என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 21, 2025

சாணக்கியன் 175

லைகேது தங்கள் மாளிகைக்குத் திரும்பிச் செல்லும் போது தந்தையிடம் சொன்னான். “தனநந்தனுக்கு எவ்வளவு திமிர் பார்த்தீர்களா தந்தையே., நம் பக்கம் அவன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.”

 

கவனித்தேன் மகனே. அவனைச் சொல்லித் தப்பில்லை. இப்போது அவன் விதியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பது ஆச்சாரியரும், சந்திரகுப்தனும் தான் என்பதால் அவன் நம்மை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.” என்று பர்வதராஜன் சொன்னான்.

 

ஆனால் சந்திரகுப்தனும் வருங்கால மாமனார் என்று தனநந்தனைக் காலைத் தொட்டெல்லாம் வணங்கவில்லை. ஒரு இடைவெளியை வைத்திருக்கிறான்.”

 

மகனே. உன் கண்ணில் படுவதை வைத்து மட்டும் எதையும் முடிவு செய்து விடாதே. சந்திரகுப்தன் இதற்கு முன்பே கூட அவனைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்று இருக்கக்கூடும். நமக்குத் தெரியாமல் அவர்களுக்குள் வேறு பேச்சு வார்த்தையும் நடந்திருக்கக்கூடும்சதியும், சூழ்ச்சியும், தந்திரமும் மற்றவர்கள் பார்க்கும்படியாக அரங்கேறி விடுவதில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்திரு.”

 

அப்படி அவர்களுக்குள் ஏதாவது ரகசிய உடன்பாடு ஏற்பட்டிருந்தால் சந்திரகுப்தனின் திருமணம் முடியும் வரையாவது தனநந்தன் இங்கிருக்க அனுமதித்திருப்பார்கள் அல்லவா தந்தையே

 

மகனே, ஆச்சாரியரை நீ குறைத்து மதிப்பிட்டு விடாதே. தனநந்தன் இங்கிருக்கும் வரை இங்கு ஏதாவது கலகமோ, கலவரமோ நடக்கும் அபாயம் இருக்கிறது என்று அவர் அறிவார். அதனால் அதற்கெல்லாம் அனுமதி வழங்காமல் அவனை உடனே அனுப்பி வைத்திருக்கிறார். அவர் அந்த விஷயத்தில் நம்மையும், அவனையும் மிகவும் தந்திரமாகச் சமாளித்து வருகிறார். அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.”

 

மலைகேதுவுக்கு இதையெல்லாம் கேட்கையில் மலைப்பாக இருந்தது. அவன் மெல்லச் சொன்னான். “நாம் சீக்கிரம் நம் பங்கை வாங்கிக் கொண்டு விடுவது நல்லது போலத் தெரிகிறது தந்தையே

 

போகிற போக்கைப் பார்த்தால் பங்கைப் பிரித்துத் தருவார்களா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது மகனே.” என்று பர்வதராஜன் யோசனையுடன் சொன்னான்.

 

மலைகேது திகைப்புடன் கேட்டான். “அப்படியானால் என்ன செய்வது தந்தையே?”

 

என்னைக் கொஞ்சம் யோசிக்க விடு மகனேஎன்று சொன்ன பர்வதராஜன் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தான். இன்னும் சாணக்கியர் வெல்லாமல் இருப்பதும், தன் பக்கம் இழுக்காமல் இருப்பதும் ஒரே ஒரு மனிதரைத் தான். அது ராக்ஷசர். அவரும் சாணக்கியரைத் தன் பரம சத்துருவாக நினைக்கிறார் என்றும் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் ராக்ஷசர் பிடிபட்டாலும் சுசித்தார்த்தக் சொன்னது போல் தனநந்தனின் சம்மதத்தோடு தான் துர்தரா சந்திரகுப்தனை மணந்து கொள்கிறாள் என்று தெரிந்தால் சந்திரகுப்தனை மன்னனாகவே அங்கீகரித்துவிடும் வாய்ப்பிருக்கிறது. இப்படி எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டால் பர்வதராஜனின் தயவோ, உதவியோ சாணக்கியருக்குத் தேவையில்லை. கொடுத்த வாக்கை மீறுவதும் மானம் இழந்து வாழ்வதும் ஒன்று என்று தத்துவம் பேசினாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி பர்வதராஜனைக் கழட்டி விட சாணக்கியருக்கு அதிக நேரம் ஆகாது. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். சாணக்கியரின் வழியிலேயே அவரைக் கையாள வேண்டும்….

 

இந்த யோசனையுடன் பர்வதராஜன் தன் மாளிகையை அடைந்த போது சுசித்தார்த்தக் கண்களைத் துடைத்துக் கொண்டு வருவது தெரிந்தது 

 

பர்வதராஜன் சுசித்தார்த்தக்கிடம் கேட்டான். “எங்கே போய் விட்டு வருகிறாய் சுசித்தார்த்தக்

 

தனநந்தர் கானகம் செல்வதைப் பார்த்து விட்டு வருகிறேன் அரசேஎன்று சொன்ன சுசித்தார்த்தக்கின் முகத்தில் சோகம் படிந்திருப்பதை பர்வதராஜன் கவனித்தான்.  இவன் தனநந்தன், ராக்ஷசரின் ஆள் என்பது மறுபடியும் உறுதியாகத் தெரிந்தது. தன் திட்டத்திற்கு இவனையே பயன்படுத்திக் கொள்வது நல்லது என்று உடனே முடிவெடுத்தான்.

 

நீ உன் அறிவுக்கு ஒரு சாதாரணப் பணியாளாகவே இருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது சுசித்தார்த்தக்.” என்று சொல்லி ஆரம்பித்த பர்வதராஜனை சுசித்தார்த்தக் மகிழ்ச்சியும், சந்தேகமும் கலந்த பார்வை பார்த்தான்.

 

தங்கள் புகழ்ச்சிக்கு அடியவன் அருகதை உடையவன் அல்ல அரசேஎன்று வெட்கத்துடன் சுசித்தார்த்தக். சொன்னான்.

 

நான் வெறுமனே உன்னைப் புகழவில்லை சுசித்தார்த்தக். நீ சந்தேகப்பட்டபடியே தான் நடந்திருக்கிறது என்பதைச் சற்று முன் தான் புரிந்து கொண்டேன்.”

 

என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை அரசே

 

நீ சொன்னபடி சாணக்கியர் மிரட்டி தான் தனநந்தனை இத்திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்திருக்கிறார். அதே போல் வேண்டுமளவு செல்வத்தை எடுத்து செல்லலாம் என்று சொன்னதும் வெறும் கண் துடைப்பு வேலை தான் என்பதை சற்று முன் கண்ணாரக் கண்டேன். அந்த ரதத்தில் அரசன், ஒரு அரசி, உடைகள் எல்லாம் போக கூடுதலாக இடமே இருக்கவில்லை. அவர் கொடுத்ததாகவும் இருக்க வேண்டும், தனநந்தன் அதிகம் கொண்டு போகவும் கூடாது என்பது தான் சாணக்கியரின் உத்தேசமாக இருந்திருக்கிறது. எனக்கே தனநந்தனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. உண்மை நிலைமை புரியாமல் தனநந்தன் குறித்து கடுமையான நிலைப்பாடு எடுத்து விட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து நானே வருத்தப்பட்டேன்.”

 

பர்வதராஜன் சொன்னதைக் கேட்டுக் குழப்பத்துடன் பார்த்தது சுசித்தார்த்தக் மட்டுமல்ல மலைகேதுவும் தான்.

 

ர்வதராஜன் முகத்தில் பெரும் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு சுசித்தார்த்தக்கை அன்பான பார்வை பார்த்தபடி சொன்னான். ”உன்னை வெறும் பணியாளாக நினைக்காமல் நான் என் குடும்பத்திற்குள் ஒருவனாக எண்ணியிருப்பதால் தான் இதையெல்லாம் உன்னிடம் சொல்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நீயும் மனம் விட்டு என்னிடம் சொன்னதால் தான் ஆச்சாரியரின் நடவடிக்கைகளை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். பிறகு தான் உண்மையாக என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிய ஆரம்பித்தது. என்ன செய்வது? நேர் வழி தவிர வேறு வழி தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு ஏமாற்றப்படுவது கூடத் தாமதமாகவே தெரிகிறது....”

 

சுசித்தார்த்தக் மனமுருகியவனாகக் காட்டிக் கொண்டு சொன்னான். “இந்த ஏழையைத் தங்கள் குடும்பத்திற்குள் ஒருவனாகத் தாங்கள் நினைப்பது என் பாக்கியம் தான் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். நானும் உங்களிடம் என் மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசி விட்டேனே ஒழிய நீங்கள் அதை அப்படியே ஆச்சாரியரிடம் சொல்லி அவர் அதிருப்தியடைந்து நான் சிறை செல்ல நேருமோ என்று உள்ளூர பயந்து கொண்டே இருந்தேன்.”

 

பர்வதராஜன் சொன்னான். “என்னை நம்பியவர்கள் எப்போதும் பயப்படவே தேவையில்லை சுசித்தார்த்தக். நான் மற்றவர்களது ரகசியங்களை என் ரகசியம் போலவே பாதுகாக்கக் கூடியவன். என் கவலையெல்லாம் எல்லா உண்மைகளையும் கடைசி நேரத்தில் தெரிந்து கொண்டிருக்கிறேனே, எதையும்  இப்போது மாற்ற வாய்ப்பில்லையே என்பது தான். சந்திரகுப்தனின் திருமணம் பதினைந்து நாட்களில் நடந்துவிடும் போலத் தெரிகிறது. ஆச்சாரியர் ராக்ஷசரை எந்த நேரத்திலும் பிடித்து விடுவோம் என்று சொல்கிறார். ராக்ஷசர் அப்படி பிடிபட்டாலும் இந்தக் கட்டாயத் திருமணம் பற்றித் தெரியாமல் அவர் சந்திரகுப்தனுக்கு ஆதரவு தரும் வாய்ப்பு தான் அதிகம் என்று நீயே சொல்கிறாய். எல்லாம் யோசித்துப் பார்க்கையில் ஆச்சாரியரின் திட்டப்படி தான் எல்லாம் நடந்து முடியும் போல் இருக்கிறது.”

 

சுசித்தார்த்தக் முகத்தில் இருள் படர்ந்தது. பர்வதராஜன் தனக்குள் சத்தமாகப் பேசிக் கொள்பவன் போல சுசித்தார்த்தக்கின் காதுகளில் விழும்படி முணுமுணுத்தான். “ராக்ஷசர் இருக்கும் இடம் தெரிந்தாலாவது ரகசியமாக அவரைச் சந்தித்து ஆச்சாரியரின் இந்தச் சதித்திட்டம் பற்றிச் சொல்லி ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கலாம். அதற்கும் வழியில்லையே

 

சுசித்தார்த்தக் தீவிரமாக யோசிப்பது தெரிந்தது. பர்வதராஜன் பெருமூச்சு விட்டு விட்டு, சுசித்தார்த்தக்குக்கு வேறு ஒரு வேலை கொடுத்து  அனுப்பி வைத்தான்.

 

மலைகேது குழப்பத்துடன் தந்தையைக் கேட்டான். “இவனிடம் ஏன் இதை எல்லாம் சொல்கிறீர்கள் தந்தையே. ஆச்சாரியருக்கு இதெல்லாம் தெரிய வந்தால் ஆபத்தல்லவா? அவருக்கு எதிராகச் செயல்படாத வரைக்கும் தான் அவரும் கொடுத்த வாக்கை மீறாமல் நியாயமாக நடந்து கொள்வார் என்றும், சதியில் ஈடுபடுபவர்களை அதே வழியில் கையாள்வார் என்றும் அவர் அன்றே சொன்னாரல்லவா? இது தெரிந்து இதையே காரணம் காட்டி அவர் கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்க நாமே வழி ஏற்படுத்திக் கொடுத்தபடி ஆகிவிடாதா?”

 

(தொடரும்)

என்.கணேசன்   







No comments:

Post a Comment