என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 21, 2025

யோகி 112

 

ரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து, இந்த இளம் வயதிலேயே இத்தனை திறமைகளை வளர்த்துக் கொண்டும் ஷ்ரவன் அடக்கமாக இருந்தது, முக்தானந்தாவைப் பிரமிக்க வைத்தது. ஆனால் இங்குள்ள ஆபத்துகளை அவன் எவ்வளவு தூரம் அறிவான் என்று அவருக்குத் தெரியவில்லை. அவர் அக்கறையுடன் சொன்னார். “இங்கே ஆன்மீகத்தை விட ஆபத்துகள் அதிகம் ஷ்ரவன். நீ யார், எதற்காக வந்திருக்கிறாய் என்பது அவர்களுக்குத் தெரிந்தால் நீ உயிரோடு திரும்ப முடியாது.”

 

அது எனக்கு நன்றாகவே தெரியும் சுவாமிஜி. இது எனக்கு ஒதுக்கப்பட்ட வேலை என்பதால் மட்டும் நான் இங்கே வரவில்லை. இந்த மாதிரியான அக்கிரமங்களைத் தண்டிக்காமல் போனால், அவர்களுக்கு மேலும் நிறைய அக்கிரமங்களைச் செய்யும் தைரியம் வந்துவிடும். இனியும் நிறைய பேர் பாதிக்கப்படுவார்கள். அதைத் தடுக்க யாராவது எதாவது செய்து தானே ஆக வேண்டும். ஒரு நல்ல குடிமகனாகவும் இந்தப் பொறுப்பை உணர்கிறேன்.”  

 

முக்தானந்தா அவனைக் கனிவோடு பார்த்தார்.  அவனைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்று அவருக்குத் தோன்றியது. அவருக்கு எதற்கு வியப்பதென்று தெரியவில்லை. பரசுராமன், அவருடைய ஏவல் சக்திகள், இறந்த பெண்ணின் ஆவியிடம் இருந்து பெற்ற தகவல். ஷ்ரவனின் உபதேச மந்திரத்தின் சக்தி என எல்லாமே அவருக்கு அதிசயங்களாகத் தான் தோன்றின. சொன்னது ஷ்ரவனாக இருப்பதால் தான் இதையெல்லாம் அவருக்கு நம்ப முடிந்தது. வேறு யாராவது வாயிலிருந்து அவர் இதைக் கேட்டிருந்தால் கற்பனை கலந்திருப்பதாகத் தான் நினைத்திருப்பார். மேலும் பாண்டியன் தாயத்து கட்டிக் கொண்டிருப்பது இன்னொரு அசைக்க முடியாத நிரூபணம். சாதாரணமான யாரும் நிகழ்த்த முடிந்த அதிசயம் அல்ல அது... 

 

ஷ்ரவன் கேட்டான். ”சுவாமிஜி. நீங்கள் ஒருவார காலமாக ஒட்டுக் கேட்டபடி நின்றார்கள், கண்காணித்தார்கள் என்று சொன்னீர்கள். ஆனால் சைத்ரா மாதக் கணக்கில் சிறைப்பட்டிருக்க வேண்டுமே.”

 

இருக்கலாம் ஷ்ரவன். ஆனால் யோகாலயத்தில் குற்றவாளிகள் எப்போதும் தனியாக எங்காவது அடைக்கப்படுவார்கள் என்பதே என் அனுபவம். அடைக்கப்படும் கட்டிடமே வேறு கட்டிடமாக இருக்கும். யாரும் அண்ட முடியாதபடியும், சென்று பேச முடியாதபடியும் ஒரு தனிமைச்சிறையில் அவள் அடைக்கப்பட்டு இருக்கலாம். நீ சொன்ன 206 ஆம் அறையைக் கூட அவர்கள் கண்காணித்தது அவளையாக இருக்காது. அவள் அறையில் அவளுடன் தங்கியிருந்த மற்றவர்களையாக இருக்கும். அவர்கள் அவளைப் பற்றி எதாவது பேசுகிறார்களா என்றும், அவர்களுக்கு எத்தனை தெரியும் என்பதை அறியக்  கண்காணித்திருப்பார்கள். அப்படி அவர்கள் பேசுவதைக் கேட்டு, அவர்களாலும் பிரச்சினை வருமென்றால் அவர்களையும் அப்படி சிறைப்படுத்தி இருப்பார்கள்...”

 

ஷ்ரவனுக்கு அவர் சொல்வது சரியாக இருக்கலாம் என்று தோன்றியது.

 

முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “யோகாலயத்தில் அலறல் சத்தம் கேட்பது மிக அபூர்வம். ஏதாவது பிரச்சினை என்றால் ஆள் நடமாட்டம் தான் அதிகமிருக்கும். அதுவும் பாண்டியன் இருக்குமிடத்திற்கு அருகில் தான் அதிகமிருக்கும். அதை வைத்துத் தான் ஏதோ பிரச்சினை ஆகியிருக்கிறது என்பது தெரியவரும். மற்றபடி அமைதியாகத் தான் இங்கே எல்லாம் நடக்கும்.”

 

ஷ்ரவன் கேட்டான். “சைத்ராவுடன் தங்கியிருந்த பெண் துறவிகள் யார் என்று கண்டுபிடித்து விட்டால், அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரிக்க ஏதாவது வழியிருக்கிறதா?”

 

முக்தானந்தா சொன்னார். “இல்லவே இல்லை. ஒருவேளை கொல்லப்பட்டது ஆண் துறவியாக இருந்தாலுமே கூட நீ அப்படி, கூட இருந்தவர்களைக் கண்டுபிடித்து விசாரிக்கும் வாய்ப்பு கிடையாது. நீ யாரையுமே சாதாரணமாய் சந்தித்து ஓரிரண்டு வார்த்தைகளுக்கு அதிகமாகப் பேச்சுக் கொடுக்கவே வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கையில், சந்திக்கவோ, ஓரிரண்டு வார்த்தைகள் பேசவோ கூட வாய்ப்பில்லாத பெண் துறவிகளிடம் விசாரிப்பதற்கு வாய்ப்பு சுத்தமாக இல்லை.”

 

யோகாலயத்தில் அவர்களுடைய எந்த ரகசியமும் வெளியே போகவே முடியாத சூழலை எந்த அளவு கச்சிதமாக அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை ஷ்ரவன் புரிந்து கொண்டான். மூன்று அறை தள்ளி இருக்கும் துறவிக்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட ஒருவர் அறிந்து கொள்வது மிகச் சிரமம் தான். அதனால் தான் இங்கிருந்து வெளியே போகிறவர்களுக்குக் கூட சொல்ல அதிகம் இருப்பதில்லை. சொல்லும்படியாக முக்கியமான எதையாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவதில்லை....

 

ஷ்ரவன் கேட்டான். “சுவாமிஜி, சைத்ரா இங்கே ஒரு யோகியை எப்படியோ பார்த்திருக்கிறாள். அது எப்படி நிகழ்ந்திருக்கும்?”

 

முக்தானந்தா சொன்னார். “இங்கே ஒரே ஒரு யோகிக்குத் தான் இடமிருக்கிறது ஷ்ரவன். அது பிரம்மானந்தா. வேறொரு யோகிக்கு யோகாலயத்தில் அனுமதியும், அங்கீகாரமும் இல்லவே இல்லை.”

 

உண்மையான யோகிக்கு அங்கீகாரம் அவசியமும் இல்லையே சுவாமிஜி. அதனால் அப்படி ஒரு யோகி எப்போதாவது இங்கே வந்து போயிருக்கலாமோ?”

 

முக்தானந்தா யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படி எதுவும் இங்கே நடந்ததாய் எனக்கு நினைவில்லை. அப்படி ஒரு அதிசயம் இங்கே நடந்திருந்தால் அந்த யோகியைச் சந்திக்கும் பாக்கியத்தை நான் தவற விட்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.... பார்வைக்குப் படும்படியாக நிறைய யோகிகள் தற்காலத்தில் நடமாடிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி அபூர்வமாய் இருக்கும் ஓருசிலர் பற்றி நீ சொன்ன பரசுராமனுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டுமே ஷ்ரவன். அவரே ஒரு யோகியைப் போன்றவர் தானே?”

 

நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரசுராமனை யோகி என்றழைப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர் தன்னை யோகி என்று சொல்லிக் கொள்வதில்லை. ’எப்போதும், எதிலும் சமநோக்குடனும், மாறாத அமைதியுடனும் இருப்பவனே யோகிஎன்கிறார் அவர். அது தனக்கு சாத்தியப்படுவதில்லை என்பதையும் அவர் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார். அவர் தன் சக்தியால் அந்த யோகி எங்கிருக்கிறார் என்பதை அறிய முற்பட்ட போது ஒரு தோட்ட சூழ்நிலை தெரிவதாகச் சொன்னார். சைத்ரா இங்கே தோட்ட வேலையில் நிறைய நாட்கள் இருந்திருக்கிறாள்...”

 

ஷ்ரவன் சுட்டிக் காட்டியதையும் முக்தானந்தா யோசித்துப் பார்த்தார். ஆனாலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்த சூழல் அவருக்கு நினைவுக்கு வரவில்லை.

 

ஷ்ரவன் மெல்ல பேராசிரியர் சிவசங்கரனைப் பற்றிச் சொன்னான். அவர் பிரம்மானந்தா பற்றிச் சொன்னதையும், அவர் யோகி என்று சுட்டிக் காட்டியவரை பிரம்மானந்தா சென்று சந்தித்ததையும் சொன்னான். அதன் பின் பிரம்மானந்தா சிவசங்கரனைச் சென்று சந்திக்கவில்லை என்றும், பொது இடங்களில் பார்க்க நேர்ந்தாலும் கண்டு கொள்வதில்லை என்றும் அவன் சொன்ன போது முக்தானந்தா புன்னகைத்தார். 

 

அவர் சொன்னார். “அந்த யோகியைச் சந்தித்து தான், அந்த ஆள் சொல்லும் அளவுக்கு இல்லை என்று எங்களிடம் பிரம்மானந்தா சொன்னது போல் நினைவு இருக்கிறது. பிரம்மானந்தாவுக்கு சிவசங்கரனும், பரசுராமனும் சொல்லும் யோகி மீது மதிப்பு எதுவும் கிடையாது. எல்லா நேரங்களிலும் சமநோக்கும், மாறாத அமைதியும் அவரைக் கவரவில்லை. நீ யோகியின் சுயசரிதை படித்து இருக்கிறாய் அல்லவா? அந்தப் புத்தகத்தில் வருவது போல் சக்தி வாய்ந்த யோகிகள் மேல் தான் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே ஈர்ப்பு இருந்தது. அது போன்ற ஆட்களைத் தான் அவர் மதித்தார், விரும்பினார். தானும் அது போல் ஆகி எல்லோரையும் பிரமிக்க வைக்கத் தான் அவர் ஆசைப்பட்டார். அது நிஜத்தில் முடியாமல் போகவே கற்பனையாய் பல கதைகளையும் சொல்ல ஆரம்பித்தார். சதுரகிரியில் மெய்ஞானம், சுந்தரமகாலிங்கம், கோரக்கர், பதஞ்சலி கதைகள் எல்லாம் அப்படி ஆரம்பித்தவை தான். அதை நம்பி ஏமாற மக்கள் தயாராக இருக்கையில் அவரைச் சொல்லித் தப்பில்லை.”

 

ஷ்ரவன் சிரித்துக் கொண்டே சொன்னான். “அதையே தான் சிவசங்கரனும் சொன்னார். ஒருவனுடைய பேச்சை வைத்துப் பார்க்காமல், அவன் எப்படி வாழ்கிறான் என்பதை வைத்துப் பார்த்தால் யாரும் ஏமாற வேண்டியதில்லை என்று சொன்னார்….”   

 

முக்தானந்தா சொன்னார். “உண்மை தான். ஆனால் ஏமாற்றும் வாய்ப்புகள் இல்லாத போது எல்லாருமே ஒழுங்காகத் தான் வாழ்கிறார்கள் ஷ்ரவன். பணம், புகழ், அதிகாரம் எல்லாம் வந்த பின் தான் பெரும்பாலானவர்கள் மாற ஆரம்பிக்கிறார்கள். அதற்கு முன் அவர்கள் சொல்லும் வார்த்தைகளை வைத்துத் தான் நம்ப வேண்டியிருக்கிறது. அப்படி நம்பி ஏமாந்தவன் தான் நான். அப்படி ஏமாறாமல் இருந்திருந்தால் நான் இங்கேயே வாழும் துர்ப்பாக்கியத்தைத் தவிர்த்திருக்கலாம்...”

 

அவர் வருத்தத்துடன் சொன்னதைக் கேட்கையில் ஷ்ரவனுக்கும் வருத்தமாய் இருந்தது. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு ஷ்ரவன் சொன்னான். “அந்த யோகியும் தோட்டக்காரராய் இருந்தவர். சைத்ரா சொல்லும் யோகியும் தோட்ட சூழலில் இருப்பதாக உணர்வதாக  பரசுராமன் சொன்னதால் இரண்டும் ஒரே நபர் என்று எனக்குத் தோன்றுகிறது சுவாமிஜி. அப்படி ஒரே நபர் என்றால் பிரம்மானந்தா ஏதாவது ஒரு காரணத்திற்காக ஒரு முறை அவரை இங்கே தருவித்திருக்கவும், சைத்ரா அந்த சந்தர்ப்பத்தில் அவரைச் சந்தித்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?”


(தொடரும்)

என்.கணேசன்





3 comments:

  1. பிரச்சினை,துன்பம்,தோல்வி போன்ற பல காரணங்களால் அமைதியை நாடி இங்கு துறவிகளாக வருகின்றனர்...
    ஆனால், இங்கோ வெளியில் அனுபவித்த பிரச்சினையை விட பல மடங்கு பிரச்சனை காத்திருக்கிறது.

    ReplyDelete
  2. When can we get your kindle version of your latest books in Amazon ?

    ReplyDelete