் அவருக்கு சம்பந்தம் இல்லையா?
சைத்ரா விசயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் நிம்மதியாக இல்லை...
ReplyDeleteஆனால், பிரம்மானந்தாவுக்கு பெரிதாக பிரச்சினை வரவில்லை...எனில்,இதில் அவருக்கு சம்பந்தம் இல்லையா?
Great question!
Delete