என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, August 18, 2025

யோகி 116


ல்பனானந்தா பாண்டியனிடம் பேசுவது மிக மிகக் குறைவு. ஆரம்பத்தில் இருந்தே இருவராலும் இயல்பாகப் பழக முடியவில்லை. அவர்களுடைய அலைவரிசைகள் ஒத்துப் போகாததை இருவருமே உணர்ந்திருந்ததால் மிகவும் அவசியம் இருந்தால் ஒழிய அவர்கள் பேசிக் கொள்வதில்லை. அந்த அவசியம் வரும் போது கூட, தகவலைச் சொல்லி விட்டு நகர்ந்து விடுவது தான் வழக்கமாக இருந்தது. அதிக நேரம் அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது கூட பிரம்மானந்தா உடனிருக்கையில் மட்டுமே. அதனால் ஷ்ரவன் சொன்னதை இப்போதே பாண்டியனிடம் நேரடியாகச் சொல்வதா, இல்லை வெளியூர் சென்றிருக்கும் பிரம்மானந்தா வரும் வரை காத்திருப்பதா என்று அவள் யோசித்தாள். ஷ்ரவன் ஏதாவது சொன்னால் வந்து தெரிவிக்கச் சொன்னவர் அவர் தான். அதனால் அவரிடம் சொன்னால் போதும் என்றாலும், அவளும் ஷ்ரவனும் பேசிக் கொண்டிருந்ததைக் கண்காணித்துக் கொண்டிருந்த பாண்டியனின் அடியாள் அவரிடம் அதைச் சொல்லியிருப்பான்.  அவர் சம்பந்தப்பட்ட விஷயத்தை அவரிடம் சொல்லாமல் பிரம்மானந்தா வரும் வரை காத்திருப்பது, அவளை பாண்டியனின் அதிருப்திக்கு ஆளாக்கி விடும். அதனால் அவரிடம் இப்போதே தெரிவித்து விடுவது உத்தமம் என்று கல்பனானந்தா முடிவெடுத்தாள்.

 

கல்பனானந்தா வருவதை பாண்டியன் தன் அறை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார். பிரம்மானந்தாவின் பிரதான சிஷ்யைக்கு, தன் மேல் உயர்ந்த அபிப்பிராயமோ, மரியாதையோ இல்லை என்பதை பாண்டியன் மிக நன்றாக அறிவார். வெளிப்படையாக அதை கல்பனானந்தா காட்டிக் கொள்ளா விட்டாலும் அதை அவரால் உணர முடிந்தது. ஆனால் அவள் மற்றவர்களைப் போல் நடிக்காமல் இருந்தது அவருக்கு அவள் மேல் மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. பிரம்மானந்தா முன் இருவரும் இயல்பாகவே இருப்பது போல் தான் காட்டிக் கொண்டார்கள். அவசியம் வரும் போது அவள் அவரிடம் இயல்பாகவே பேசினாள். சொல்ல வேண்டியதைச் சொல்வதைத் தவிர்த்தது கிடையாது. ஆனால் பிரம்மானந்தா இல்லாமல் இருக்கையில் அவளாக வந்து அவரிடம் பேசியது இல்லை. அதனால் சற்று முன் அவருடைய அடியாள் வந்து, ஷ்ரவன் அவருடைய இருப்பிடத்தைக் காட்டி அவளிடம் எதோ சொன்னான் என்பதைச் சொன்ன போது, ஷ்ரவன் என்ன சொன்னான் என்பதை அவளாக வந்து தெரிவிப்பாளா இல்லை, பிரம்மானந்தா வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்று பாண்டியன் யோசித்துக் கொண்டிருந்தார். அவள் வருவதைப் பார்த்து அவர் மனம் திருப்தி அடைந்தது.

 

பிரம்மானந்தா தவிர மற்றவர்கள் அனுமதி இல்லாமல் நேரடியாக வந்து அவரைச் சந்திப்பது கிடையாது. முன் பகுதியில் அவருடைய ஆட்கள் யாராவது இருப்பார்கள். அவர்களிடம் தெரிவித்து, அவர்கள் வந்து அவரிடம் அனுமதி வாங்கிப் போய் சொன்னவுடன் தான் உள்ளே வருவது வழக்கம். அது வரை முன் அறையிலேயே காத்திருப்பார்கள். கல்பனானந்தா என்ன செய்கிறாள் என்று பார்ப்போம் என்று அவர் நினைத்தார்.

 

கல்பனானந்தா அவருடைய வாசல் அருகே தரையைக் கூர்ந்து கவனித்தாள். எங்கேயும் மண் தோண்டியது போல் தெரியவில்லை. தரை சீரான நிலையில் தான் தெரிந்தது. ஒருசில வினாடிகள் நிதானித்து யோசித்து விட்டு கல்பனானந்தா உள்ளே நுழைந்தாள். அவள் அப்படிப் பார்ப்பதை பாண்டியன் கவனித்துக் கொண்டிருந்தார்.

 

அவளைப் பார்த்து விட்டு, முன் அறையில் இருந்த அவருடைய ஆள் ஒருவன் மெல்ல எழுந்து நின்றான். “பாண்டியன் இருக்கிறாரா?” என்று கேட்ட கல்பனானந்தா அவன் ஆமென்று தலையசைத்தவுடனேயே, அவனிடம் வேறெதுவும் பேசாமல், அவனைக் கடந்து சென்றாள். வேறு யாராவது அப்படிச் செல்ல அவன் கண்டிப்பாக அனுமதித்திருக்க மாட்டான். ஆனால் கல்பனானந்தாவைத் தடுப்பது சரியா என்று அவனுக்குத் தெரியவில்லை. அதனால் அவன் சும்மா இருந்தான்.

 

கல்பனானந்தா அவர் அறைக்குள் நுழைவதை பாண்டியன் பார்த்தார். யோகி பிரம்மானந்தாவையே முன் அனுமதி இல்லாமல் சென்று சந்திக்கும் கல்பனானந்தா பாண்டியனைச் சந்திக்க அனுமதியின் அவசியத்தை உணரவில்லை என்பது அவருக்குப் புரிந்தது.  பாண்டியனும் எழுந்து நின்று வரவேற்காமல், அமர்ந்தபடியே சொன்னார். “நமஸ்காரம் சுவாமினி.”

 

கல்பனானந்தாநமஸ்காரம்என்று சொன்னபடியே அவர் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். “யோகிஜி ஷ்ரவனானந்தாவைக் கவனிக்கவும், எதாவது சொன்னால் தெரிவிக்கவும் சொல்லியிருந்தார்....” என்று ஆரம்பித்து தோட்டத்தில் நடந்ததை எல்லாம் விவரித்தாள். பாண்டியனின் முகம் உடனே மாறியதைக் கவனித்து விட்டுச் சொன்னாள். “ஆனால் அவர் சொன்னது போல் உங்கள் வாசலில் எங்கேயும் குழி தோண்டியது போல் தெரியவில்லை. அதைப் பார்த்து விட்டுத் தான் வந்தேன்.”

 

பாண்டியன் ஜன்னல் வழியாக வாசலைப் பார்த்தார். அவருக்கும் எந்தக் குழியும் தெரியவில்லை என்றாலும் ஷ்ரவன் பார்த்திருந்தால் அது சரியாகத் தான் இருக்கும் என்று சொல்லி அவர் மனம் அவரை எச்சரித்தது. அவர்  வெளிப்பார்வைக்கு அமைதி காத்தாலும் அவருடைய மனம் அமைதியாக இல்லை. இப்போதே அவர் தாயத்தைக் கழட்டினால் அந்த ஓநாயும் தெரியும், அது தோண்டிய குழியும் தெரியும் என்று அவர் அனுபவம் சொன்னது. ஆனால் தாயத்தைக் கழட்டினால் வரும் ஆபத்தை தேவானந்தகிரி எச்சரித்து இருந்ததால் பாண்டியன் அதற்கு முயற்சிக்கவில்லை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. டாக்டர் சுகுமாரன் டாமியின் தாயத்தைக் கழட்ட அவருடைய மனைவி சொன்ன போது எப்படி உணர்ச்சிவசப்பட்டிருப்பார் என்பது அவருக்கு இப்போது புரிந்தது....

 

ஆனால் தன் மனப்போராட்டம் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் பாண்டியன் சொன்னார். “யோகிஜி வரும் வரை காத்திருக்காமல் உடனடியாகத் தெரிவித்ததற்கு நன்றி சுவாமினி. அவன் சொல்வது எல்லாம் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றினாலும், அவன் சொல்வதில் சில சூட்சுமங்கள் அடங்கி இருப்பதாய் நினைக்கிறோம். அதனால் தான் யோகிஜியும் அவனைக் கண்காணித்து, அவன் சொல்வதைக் கேட்டுக் கொள்ளும்படி உங்களிடம் சொன்னார்...”

 

கல்பனானந்தா தலையசைத்தாள். அவள் கூடுதலாக எதுவும் சொல்லவோ, கேட்கவோ இல்லை. அவள் அமைதியாக எழுந்து போய் விட்டாள். அவள் இதைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை. அவளுக்கு அவர் சொன்ன சூட்சுமங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளவும் ஆர்வம் இருப்பதாய்த் தெரியவில்லை.  யோகாலயம் வந்து சேர்ந்ததிலிருந்து இன்று வரை பாண்டியன் அவளைக் கூர்ந்து கவனித்து வந்தாலும் அவளை அவரால் முழுவதும் புரிந்து கொள்ள முடியவில்லை.  

 

மிகுந்த புத்திசாலி அவள் என்பதும், பிரம்மானந்தா பேச்சுக்களில் உள்ள ஆழமான விஷயங்களையும், மேலான விஷயங்களையும் குறிப்பெடுத்துத் தருபவள் அவள் தான் என்பதும் அவர் தினசரி காண்பது தான். அவளுடைய ஒருசில பேச்சுக்களையும் அவர் கேட்டிருக்கிறார். அவள் பேச்சில் இதுவரை அவர் அபத்தங்களைக் கேட்டதில்லை. ஒரு முழு நாத்திகன் அவளுடைய பேச்சைக் கேட்டாலும் கூட அவள் பேச்சை மறுக்கவோ, குறை கூறவோ முடியாதபடி அவள் பேசுவாள். பிரம்மானந்தாவின் பேச்சுக்களில் இருக்கும் அபத்தங்களும், சுயபுராணக் கதைகளும் அவராகச் சேர்ப்பவையே ஒழிய அதில் அவளுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால் அவள் ஒரு முறை கூட பிரம்மானந்தாவிடம் அந்த அபத்தச் சேர்க்கைக்கு கண்டனமோ, வருத்தமோ தெரிவித்தது கிடையாது. அவளைப் பொருத்தவரை, குறிப்பெடுத்துக் கொடுப்பதோடு அவள் வேலை முடிந்தது. அவர் என்ன பேசுகிறார் என்பதை அவள் கவனிப்பது போல் கூடத் தெரியவில்லை.

 

அவளுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளில் இதுவரைக்கும் பாண்டியனால் ஒரு குறை கூடக் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. எதையும் அவளிடம் ஒரு முறைக்கு மேல் சொல்ல வேண்டி இருந்ததில்லை. அவர்கள் ஏற்படுத்தி இருக்கும் விதிமுறைகளுக்கு எதிராக ஒரு முறை கூட அவள் நடந்து கொண்டதாய்த் தெரிந்ததில்லை. ஆனாலும் அவளைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட திருப்தி அவருக்கு ஏற்பட்டதில்லை. அதை அவர் பிரம்மானந்தாவிடம் கூடத் தெரிவித்திருக்கிறார்.     

 

பிரம்மானந்தாகல்பனா மிக வித்தியாசமானவள்என்று புன்னகையுடன் சொல்லி அதோடு விட்டிருக்கிறார். வித்தியாசமானவளாக அவள் இருப்பதால் தான் பாண்டியனுக்கு அவளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று அவர் நினைத்தது போலிருந்தது. அதற்கு மேல் பிரம்மானந்தா கல்பனானந்தாவைப் பற்றி அதிகம் பேசவோ, விவாதிக்கவோ விரும்பவில்லை என்பது புரிந்ததால் பாண்டியனும் அதைத் தவிர்த்து தான் வந்திருக்கிறார்.   அதற்கு அவசியமும் இருந்ததில்லை. ஆனால் புரியாத விஷயங்களில் ஏதாவது ஆபத்தோ, அபாயமோ கூட ஒளிந்து இருக்கலாம் என்று பாண்டியன் அடிக்கடி நினைப்பதுண்டு. அதனால் தான், இருக்கும் பிரச்சினைகளுடன் சேர்ந்து கல்பனானந்தாவைப் பற்றியும் பாண்டியனால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை

 

ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட பாண்டியன், கல்பனானந்தாவை ஒதுக்கி விட்டு, ஷ்ரவனின் ஓநாய்த் தகவலில் முழுக் கவனம் செலுத்தினார்.


(தொடரும்)

என்.கணேசன்

 




No comments:

Post a Comment