சாணக்கியரின் அமைதியான பதிலும், அதிலிருந்த
உண்மையும் தனநந்தனை மேலும் ஆத்திரமூட்டின.. அவன் சொன்னான். “என் மகன்களைக்
கொல்ல நீ செய்த சதியை வசதியாக மறந்து விட்டாய் சாணக்கின் மகனே”
சாணக்கியர் அமைதியாகவே சொன்னார். “உன் மூத்த
மகனைக் கொல்ல சதி செய்தது உன் இளைய மகன் தனநந்தா.”
“ஆனால் அதற்கான
சூழலை ஏற்படுத்தித் தந்தது நீ சாணக்கின் மகனே”
“எந்தச்
சூழலும் ஒரு யோக்கியனை குற்றம் செய்ய வைக்க முடியாது தனநந்தா.”
“அப்படியானால்
என் இளைய மகனை உன் ஆள் கொன்றதை நீ எப்படிப் பார்க்கிறாய் சாணக்கின் மகனே”
“அண்ணனைக்
கொன்றதற்கான தண்டனையாகப் பார்க்கிறேன் தனநந்தா”
தனநந்தனுக்கு சாணக்கின் மகனிடம் பேசி
ஜெயிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆத்திரமூட்டும்
முயற்சியும் பலிக்கவில்லை. இனி என்ன பேசியும் வேண்டியது எதுவும் ஆகப்போவதில்லை. எல்லாம்
முடிவுக்கு வந்து விட்டது... சிறிது கனத்த மௌனத்திற்குப் பின் திடீரென்று நினைவு வந்தவனாக
சாணக்கியரிடம் கேட்டான். “நான் ஒரு கேள்வி கேட்டால் நீ உண்மையைச் சொல்வாயா சாணக்கின்
மகனே?”
“அது உன் கேள்வியைப்
பொறுத்தது தனநந்தா”
“நான் கங்கைக் கரையில்
புதைத்து வைத்திருந்த புதையலைப் பற்றி நீ எப்படி அறிந்தாய்?”
“நீ முதலில் புதைத்த
நேரத்தில் நான் கங்கைக் கரையில் இருந்தேன் தனநந்தா. அந்த இரவில் நடந்த அனைத்தையும்
பார்த்த பின்பு தான் இனி என் தந்தை திரும்ப வருவார் என்ற நம்பிக்கையை இழந்து பாடலிபுத்திரத்தை
விட்டு ஓடிப் போனேன்.”
தனநந்தன் ஒன்றும்
சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். விதி வலிது.
சாணக்கியர் சொன்னார்.
“யாருமே அவரவர் கர்மங்களில் இருந்து தப்ப முடியாது தனநந்தா. இன்றைய உன் நிலைக்காக நீ
ஆத்திரமும், கோபமும், வெறுப்பும் கொள்வதென்றால் நீ அதற்கெல்லாம் மூலகாரணமான உன் மீதே
கொள்வது தான் சரி. இயற்கையின் விதி அரசன் முதல்
ஆண்டி வரை ஒன்று தான். விதைத்ததை யாரும் அறுவடை செய்தே ஆக வேண்டும். அந்த விதி அரசனுக்காக
எந்தச் சலுகையும் காண்பிப்பதில்லை. சில அறுவடைகள் தாமதமாகின்றன என்பதற்காக அதிலிருந்து
தப்பித்து விட்டோம் என்று யாரும் எண்ணி விடக்கூடாது.”
தனநந்தன் அதற்குப்
பதில் எதுவும் சொல்லவில்லை. நிதி இழந்து, மகன்களை இழந்து, நாடிழந்து நிற்கும் அவன்
அவர் சொன்னதை மறுப்பதற்கில்லை. முடிவில்
கோபம், ஆத்திரம், வெறுப்பு எல்லாம் கரைந்து
விரக்தியுடன் தனநந்தன் கேட்டான்.
“என்னையும் என் குடும்பத்தையும் என்ன செய்வது என்று தீர்மானித்திருக்கிறாய்
சாணக்கின் மகனே?”
சாணக்கியர்
உடனடியாக ஒன்றும் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்தவராக அவனையே பார்த்தார். தனநந்தன்
ஒவ்வொரு கணமும் யுகமாக நகர்வதாய் உணர்ந்தான். தீர்ப்புகள்
சொல்லியே பழக்கப்பட்டவனுக்கு தனக்கான தீர்ப்பை அடுத்தவரிடம் எதிர்பார்ப்பது கொடுமையாகத்
தோன்றியது.
அவனை அதிகம் காக்க வைக்காமல் சாணக்கியர்
சொன்னார். “நீ குடும்பத்தோடு வனப்பிரஸ்தம் போய்க் கொள் தனநந்தனே. நீ காட்டிலிருந்து
கொண்டு எங்களுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடாத வரை நீ சுதந்திரமானவனே.”
தனநந்தன்
சிறிதும் இந்தக் கருணையை சாணக்கின் மகனிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. அவன்
இதை விட மோசமான தீர்ப்புகளை எல்லாம் கற்பனை செய்து பயந்திருந்தான். கடைசியிலும்
கடுமையாக சாணக்கின் மகனிடம் பேசியும் அவனைச் சிறையிலடைக்காமல், சித்திரவதை செய்யாமல்
வனப்பிரஸ்தம் அனுப்பத் தீர்மானித்தது அவன் எதிர்பாராததே.
ஆனாலும் அந்தத் தீர்ப்பை
மனம் அசைபோட்ட போது தனநந்தனால் நிம்மதியடைய
முடியவில்லை. காரணம் மகள் துர்தராவாக இருந்தாள். மகளுக்கு எத்தனையோ வரன்கள் வந்த போதெல்லாம் திருப்தியடையாமல்
அவன் தட்டிக் கழித்தது சரியல்ல என்று இப்போது அவனுக்குத் தோன்றுகிறது. பெண்
கேட்டு வந்த அரசர், இளவரசர்களில் ஒருவரையாவது அவன் தேர்ந்தெடுத்திருக்கலாம். மகளாவது
தப்பித்திருப்பாள். தந்தையாக மகள்
நிலைமைக்கு அவன் துக்கப்பட்டான்.
சாணக்கியர் அவனையே
கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டார். என்ன யோசிக்கிறாய் தனநந்தா?”
ஒரு கணம் தன் கவலையை
சாணக்கின் மகனிடம் சொல்வதா என்று தனநந்தனுக்குத் தோன்றினாலும் அதையும் மீறி அவன் மனம்
விட்டுச் சொன்னான். “நானும்
என் மனைவிகளும் வனப்பிரஸ்தம் போகும் வயதினர்களே. ஆனால் என்
மகள் மிக இளையவள். திருமணமும் ஆகாதவள். அவளை யோசிக்கையில்
வருத்தமாக இருக்கிறது.”
சாணக்கியர் சொன்னார். “உன் மகளுக்கு
யாரையாவது பிடித்திருந்தால் அவளுக்குப் பிடித்தவனுடன் திருமணம் செய்து வைப்பது என்
பொறுப்பு தனநந்தா. அதனால் நீ நிம்மதியாகப் போகலாம்.”
தனநந்தன் திகைத்தான். அவனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. சாணக்கியரைச்
சந்தேகத்துடன் பார்த்தபடி சொன்னான். “உன்னுடைய இந்தத்
திடீர்ப் பெருந்தன்மைக்குக் காரணம் எனக்கு விளங்கவில்லையே சாணக்கின்
மகனே.”
“தந்தையின்
செயலினால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை தனநந்தா. அதற்கு
சிறு வயதில் நான் பாதிக்கப்பட்டது காரணமாக இருக்கலாம்.” என்று சாணக்கியர்
சொன்னார்.
தனநந்தன் பெருமூச்சு விட்டான். மன்னனாக
அவன் இருக்கும் போதே அவன் மகள் தன் மனம் விரும்பியவனாக யாரையும் சொல்லியிருக்கவில்லை. இதுவரை
அவளுக்கு அமையாத நல்ல வரன் நாடிழந்து காட்டுக்குப் போகும் இந்தச் சந்தர்ப்பத்திலா வாய்க்கப்
போகிறது என்று யோசிக்கையில் களைப்பு ஏற்பட்டது. ஆனாலும்
அவளிடம் கேட்டுப் பார்க்கலாம். அவள் அப்படி ஒருவனைச் சொன்னாலும் கூட சாணக்கின் மகன் தயவில்
அவள் திருமணம் நடப்பதை அவன் மனம்
ஏற்கவில்லை...
அவன் வாய் திறந்து
அதைச் சொல்வதற்குள் சாணக்கியர் சொன்னார். “தனநந்தா! உன் மகளிடம்
கேட்கவும், வனப்பிரஸ்தம் போக ஆயத்தமாகவும் உனக்கு ஒரு நாள் சமயம் தருகிறேன். நீ அந்தப்புரம்
சென்று உன் மனைவிகளையும் கலந்தாலோசித்து விட்டு மகள் திருமணம் குறித்து ஒரு முடிவுக்கு
வா. உங்களால் அப்படி ஒருவனைச் சொல்ல முடியாவிட்டால் நீ உன் மகளையும்
உங்களுடன் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டியதாய் இருக்கும். அவளுடனோ
அவள் இல்லாமலோ நாளை சூரிய அஸ்தமனத்துக்குள் நீ இங்கிருந்து கானகம் சென்று விட வேண்டும். அதற்கு
மேல் நீ இங்கிருக்க உனக்கு அனுமதி இல்லை.”
சாணக்கியர் எழுந்து சென்று விட்டார்.
தனநந்தன் அந்தப்புரத்திற்குள் நுழைந்த போது அவன்
இரு மனைவிகளும் நெருக்கமாக அமர்ந்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு
இது நிஜம் தானா, இல்லை கனவா என்று ஒரு கணம் சந்தேகம் வந்து விட்டது. கண்களை மூடி மறுபடி
திறந்து கூர்ந்து பார்த்தான். கனவில்லை, நிஜம் தான். சில காலம் முன்பு வரை அவர்கள்
சண்டையினால் அவன் தொலைத்திருந்த அமைதி கொஞ்சநஞ்சமல்ல. எல்லாம் இழந்த பின் தான் அவர்களுக்கும்
புத்தி வந்திருக்கிறது போல...
அவனைப் பார்த்ததும் அவன் மனைவிகளும், மகளும்
அழுதார்கள். அவன் உயிரோடு பாதுகாப்பாக இருப்பது அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. அழுகை ஓய்ந்த
பின் தனநந்தன் சாணக்கியர் சொன்னதைச் சொன்னான். அவன் சொன்னவுடன் துர்தரா மெல்ல அங்கிருந்து நகர்ந்தாள். அரசியர்
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். யாருமே
சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. அங்கே மயான
அமைதி நிலவியது. ஆரம்பத்தில் வனப்பிரஸ்தம் பற்றிய பிரஸ்தாபம் தான் அவர்களை
வாயடைத்திருக்கிறது என்று தனநந்தன் நினைத்தான்.
ஆனால் அவன் மனைவிகள் இருவரும்
பார்வையால் எதோ பேசிக் கொள்வதைப் பார்த்த போது வேறெதோ ஒன்று தான் அவர்களை வாயடைத்திருக்கிறது
என்பது புரிந்தது.
மெல்ல அமிதநிதா சொன்னாள். ”நம் மகளின்
மனதில் ஒருவன் இடம் பிடித்திருக்கிறான். அவன் யாரென்று சொன்னால்
திருமணத்திற்கு நீங்களும் சம்மதிக்க மாட்டீர்கள். வாக்கு
கொடுத்திருக்கும் சாணக்கியரும் சம்மதிக்க மாட்டார்.”
(தொடரும்)
என்.கணேசன்
அருமை! எப்படி அழகான உணர்வுகளை சொல்லியிருக்கிறீர்கள்…
ReplyDeleteசாணக்கியர் முதலில் துரோகத்தை மறந்து தனநந்தனிடம் நாட்டுக்காக உதவி கேட்டார்...
ReplyDeleteதற்போது தனநந்தனை வென்ற பின்பும், அவனை பழிவாங்க வில்லை...
சொந்த விருப்பு,வெறுப்புகள் இருந்தாலும், அவர்கள் அதற்காக எதையும் செய்யவில்லை...