சந்திரகுப்தன் அன்று முழுவதும் எதிலும் முழுக் கவனம் செலுத்த முடியாமல் தவித்தான். இரவில் உறக்கமும் சரியாக வரவில்லை. அப்படி உறங்க முடிந்த போது கூட கனவில் மேல் மாடத்தில் அந்த அழகி வந்து நின்றாள். கனவில் கூட காலமறியாது அவளைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றியது. விழித்த பின் அவன் தன்னையே கடிந்து கொண்டான். ஆச்சாரியரின் எதிரியின் மகள் மீது இந்த அளவு வசியப்பட்டது அவனுக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்தியது. இத்தனை காலம் அறியாத ஒருத்தி ஒரே சந்திப்பில் அவனை இப்படி வசியப்படுத்தி விட்டது அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. முழு மனக்கட்டுப்பாட்டுடன் இதிலிருந்து மீள வேண்டும் என்று அவன் எண்ணினான். அதனால் மறுநாளும் அரசவையில் அமர்ந்து பேச அவனை அழைத்த போது வேறெங்காவது அமர்ந்து பேசலாமே என்று சொன்னான்.
சாணக்கியர் கேட்டார். “ஏன்?”
சந்திரகுப்தனுக்கு என்ன சொல்வதென்று
தெரியவில்லை. எல்லாவற்றையும் அவரிடம் மனம் விட்டுப் பேச முடிந்த அவனுக்கு
இதைப் பற்றிப் பேச சங்கோஜமாக இருந்தது.
மறுத்துச் சொல்ல அவனுக்குக் காரணங்கள்
எதுவும் கிடைக்காததால் அவர் அவனை நேற்றைய நேரத்திலேயே அரசவைக்கே அழைத்துச் சென்றார். நேற்றைய
இருக்கையிலேயே அவனை அவர் அமர வைத்து அவனெதிரில் அமராமல் ஆசனத்தை பக்கவாட்டுக்கு இழுத்து
விட்டு அதில் அமர்ந்த சாணக்கியர் அடுத்து ஆக வேண்டியதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
துர்தராவின் தோழி முந்தைய நாள் போலவே
ஓடி வந்து அவளிடம் சொன்னாள். “இன்றும் அவர்கள் அங்கு அமர்ந்தே பேசுகிறார்கள்”.
நேற்று சந்திரகுப்தனைப் பார்த்த கணத்திலிருந்து
இப்போதைய கணம் வரை அவன் நினைவாகவே இருந்த போதிலும் துர்தராவும் அவ்வப்போது இரட்டை மனநிலையில்
தான் இருந்தாள். ஒரு மனம் அவனை ரசித்து விரும்பியது. இன்னொரு
மனம் எதிரியை விரும்பியதற்காக அவளைக் குற்றம் சாட்டியது. தோழி இப்போது சொன்னவுடன் கட்டுப்பாட்டுடன் அவனைப் பார்க்கச்
செல்லக் கூடாது என்று மன உறுதியோடு இருக்க ஒரு கணம் முடிவு செய்தாலும் மறு கணம் அவள்
கால்கள் தானாக எழுந்து நடக்க ஆரம்பித்தன.
துர்தராவும் தோழியும் செல்வதை தாரிணி
மௌனமாக அமிதநிதாவுக்குச் சுட்டிக் காட்டினாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அவர்களைப் பின்
தொடர்ந்து சென்றார்கள்.
இன்றும் அவள் அங்கு வந்து நின்றதைக்
கவனித்த பின் சந்திரகுப்தனுக்குத் தானாக பார்வை அங்கேயே சென்றது. சாணக்கியர்
யோசித்தபடி பேசுபவர் போல அருகிலிருந்த ஆசனம் ஒன்றைப் பார்த்துப் பேசினார். அவர் அவன்
முகத்தைப் பார்க்காததால் அவனுக்குப் பார்வையை அவர் மீது திருப்ப வேண்டிய அவசியம் வரவில்லை. ஆனால் அவள்
பின்னால் அவள் தாயும் சிற்றன்னையும் வந்து நின்ற பிறகும் அவளையே பார்க்க முடியாமல்
அவன் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
அரசியர் இருவரும் அவனைப் பார்த்த பிறகு
மகளிடம் தவறு காணவில்லை. மகளுக்குப் பொருத்தமானவனாகவே அவன் அவர்களுக்குத் தெரிந்தான். அவனருகே
அமர்ந்திருந்த ஆச்சாரியரை வெறுப்புடன் பார்த்தாலும் அவனை, மகளின்
மனம் கவர்ந்தவனாகவே பார்த்தார்கள். அவன் பார்வையைத்
திருப்பிக் கொண்ட பிறகு பின்னால் நிற்கும் தாய்களைப் கவனித்த துர்தரா வெட்கத்துடன்
அங்கிருந்து ஓடிப் போனாள். உடனே அரசியர் இருவரும் கூட மேல் மாடத்திலிருந்து வேகமாக நகர்ந்தார்கள்.
சாணக்கியர் ஓரப்பார்வையால் அனைத்தும்
பார்த்துக் கொண்டாலும் வெளிப்பார்வைக்கு எதுவும் அறியாதவர் போல இயல்பாகவே இருந்தார். அவன் மனதில்
உள்ளதை அவர் அறியாதவர் அல்ல என்பது அவனுக்குத் தெரியும். வயதின்
கோளாறு என்று அவர் அதை மன்னிப்பார் என்று எதிர்பார்த்தான்.
துர்தரா மறுநாள் அதே
நேரத்தில் தோழி சொல்லாமலேயே அரசவையின் மேல் மாடத்தில் சென்று பார்த்தாள். அன்று சந்திரகுப்தனும்
சாணக்கியனும் வரவில்லை. அன்று அடிக்கடி போய்ப் பார்த்தாள். அவர்கள்
வந்திருக்கவில்லை. அன்றெல்லாம் எதையோ தொலைத்தது போல் அவள் மனம் ஏங்கியது. அதற்கு
மறுநாளும் அந்த நேரத்தில் அங்கு போய்ப் பார்த்தாள். சாணக்கியர்
மட்டும் ஒரு இருக்கை மேல் பலகையை வைத்துக் கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருந்தார். சிறிது
நேரம் கழித்துப் போய்ப் பார்த்தாள். அவரும் போய்விட்டிருந்தார். ஏமாற்றத்துடன்
திரும்பி வந்தவள் பித்துப் பிடித்தவள் போல் நிறைய நேரம் சோகமாக அமர்ந்திருந்தாள்.
அதைப் பார்த்த அரசியர் இருவரும் கண்கலங்கினார்கள். அமிதநிதா
வருத்தத்துடன் சொன்னாள். ”அவனை இரண்டு நாட்கள் பார்க்க முடியவில்லை என்பதற்கே இவள்
இத்தனை வருத்தப்படுகிறாளே, தாரிணி. அவனைப் பார்க்க முடிந்து தான் இவள்
வாழ்க்கையில் என்ன நல்லது நடந்துவிடப் போகிறது. அவன் தான்
இப்போது நமக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறானே.”
”அவனும்
இவளை விரும்புகிறான் என்பது அவன் இவளைப் பார்த்துக் கொண்டிருந்த விதத்திலேயே தெரியவில்லையா
அக்கா”
“சாணக்கியரின்
கைப்பாவையாக இருக்கும் அவன் அவர் விருப்பத்திற்கு எதிராக எதையும் செய்ய மாட்டான் என்று
எல்லோரும் சொல்கிறார்கள். இவள் தந்தையோ அவருக்கு வேண்டிய அளவு அநீதி இழைத்திருக்கிறார். அவரை அவமானப்படுத்தி
அனுப்பியிருக்கிறார். அந்த ஆள் எதையும் மறக்கக் கூடியவராகத் தெரியவில்லை. இரண்டு
நாட்கள் இருவரும் பார்த்துக் கொண்டார்கள் என்றவுடனேயே மூன்றாம் நாள் அவனை அங்கே அழைத்து
வருவதை அவர் நிறுத்தி விட்டதைப் பார்த்தாலே அது தெரிகிறது. இதெல்லாம்
புரியாமல் இவள் அவனை விரும்புகிறாள்.”
“எல்லாம்
புரிந்து கணக்குப் போட்டு வருவது காதல் இல்லை அக்கா”
“ஆனால் சாணக்கியர்
எல்லாக் கணக்கையும் பார்ப்பவராகத் தெரிகிறாரே தாரிணி. அவர் கணக்கைப்
பார்த்து முடிக்கையில் நமக்கு உயிராவது மிஞ்சுமா என்றே தெரியவில்லையே. உயிர் மிஞ்சினால்
அல்லவா மற்றதெல்லாம்...” என்று அமிதநிதா விரக்தியுடன் சொன்னாள்.
தனநந்தன் மிகுந்த துக்கத்திலும் மன உளைச்சலிலும், பயத்திலும்
இருந்தான். அவன் மகன்களின் ஈமச்சடங்குகள் முடிந்தும் ஐந்து நாட்களாகி
விட்டன. அவனுடைய ஒரு காவலனையும் இரண்டு பணியாட்களையும் தவிர மற்றவர்கள்
அனைவரும் அகற்றப்பட்டு புதிய காவல் வீரர்கள் அவனைக் காவல் காத்தார்கள். அவன் யாரையும்
பார்த்துப் பேச அனுமதிக்கப்படவில்லை. அந்தப்புரத்துக்குச்
செல்லக் கூட அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மகன்களின் ஈமச்சடங்கிற்குப்
பிறகு அவன் மனைவிகளையோ, மகளையோ கூடப் பார்க்கவில்லை. அவர்களை என்ன செய்வதென்று
சாணக்கியர் நிச்சயித்திருக்கிறார்
என்று தெரியவில்லை. வெளியே என்ன நடக்கிறது என்றோ, ராக்ஷசர் என்ன
ஆனார் என்றோ தெரியவில்லை. இது போன்ற சூழ்நிலையில் யோசிக்க நிறைய
நேரமும், தனிமையும் சேர்ந்து கிடைப்பதே கொடுமையாக இருந்தது. யோசித்து யோசித்து அவனுக்குப்
பைத்தியம் பிடிப்பது போலிருந்தது. விரக்தியின் எல்லையில் அவன் இருந்த
போது அவனைக் காண சாணக்கியர் மறுபடி வந்தார்.
அவரைப் பார்த்தவுடன்
அவன் காவலனும் பணியாட்களும் அவரை வணங்கி விட்டு அங்கிருந்து நகர அவர் அமைதியாக அங்கிருந்த
ஆசனத்தில் அமர்ந்தார். கைகூப்பி அவர் “வணக்கம் தனநந்தா” என்று சொன்னது அவனுக்கு இருந்த
மனநிலையில் கேலி செய்வது போல் தோன்றியது.
தனநந்தன் வெறுப்புடனும்
ஆத்திரத்துடனும் சொன்னான். “இங்கே வேறு யாரும் தான் இல்லையே. பின் நடிக்கும் அவசியம்
என்ன சாணக்கின் மகனே? ஒருபுறம் நடித்து, தத்துவம் தர்மம் பேசியும், இன்னொரு புறம் சூழ்ச்சி,
சதிகள் செய்தும் என் நாட்டை அபகரித்து, என் மகன்களைக் கொன்று, என்னைச் சிறைப்படுத்தி,
நீ போட்ட சபதத்தை நிறைவேற்றி விட்டாய். நீ இப்போது கைப்பற்றியிருக்கும் மகத சிம்மாசனத்தில்
எங்கள் இரத்தக் கறை இருக்கிறது. அது நீ எத்தனை துடைத்தாலும் போகாது. அதை நினைவில் வைத்துக்
கொள்.”
சாணக்கியர் அவனை
அமைதியாகப் பார்த்தார். அவன் வார்த்தைகள் அவரை எந்த விதத்திலும் அசைத்ததாகத் தெரியவில்லை.
அவர் சொன்னார். “மகத சிம்மாசனத்தில் இரத்தக்கறை இருந்தால் அது உன் தந்தை மகாபத்மநந்தன்
ஏற்படுத்தியது தனநந்தா. நீ சொன்ன நடிப்பு, சூழ்ச்சி, சதி, கொலை எல்லாம் அவன் அந்த சிம்மாசனத்தில்
அமரச் செய்த காரியங்கள். அதனால் அந்தப் பெருமையை அடியவனுக்கு நீ மாற்றுவது சரியல்ல.”
(தொடரும்)
என்.கணேசன்
என்.கணேசனின் நூல்களை வாங்க விரும்புவோர் 94863 09351 எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.
காதல் பகுதிகளை குறைவாக வந்தால் நன்றாக இருக்கும்.மெதுவாக ஆரம்பித்து இப்போது புயல் வேகத்தில் சென்ற கதை கடந்த சில பகுதிகளாக மந்தமாகி விட்டது.
ReplyDelete