அன்று மதிய உணவுக்குச் செல்லும் போதும் ஷ்ரவனும், முக்தானந்தாவும் பேசிக் கொள்ளவில்லை. சாப்பிடும் போதும் வழக்கம் போல் முக்தானந்தா தனியாகவே அமர்ந்து சாப்பிட்டார். சீக்கிரமே சாப்பிட்டு முடித்தவர் ஷ்ரவனுக்காகக் காத்திருக்காமல் உடனடியாக அறைக்கும் வந்து சேர்ந்தார். ஷ்ரவன் அதைக் கவனிக்காதது போலவும், சாப்பிட்டு விட்டு வெளியே சற்று நேரம் நின்று அவர் தெரிகிறாரா என்று பார்ப்பது போலவும் காட்டிக் கொண்டான். பின் அவர் தென்படாததைப் பார்த்துக் கிளம்புவது போலக் கிளம்பினான். கண்காணிப்பவர்கள் அதைப் பார்க்காமலிருக்க வழியில்லை.
அவன் அறைக்கு வந்த பின் அன்று காலை
அலுவலக கம்ப்யூட்டரில் கண்டுபிடித்த தகவலை முக்தானந்தாவிடம் சொன்னான். அவருக்கு
அபிநயானந்தா, கவிதானந்தா இருவர் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள்
இருவரும் வேறு வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதில் அவர் ஆச்சரியப்படவில்லை.
அவர் அவனை எச்சரித்தார். “நீ அவர்களைப்
பற்றி யாரிடமாவது விசாரிப்பதோ, அவர்களிடம் எப்படியாவது பேசப்போவதோ ஆபத்து ஷ்ரவன். அந்தத்
தவறை மட்டும் செய்யாதே.”
அதை ஷ்ரவன் உணர்ந்தே இருந்தான். ஆனால் அவன்
எதையாவது செய்தே ஆக வேண்டும். தேவானந்தகிரியின் அடுத்த வருகைக்கு முன் இங்கிருந்து அவன்
போயாக வேண்டும். அதற்கு அவன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டேயாக வேண்டும்....
அவன் திடீரென்று முக்தானந்தாவிடம் கேட்டான். “சுவாமிஜி
கல்பனானந்தா பிரம்மானந்தாவுடன் நெருக்கமாக இருந்த போதும் அடிப்படையில் அவர் நல்லவர்
என்றும், அது இன்றும் மாறியிருக்க வழியில்லை என்றும் இப்போதும் நம்புகிறீர்களா?”
முக்தானந்தா சொன்னார். “ஆமாம்”. அதை யோசிக்க
அவர் கண நேரமும் எடுத்துக் கொள்ளாததை ஷ்ரவன் கவனித்தான்.
முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “ஆனால் அவள்
உனக்கு உதவுவாள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது ஷ்ரவன். அவள் தன்னை
ஆபத்திற்கு உள்ளாக்கிக் கொண்டு உனக்கு உதவ மாட்டாள்.”
ஷ்ரவன் சொன்னான். “அது எனக்கும்
புரிகிறது சுவாமிஜி. நல்லவராக இருப்பதற்கும், முட்டாளாக
இருப்பதற்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது...”
அவர் அவன் சொன்னதை ரசித்தார். ஷ்ரவன்
அன்று காலை கண்ணன் அவரைப் பற்றி விசாரித்ததைச் சொன்னான். முக்தானந்தா சொன்னார். “அவன் பாண்டியனின்
வலது கையைப் போன்றவன். துறவு உடையில் இருந்தாலும் அவனுக்கும், துறவுக்கும்
எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. கண்ணனுக்குக் கீழ்
சில தடியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதைச் செய்யவும் தயங்க மாட்டார்கள்...”
ஷ்ரவனுக்கு அன்று பிற்பகல் வேலை தோட்ட வேலையாக இருந்தது. அவனுக்கு
கல்பனானந்தா ஒரு தனிப்பகுதியில் வேலையை ஒதுக்கி இருந்தாள். அந்தச்
சிறிய தோட்டத்தில் வேறு யாரும் இல்லை. அவன் அங்கே வேலை
செய்து கொண்டிருந்த போது கல்பனானந்தா அங்கே வந்தாள். வந்தவள்
சுமார் ஐந்தடி தள்ளி நின்று அவன் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் மௌனமாக
நின்றாள். ஷ்ரவன் அவளைத் திரும்பிப் பார்த்த போது லேசாக நட்புடன் அவள்
புன்னகைத்தாள்.
பின் அந்த வகைச் செடிகளைப் பராமரிக்கும்
வழிகளை எளிமையாக அவனுக்கு விளக்கினாள். அவளுக்குப் பின்னால்
சற்று தூரத்தில் பாண்டியனின் வசிக்கும் கட்டிடம் தெரிந்தது. அடுத்த
கட்ட நாடகத்தை அரங்கேற்ற உகந்த சூழ்நிலையாக அது ஷ்ரவனுக்குத் தெரிந்தது. உடனே அவளுக்குப்
பின்னால் பார்த்தபடி ஷ்ரவன் சிலையாக அப்படியே சமைந்தான். அவன் முகத்தில்
திகைப்பைக் காட்டினான்.
கல்பனானந்தா அதைக் கவனித்து திகைப்புடன்
கேட்டாள். “என்ன ஆயிற்று?”
ஷ்ரவன் உடனே பேச வார்த்தைகள் வராதது
போல் கையை மட்டும் நீட்டி பாண்டியனின் கட்டிடத்தைக் காண்பித்தான்.
கல்பனானந்தா திரும்பிப் பார்த்தாள். அங்கு எதுவும், யாரும்
தெரியவில்லை. ஆனால் ஷ்ரவன் பாண்டியனின் கட்டிடத்தைக் கைகாட்டியதை தூரத்தில்
நின்றிருந்த கண்காணிப்பாளன் ஒருவன் பார்த்து விட்டான். அவன் தானிருக்கும்
இடத்திலிருந்து மெள்ள அவர்களை நோக்கி வர ஆரம்பித்தான். ஷ்ரவன்
ஓரக் கண்ணால் அதைக் கவனித்தாலும், பார்த்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. கல்பனானந்தாவும்
அந்தக் கண்காணிப்பாளன் வருவதைப் பார்த்தாள்.
அவள் ஷ்ரவனைக் கேட்டாள். “அங்கே என்ன
இருக்கிறது?”
ஷ்ரவன் வாயைத் திறந்து மூடினான். பேச வார்த்தைகள்
வராதது போல் காட்டிக் கொண்டான். கண்காணிப்பாளன்
அவர்களுக்கு முப்பது அடி தூரத்திலேயே நின்று கொண்டு கூர்ந்து கவனித்தான்.
கல்பனானந்தா மெல்ல ஷ்ரவனைக் கேட்டாள். “உங்களுக்கு
வழக்கம் போல் எதாவது காட்சி தெரிகிறதா?”
ஷ்ரவன் ஆமாம் என்று தலையை அசைத்தான்.
கல்பனானந்தா கேட்டாள். “என்ன தெரிகிறது?”
“ஓநாய் அந்தக்
கட்டிட வாசலில் நின்று கொண்டிருக்கிறது. அது.. அது...”
கல்பனானந்தா பரபரப்புடன் கேட்டாள். “அது?”
ஷ்ரவன் சொன்னான். “அது வாசல்
அருகே இருக்கும் மண்ணைத் தோண்டிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது....
எதோ குழி தோண்டிக் கொண்டிருப்பது போல்...”
கல்பனானந்தா பாண்டியனின் வாசலைத் திரும்பிப்
பார்த்தாள். அவள் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. அவள் ஷ்ரவனிடம்
திரும்பி, கேட்டாள். “அப்புறம் என்ன தெரிகிறது?”
ஷ்ரவன் முகத்தில் திகைப்பைக் காட்டிக்
கொண்டே சொன்னான். “அது.... அது.... மறைந்து விட்டது.”
ஷ்ரவன் தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தான்
என்றாலும், அடிக்கடி நிமிர்ந்து பாண்டியன் வசிக்கும் கட்டிடத்தைப் பார்த்தான். அவனையும்
அறியாமல் செய்யும் செயல் போல ஷ்ரவன் காட்டிக்கொண்டான். சிறிது
நேரம் கல்பனானந்தா அங்கேயே நின்றாள். அவன் கூடுதலாக எதையாவது
பார்த்துச் சொல்வதானால் சொல்லட்டும் என்று நிற்பது போல் அது இருந்தது. முப்பது
அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த கண்காணிப்பாளனும் அங்கேயே நின்றான்.
ஷ்ரவன் கல்பனானந்தாவிடம் மெல்லக் கேட்டான். “இதிலிருந்து
எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் சுவாமினி”
”எதிலிருந்து?”
“இப்படிக்
காட்சிகள் தெரியும் சாபத்திலிருந்து.”
கல்பனானந்தா சொன்னாள். “சாபம் என்று
ஏன் நினைக்கிறீர்கள்? இறைவன் காரணத்தோடு உங்களுக்குக் கொடுத்த வரம் என்று ஏன் நினைக்கக்
கூடாது?”
ஷ்ரவன் வருத்தம் காட்டியபடி சொன்னான். “அப்படிக்
காரணம் எதாவது விளங்கினால், வரம் என்று நினைக்கலாம்... ஆனால் காரணம்
எதுவும் விளங்க மாட்டேன்கிறதே சுவாமினி”
கல்பனானந்தா ஆறுதல் சொன்னாள். “பொதுவாகவே
மனிதன் அவசரக்காரன். அவனுக்கு ஆரம்பத்திலேயே முடிவு வரை தெரிந்து விட வேண்டும்
என்று அவசரம். ஆனால் அப்படித் தெரிந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியம்
இருக்காது ஷ்ரவனானந்தா. தகுந்த சமயம் வரும் போது எல்லாமே தெரியும். பொறுமையாக
இருங்கள்.”
கல்பனானந்தா சென்று விட்டாள்.
ஷ்ரவன் முதல் அடி எடுத்து வைத்தாகி
விட்டது. பாண்டியனுக்கு இந்தத் தகவல் போகும். சிறிதாவது
யோசிக்க முடிந்தவன் பிரச்சினையை உணராமல் இருக்க முடியாது. பாண்டியன்
மகாபுத்திசாலி. எச்சரிக்கையுடன் ஒவ்வொன்றையும் திட்டமிடுபவர். அதனால்
தன் வாசலில் ஓநாய் குழி தோண்டுகிறது என்ற செய்தியை அவரால் அலட்சியப்படுத்த முடியாது. அவர் மிகத் தைரியமானவர்
என்றாலும், செய்வினை என்னவெல்லாம் செய்யும் என்ற அனுபவம் உள்ளவன்.
இப்போதும் ரசம் சாதம், தயிர்சாதம், இட்லி என பத்திய உணவை உண்டு கொண்டு இருக்கும் அவர் இந்தப் புதிய தகவலால் பாதிக்கப்படாமல்
இருக்கவே முடியாது.
அறிவாளியால் முட்டாள் என்ன செய்வான் என்று தான் சொல்ல முடியாது. ஏனென்றால் முட்டாள்தனம்
ஒருவனை எந்த விதத்திலும் யோசிக்க வைக்கலாம். ஐன்ஸ்டீன் சொன்னது
போல பிரபஞ்சத்திற்குக் கூட எல்லை உண்டு. ஆனால் முட்டாள்தனம் எல்லை
இல்லாதது. ஆனால் ஒரு
புத்திசாலியால், இன்னொரு புத்திசாலி, கிடைத்திருக்கும்
தகவலை வைத்து என்ன செய்வான் என்பதைத் திட்டமிட்டுச் சொல்ல முடியும். பாண்டியனின்
அலைபேசி உரையாடல்களையும், சமீபத்திய செயல்பாடுகளையும் வைத்தே, அவருடைய சிந்தனை
ஓட்டத்தை ஓரளவு நன்றாக ஷ்ரவன் கணித்து வைத்திருந்தான். பயத்தினால்
உந்தப்பட்டு உடனடியாக உதவிக்கு ஆளை அழைக்கும் ரகமாக பாண்டியன் இருந்தால், தேவானந்தகிரியை அழைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பாண்டியன்
தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து பார்த்து விட்டு, தாக்குப்
பிடிக்க முடியாமல் போனால் தான் தேவானந்தகிரியை வரவழைக்க நினைப்பார்…
மிக ஆபத்தான முயற்சியில் தான் ஷ்ரவன் இறங்கியிருக்கிறான். ஆனால் ஆபத்தை எதிர்கொள்ளாமல்
இதில் அவன் வேகமாக முன்னேற முடியாது. என்ன செய்வது!
Super
ReplyDelete"தகுந்த சமயம் வரும் போது எல்லாமே தெரியும்'' அற்புதமான வரிகள் 👏👏👏👏
ReplyDelete