சாணக்கியர் என்ற பெயர் தனநந்தனை எரிச்சலடையச் செய்தது. என்றோ அவனை எதிர்த்து நின்ற சாணக் இப்போது மகன் மூலமாக வென்று விட்டது போலவும், சாணக்கின் பெயர் நிலைத்து நின்று விட்டது போலவும் தோன்றுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அவனே சாணக்கின் மகனே என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் மனைவி சொன்ன தகவல் புதிராகத் தோன்றி மேலோங்கி இருந்ததால் அவன் ஆர்வத்துடன் கேட்டான். “யாரது?”
தாரிணி தயக்கத்துடன்
சொன்னாள். “சந்திரகுப்தன்”
அந்தப் பெயரைக் கேட்டதும் தனநந்தன்
கண்களில் தீப்பந்தங்கள் எரிந்தன. முன்னொரு காலத்தில் இங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன், இன்று எதிரியாகி
அவனிடமிருந்து ராஜ்ஜியத்தைப் பறித்துக் கொண்டவன் - அவன் மகளை
மணப்பதா? நாடு இழந்தாலும் என் கௌரவத்தை நான் இழந்து விடவில்லை என்று
சொல்லக் கோபத்தோடு வாய் திறந்தவனை தாரிணி பேச விடாமல் தடுத்துச்
சொன்னாள்.
“எதைச் சொல்வதற்கு
முன்பும் இப்போதைய நம் நிலைமையையும், துர்தராவின் எதிர்காலத்தையும்
சிறிது யோசித்து விட்டுச் சொல்லுங்கள். ராஜ்ஜியத்தை இழந்து
விட்டோம். பிள்ளைகளையும் இழந்து விட்டோம். ஆசைப்படவோ, எதிர்பார்க்கவோ
நமக்கு ஒரு நல்ல எதிர்காலம் இல்லை. அவளுக்காவது ஒரு
நல்ல வாழ்க்கை அமையட்டுமே”
என்ன சொல்வதென்று தனநந்தன் திகைக்கையில்
அமிதநிதா சொன்னாள். “சந்திரகுப்தனுக்கு
இன்னும் திருமணமாகவில்லை. ஒருவேளை அவன் துர்தராவைத் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப்
பிறக்கும் பிள்ளைகள் தான் நாளை மகத அரியணையில் அமர்வார்கள். நீங்கள்
இழந்ததை உங்கள் பேரப்பிள்ளைகள் எதிர்காலத்தில் அடைந்தால் அது உங்களுக்கும் ஒருவிதத்தில்
வெற்றியே அல்லவா?”
தனநந்தன் இந்த வகையில் சிந்தித்துப்
பார்த்திருக்கவில்லை. ஆனாலும் சந்திரகுப்தனை மருமகனாக ஏற்றுக் கொள்ள அவனுக்கு மனம்
வரவில்லை. “அவன் ஒரு காலத்தில் இங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன்...”
என்றான்.
அமிதநிதா சொன்னாள். “அவன் பூர்விகத்தைப்
பார்த்தால் நம் பூர்விகத்தையும் நாம் யோசித்துப் பார்ப்பது தானே நியாயம்.”
அவன் பூர்விகத்தை யாரும் நினைவுபடுத்துவது
தனநந்தனுக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. சற்று முன்
தான் சாணக்கின் மகனும் அதை நினைவுபடுத்தி அவமதித்தது நினைவுக்கு வந்தது. அவன் தன்
மூத்த மனைவியை முறைத்தான். அவள் அதைப் பொருட்படுத்தாமல் சொன்னாள். “இப்போது
அவன் வென்றவன். நீங்கள் தோற்றவர். யோசித்தால்
அவன் தான் மறுக்க வேண்டும். சாணக்கியர் ஒத்துக் கொள்வாரா இல்லையா என்பது வேறு விஷயம்.”
துர்தரா அருகில் வந்து சொன்னாள். “இந்தப்
பேச்சை நாம் இதோடு விட்டு விடுவது நல்லது. அவர் ஆச்சாரியர்
பேச்சை மீறி எதையும் செய்ய மாட்டார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆச்சாரியர்
இதற்கு ஒத்துக் கொள்வார் என்று தோன்றவில்லை....”
சொல்லும் போது மகள் முகத்தில் தெரிந்த
சோகமும், அவள் குரல் உடைந்ததும் தனநந்தனை என்னவோ செய்தது. மகதத்தை வென்ற சந்திரகுப்தன், அவன் மகள்
மனதையும் இவ்வளவு விரைவில் வென்றிருப்பது விதியின் விளையாட்டாகவே தோன்றியது.
அவன் எதுவும் சொல்வதற்கு முன்பாக தாரிணி
சொன்னாள். “ஆச்சாரியர் வாக்கு கொடுத்திருக்கிறார். வரன் யார்
என்று தெரிந்து அவர் மறுத்தால் அவர் கொடுத்த வாக்கு தவறியவராகிறார். அது அவருக்குத்
தான் கேவலம். அதனால் அவர் வாக்கு தவற மாட்டார் என்று நினைக்கிறேன்.”
அமிதநிதா சொன்னாள். “ஜோதிடர்கள்
அவள் கிரக அமைப்பை வைத்து அவள் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் சிம்மாசனத்தில்
அமர்பவளாகவே இருப்பாள் என்று சொன்னதும் பொருந்துவதால் சாணக்கியர் கொடுத்த வாக்கைக்
காப்பாற்றவும் வாய்ப்பு இருக்கிறது.”
தனநந்தன் களைப்புடன் தன் மனைவிகளைப்
பார்த்தான். இப்போது அவன் அபிப்பிராயத்தைப் பற்றி அவர்கள் யாருக்குமே
கவலையில்லை. சாணக்கின் மகன் அபிப்பிராயம் பற்றித் தான் அவர்களுக்குக்
கவலை. ஆனால் மகளின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்தால் அவர்கள் சொல்வதில்
தவறில்லை தான். அவன் இழந்ததை அவன் மகள் பெற்றால் அதை இழப்பு என்று சொல்ல
முடியுமா?
அவன் முன்பே யோசித்துக் கவலைப்பட்டது
போல அவன் வாழ்ந்து முடித்தவன். அவன் மகள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அவளுடைய
நலன் பற்றி தான் இனி அவன் யோசிக்க வேண்டும். ஆனால் அவன் சம்மதித்தாலும் சாணக்கின் மகன் சம்மதிப்பான் என்று
தோன்றவில்லை. வாக்கு கொடுத்து விட்ட காரணத்தாலேயே சம்மதிக்கும் அளவுக்கு
பெருந்தன்மை சாணக்கின் மகனுக்கு இருக்குமா? இதற்கும்
தன் எதிரியின் சம்மதம் தேவைப்படும் நிலைமையில் இருப்பது அவமானமாகத் தோன்றினாலும் ஒரு தந்தையாக
அவன் மனது அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியது. அவன் மனம் மாறி மாறி யோசித்தது.
மறுநாள் சாணக்கியர் தனநந்தனைக் காண வந்த போது யோசனையாலும், கவலையாலும்
பீடிக்கப்பட்டவனாக அவன் தோன்றினான்.
அவர் அவனுக்கு வணக்கம் தெரிவித்த போது அவனையறியாமல் அவனும் கைகூப்பினான்.
சாணக்கியர் அவனுக்கெதிரே இருந்த ஆசனத்தில்
அமர்ந்தபடி கேட்டார். “கானகம் செல்லத் தயாராகி விட்டாயா தனநந்தா?”
தனநந்தன் தலையை மெல்ல அசைத்தான். சாணக்கியர்
கேட்டார். “மகளிடம் பேசினாயா? அவளுக்குப்
பிடித்தவன் யாராவது இருக்கிறார்களா?”
தனநந்தன் மெல்ல சொன்னான். “அவளுக்கு
ஒருவனைப் பிடித்திருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் இந்தத்
திருமணம் நடக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.”
சாணக்கியர் முகத்தில் குழப்பம் காட்டிக்
கேட்டார். “ஏன்?”
தனநந்தன் சிறிது தயங்கி விட்டுச் சொன்னான். “அவள் பிடித்திருப்பதாகச்
சொன்னது சந்திரகுப்தனை”
சாணக்கியர் அதிர்ச்சியைக் காட்டி சிறிது
நேரம் மௌனமாக இருந்தார். தனநந்தன் படபடக்கும் இதயத்தோடு அவர் என்ன சொல்வாரோ என்று
காத்திருந்தான். அவர் ஒத்துக் கொள்வார் என்ற நம்பிக்கை அவனுக்குக் குறைவாகவே
இருந்தது. அவன் மனைவியரும், மகளும்
கூட அதில் அதிக நம்பிக்கை வைத்திருக்கவில்லை. அவர் ஒத்துக்
கொண்டால் அது அவள் பிறந்த நேரத்தின் கிரகச் சேர்க்கையும், அதிர்ஷ்டமுமே
காரணமாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
சாணக்கியர் ஒரு முடிவுக்கு வந்தவர்
போலக் காட்டிக் கொண்டு இறுகிய முகத்துடன் சொன்னார். “கொடுத்த
வாக்கை மீறுவதும் மானமிழந்து வாழ்வதும் ஒன்று என்று நினைப்பவன் நான். அதனால்
அவர்கள் திருமணம் நடப்பது உறுதி.”
தனநந்தனுக்கு இது நிஜம் தானா இல்லை
கனவா என்ற சந்தேகம் எழுந்தது. அவரைத் திகைப்புடன் பார்த்தான். அவன் மனதில்
இன்னொரு சந்தேகம் எழுந்தது. “சந்திரகுப்தன் சம்மதிப்பானா?”
சாணக்கியர் உறுதியான குரலில் முக இறுக்கம்
மாறாமல் சொன்னார். “நான் சொன்னால் அவன் மறுக்க மாட்டான். ஆனால் இன்னும்
பதினைந்து நாட்களுக்கு திருமண முகூர்த்த நாட்கள் இல்லை. அதனால்
அதன் பின்னரே இந்தத் திருமணம் நடக்கும். அது வரை நீ இங்கே
தங்கியிருக்க உனக்கு அனுமதி இல்லை தனநந்தா. வேண்டுமானால்
திருமணம் முடியும் வரை உன் மகளின் தாய் மட்டும் இங்கிருக்க அனுமதியளிக்கிறேன். அது முடிந்த
பின் அவள் உங்களுடன் வந்து இணைந்து கொள்ளட்டும். நீயும்
உன் இரண்டாம் மனைவியும் இன்று சூரியாஸ்தமனத்திற்குள் கானகத்திற்குக் கிளம்பி விட வேண்டும். நான்கு
வீரர்கள், நான்கு பணியாட்கள் உங்களுடன் வர அனுமதிக்கிறேன். நீ சந்திரகுப்தனுக்கு
மாமனார் ஆகப் போகிறவன் என்பதால் உன்னை வெறும் கையோடு கானகம் அனுப்புவது உறவுக்குத்
தரும் மரியாதை ஆகாது. அதனால் நீ கானகம் போகும் போது உங்களுடன் உன் ரதத்தில் எத்தனை
கொண்டு செல்ல முடியுமோ அத்தனை உடைமைகளையும், செல்வத்தையும்
கொண்டு செல்ல அனுமதிக்கிறேன்.... ”
சாணக்கியர் சொன்னதைக் கேட்டு தனநந்தன்
பேராச்சரியம் அடைந்தான். இந்த அளவு பெருந்தன்மையை அவன் நிச்சயமாக சாணக்கியரிடமிருந்து
எதிர்பார்க்கவில்லை. அவனும் அவன் மனைவியும், அவர்களுடைய
உடைகளும் சேர்ந்தாலே ரதம் நிறைந்து விடும் என்பதால் கூடுதல் செல்வம் ஓரளவுக்கு மேல்
கொண்டு போக முடியாதென்றாலும் அந்த ஓரளவுமே இப்போதைக்கு அவனுக்குப் பெரிது தான்....
சாணக்கியர் எழுந்து நின்றார். “வெறுப்பு
காலெமெல்லாம் சுமக்க முடிந்த சுமை அல்ல தனநந்தா. அது பக்குவமடைந்தவனுக்குத்
தேவையில்லாத பாரமும் கூட. அதை ஏதாவது ஒரு கட்டத்தில் கடப்பது மீதமுள்ள வாழ்க்கையைச்
சுதந்திரமாகவும், இலகுவான மனதுடனும் வாழ ஒருவனை அனுமதிக்கிறது. உன்னிடம்
விடைபெற்றுக் கொள்கிறேன்.”
சொல்லி அவனைப் பார்த்துக்
கைகூப்பிய அவர் பின் ஒரு கணமும் நிற்காமல் அங்கிருந்து சென்று
விட்டார்.
(தொடரும்)
என்.கணேசன்
Last bur one paragraph should be inscribed in golden letters in all spheres of human life.
ReplyDeleteIt exhibits the author's elated personality. Salute Ganesan sir🙏🫶
The last but one paragraph should be inscribed in golden letters, in all spheres of human life. It indicates the author's elated personality in totality. By the by,I am fortunate enough to have read all his works.
ReplyDeleteSalute Ganesan sir🙏🙏
சாணக்கியர் முகபாவத்தை பார்த்தால், தனநந்தன் மகள் திருமணம், சாணக்கியர் திட்டத்தில் இல்லாத ஒன்றாகவே தோன்றுகிறது.
ReplyDelete"வெறுப்பு காலெமெல்லாம் சுமக்க முடிந்த சுமை அல்ல..."
ReplyDeleteஎன்று தொடங்கி சாணக்கியர் கூறும் தத்துவம் அருமை...
தேவையற்ற சுமைகளை சுமந்து கொண்டு கஷ்டப்படும் நாம் இந்த உண்மையை உணர வேண்டும்.
வெறுப்பு காலெமெல்லாம் சுமக்க முடிந்த சுமை அல்ல தனநந்தா. அது பக்குவமடைந்தவனுக்குத் தேவையில்லாத பாரமும் கூட. அதை ஏதாவது ஒரு கட்டத்தில் கடப்பது மீதமுள்ள வாழ்க்கையைச் சுதந்திரமாகவும், இலகுவான மனதுடனும் வாழ ஒருவனை அனுமதிக்கிறது. A life lesson. Thanks Ganesh Sir
ReplyDeleteசாணக்கியரின் 'வெறுப்பின்' மீதான கருத்து மிக அருமை.
ReplyDelete