என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 14, 2025

யோகி 111

 

ஷ்ரவன் அவரிடம் ஆர்வத்துடன் கேட்டான். “என்ன நினைவுக்கு வருகிறது சுவாமிஜி.”

 

முக்தானந்தா சொன்னார். “சில மாதங்களுக்கு முன் நீ சொல்லும் அந்த அறை பாண்டியனின் ஆட்களால் கண்காணிக்கப்படும் அறையாக இருந்தது. அவர்கள் இரவு நேரத்திலும் அந்த அறை ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அறையில் இருப்பவர்கள் என்ன பேசிக் கொள்கிறர்கள் என்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். சுமார் ஒருவாரம் இப்படி நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.”

 

ஷ்ரவன் கண்களை மூடி யோசித்தான், முக்தானந்தா அவனிடம் கேட்டார். “யார் அந்த சைத்ரானந்தா? அவளுக்கு என்ன ஆயிற்று? அவள் விஷயமாகத் தான் நீ இங்கே வந்திருக்கிறாயா? நீ யார்? உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்?”

 

ஷ்ரவன் சைத்ராவின் குடும்பப் பின்னணியைச் சொல்லி விட்டு, அவளுடைய தந்தைக்கு ஒரு நாள் வந்த மொட்டைக் கடிதத்திலிருந்து ஆரம்பித்து அவருடைய தற்கொலை வரைக்கும் நடந்ததை அவரிடம் விவரித்தான். சைத்ராவின் தாத்தாவின் நிலைமையைக் கண்டு வருத்தப்பட்ட ஒரு சமூக சேவகர் இந்த வழக்கு பற்றிய பல சந்தேகங்களை மத்திய புலனாய்வுத் துறைக்கு எழுதிப் போட்டதால் மத்தியப் புலனாய்வுத் துறை, .பி.எஸ் அதிகாரியான அவனிடம் ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது என்று சொன்னான். முதல்வர் பெயரையும், ராகவன் பெயரையும் இதில் இழுக்காமல் அதற்குப் பதிலாக மத்தியப் புலனாய்வுத் துறையைச் சொல்வது பொருத்தமாகவும், பிரச்சினை இல்லாததாகவும் இருப்பதாய் அவனுக்குத் தோன்றியது. 

 

இன்னொரு தகவலையும் ஷ்ரவன் மாற்றிச் சொன்னான். பரசுராமனை அவன் தந்தையின் நீண்ட கால நண்பர் என்றும், அவரிடம் சைத்ரா வழக்கைப் பற்றிச் சொன்ன போது அவர் சேதுமாதவன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அநீதிக்காகக் கொதித்து தன்னுடைய மாந்திரீக சக்தியைப் பயன்படுத்தி சில பயமுறுத்தல் வேலைகளைச் செய்ய முன்வந்தார் என்று ஆரம்பித்து அவர் டாக்டர் சுகுமாரன், பாண்டியன் இருவர் மீதும் ஏவல் சக்திகளை ஏவி விட்டுச் செய்ததை எல்லாம் விரிவாகச் சொன்னான். ஸ்ரேயாவைப் பற்றிச் சொல்வதை மட்டும் தவிர்த்த அவன், பின் நடந்தது எதையும் அவரிடமிருந்து மறைக்கவில்லை. பரசுராமன் சைத்ராவின் ஆவியை வரவழைத்து அந்த ஆவி சொன்னதையும் கூடத் தெரிவித்தான்.

 

முக்தானந்தா பிரமிப்புடன் அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தார்.

 

பாண்டியன் தன் மேஜையில் வைக்கப்பட்ட அன்றைய முக்கியத் தகவல்களைப் படித்துக் கொண்டிருந்தார். இன்று முக்கிய வேலை ஒன்று முடிந்து யோகாலயம் திரும்பிவர நேரம் அதிகமாகி விட்டது. அதனால் தற்போது இரவு பதினொரு மணிக்குத் தான் அந்தத் தகவல்களைப் பார்க்க முடிகிறது. அவர் எதை முக்கியம் என்று நினைக்கிறார், எதை முக்கியமல்ல என்று நினைக்கிறார் என்பதில் அவருடைய ஆட்களுக்குப் பல சமயங்களில் குழப்பம் இருந்ததால் வழக்கத்திற்கு மாறாக நடப்பதை எல்லாம் அவருக்குத் தெரிவிக்க ஆரம்பித்து இருந்தார்கள். அது அவருக்கு, இது போன்ற வேலைப்பளு உள்ள நாட்களில் சலிப்பாக இருந்தாலும், முக்கியத் தகவல்களைத் தவற விடுவதை விட இது நல்லது என்று அவர் நினைத்ததால் அதை அனுமதித்திருந்தார்.

 

இன்று சித்தானந்தாவுக்கு டைப்பாய்டு காய்ச்சல்ஆஸ்பத்திரியிலேயே தங்க மருத்துவர் சொன்னதால் அவர் ஆஸ்பத்திரியிலேயே இருக்கிறார்என்ற தகவலைப் படித்து விட்டு அடுத்த செய்திக்குப் போன பாண்டியன் பின் ஒரு கணம் கண்களை மூடி யோசித்தார். ‘புதிதாய் வந்திருக்கும் ஷ்ரவனும், சுவாமி முக்தானந்தாவும் தான் அறையில் தனியாக இருக்கிறார்கள். முக்தானந்தா அதிகம் பேசும் நபரல்ல என்றாலும் யோகாலயத்து விஷயங்களை அதிகம் அறிந்த நபர். புதியவன் ஷ்ரவன் பிரம்மானந்தா மேல் கண்மூடித்தனமான பக்தி கொண்டவன். பழையவரான முக்தானந்தாவிடம், புதியவனான ஷ்ரவன் பிரம்மானந்தா பற்றி தானாக எதையாவது சொல்லவோ, கேட்கவோ வாய்ப்பு இருக்கிறது..’

 

அந்த நிலைமையே ஒருவித நெருடலை பாண்டியனின் மனதில் ஏற்படுத்தியதால் அவர் உடனடியாக கண்ணனை அலைபேசியில் அழைத்தார்.

 

ண்ணன் பாண்டியன் அழைத்த போது தான் உறங்க ஆரம்பித்திருந்தார். பாண்டியனிடம் பேசி விட்டு உடனடியாக எந்தச் சங்கடமும் இல்லாமல் அவர் கிளம்பினார். அவருடைய வேலை எதற்கும் நேரம் காலம் கிடையாது. பத்து மணிக்குத் தான் யோகாலயத்தின் துறவிகளின் எல்லா அறைகளிலும் விளக்கு அணைந்திருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொண்டு அவர் தனதறைக்குச் சென்றிருந்தார். அப்போது அறை எண் 128லும் விளக்கு அணைந்து தான் இருந்தது. இப்போதும் அணைந்து தான் இருக்கிறது. ஆனாலும் பேசுவதற்கு விளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.

 

பொதுவாக இப்படி ஏதாவது சந்தேகம் எழுந்து, அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கையில் அவர் வெளிப்பக்கமாகப் போய் ஜன்னல் வழியாகப் பார்ப்பது தான் வழக்கம். ஆனால் முக்தானந்தாவின் அறையில் அப்படிப் பார்க்க அவர் விரும்பவில்லை. ஏனென்றால் பெரும்பாலும் ஜன்னல் அருகிலேயே உட்கார்ந்திருக்கும் அந்தக் கிழவர் பார்க்கும் வெறித்த பார்வை கண்ணனுக்கு எப்போதும் எரிச்சலூட்டுவதாய் இருக்கும். அதனால் கதவருகே நின்று கவனிப்பது தான் நல்லது என்று நினைத்தவராய் கண்ணன் ஆண் துறவிகளின் கட்டிடத்தின் பிரதான கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார். அந்தக் கதவு லேசான கிறீச் சத்தமிட்டது.

     

 

பேசிக் கொண்டிருந்த ஷ்ரவன் உடனடியாகப் பேசுவதை நிறுத்தி முக்தானந்தாவுக்கு சமிக்ஞை செய்து விட்டு, தன் படுக்கையில் படுத்துக் கொண்டான். முக்தானந்தா திகைப்புடன் அவனைப் பார்த்தாலும் வாய் திறந்து பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

 

கண்ணன் அறை எண் 128 கதவருகே நின்று காதுகளைக் கூர்மையாக்கினார். உள்ளே ஃபேன் ஓடும் சத்தம் தவிர வேறெதுவும் சத்தமில்லை. கண்ணன் உடனடியாகத் திருப்தியடைந்து திரும்பிச் சென்று விடவில்லை. ஐந்து நிமிடம் அமைதியாக அங்கேயே நின்றார். முக்தானந்தாவின் குரல் திடீரென்று கேட்டது. “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

 

பின் மறுபடியும் ஃபேன் ஓடும் சத்தம் மட்டுமே கேட்டது. முக்தானந்தா வேறு எதுவும் சொல்லவில்லை. முக்தானந்தா பற்றி சக துறவிகள் சொல்லும் ஒரே புகார் இது தான். ”இரவு நேரங்களில் திடீர் திடீர் என்று அவர் ஓரிரு வரிகளில் தத்துவம் பேசுகிறார். அதைக் கேட்டு ஒரு முறை விழிப்பாகி விட்டால் மறுபடி எங்களுக்குச் சீக்கிரமாக உறக்கம் வருவதில்லை.” அதற்காக அவரைக் கூப்பிட்டுக் கண்டிக்கும் வயதும் அவருக்கு இல்லை, கண்டிக்கும் அளவு அது பெரிய குற்றமுமில்லை என்பதால் அப்படியே விட்டிருந்தார்கள்...

 

கண்ணன் நின்ற ஐந்து நிமிடங்களில் வேறு எந்தச் சத்தமுமில்லை. அவர் மெல்ல அங்கிருந்து கிளம்பினார்.  அவர் வெளியே சென்ற போதும் அந்தப் பெரிய கதவு லேசாக கிறீச்சிட்டது.

 

இரண்டு நிமிடங்கள் பொறுத்துப் பார்த்து விட்டு ஷ்ரவன் எழுந்து உட்கார்ந்தான். முக்தானந்தா அவனை ஆச்சரியத்துடன் பார்த்து, தாழ்ந்த குரலில் கேட்டார். “நீ அந்தக் கதவுச் சத்தம் கேட்டு தான் எச்சரிக்கையானாயா?”

 

ஆமாம் சுவாமிஜி

 

நீ சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த சுவாரசியத்தில் எனக்கு அந்தச் சத்தம் கேட்கவேயில்லை. உனக்கு மட்டும் எப்படி?”

 

ஷ்ரவன் அடக்கத்துடன் சொன்னான். “பயிற்சி தான் சுவாமிஜி. நீங்கள் என்னைச் சுற்றி இருக்கும் அலைவரிசைகளைப் பார்த்து நான் துறவியல்ல என்பதை அனாயாசமாய்க் கண்டுபிடித்து விடவில்லையா? அந்த நுண்ணுணர்வு உங்களுக்குப் பயிற்சியால் தான் வந்திருக்கிறது. நீண்ட காலம் கவனித்து அதில் தேர்ச்சி பெற்று விட்டிருக்கிறீர்கள். அப்படித் தான் இதுவும்.”

 

முக்தானந்தாவுக்கு இப்போது வியப்பு குறையவில்லை. அது மிக லேசான கிறீச் சத்தம் தான். அதற்காகவே காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் அந்த இரவு நேரத்தில் கேட்டிருக்கும் தான். ஆனால் ஷ்ரவன் அவரிடம் சுவாரசியமாக பரசுராமனின் ஏவல் சக்திகள் பற்றியும், சைத்ராவின் ஆவியிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட செய்தி பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தான். அந்தப் பேச்சின் நடுவிலும் அந்த மெல்லிய சத்தத்தை அவன் கேட்டு உஷாரானது பெரிய விஷயம் என்றே தோன்றியது.

 

முக்தானந்தா கேட்டார். “பயிற்சி என்றால் எங்கே யாரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டாய்?”

 

ஒரு குங்ஃபூ மாஸ்டரிடம் சுவாமிஜிஎன்ற ஷரவன், பத்து நாட்கள் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு காதால் மட்டும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு,   அதற்கு ஏற்றபடி இயங்கி, கேட்கும் நுண்ணுணர்வை வளர்த்துக் கொண்டதைச் சொன்னான். பத்து நாட்கள் இரண்டு காதுகளையும் நன்றாக மூடி கண்களால் மட்டுமே பார்த்து அதற்கு ஏற்றபடி இயங்கி, பார்க்கும் நுண்ணுணர்வை வளர்த்துக் கொண்டதைச் சொன்னான். அதே போல பல சத்தங்களுக்கு நடுவே ஒரு சத்தத்தில் மட்டும் கவனம் வைக்க முடிந்த கஷ்டமான பயிற்சியைப் பற்றியும், பல இயக்கங்களுக்கு நடுவே ஒரு இயக்கத்தில் மட்டும் கவனத்தைக் குவிக்க முடிந்த பயிற்சியையும் பற்றி அவன் சொன்ன போது அவருக்குப் பிரமிப்பாக இருந்தது.


(தொடரும்)

என்.கணேசன்




என்.கணேசனின் நூல்களை வாங்க 94863 09351 எண்ணில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

2 comments:

  1. காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே....
    இதை முக்தானந்தா பொதுவாக சொன்னரா? அல்லது ஷ்ரவன் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு... 'உங்களுக்கு அழிவு நெருங்கிவிட்டது' என்பதை உணர்ந்து சொன்னாரா??
    தெரியவில்லை, எப்படி யோசித்தாலும் பொருத்தமாக உள்ளது.

    ReplyDelete