என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 28, 2025

சாணக்கியன் 176

ர்வதராஜன் மகனிடம் சொன்னான். “மகனே. ஆச்சாரியரைப் போன்ற ஆளுக்குப் பேச்சு சாமர்த்தியத்தால் எதையும் அவருக்கு வேண்டியபடி மாற்றிக் கொள்வது முடியாதது அல்ல. நியாயமாக நடந்து கொள்ளும் மனிதராக இருந்திருந்தால் பாடலிபுத்திரத்தை வென்று நாம் உள்ளே வந்த பிறகு அவர் எல்லாத் தீர்மானங்களையும் என்னைக் கலந்தாலோசித்தே எடுத்திருக்க வேண்டும். ராக்ஷசர் கிடைத்தால் தான் வெற்றி முழுமையாக இருப்பதாக அர்த்தம் என்றும், அதுவரை அவரே எல்லா முடிவுகளையும் எடுப்பது தான் அனுகூலமாக இருக்கும் என்றும் சாமர்த்தியமாகச் சொல்லி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டார். ராக்ஷசர் பிடிபட்டாலும் அதை ஆச்சாரியர் சொன்னால் ஒழிய நமக்குத் தெரியாது என்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம். அவர் சந்திரகுப்தனின் திருமணம் முடிந்து, ராக்ஷசரின் ஆதரவையும் பெற்ற பின் கூட நமக்கு அதைத் தெரிவிக்கும் அபாயம் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்த பின் ஏதாவது ஒரு சில்லறைக்காரணம் சொல்லி சமபாதி தருவதை அவர் தட்டிக் கழித்தால் நாம் என்ன செய்ய முடியும்? எல்லாம் நம் கைமீறிப் போன பிறகு நாம் செய்ய முடிந்தது ஒன்றும் இல்லை என்பதால், ஏதாவது செய்வதானால் இப்போதே அதைச் செய்வது தான் புத்திசாலித்தனமாக இருக்கும்.”

 

மலைகேது கேட்டான். “முதலாவது இவனுக்கு ராக்ஷசர் இருக்கும் இடம் தெரியுமா, தெரிந்தாலும் சொல்வானா என்பதே நிச்சயமில்லை. அப்படியே ராக்ஷசர் இருக்குமிடம் நமக்குத் தெரிந்தாலும் அந்த ஆள் இப்போதிருக்கும் நிலையில் என்ன செய்ய முடியும் என்பதும் நமக்கு நிச்சயமில்லை. அப்படி இருக்கையில் இந்த ஆபத்தான வேலையில் நாம் ஏன் இறங்க வேண்டும் தந்தையே

 

பர்வதராஜன் திருப்தியுடன் புன்னகைத்தான். மகன் ஓரளவு அறிவுபூர்வமாக யோசிக்கக் கற்றுக் கொண்டு விட்டான். “மகனே. இப்போதே வெளிப்படையாக நாம் ஆச்சாரியரை எதிர்க்கப் போவதில்லை. சுசித்தார்த்தக் மூலம் ராக்ஷசரைச் சந்திக்க முடியுமா என்று பார்ப்போம். அப்படிச் சந்தித்தால் அவரால் ஆச்சாரியரையும் சந்திரகுப்தனையும் எதிர்த்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்போம். ராக்ஷசர் ஆச்சாரியருக்கு இணையான அறிவாளி. அதனால் அவரால் முடியும் என்றால் அவரிடம் பேரம் பேசுவோம். உனக்கும் துர்தராவுக்கும் திருமணம் செய்து கொடுத்து, ஆச்சாரியர் நமக்கு வாக்களித்த சமபாதி நிதி, நிலம் தர முடியுமா என்று கேட்போம். அவர் சம்மதித்தால் அவருக்கு நட்புக்கரம் ரகசியமாக நீட்டுவோம். அவரால் முடியா விட்டால் அவரைக் கைவிட்டு விடுவோம். அவரால் முடிந்தால் ஆச்சாரியரைக் கைவிட்டு விடுவோம். யாரைக் கைவிடுவது என்பதை முடிவில் தீர்மானித்துக் கொள்வோம். அதுவரை இருபக்கத்திலுமே தொடர்பில் இருப்போம். என்ன சொல்கிறாய்?”

 

மலைகேது தந்தையின் அதிபுத்திசாலித்தனத்தை மெச்சியபடி தலையாட்டினான்.

 

சுசித்தார்த்தக் அன்று முழுவதும் ஆழ்ந்த ஆலோசனையில் இருப்பது தெரிந்தது. ஏதோ இரு முடிவுகளுக்கிடையே எந்த முடிவை எடுப்பது என்று அவன் குழப்பத்தில் இருந்தது போல் தெரிந்தது. பர்வதராஜன் அவனிடம் வேடிக்கையாகச் சொன்னான். “சுசித்தார்த்தக், நாங்கள் மகதத்தை வெல்வது   எப்படி என்று கூட இந்த அளவுக்கு ஆலோசிக்கவில்லை. நீ ஆலோசிப்பதைப் பார்த்தால் நீ அதை விடப் பெரிய ராஜ்ஜியம் ஏதோ ஒன்றைப் பிடிக்க யோசிக்கிறாய் என்றல்லவா எனக்குத் தோன்றுகிறது

 

சுசித்தார்த்தக் வெட்கப்பட்டான். “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அரசே. இந்த ஏழைக்கு அந்த அளவு பெரிய ஆசையெல்லாம் இல்லைஎன்றவன் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து எச்சில் விழுங்கியபடி வந்து அவரிடம் கேட்டான். “அரசே. நீங்கள் பிரதம அமைச்சர் ராக்ஷசரைச் சந்திக்க ஆசைப்பட்டது நிஜம் தானா? இல்லை சும்மா வேடிக்கையாகச் சொன்னீர்களா?” 

 

பர்வதராஜன் மகனை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்துவிட்டு சுசித்தார்த்தக்கிடம் சொன்னான். “சுசித்தார்த்தக், உண்மையாகத் தான் சொன்னேன். ஏன் கேட்கிறாய்? உனக்கு அவர் இருக்குமிடம் தெரியுமா?”

 

சுசித்தார்த்தக் பயமும், ஆர்வமும் கலந்த பார்வை பார்த்து விட்டுத் தாழ்ந்த குரலில் சொன்னான். ”எனக்குத் தெரியாது அரசே.”

 

பர்வதராஜன் அவனிடம் உரிமையோடு கோபித்துக் கொண்டான். “நீ என்னை இன்னும் நம்ப மறுக்கிறாய் என்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது சுசித்தார்த்தக்.”

 

சுசித்தார்த்தக் சொன்னான். “உண்மையைத் தான் சொல்கிறேன் அரசே. அவரிருக்குமிடம் எனக்குத் தெரியாது. ஆனால் உண்மையாக அவரிருக்கும் இடம் தெரிந்த ஆளை எனக்குத் தெரியும்.”

 

யாரவன்?” பர்வதராஜன் ஆர்வத்துடன் கேட்டான்.

 

சுசித்தார்த்தக் தயக்கத்துடன் சொன்னான். ”நான் சொன்னது தெரிந்தால் அவன் என்னைக் கொன்றே விடுவான்..... என்னை நீங்கள் வேலைக்காக வெளியே  அனுப்பிய போது நீங்கள் சொன்னதை எல்லாம் அவனிடம் சொல்லி நீங்கள் பிரதம அமைச்சர் ராக்ஷசரைச் சந்திக்க ஆசைப்படுவதாகச் சொன்னேன். அதற்கு அவன் என்னை அதிகப்பிரசங்கி என்றும், முட்டாள் என்றும் திட்டினான். நீங்களும், ஆச்சாரியரும் ஒரே நோக்கத்தை உடையவர்கள் என்றும், பிரதம அமைச்சர் ராக்ஷசரைச் சிறைப்பிடிக்க நீங்கள் போடும் திட்டம் தான் இது என்றும் சொல்கிறான்.”

 

பர்வதராஜன் சொன்னான். “அவனைத் தவறு சொல்ல முடியாது சுசித்தார்த்தக். அவன் பார்வையில் நானும், சந்திரகுப்தனும், சாணக்கியரும் சமமான எதிரிகள். மகதம் மீது படையெடுத்து வந்து வென்ற எதிரிகள். உண்மை அதுவாக இருப்பதால் அவன் நிலைமையில் நான் இருந்திருந்தால் நானும் அவனைப் போலவே சந்தேகித்திருப்பேன். சூழ்ச்சியும், சதியும் நிரம்பிய உலகமல்லவா இது. யாரும் சொல்லும் வார்த்தைகளை மட்டும் நம்பி எச்சரிக்கையாக இல்லாமல் இருந்தால் ஏமாந்தல்லவா போக வேண்டி இருக்கும்.”

 

சுசித்தார்த்தக் பர்வதராஜனை மிகுந்த மரியாதையுடன் பார்த்தான். “எத்தனை பக்குவத்துடன் அவனையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் அரசே. உங்களைப் போய் அவன் சந்தேகப்பட்டு விட்டானே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.”

 

பர்வதராஜன் சொன்னான். “சுசித்தார்த்தக் நீ அவனிடம் போய் சொல். நான் என் மகன் மலைகேது தலை மீது கை வைத்து சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் உத்தேசம் ராக்ஷசரைக் காட்டிக் கொடுப்பதல்ல. அவரைப் பார்த்துப் பேச ஆசைப்படுகிறேன் அவ்வளவு தான். அதுவும் ஆச்சாரியரின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு மனமொடிந்து போனதால் தான் அந்த விருப்பமும் கொண்டேன். நான் ராக்ஷசரைச் சந்தித்துப் பேசினேன் என்று தெரிந்தாலே ஆச்சாரியர் என்னை எதிரியாக நினைக்க ஆரம்பித்து விடுவார் என்ற ஆபத்து எனக்கும் இருக்கிறது.  அதை அவனுக்கு எடுத்துச் சொல்

 

சுசித்தார்த்தக் யோசித்து விட்டுச் சம்மதித்தான். பிறகு அவன் வெளியே சென்று சிறிது நேரம் கழித்து வந்து பர்வதராஜனிடம் சொன்னான். “அரசே. அந்த ஆளிடம் நீங்கள் கூறியதைச் சொன்னேன். அவன் தற்போதும் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரியாக இருப்பதால் தங்களிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவன் ராக்ஷசர் தற்போது மறைந்திருக்கும் இடத்தையும் தெரியப்படுத்த மறுத்து விட்டான். ஆனால் அவன் ராக்ஷசரை நீங்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வதற்குச் சம்மதித்திருக்கிறான்.”

 

பர்வதராஜன் சொன்னான். “அது போதும் சுசித்தார்த்தக். நான் உன் நண்பனின் எச்சரிக்கையுணர்வை மதிக்கிறேன். அவரவர் பாதுகாப்பு அவரவருக்கு முக்கியம். நான் எப்போது ராக்ஷசரைச் சந்திப்பது? எப்படிச் சந்திப்பது?”

 

அவன் ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்த பின் சொல்கிறானாம். அதிகாலையில் மாறுவேடத்தில் வரச் சொல்கிறான். நள்ளிரவு வரையும் கூட ஆச்சாரியரின் ஒற்றர்கள் முக்கிய இடங்களையும், மனிதர்களையும் கண்காணிக்கிறார்கள் என்று அவன் சொல்கிறான். அதன் பின் அவர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதில்லையாம்.”

 

எப்போது எங்கே எப்படி அவன் வரச் சொல்கிறானோ அப்படியே வருகிறேன் சுசித்தார்த்தக். இந்த சூழ்நிலையில் ஆச்சாரியரின் கவனத்திற்கு வர நானும் விரும்பவில்லை.” என்று பர்வதராஜன் சொன்னான்.  

        

(தொடரும்)

என்.கணேசன்        


சாணக்கியன் தற்போது வெற்றிகரமான இரண்டாம் பதிப்பில் ...





Monday, August 25, 2025

யோகி 117

 

ஷ்ரவனும், முக்தானந்தாவும் அன்றிரவும் மனம் விட்டுப் பேசிக் கொண்டார்கள். ஷ்ரவன் யோகாலயம் பற்றிப் பொதுவாக மற்றவர்கள் எழுப்பியிருந்த சந்தேகங்களை அவரிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டான்.

 

சுவாமிஜி இங்கே வெளிநாட்டு ஆள்களை சட்ட விரோதமாய் தங்க வைத்திருப்பதாகப் புகார் சொல்லப்படுகிறதே, அது உண்மையா?”

 

தெரியவில்லை ஷ்ரவன். அவர்கள் கடைக் கோடியில் இருக்கிறார்கள். இந்தப் பக்கம் அவர்கள் அதிகம் வருவதுமில்லை.”

 

இங்கே தரும் தீர்த்தத்தில் எதையோ கலந்து தருகிறார்கள். அதனால் தான் இங்கே வரும் துறவிகள் அடிமை போல் ஆகி விடுகிறார்கள். அவர்கள் இங்கிருந்து வெளியேறச் சம்மதிப்பதில்லை என்றெல்லாம் சிலர் சொல்கிறார்களே, அது எந்த அளவு சரி?” 

 

அதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீயும் தான் இங்கே வந்திருக்கிறாய். உனக்கும் தீர்த்தம் தருகிறார்கள், நீ அப்படி ஆகி விடவில்லையே.”

 

எனக்கு ஒன்றும் அப்படி ஆகவில்லை. ஆனால் இந்தப் புகார் சொல்லப்படுவது பணக்கார வீட்டு இளைஞர்கள், பெண்கள் பற்றி தான். அப்படி அடிமைப்படுத்தி அவர்கள் இங்கேயே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். என்னிடம் கண்ணனும் ஆரம்பத்தில் கேட்ட கேள்விகளில் எனக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளக் கேட்ட கேள்விகள் அதிகம். நான் சொத்துக்கள் அதிகம் இல்லை என்றதும் அவர் சுவாரசியம் இழந்து விட்டதாய் எனக்குத் தோன்றியது. ஒருவேளை எனக்கு சொத்து அதிகம் இருந்திருந்தால் அது போன்ற தீர்த்தம் எனக்கும் கிடைத்திருக்குமோ?”

 

முக்தானந்தாவின் முகத்தில் வருத்தம் தெரிந்தது. விரக்தியுடன் அவர் சொன்னார். “யோகாலயம் ஆரம்பிக்க முதல் முதலில் சொத்தை எழுதித் தந்தது நான் தான். அதற்குப் பின் தான் எங்கள் குழுவிலிருந்த நண்பர்கள் சிலர் தங்கள் சொத்தையும் எழுதித் தந்தார்கள். எங்களிடம் அப்போது பிரம்மானந்தா சொன்னார். “ஒரு காலத்தில் யோகாலயம் உலகம் பூராவும் பெருமையாய் பேசப்படும். அப்போது உங்கள் தியாகம் வீண் போகவில்லை என்று நீங்கள் கண்டிப்பாய் உணர்வீர்கள்.” ஆனால் இப்போதோ, பார்ப்பதும் சரியில்லை, கேள்விப்படுவதும் சரியில்லை. நாங்கள் அன்றைக்குச் செய்தது இப்போது தியாகமாகத் தெரியவில்லை, முட்டாள்தனமாகத் தான் தெரிகிறது. சில சமயம் எல்லாவற்றுக்கும் பாண்டியன் தான் காரணம் என்று எனக்குத் தோன்றும். அவனால் தான் பிரம்மானந்தா இப்படி மாறிப் போனாரோ என்று நினைப்பேன்..”

 

ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “தங்கமும், தேக்கும் சேற்றில் விழுந்து, எத்தனை காலம் அங்கேயே கிடந்தாலும், சிறிதும் தரம் குறைவதில்லை சுவாமிஜி. மிக உயர்ந்த மனிதர்களும் யாராலும், எந்த சந்தர்ப்பத்தாலும் தங்களுடைய தரத்தை இழப்பதில்லை. சுற்றியுள்ள சூழலும், மனிதர்களும் எப்படி இருந்தாலும், நம் அனுமதியில்லாமல் எதுவும், யாரும் நம்மை மாற்ற முடியாதல்லவா?”

 

உண்மை ஷ்ரவன்

 

பிரம்மானந்தாவைப் போல் கல்பனானந்தாவும் மாறி விட்டதாய் உங்களுக்குத் தோன்றவில்லை அல்லவா?”

 

இல்லை ஷ்ரவன். அதற்குக் காரணம் அவள் பிரம்மானந்தா அளவுக்கு, பாண்டியனிடம் நெருக்கமாய் இல்லை என்பதாகவும் இருக்கலாம்.”

 

இன்றைக்கு நான் அவரிடம் சொன்னதை எல்லாம் அவர் பாண்டியனிடம் கண்டிப்பாகச் சொல்வார் என்று எனக்குத் தோன்றுகிறதே. நெருக்கமாய் இல்லாமலிருந்தால் அதைச் சொல்லும் வாய்ப்பில்லையே.”

 

முக்தானந்தா சொன்னார். “அவர்கள் சொல்லித் தான், அவள் நீ சொல்வதை எல்லாம் காது கொடுத்தே கேட்கிறாள். நீ அவளுடன் பேசுவதை எவனாவது கண்டிப்பாய் பார்த்து, பாண்டியனிடம் சொல்லாமலிருக்க மாட்டான். அதனால் அவள் அவர்களை அனுசரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.”

 

அப்படியானால் நான் யாருக்கும் தெரியாமல் அவரிடம் ஏதாவது ரகசியமாய்ச் சொன்னாலோ, கேட்டாலோ அதை அவர் அவர்களுக்குத் தெரிவிக்க மாட்டாரா?”

 

முக்தானந்தா சொன்னார். “தெரிவிக்க மாட்டாள் என்று தான் என் உள்மனம் சொல்கிறது ஷ்ரவன்.”

 

அப்படித் தெரிவித்தால் அவரும் மாறி விட்டதாய் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்என்று யோசனையுடன் தெரிவித்த ஷ்ரவன் அதை இன்று கண்டுபிடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தான்.  ஏனென்றால் அவனுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அது முக்கியமாய்த் தெரிய வேண்டும்!

 

றுநாள் காலை அலுவலக அறையில் ஷ்ரவனுக்குப் புதிதாக எதையும் கண்டுபிடிக்கும்படியான தகவல்கள் இருக்கவில்லை. அன்றோடு அந்த வேலையும் முடிகிறது. அன்றிரவு பிரம்மானந்தாவோடு, அந்த வேலையைச் செய்து வரும் இளந்துறவியும் திரும்பி வருகிறார். அதனால் நாளை காலை முதல் அவர் தன் வேலையை கம்ப்யூட்டரில் தொடர்வார். ஷ்ரவனும் நாளை காலை முதல் தோட்ட வேலையைத் தொடர வேண்டியிருக்கும்.

 

வழக்கம் போல் கண்ணனும் வந்து சுமார் பத்து நிமிடம் அவனுடன் அமர்ந்திருந்தார் என்றாலும் அவர் புன்னகையோடு நிறுத்திக் கொண்டார். எந்தக் கேள்வியும் அவனைக் கேட்கவில்லை. எதுவும் சொல்லவுமில்லை. பாண்டியனிடமிருந்து ஏதாவது எதிர்வினை இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ஷ்ரவனுக்கு அது ஏமாற்றமாக இருந்தது. கல்பனானந்தா அந்தச் செய்தியை பாண்டியனிடம் சொல்லவில்லையா? சொல்லியும் பாண்டியன் ஏன் அமைதியாக இருக்கிறார்? அவர் உடனடியாக தேவானந்தகிரியைத் தொடர்பு கொண்டிருப்பாரோ? தேவானந்தகிரியிடமிருந்து வேறெதாவது ஆலோசனை வந்திருக்குமோ? இல்லை, பிரம்மானந்தாவின் வரவுக்காக பாண்டியன் காத்துக் கொண்டிருக்கிறாரோ? ஷ்ரவனின் மனதில் பல கேள்விகள் அலைமோதின...

 

பாண்டியன் மிக அவசியமான விஷயங்களுக்கு அல்லாமல், மற்றவற்றிற்கு  பிரம்மானந்தாவிடம் அனுமதியோ, ஆலோசனையோ கேட்பதில்லை. ஷ்ரவன் விஷயத்தையும் அவர் மிக அவசியமான விஷயமாக நினைக்கவில்லை. அதனால் வெளியூர் சென்றிருக்கும் பிரம்மானந்தாவை அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

 

ஓநாய் சுதந்திரமாய் உலாவுவது மட்டுமல்லாமல் ஏதோ விஷம வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது என்பது ஷ்ரவன் மூலம் தெரிந்த பின் அவரால் அமைதியாய் இருக்க முடியவில்லை. அதனால் என்ன விளைவுகள் விளையும், அதன் பாதிப்புகள் எப்போது தெரியவரும் என்பது தெரியவில்லை. பாதிப்புகள் ஏற்பட்ட பிறகு பரிகாரம் தேடுவதை விட இது பற்றிய விவரங்களை உடனுக்குடன் ஷ்ரவன் மூலம் தெரிந்து கொண்டு அதற்கேற்றது போல் நடந்து கொள்வது உத்தம்ம் என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. தேவைப்பட்டால் விவரங்களை தேவானந்தகிரியிடம் தெரிவித்து அவரிடமிருந்து ஆலோசனை பெறலாம். அவசரம் என்றால் அவரை இங்கு வரவழைக்கலாம்...

 

பிற்பகலில் தோட்ட வேலைக்குச் சென்ற ஷ்ரவனுக்கு கல்பனானந்தா இன்னொரு தனிப்பகுதியில் வேலையை ஒதுக்கினாள். அப்பகுதியில் அவனைத் தவிர வேறு எந்தத் துறவியும் வேலையில் இல்லை. அதைக் கவனித்த போது, இன்றும் அவன் எதாவது சொல்வதானால் தயக்கமில்லாமல் தைரியமாகச் சொல்லட்டும் என்று தான் அப்படி ஒதுக்குப் புறமாக வேலையை ஒதுக்கியது போல் ஷ்ரவனுக்குத் தோன்றியது.

 

அன்று மாலையில் அவன் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது கல்பனானந்தா அவன் எதிர்பார்த்தபடியே வந்தாள். அவன் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்து, வேலையில் சில ஆலோசனைகளையும் சொன்னாள். அவள் சொன்னபடி ஷ்ரவன் செய்தான்.

 

திடீரென்று ஷ்ரவன் அவளிடம் கேட்டான். “சுவாமினி, நீங்கள் யோகிஜி தவிர வேறு எந்த நிஜ யோகியையாவது சந்தித்திருக்கிறீர்களா?”

 

மின்னல் தாக்கியது போல் கல்பனானந்தா அதிர்ந்தது தெரிந்தது. அவன் இதுவரையில் கவனித்ததில் அவளும் பாண்டியனைப் போலவே அமைதி இழப்பவள் அல்ல.  அப்படிப்பட்டவள் இந்தச் சாதாரண கேள்வியால் ஏன் அதிர்ச்சி அடைகிறாள்? இதே கேள்வியை அவன் முக்தானந்தாவிடம் கூடக் கேட்டிருக்கிறான். ஆனால் அவர் அதிர்ச்சியடையவில்லை. வருத்தத்துடன் இல்லையென்று பதில் அளித்தார். கல்பனானந்தா அதிர ஒரே காரணம் அப்படி ஒரு யோகியை அவள் நேரில் சந்தித்திருக்கிறாள் என்பதாகவே இருக்க வேண்டும்!

 

கல்பனானந்தா சுற்றிலும் பார்த்தாள். கண்காணிக்கும் ஒரு ஆள் தூரத்தில் தான் இருந்தான். அவள் சிரமப்பட்டு தன்னை சுதாரித்துக் கொள்வது ஷரவனுக்குத் தெரிந்தது.

 

அவள்ஆம்”, “இல்லைஎன்று பதிலளிக்காமல் அவனிடம் திகைப்புடன் கேட்டாள். “ஏன் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டீர்கள்?”

 

ஷ்ரவன் சாதாரணமாகச் சொன்னான். “சும்மா தான் சுவாமினி

 

அவள் அவனையே கூர்ந்து பார்த்து விட்டு ஒரு பதிலும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டாள். ஷ்ரவன் ஆபத்தை உணர்ந்தான்.


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, August 21, 2025

சாணக்கியன் 175

லைகேது தங்கள் மாளிகைக்குத் திரும்பிச் செல்லும் போது தந்தையிடம் சொன்னான். “தனநந்தனுக்கு எவ்வளவு திமிர் பார்த்தீர்களா தந்தையே., நம் பக்கம் அவன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.”

 

கவனித்தேன் மகனே. அவனைச் சொல்லித் தப்பில்லை. இப்போது அவன் விதியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பது ஆச்சாரியரும், சந்திரகுப்தனும் தான் என்பதால் அவன் நம்மை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.” என்று பர்வதராஜன் சொன்னான்.

 

ஆனால் சந்திரகுப்தனும் வருங்கால மாமனார் என்று தனநந்தனைக் காலைத் தொட்டெல்லாம் வணங்கவில்லை. ஒரு இடைவெளியை வைத்திருக்கிறான்.”

 

மகனே. உன் கண்ணில் படுவதை வைத்து மட்டும் எதையும் முடிவு செய்து விடாதே. சந்திரகுப்தன் இதற்கு முன்பே கூட அவனைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்று இருக்கக்கூடும். நமக்குத் தெரியாமல் அவர்களுக்குள் வேறு பேச்சு வார்த்தையும் நடந்திருக்கக்கூடும்சதியும், சூழ்ச்சியும், தந்திரமும் மற்றவர்கள் பார்க்கும்படியாக அரங்கேறி விடுவதில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்திரு.”

 

அப்படி அவர்களுக்குள் ஏதாவது ரகசிய உடன்பாடு ஏற்பட்டிருந்தால் சந்திரகுப்தனின் திருமணம் முடியும் வரையாவது தனநந்தன் இங்கிருக்க அனுமதித்திருப்பார்கள் அல்லவா தந்தையே

 

மகனே, ஆச்சாரியரை நீ குறைத்து மதிப்பிட்டு விடாதே. தனநந்தன் இங்கிருக்கும் வரை இங்கு ஏதாவது கலகமோ, கலவரமோ நடக்கும் அபாயம் இருக்கிறது என்று அவர் அறிவார். அதனால் அதற்கெல்லாம் அனுமதி வழங்காமல் அவனை உடனே அனுப்பி வைத்திருக்கிறார். அவர் அந்த விஷயத்தில் நம்மையும், அவனையும் மிகவும் தந்திரமாகச் சமாளித்து வருகிறார். அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.”

 

மலைகேதுவுக்கு இதையெல்லாம் கேட்கையில் மலைப்பாக இருந்தது. அவன் மெல்லச் சொன்னான். “நாம் சீக்கிரம் நம் பங்கை வாங்கிக் கொண்டு விடுவது நல்லது போலத் தெரிகிறது தந்தையே

 

போகிற போக்கைப் பார்த்தால் பங்கைப் பிரித்துத் தருவார்களா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது மகனே.” என்று பர்வதராஜன் யோசனையுடன் சொன்னான்.

 

மலைகேது திகைப்புடன் கேட்டான். “அப்படியானால் என்ன செய்வது தந்தையே?”

 

என்னைக் கொஞ்சம் யோசிக்க விடு மகனேஎன்று சொன்ன பர்வதராஜன் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தான். இன்னும் சாணக்கியர் வெல்லாமல் இருப்பதும், தன் பக்கம் இழுக்காமல் இருப்பதும் ஒரே ஒரு மனிதரைத் தான். அது ராக்ஷசர். அவரும் சாணக்கியரைத் தன் பரம சத்துருவாக நினைக்கிறார் என்றும் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் ராக்ஷசர் பிடிபட்டாலும் சுசித்தார்த்தக் சொன்னது போல் தனநந்தனின் சம்மதத்தோடு தான் துர்தரா சந்திரகுப்தனை மணந்து கொள்கிறாள் என்று தெரிந்தால் சந்திரகுப்தனை மன்னனாகவே அங்கீகரித்துவிடும் வாய்ப்பிருக்கிறது. இப்படி எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டால் பர்வதராஜனின் தயவோ, உதவியோ சாணக்கியருக்குத் தேவையில்லை. கொடுத்த வாக்கை மீறுவதும் மானம் இழந்து வாழ்வதும் ஒன்று என்று தத்துவம் பேசினாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி பர்வதராஜனைக் கழட்டி விட சாணக்கியருக்கு அதிக நேரம் ஆகாது. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். சாணக்கியரின் வழியிலேயே அவரைக் கையாள வேண்டும்….

 

இந்த யோசனையுடன் பர்வதராஜன் தன் மாளிகையை அடைந்த போது சுசித்தார்த்தக் கண்களைத் துடைத்துக் கொண்டு வருவது தெரிந்தது 

 

பர்வதராஜன் சுசித்தார்த்தக்கிடம் கேட்டான். “எங்கே போய் விட்டு வருகிறாய் சுசித்தார்த்தக்

 

தனநந்தர் கானகம் செல்வதைப் பார்த்து விட்டு வருகிறேன் அரசேஎன்று சொன்ன சுசித்தார்த்தக்கின் முகத்தில் சோகம் படிந்திருப்பதை பர்வதராஜன் கவனித்தான்.  இவன் தனநந்தன், ராக்ஷசரின் ஆள் என்பது மறுபடியும் உறுதியாகத் தெரிந்தது. தன் திட்டத்திற்கு இவனையே பயன்படுத்திக் கொள்வது நல்லது என்று உடனே முடிவெடுத்தான்.

 

நீ உன் அறிவுக்கு ஒரு சாதாரணப் பணியாளாகவே இருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது சுசித்தார்த்தக்.” என்று சொல்லி ஆரம்பித்த பர்வதராஜனை சுசித்தார்த்தக் மகிழ்ச்சியும், சந்தேகமும் கலந்த பார்வை பார்த்தான்.

 

தங்கள் புகழ்ச்சிக்கு அடியவன் அருகதை உடையவன் அல்ல அரசேஎன்று வெட்கத்துடன் சுசித்தார்த்தக். சொன்னான்.

 

நான் வெறுமனே உன்னைப் புகழவில்லை சுசித்தார்த்தக். நீ சந்தேகப்பட்டபடியே தான் நடந்திருக்கிறது என்பதைச் சற்று முன் தான் புரிந்து கொண்டேன்.”

 

என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை அரசே

 

நீ சொன்னபடி சாணக்கியர் மிரட்டி தான் தனநந்தனை இத்திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்திருக்கிறார். அதே போல் வேண்டுமளவு செல்வத்தை எடுத்து செல்லலாம் என்று சொன்னதும் வெறும் கண் துடைப்பு வேலை தான் என்பதை சற்று முன் கண்ணாரக் கண்டேன். அந்த ரதத்தில் அரசன், ஒரு அரசி, உடைகள் எல்லாம் போக கூடுதலாக இடமே இருக்கவில்லை. அவர் கொடுத்ததாகவும் இருக்க வேண்டும், தனநந்தன் அதிகம் கொண்டு போகவும் கூடாது என்பது தான் சாணக்கியரின் உத்தேசமாக இருந்திருக்கிறது. எனக்கே தனநந்தனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. உண்மை நிலைமை புரியாமல் தனநந்தன் குறித்து கடுமையான நிலைப்பாடு எடுத்து விட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து நானே வருத்தப்பட்டேன்.”

 

பர்வதராஜன் சொன்னதைக் கேட்டுக் குழப்பத்துடன் பார்த்தது சுசித்தார்த்தக் மட்டுமல்ல மலைகேதுவும் தான்.

 

ர்வதராஜன் முகத்தில் பெரும் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு சுசித்தார்த்தக்கை அன்பான பார்வை பார்த்தபடி சொன்னான். ”உன்னை வெறும் பணியாளாக நினைக்காமல் நான் என் குடும்பத்திற்குள் ஒருவனாக எண்ணியிருப்பதால் தான் இதையெல்லாம் உன்னிடம் சொல்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நீயும் மனம் விட்டு என்னிடம் சொன்னதால் தான் ஆச்சாரியரின் நடவடிக்கைகளை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். பிறகு தான் உண்மையாக என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிய ஆரம்பித்தது. என்ன செய்வது? நேர் வழி தவிர வேறு வழி தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு ஏமாற்றப்படுவது கூடத் தாமதமாகவே தெரிகிறது....”

 

சுசித்தார்த்தக் மனமுருகியவனாகக் காட்டிக் கொண்டு சொன்னான். “இந்த ஏழையைத் தங்கள் குடும்பத்திற்குள் ஒருவனாகத் தாங்கள் நினைப்பது என் பாக்கியம் தான் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். நானும் உங்களிடம் என் மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசி விட்டேனே ஒழிய நீங்கள் அதை அப்படியே ஆச்சாரியரிடம் சொல்லி அவர் அதிருப்தியடைந்து நான் சிறை செல்ல நேருமோ என்று உள்ளூர பயந்து கொண்டே இருந்தேன்.”

 

பர்வதராஜன் சொன்னான். “என்னை நம்பியவர்கள் எப்போதும் பயப்படவே தேவையில்லை சுசித்தார்த்தக். நான் மற்றவர்களது ரகசியங்களை என் ரகசியம் போலவே பாதுகாக்கக் கூடியவன். என் கவலையெல்லாம் எல்லா உண்மைகளையும் கடைசி நேரத்தில் தெரிந்து கொண்டிருக்கிறேனே, எதையும்  இப்போது மாற்ற வாய்ப்பில்லையே என்பது தான். சந்திரகுப்தனின் திருமணம் பதினைந்து நாட்களில் நடந்துவிடும் போலத் தெரிகிறது. ஆச்சாரியர் ராக்ஷசரை எந்த நேரத்திலும் பிடித்து விடுவோம் என்று சொல்கிறார். ராக்ஷசர் அப்படி பிடிபட்டாலும் இந்தக் கட்டாயத் திருமணம் பற்றித் தெரியாமல் அவர் சந்திரகுப்தனுக்கு ஆதரவு தரும் வாய்ப்பு தான் அதிகம் என்று நீயே சொல்கிறாய். எல்லாம் யோசித்துப் பார்க்கையில் ஆச்சாரியரின் திட்டப்படி தான் எல்லாம் நடந்து முடியும் போல் இருக்கிறது.”

 

சுசித்தார்த்தக் முகத்தில் இருள் படர்ந்தது. பர்வதராஜன் தனக்குள் சத்தமாகப் பேசிக் கொள்பவன் போல சுசித்தார்த்தக்கின் காதுகளில் விழும்படி முணுமுணுத்தான். “ராக்ஷசர் இருக்கும் இடம் தெரிந்தாலாவது ரகசியமாக அவரைச் சந்தித்து ஆச்சாரியரின் இந்தச் சதித்திட்டம் பற்றிச் சொல்லி ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கலாம். அதற்கும் வழியில்லையே

 

சுசித்தார்த்தக் தீவிரமாக யோசிப்பது தெரிந்தது. பர்வதராஜன் பெருமூச்சு விட்டு விட்டு, சுசித்தார்த்தக்குக்கு வேறு ஒரு வேலை கொடுத்து  அனுப்பி வைத்தான்.

 

மலைகேது குழப்பத்துடன் தந்தையைக் கேட்டான். “இவனிடம் ஏன் இதை எல்லாம் சொல்கிறீர்கள் தந்தையே. ஆச்சாரியருக்கு இதெல்லாம் தெரிய வந்தால் ஆபத்தல்லவா? அவருக்கு எதிராகச் செயல்படாத வரைக்கும் தான் அவரும் கொடுத்த வாக்கை மீறாமல் நியாயமாக நடந்து கொள்வார் என்றும், சதியில் ஈடுபடுபவர்களை அதே வழியில் கையாள்வார் என்றும் அவர் அன்றே சொன்னாரல்லவா? இது தெரிந்து இதையே காரணம் காட்டி அவர் கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்க நாமே வழி ஏற்படுத்திக் கொடுத்தபடி ஆகிவிடாதா?”

 

(தொடரும்)

என்.கணேசன்