என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 14, 2025

சாணக்கியன் 174

 

ர்வதராஜன் யோசித்து விட்டு சத்தமாக சுசித்தார்த்தக்கை அழைத்தான். அவன் உடனடியாக வந்ததைப் பார்த்தால் மிக அருகில் தான் இருந்திருப்பான் என்று தோன்றியது. ஒட்டுக் கேட்டுக்கொண்டு இருந்திருக்கலாம். நிஜமாகவே இவன் ராக்ஷசரின் ஆளாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இவன் இயல்பே ஒட்டுக் கேட்பதாகவும் இருக்கலாம். எப்படியே எல்லாத் தகவல்களும் இவனுக்கு வேகமாகத் தெரியவரவும் செய்கின்றன. தனநந்தன் மகளை சந்திரகுப்தன் மணமுடிக்கப் போகும் தகவலையும், தனநந்தன் செல்வத்தை எடுத்துக் கொண்டு போக சாணக்கியர் அனுமதித்த தகவலில் பாதியையும் சரியாகத் தான் சொல்லியிருக்கிறான். அவ்வப்போது இவனிடம் பேச்சுக் கொடுத்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன...

  

வந்தவனிடம் தன் கால்களை அமுக்கச் சொல்லி விட்டு பர்வதராஜன் மெத்தையில் சாய்ந்து கொண்டான். சுசித்தார்த்தக் அவனுடைய கால்களை அமுக்கிக் கொண்டே ஏதோ யோசிப்பது தெரிந்தது. அவன் சற்று தள்ளி அமர்ந்து கொண்டிருந்த மலைகேதுவையும் அடிக்கடி பார்த்தான்.

 

மலைகேது அவனிடம் கேட்டான். “ஏனப்படி பார்க்கிறாய் சுசித்தார்த்தக்?”

 

உடனே அவனைப் பார்ப்பதை நிறுத்தி விட்டு தலைகுனிந்து கொண்ட சுசித்தார்த்தக்ஒன்றுமில்லை இளவரசே. அர்த்தமில்லாத எண்ண ஓட்டம். என்னை மன்னியுங்கள்என்று அவசரமாகச் சொன்னான்.

 

பர்வதராஜன் சொன்னான். “முதலில் உன் எண்ண ஓட்டத்தைச் சொல். பின் நாங்கள் அது அர்த்தமுள்ளதா, அர்த்தமில்லாததா என்று சொல்கிறோம்

 

சுசித்தார்த்தக் சொன்னான். “இப்படி இருந்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம் என்று ஆசைப்படுவது அர்த்தமுள்ளதல்லவே அரசே. நடக்காத, நடக்க வாய்ப்பில்லாத ஒன்றை என் மனது எண்ணுவதே முட்டாள்தனம் என்பதை நான் உணர்ந்தேயிருக்கிறேன்.”

 

பர்வதராஜன் அவனை முறைத்தான். சுசித்தார்த்தக் தலையைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான். ”மகத இளவரசி மிக அழகாய் இருப்பாள்: நம் இளவரசர் அவளை மணந்து கொண்டால் அவருக்குப் பொருத்தமாகவும், உங்களுக்கு இலாபகரமாகவும் இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.”

 

பர்வதராஜன் கேட்டான். “இலாபகரமாக இருக்கும் என்று நீ எப்படிச் சொல்கிறாய்?”

 

ராக்ஷசர் மகத இளவரசியை மணந்து கொள்பவனை எதிர்க்காமல் தன் அரசனாகவே ஏற்றுக் கொள்வார். ஏனென்றால் இரண்டு இளவரசர்களும் இறந்து விட்ட நிலையில் அரசர் தனநந்தரின் மருமகனே அடுத்த அரசனாகும் வாரிசாக இருப்பார். அவர் ஏற்றுக் கொள்வது இலாபகரமானது அல்லவா?”

 

பர்வதராஜன் சிரித்தான். “முட்டாளே. ராக்ஷசர் ஆதரித்தால் என்ன, எதிர்த்தால் என்ன, அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தி விடப் போகிறது. அவரே உயிருக்குப் பயந்து எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறார். இப்போது மகதத்தின் விதியைத் தீர்மானிப்பவர்கள் மகதத்தை வென்றிருக்கும் நாங்கள் தான். அதை நினைவில் வைத்துக் கொள்.”   

 

சுசித்தார்த்தக் சொன்னான். “ராக்ஷசருக்கு ஆதரவாக இப்போதும் நிறைய படைவீரர்களும், ஒற்றர்களும் இருக்கிறார்கள் அரசே. அவர் நினைத்தால் அவர்களை ஒன்று திரட்டிவிட முடியும். அதற்காகத் தான் அவர் மறைந்திருக்கிறார் என்றும் சரியான சந்தர்ப்பத்திற்குக் காத்திருக்கிறார் என்றும் பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய அறிவுத்திறனும் ஆச்சாரியரின் அறிவுத்திறனுக்குச் சளைத்ததல்ல. ஆனால் இப்போதைய சூழ்நிலையைப் பார்த்தால் இந்தத் திருமணம் மூலமாக இருவரும் ஒரேயணியில் சேர்ந்திருக்கும் வாய்ப்பே அதிகமாய் தெரிகிறது

 

பர்வதராஜனுக்குப் பகீரென்றது. அவனுக்கு முன்பே இருந்த சந்தேகம் சரி தானா? அப்படியானால் ராக்ஷசர் கூட சந்திரகுப்தனை ஆதரிக்கும் நிலைமை இருக்கிறதா? அதனால் தான் ராக்ஷசர் பிடிபட்ட பின் குட்டையைக் குழப்பி பிரித்துக் கொள்ளலாம் என்று சூழ்ச்சிக்கார ஆச்சாரியர் சொல்கிறாரா

 

அந்தத் தகவல் பர்வதராஜன் மற்றும் மலைகேது மனங்களில் ஆழமாகப் பதிவதற்காகச் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு சுசித்தார்த்தக் யோசனையோடு சொன்னான். “ஆனால் இந்தத் திருமணம் அரசர் தனநந்தரின் விருப்பத்திற்கு எதிராக, சாணக்கியரின் கட்டாயத்தின்படி நடக்கிறது என்று தெரிந்தால் கண்டிப்பாக பிரதம அமைச்சர் ராக்ஷசர் கடைசி வரை எதிர்ப்பார். அரசர் தன் பரம எதிரிக்கே மகளை மனப்பூர்வமாகத் திருமணம் செய்து கொடுக்க ஒத்துக் கொள்வார் என்பதை நம்பவும் முடியவில்லை தான். எது உண்மையோ? யாருக்குத் தெரியும். நானொரு பைத்தியக்காரன் என் எண்ண ஓட்டத்தை உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்....”

 

பர்வதராஜன் மனதில் பல்வேறு உணர்ச்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்தன. ஆச்சாரியரின் பெரிய சதியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. உண்மையில் இவன் சொல்வது போல் தனநந்தனை மிரட்டியும், கொண்டு போகச் செல்வம் தருகிறேன் என்று ஆசை காட்டியும் ஆச்சாரியர் இத்திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருக்கிறாரோ? இதெல்லாம் பர்வதராஜனுக்குத் தெரியக்கூடாது என்று தான் அவனைத் தள்ளியே வைத்திருக்கிறாரோ?

 

ஒரு வீரன் அந்த வேளையில் உள்ளே வந்து பர்வதராஜனை வணங்கி விட்டுச் சொன்னான். “அரசே முந்தைய அரசர் தனநந்தர் கானகம் கிளம்பத் தயாராகி விட்டார். அவர் கொண்டு செல்லும்  செல்வத்தின் கணக்கைக் குறித்துக் கொள்ள பிரதம அமைச்சர் சாணக்கியர் தங்களை வரச் சொல்கிறார்

 

இத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் வெளிப்பார்வைக்குத் தெரியாதபடி சிறிய விஷயங்களையும் நியாயமாகச் செய்யும் சத்தியசந்தன் போல் காட்டிக் கொள்ளத் தான் இப்படி நடிக்கிறார் என்று பர்வதராஜனுக்குப் புரிந்தது. எப்படியோ முள்ளின் மேல் பட்டுத்துணி விழுந்து விட்டது. மிகவும் ஜாக்கிரதையாகவும், நுணுக்கமாகவும் தான் எடுக்க வேண்டும்...

.

இதோ வருகிறேன் என்று சொல்என்று சொன்னபடி பர்வதராஜன். எழுந்தான்.

 

னநந்தன் கானகம் செல்லக் கிளம்பி விட்டான். கிளம்பிய போது அவன் மகள் அவனைக் கட்டிக் கொண்டு அழுத போது அவனாலும் கண்கலங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி விட்டுப் போகிறோம் என்ற நிறைவு மட்டும் மனதின் ஒரு மூலையில் ஆறுதலாகத் தங்கி இருந்தது.

 

தாரிணியும் கண்கலங்க துர்தராவைக் கட்டியணைத்துச் சொன்னாள். “எங்களைப் பற்றி வருத்தப்படாதே துர்தரா. நாங்கள் இங்கே இருந்திருந்தாலும் உன் சகோதரர்கள் வாழ்ந்து புழங்கிய இடங்களைப் பார்க்கையில் அவர்களைப் பற்றிய நினைவுகள் அதிகமாகி எங்கள் துக்கங்களும் அதிகமாகியிருக்கும். கானக வாழ்க்கை எங்கள் மனதை ஓரளவாவது அமைதிப்படுத்தும். அதை நினைத்து நீ அமைதியடைய வேண்டும்.”    

 

அதைக் கேட்டு அமிதநிதாவும் ”உண்மைஎன்று கண்கலங்கியபடி சொன்னாள்.  அவளுக்கும் மகளின் திருமணம் முடிந்த பின் அங்கிருந்து சென்று விட வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி நின்றது. மகனை நினைவுபடுத்தும் இடங்களில் வாழ்வது அவளுக்கும் கஷ்டமாகவே இருந்தது.

 

தனநந்தனும் தாரிணியும் வெளியே வந்த போது ஒரு பக்கம் சாணக்கியரும் சந்திரகுப்தனும் நின்றிருந்தார்கள். இன்னொரு பக்கம் பர்வதராஜனும், மலைகேதுவும் நின்றிருந்தார்கள்.

 

 

தனநந்தன் சந்திரகுப்தனை முதல் முறையாகப் பார்க்கிறான். அவனைப் பார்த்த பிறகு மகள் வனிடம் மனம் பறிகொடுத்ததில் தனநந்தனால் தவறு காண முடியவில்லை. துர்தராவும் சந்திரகுப்தனும் நல்ல பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள் என்று தோன்றியது. தனநந்தனைப் பார்த்ததும் சந்திரகுப்தன் கைகூப்பி வணக்கம் தெரிவித்தான். தனநந்தன் தன் வருங்கால மருமகனையும், சாணக்கியரையும் பார்த்துக் கைகூப்பி லேசாகத் தலையசைத்து விட்டு, மறுபுறம் நின்றிருந்த பர்வதராஜன் மற்றும் மலைகேதுவையோ  திரும்பிப் பார்க்காமல் ரதத்தில் ஏறினான்.   

 

முன்னால் இரண்டு காவல் வீர்ர்கள் செல்ல, பின்னால் பயண வண்டியில் பணியாட்கள், அதன்  பின்னால் இரண்டு காவல் வீரர்களுடன் பின் தொடர அவன் ரதம் வேகமாகக் கிளம்பியது. பாடலிபுத்திர வீதிகளில் மக்கள் அவன் போவதை வேடிக்கை பார்க்க நின்றிருந்தார்கள். போகிற போது ஓரக்கண்களால் தனநந்தன் மக்கள் முகங்களைப் பார்த்தான். யாரிடமும் எந்த வருத்தமும் பெரிதாகத் தெரியவில்லை. ஆண்ட காலத்தில் அவனும் அவர்களை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. அவர்களும் இப்போது அவன் கானகம் போவதில் எந்தப் பாதிப்பும் அடையவில்லை. ஆனாலும் நேரடியாக அதைப் பார்க்க நேரிட்டதில் அவன் முகம் இறுகியது. பின் அவன் இருபக்கமும் திரும்பாமல் நேர் பார்வை பார்க்க ஆரம்பித்தான். நகர வாயிலைக் கடந்த பின் மட்டும் அவனை அறியாமல் தனநந்தன் பின்னால் திரும்பிப் பார்த்தான். பல ஆண்டுகள் அவன் ஆண்ட தலைநகரம், இப்போது அன்னியமாய் அவனிடமிருந்து என்றென்றைக்குமாய் விலக ஆரம்பித்ததைப் பார்த்த போது அவன் மனம் கனக்க ஆரம்பித்தது….

 

தனநந்தனின் ரதம் கண்களிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்ற சாணக்கியர் நிதானமாகத் தன் குடுமியை முடிந்து கொண்டார். சந்திரகுப்தன் கண்கள் ஈரமானாலும் உதடுகள் புன்னகைத்தன.

 

 (தொடரும்)

என்.கணேசன்

No comments:

Post a Comment