என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 29, 2025

சாணக்கியன் 163

 

த்ரசால் வந்தவுடன் மகத வீரர்கள் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் போரிட ஆரம்பிக்க, முந்தைய வேகத்தில் சந்திரகுப்தனின் படை உள்ளே நுழைய முடியவில்லை. வாயிற்கதவருகேயே தன் படை ஸ்தம்பித்து நிற்பதை பின்னாலிருந்த சந்திரகுப்தன் கவனித்தான்.  ஏற்கெனவே உள்ளே போயிருந்தவர்கள் உள்ளேயிருந்த மகத வீரர்களுடன் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்ததால் அவர்களாலும் வாசலில் இருந்த தடையைத் தளர்த்த முடியவில்லை.

 

சந்திரகுப்தன் இனியும் உள்ளே நுழையக் கால தாமதமாவது ஆபத்து என்பதை உணர்ந்தான். மகதப்படைகள் அருகிலேயே தானிருக்க வேண்டும். தகவல் தெரிந்தவுடன் அவர்கள் வந்து சேர அதிக காலம் தேவைப்படாது. அவர்கள் வருவதற்குள் கணிசமான படை வீரர்கள் உள்ளே நுழைந்தால் தான் தங்கள் திட்டம் நிறைவேற முடியும் என்று உணர்ந்ததால் சந்திரகுப்தன் தன் குதிரையை மிக லாவகமாக முன்னோக்கிச் செலுத்தினான். அவன் படையினரை விலக்கிக் கொண்டே லாவகமாகப் போன விதத்தைப் பின்னாலிருந்து பார்த்த மலைகேது மலைத்தான்.

 

“என்ன மனிதனிவன் தந்தையே. யாருமே இல்லாத இடத்தில் செல்வதைப் போல இத்தனை நெரிசலுக்கிடையேயும் எத்தனை அனாயாசமாகச் செல்கிறான்.”

 

பர்வதராஜன் வறண்ட குரலில் சொன்னான். “மாடு மேய்த்துக் கொண்டு இருந்தவன் மன்னன் ஆனது வெறும் அதிர்ஷ்டத்தால் அல்ல மகனே. போரின் முடிவுகள் கண நேரத்தில் வெற்றியிலிருந்து தோல்விக்கும், தோல்வியில் இருந்து வெற்றிக்கும் மாறிவிடும் வாய்ப்பு இருப்பதால் பல நேரங்களில் விரைந்து செயல்படுவது மிக முக்கியமாக இருக்கிறது....”

 

சந்திரகுப்தன் வாயிலை அடைந்த போது அவனுடைய வீரர்கள் உற்சாகத்தோடு ஆரவாரம் செய்தார்கள். பத்ரசாலுக்கு சந்திரகுப்தனின் திடீர் வரவு கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது. கூடவே ராக்ஷசர் அவன் அங்கிருக்கக் கூடும் என்று முன்பே சந்தேகப்பட்டது நினைவுக்கு வந்தது. எல்லா வகையிலும் நாடகமாடியிருக்கிறார்கள் எதிரிகள் என்று கசப்புடன் நினைத்துக் கொண்டான்.


சந்திரகுப்தன் வாயிலை நெருங்கிய பிறகு மகத வீரர்களால் அவன் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவன் ஏதோ ஒரு பிரம்மாண்ட சக்தியால் ஆட்டுவிக்கப் படுபவன் போல் அசுர வேகத்தில் எதிரிகளைத் தாக்கினான். பத்ரசாலே அவன் வாள்வீச்சையும், வேகத்தையும் கண்டு அசந்து போனான். அவன் தன் இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் இப்படி ஒரு வீரனைப் பார்த்ததில்லை.  சந்திரகுப்தனின் அருகில் இருப்பதாலேயே அவன் அருகிலிருந்த அவனுடைய வீர்ர்களும் அவனிடமிருந்து அந்த அசுர சக்தியைப் பெற்றது போல் தோன்றியது. அவர்களும் பராக்கிரமத்துடன் போராடினார்கள். பத்ரசாலும், மற்ற மகத வீரர்களும் சிறிது சிறிதாகப் பின் வாங்க வேண்டியதாயிற்று. சந்திரகுப்தன் பாடலிபுத்திர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தான். அந்த நேரத்தில் உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட மகதப்படைகளும் வேகமாக அங்கே வந்து சேர ஆரம்பித்தன.

 

சந்திரகுப்தன் பத்ரசாலைத் தனியாகக் குறி வைத்து தாக்க ஆரம்பித்தான். முழுவதுமாக அவர்கள் படை வந்து சேர்வதற்குள் பத்ரசாலை வீழ்த்தினால் பின் மற்றதெல்லாம் சுலபம் என்று சந்திரகுப்தன் கணக்கிட்டான். பத்ரசால் சந்திரகுப்தனுக்குச் சரிசமமாகப் போரிட்டாலும் போகப் போகச் சிறிது தளர்வை உணர்ந்தான்.  அதைப் பயன்படுத்திக் கொண்டு சந்திரகுப்தன் வேகத்தைக் கூட்டிய போது அவன் வாள் பத்ரசாலின் இடது தோளைப் பதம் பார்த்தது.

 

பத்ரசால் வேகமாகப் பின் வாங்கினான். மகதப் படைகள் அவனுக்கும் சந்திரகுப்தனுக்கும் இடையே புகுந்து தங்கள் சேனாதிபதியைப் பாதுகாக்க ஆரம்பித்தன. பத்ரசாலுக்குப் போர்க்காயங்கள் புதிதல்ல. இடது தோளில் அதிக வேதனையை அவன் அனுபவித்த போதும், காயம் அவன் வேகத்தைக் குறைக்க முடிந்ததே ஒழிய அவன் வீரியத்தைக் குறைத்து விடவில்லை. ஆனால் மகதப் படைகள் பெருமளவு அங்கு வந்து சேர்ந்து விட்டதால் இனி அங்கு இருந்து கொண்டு சந்திரகுப்தனுடன் போராடுவதை விட அரண்மனைக்குச் சென்றிருக்கும் சின்ஹரன் பெருஞ்சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன் அவனைத் தடுத்து நிறுத்துவது முக்கியம் என நினைத்தான்.

 

அங்கு வந்து சேர்ந்திருந்த அவனுடைய படைத் தலைவன் ஒருவனிடம் “இங்கு பார்த்துக் கொள். அரண்மனையில் மன்னருக்கும், இளவரசருக்கும் ஆபத்து. அங்கு பாதுகாப்பை ஏற்படுத்தி விட்டு மீண்டும் இங்கு வருகிறேன்” என்று சொல்லி விட்டு பத்ரசால் அரண்மனை நோக்கி விரைந்தான்.

 

சுதானுவுக்கு பத்ரசால் வெளியே என்ன சலசலப்பு என்று பார்த்து விட்டு  வருவதாகச் சொல்லி விட்டுப் போனவன் திரும்பி வரத் தாமதமானது புதிய பிரச்சினையின் அறிகுறியாகத் தோன்ற ஆரம்பித்தது. கார்த்திகேயனும் வரவில்லை, பத்ரசாலும் வரவில்லை என்பது வெளியே ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தியது. சற்று தொலைவிலிருந்து வேறு சத்தங்களும் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. காவலை மீறி ராக்‌ஷசர் வந்து சேர்ந்து விட்டாரோ? எதற்கும் போய்ப் பார்க்கலாம் என்று எண்ணி அவன் எழுந்த போது சின்ஹரன் உள்ளே நுழைந்தான்.

 

சுதானு கேட்டான். “என்ன நண்பரே வெளியே ஏதாவது பிரச்சினையா? நீங்கள் வரவும் தாமதமாகி விட்டது. வெளியே சென்று பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பிய சேனாதிபதியும் திரும்பி வரவில்லை நான் சற்று பயந்து விட்டேன்.”

 

சின்ஹரன் சொன்னான். “வெளியே ராக்‌ஷசரின் ஒற்றர்களும், அவருடைய நம்பிக்கைக்குரிய வீரர்களும் இங்கே என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதை சேனாதிபதியும், நானும் சமாளித்து விட்டோம். இப்போது முற்றுகை இட்டிருக்கும் எதிரிகள் திடீரென்று தாக்குதலை ஆரம்பித்து விட்டார்கள் போல் தெரிகிறது. சத்தம் கேட்கிறது பார்த்தீர்களா? சேனாதிபதி அங்கே விரைந்திருக்கிறார். நான் அவரை அனுப்பி விட்டு உங்களைச் சந்திக்க வந்தேன்.”

 

சுதானு கவலையுடன் கேட்டான். “ஏன் திடீரென்று இந்த வேளையில் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார்கள் நண்பரே? நாம் என்ன செய்வது?”

 

சின்ஹரன் சொன்னான். “கவலைக்கு அவசியமில்லை இளவரசே. நம் படை வீரர்கள் அங்கே விரைந்திருக்கிறார்கள். சேனாதிபதியும் சென்றிருக்கிறார். ஆரம்பித்த வேகத்திலேயே எல்லாம் அடங்கி விடும்.”

 

சுதானு அந்த வார்த்தைகளில் அமைதியடைய விரும்பினாலும் தொலைவிலிருந்து அதிகமாகிக் கொண்டே வரும் போர்ச்சத்தம் அவன் அமைதியடைய அனுமதிக்கவில்லை.  அவன்  ஏதோ கேட்க வாயெடுத்த போது சின்ஹரன் ரகசியக் குரலில் சொன்னான். “நீங்கள் இனி என்றுமே கவலைப்படத் தேவையில்லாதபடியான ஒரு நிகழ்வு நடக்கப் போகிறது இளவரசே”

 

சுதானு வியப்புடன் பார்க்க, ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள நெருங்கி வருபவன் போல் அவனை நெருங்கி வந்த சின்ஹரன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனை இறுக்கப் பிடித்துக் கொண்டு தன் குறுவாளை உருவி சுதானுவின் வயிற்றில் ஆழமாகச் சொருகினான். அதிர்ச்சியால் வாயடைத்துப் போயிருந்த சுதானுவின் தொண்டைக்குழியிலிருந்து ஒரு சிறு சத்தம் பரிதாபமாய் எழுந்து அங்கேயே அடங்கியது.

 

சின்ஹரன் மெல்லச் சொன்னான். “மரணம் எல்லாக் கவலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது இளவரசே.”

 

சுதானு துடிதுடித்தபடி கீழே சாய சின்ஹரன் குனிந்து தன் குறுவாளை மேலும் ஆழப்படுத்தி பின் திரும்ப உருவியெடுத்து நிமிர்ந்தான். சுதானு திகைப்புடனேயே உயிரை விட்டான். சின்ஹரன் அங்கிருந்து செல்ல யத்தனித்த போது அவன் அடிவயிற்றில் பத்ரசாலின் குறுவாள் ஊடுருவியது. சின்ஹரன் திகைப்புடன் எதிரே பார்த்த போது பத்ரசால் அனல் பறக்கும் பார்வையுடன் நின்றிருந்தான். சின்ஹரன் கண நேரத்தில் திகைப்பிலிருந்து மீண்டு தன் குறுவாளை பத்ரசால் மீது வீச அது பத்ரசாலின் இதயத்தை ஊடுருவியது.

 

பத்ரசால் கோரமாய் அலறியபடி கீழே விழுந்தான். அவன் உணர்ந்த அதிர்ச்சி அவன் முகத்தில் நிரந்தரமாய்த் தங்கியது.

 

கீழே சாய்ந்த சின்ஹரன் தன் உயிர் உடலை விட்டுப் பிரிவதை உணர்ந்தான். ஆனால் அதில் அவனுக்குத் துக்கமில்லை. வலியும் பெரிதாய்த் தோன்றவில்லை. பல வருடங்களுக்கு முன்பே அவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவன் தான். அன்று இறந்திருந்தால் அவன் அவமானச் சின்னமாகவே இருந்திருப்பான். இப்போதோ அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்திருப்பதற்கான மனநிறைவே அவனிடம் இருந்தது. சாணக்கியரின் ஒன்றிணைந்த பாரதம் என்ற கனவு நனவாக அவனும் ஒரு சிறு பங்காற்றி இருக்கிறான். ஒரு சரித்திரப் பிழையாக ஆகவிருந்த அவன் வாழ்க்கை தடம் மாறி இன்று நிறைவை எட்டியதற்காக அவன் சாணக்கியரை நன்றியுடன் நினைத்துப் புன்னகைத்தான்.  அவன் புன்னகையுடனேயே இறந்து போனான்.

 

(தொடரும்)

என்.கணேசன்


இன்னும் சில நாட்களில் புதிய நாவல் கர்மா வெளியாகவிருக்கிறது!

Wednesday, May 28, 2025

முந்தைய சிந்தனைகள் 126

சிறிது நாம் சிந்திக்கலாமே! 

என் நூல்களில் இருந்து சில துளிகள்...













Monday, May 26, 2025

யோகி 104


பாண்டியனின் அலைபேசி இசைத்தது. அழைப்பது யாரென்று அவர் பார்த்தார். டாக்டர் சுகுமாரன்! ”ஹலோ என்ன டாக்டர்? எப்படி இருக்கீங்க? சௌக்கியம் தானே?”

 

சுகுமாரன் மனமுடைந்து பேசினார். “அப்படி சௌக்கியம்னு சொல்ல முடியாத நிலைமைல இருக்கேன். நம்ம மேல ஏவல் சக்தியை அனுப்பி வெச்ச சில்லறைப்பயலைக் கண்டுபிடிச்சு அவனைத் தீர்த்துக் கட்டினால் ஒழிய நான் சௌக்கியமாய் இருக்கவே முடியாது.”

 

ஏன் டாக்டர் என்ன ஆச்சு?”

 

யாரோ எதோ செய்வினை செஞ்சு எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு என் மனைவி சந்தேகப்படறா. அதைச் சரி செய்ய அவள் ஒரு மந்திரவாதியைத் தேட ஆரம்பிக்கற அளவுக்கு நிலைமை மோசமாயிடுச்சு.”

 

பாண்டியன் வாய் விட்டுச் சிரிக்காமல் இருக்க பெருமுயற்சி எடுக்க வேண்டி வந்தது. ”எதனால அவங்க சந்தேகப்படறாங்க டாக்டர்

 

அவளுக்கு நான் தாயத்து கட்டிகிட்டதையாவது சகிச்சுக்க முடிஞ்சுது. ஆனால் டாமிக்கு தாயத்து கட்டினதை சகிச்சுக்க முடியலை. அவளோட சிநேகிதிகள்ல்லாம் வந்து பார்த்தா கைகொட்டி சிரிப்பாங்களாம். இது உலகத்துல எங்கேயுமே பார்க்க முடியாத மூட நம்பிக்கையாம். நான் இத்தனை நாள் அவளைக் கேலி பண்ணினதை எல்லாம் சேர்த்து வெச்சு இப்போ எனக்கே திருப்பி விடறாள். என் நிலைமை எப்படி ஆயிடுச்சு பார்த்தீங்களா? நானே என் கைலயும், டாமி கழுத்துலயும் இருக்கற தாயத்தை பார்க்கறப்ப எல்லாம் நொந்து நூலாய்கிட்டிருக்கேன். இப்ப அவளும் கிண்டல் பண்றாள். ஆனாலும் நான் அதைக் கழட்டி வீச முடியாத ஒரு  துர்ப்பாக்கியசாலியாய் இருக்கேன்.”

 

அவர் சொன்ன விதம் வேடிக்கையாக இருந்தாலும், பாண்டியனுக்குத் தன் கையிலிருந்த தாயத்தையும் பார்த்த போது சிரிக்க முடியவில்லை. “அப்பறம் எப்படி சமாளிச்சீங்க?”

 

நமக்கு ஆகாதவங்க யாரோ துஷ்ட சக்தியை ஏவி விட்டிருக்காங்க, அதுல இருந்து தற்காத்துக்க தான், யோகிஜி சொல்லி, இப்படி தாயத்து கட்டிகிட்டு இருக்கேன். இதை எடுத்துட்டா குடும்பத்துல இருக்கற எல்லாருக்கும் ஆபத்துன்னு சொன்னேன். யோகிஜி பெயரை சொன்னவுடனே அவள் வில்லங்கமாய் எதுவும் பேசாம சரின்னு சொல்லிட்டாள். ஆனா அவளோட சினேகிதிகள்ல்லாம் வர்றப்ப டாமி எதிர்ல வராதமாதிரி பின்பக்கத்துலயே கட்டி வைக்கணுமாம். சரின்னு சொல்லி இன்னொரு மந்திரவாதி கிட்ட இருந்து தப்பிச்சிருக்கேன். இந்தப் பிரச்சனைக்கு காரணமானவனை கண்டுபிடிச்சு தீர்த்துக் கட்டற வரைக்கும் நாம நிம்மதியாய் இருக்க முடியாது பாண்டியன். அவனைக் கண்டுபிடிச்சிட்டீங்களா?”

 

இல்லை அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாய் நடந்துகிட்டிருக்கு. சீக்கிரத்துலயே கண்டுபிடிச்சுடுவோம் டாக்டர், கவலைப்படாதீங்க

 

இந்த ஒரு மண்டலம் முடியறதுக்குள்ளே அவனைக் கண்டுபிடிச்சுட்டா நல்லா இருக்கும்.”

 

நான் உங்களை விட ரெண்டு மடங்கு தீவிரமாய் அதை நினைக்கிறேன் டாக்டர்....”

 

ரண்டு நாட்கள் இரவு நேரத்தில் முக்தானந்தாவின் வசனம் எதுவும் இருக்காததால் ஷ்ரவன், இடையில் கலையாத நிம்மதியான முழுத்தூக்கம் தூங்கி எழுந்தான்.  இரண்டு நாளும் வழக்கம் போயின. ஒருசில சமயங்களில் அவனைக் கூர்ந்து பார்த்த முக்தானந்தா, மற்ற சமயங்களில் அவனைக் கண்டுகொள்ளாமல் தன்னுடைய உலகத்தில் ஆழ்ந்திருந்தார். தியானமும், தோட்ட வேலைகளும் வழக்கம் போல் போயின. துப்பறியும் வேலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மூன்றாவது நாள் காலை தியான வேளையில் அவன் கண்களை மூடி மந்திரம் ஜபித்துக் கொண்டிருக்கையில் தீ உமிழும் கண்களுடன் ஓநாய் அவனுக்குக் காட்சி அளித்தது. அவன் அதைப் பார்த்து சந்தோஷமாய் புன்னகைத்தான். “ஹாய் நண்பா நலமா?” என்று அதனிடம் கேள்வி கேட்டான்.

 

அது அவனையே பார்த்துக் கொண்டு மிக அருகில் நின்றது. அதனிலிருந்து கிளம்பும் ஏதோ ஒரு சக்தி லேசான வெப்பத்துடன் அவனை ஆக்கிரமிப்பதை ஷ்ரவன் உணர்ந்தான். முதல் முறையும், அது அவன் மேல் தாவிய போது,  இப்படித் தான் ஏதோ நடந்திருக்கிறது என்று அவனுடைய உள்ளுணர்வு தெரிவித்தது. ஆனால் அப்போது அவனால் தாங்க முடிந்திருக்கவில்லை. இப்போதோ அவன் உடல் அந்தச் சக்தியைப் பெற்றிருக்கிறது. அவன் தொடர்ந்து அந்த மந்திர ஜபத்தைச் செய்து கொண்டிருப்பதால் தான் அது சாத்தியமாகி இருக்கிறது என்று அவன் நம்பினான். இப்போதும் அவன் பரசுராமனை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறான்.

 

கண்களில் நெருப்பு உமிழ்ந்து நிற்கும் அந்த ஓநாயிடம் ஷ்ரவன் மனம் விட்டு பிரார்த்தித்தான். “நண்பா. இங்கே வந்து சேர்ந்து விட்டேன். என் வழக்கமான முறைகளின்படி எதையும் கண்டுபிடிக்க நிலைமை இங்கே எனக்குச் சாதகமாய் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. நிறைய காலமும் இல்லை. தேவானந்தகிரி இன்னொரு முறை இங்கே வருவதற்குள் நான் வேலை முடிந்து இங்கிருந்து போய்விட வேண்டும். அதனால் மாந்திரீகத்தைத் தான் நான் இங்கே ஆயுதமாகப் பயன்படுத்தப் போகிறேன். அதற்கு நீ தான் எனக்கு வழிகாட்டி உதவ வேண்டும்.”

 

ஓநாய் சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின் முக்தானந்தா பக்கம் திரும்பியது. பின் வெளியேறியது. சென்ற முறை இந்த ஓநாய் கல்பனானந்தாவைப் பார்த்துக் கொண்டு நின்றதும், இப்போது முக்தானந்தாவைப் பார்த்து விட்டுப் போவதும், இவர்கள் இருவரையும் கவனிக்கச் சொல்வதாகவோ, இருவரையும் பயன்படுத்திக் கொள்ளச் சொல்வதாகவோ இருக்கலாம்

 

அன்று காலை உணவுக்கு அவர்கள் செல்கையில் ஒரு இளந்துறவி ஷ்ரவனிடம் வந்துஇன்று காலை உங்களுக்கு வேறு ஒரு வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு வாருங்கள்என்று சொல்லி விட்டுப் போனார். 

 

ஷ்ரவன் எதிர்பார்ப்புடன் போனான். கம்ப்யூட்டரில் யார் யாருக்கு என்னென்ன வேலைகள் ஒதுக்கியுள்ளனர் என்பதைப் பதிவு செய்யும் வேலை அது. முதல் அறையில் உள்ள கம்ப்யூட்டரிலேயே செய்வதாய் அந்த வேலை இருந்தது. வழக்கமாய் அந்த வேலையைச் செய்யும் துறவி பிரம்மானந்தாவுடன் நாளை அதிகாலையில் வெளியூர் பயணம் செய்வதால் அந்த வேலையை அவர் அவனுக்குக் கற்றுத்தரப் போகிறார். அந்த வேலை மூன்று நாட்களுக்கு அவனுக்குக் கிடைத்திருக்கிறது. முற்பகல் மட்டுமே அந்த வேலை. பிற்பகலில் அவன் வழக்கம் போல் தன்னுடைய தோட்ட வேலையைச் செய்ய வேண்டும்.

 

ஷ்ரவன் அந்தத் துறவியிடமிருந்து வேலை கற்றுக் கொள்ளும் போது அருகில் அமர்ந்து கண்ணன் பார்த்துக் கொண்டே இருந்தார். ஷ்ரவன் அந்த வேலையை வேகமாகக் கற்றுக் கொண்டதுடன் வழக்கமாய் அந்த வேலையை அத்துறவி செய்யும் வேகத்தில் செய்தது கண்ணனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

 

ஒவ்வொரு துறவிக்கும் ஒரு எண் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதே போல் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு எண் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்தத் துறவியின் எண்ணை ஒரு கட்டத்தில் டைப் செய்தவுடன் மற்ற கட்டங்களில் அவர் பெயர், அவர் தங்கியிருக்கும் அறை எண் தானாக வந்து விடும். அதன் பின் உள்ள கட்டத்தில் அவர் நேற்று செய்த வேலை இருக்கும். இன்றும் அதே வேலை என்றால் மாற்ற வேண்டியதில்லை. வேறு வேலை என்றால், பழைய வேலையை நீக்கி விட்டு, அந்தக் கட்டத்தில் அந்தப் புதிய வேலைக்கான எண்ணை டைப் செய்தால் அந்த வேலையின் பெயர் வந்து விடும். எல்லோருடைய அன்றைய வேலையையும் டைப் செய்து முடித்த பின் கடைசியில் எந்த வேலைக்கு எத்தனை பேர் ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் கம்ப்யூட்டரில் தானாகத் வரும்படி அதன்ப்ரோகிராம்போடப்பட்டு இருந்தது. 

 

சிறிது நேரம் அவர்கள் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் பிறகு போய் விட்டார். அவர் போகும் வரை ஒருவித இறுக்கத்தில் இருந்த அந்த இளம் துறவி, அவர் போன பின் இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு மாறியதை ஷ்ரவனால் கவனிக்க முடிந்தது. அந்த இளம் துறவியிடம் பேச்சுக் கொடுத்த போது நாளை பிரம்மானந்தாவுடன் பயணம் போவதில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிந்தது. அங்கே அவர் வந்து சேர்ந்து மூன்று வருடங்களாகின்றன என்றும், இப்போது தான் யோகிஜியுடன் செல்லும் முதல் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் உற்சாகம் பொங்கச் சொன்னார்.

 

இப்படி யோகிஜியுடன் பயணம் போகிறவர்களை யார் தேர்ந்தெடுப்பது, யோகிஜியேவாஎன்று ஷ்ரவன் அவரிடம் கேட்டான்.

 

இல்லை. யோகிஜி இதில் அதிகம் தலையிடுவதில்லை. மேனேஜர் பாண்டியன்ஜியும், சுவாமிஜி கண்ணனும் தான் தேர்ந்தெடுப்பவர்கள்  என்றார் அவர்.

 

ஷ்ரவன் தலையசைத்தான். அவனுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சுவாரசியமாக இருக்கும் என்று ஷ்ரவன் நினைத்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த இளம் துறவி சொன்னார். “உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் என்னைப் போல் நீங்கள் மூன்று வருஷங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. சீக்கிரமாகவே கிடைக்கலாம்.”

 

ஷ்ரவன் புன்னகைத்தான்.


(தொடரும்)

என்.கணேசன்





 

Thursday, May 22, 2025

சாணக்கியன் 162

 

த்ரசால் சுதானுவைச் சந்தித்த போது பரபரப்புடன் கேட்டான். “என்ன ஆயிற்று இளவரசே?”

 

சுதானு புன்னகையுடன் சொன்னான். “எல்லாம் நம் திட்டப்படியே நடந்தேறி விட்டது சேனாதிபதி. சுகேஷ் என்ற தடையை நான் என் வழியிலிருந்து வெற்றிகரமாக நீக்கி விட்டேன்.”

 

பத்ரசால் நிம்மதியை உணர்ந்தான். கார்த்திகேயன் சுதானுவுக்காகப் போட்டிருந்த திட்டத்தில் சிறிய குளறுபடி நிகழ்ந்திருந்தாலும் மற்ற எல்லா திட்டங்களும், முயற்சிகளும் வியர்த்தமாகியிருக்கும்.... பத்ரசால் அடுத்த பிரச்சினையாக தனநந்தனை நினைத்திருந்தான். மூத்த மகன் மரணத்தை தனநந்தன் எப்படி எடுத்துக் கொள்வான், எப்படி எதிர்வினையாற்றுவான் என்று தெரியவில்லை. என்ன தான் கார்த்திகேயன் சுகேஷின் மரணத்தை, அரண்மனையில் ஊடுருவிய எதிரிகள் செய்த சதிவேலை என்று ஆக்கி விடலாம் என்று சொல்லியிருந்தாலும் தனநந்தன் அதைத் தீர விசாரிக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்வானா என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது.

 

ஆனால் கார்த்திகேயன் தன் கச்சிதமான திட்டத்தை அவர்களிடம் சொல்லியிருந்தான். “கடைசியில் கண்டிப்பாக அரண்மனையில் ஓரிரு வீர்ர்களின் பிணங்கள் விழுந்து கிடக்கும். அவற்றில் ஒரு பிணத்தைக் காட்டி ‘இவன் தான் எதிரிகளின் சதியில் எப்படியோ கூட்டு சேர்ந்திருக்கிறான். இவன் சுகேஷைக் கொன்று விட்டு வரும் போது இவனை நாங்கள் தீர்த்துக்கட்டி விட்டோம். சதிகாரர்களின் அடுத்த திட்டம் மன்னரைக் கொல்வதாக இருந்தது. அந்தத் திட்டம் நிறைவேறாதபடி மன்னரைப் பாதுகாத்து விட்டோம்.” என்று சொல்லி விடலாம். மன்னரையும், அவரது பாதுகாவலர்களையும் வெளியே விடாதபடி வெளியில் காவல் இருந்ததைக் கூட அந்தக் காரணம் காட்டியே நம் புத்திசாலித்தனமான செயலாகச் சித்தரித்து விடலாம்.”

 

சுதானு அங்கு என்ன நடந்தது என்பதை விவரித்து விட்டு ராக்‌ஷசரை பத்ரசால் எப்படி சமாளித்தான் என்று கேட்டான். பத்ரசால் சொன்னான். “கார்த்திகேயன் சொன்னபடி நம் சில ஆட்களை அவர் வீட்டு முன் குதிரைகளில் அங்குமிங்கும் போகும்படியும், சில ஆட்களை ஓடும்படியும் சொல்லி விட்டு அந்த சத்தங்கள் கேட்டு அவர் வெளியே வருவதற்குள் போய் விட்டேன்...” அங்கு என்ன சொன்னான் என்பதை விவரித்து விட்டுச் சொன்னான். “அங்கேயும் பலத்த காவலை ஏற்படுத்தி விட்டு வந்திருக்கிறேன். அவர் வெளியே வந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் வெளியே விட அனுமதி இல்லை என்று சொல்லச் சொல்லியிருக்கிறேன். அதனால் இப்போதைக்கு அவரிடமிருந்தும் பிரச்னை எதுவும் வர வாய்ப்பில்லை.... கார்த்திகேயன் எங்கே?”

 

சுதானு சொன்னான். “அவருக்காகத் தான் நானும் காத்திருக்கிறேன். இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டுப் போனார். இன்னும் வரக் காணோம்.”

 

அந்த சமயத்தில் இரவுப் பறவை ஒன்றின் கூக்குரல் சற்று வித்தியாசமாகக் கேட்டது.  அது இரவுப் பறவையின் கூக்குரல் அல்ல, ‘இனி உள்ளே நுழையலாம். அதற்கு வேண்டிய வேலைகளை நாங்கள் செய்து முடித்து விட்டோம்’ என்று சின்ஹரன் சாணக்கியருக்கும், சந்திரகுப்தனுக்கு அறிவித்த அறிவிப்பு என்று அறியாத சுதானுவும், பத்ரசாலும் கார்த்திகேயனுக்காகக் காத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அரண்மனைக்கு வெளியிலேயும் சலசலப்புகள் கேட்க ஆரம்பிக்கவே பத்ரசால் எழுந்தான். “என்ன என்று நான் பார்த்து விட்டு வருகிறேன்.”

 

பத்ரசால் வெளியே வந்து பார்த்த போது ஒரு வீரன் குதிரையில் விரைந்து வந்து கொண்டிருந்தான். தூரத்தில் சில வீரர்கள் சண்டையிட்டுக் கொண்டு இருப்பதும் தெரிந்தது.

 

குதிரையில் விரைந்து வந்த வீரன் இறங்கி வணங்கி மூச்சிறைக்கச் சொன்னான். “சேனாதிபதி எதிரிகளின் படை உள்ளே நுழைந்து விட்டது.”

 

பத்ரசாலுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. “என்ன உளறுகிறாய்?” என்றான்.

 

“உளறவில்லை சேனாதிபதி.... உள்ளேயிருந்து சில வீரர்கள் நம் காவல் வீரர்கள் மீது பாய்ந்து தாக்கிச் சாய்த்து விட்டு கதவுகளைத் திறந்து விட்டார்கள்.”

 

பத்ரசால் திகைத்தான். மேலும் கேட்க நிறைய கேள்விகள் இருந்தாலும் இப்போது ஒவ்வொரு கணமும் மிக முக்கியமானது என்பதால் “நம் படையினரை உடனடியாக வரச் சொல். அவசரம் என்று நான் சொன்னதாகச் சொல். அருகில் செல்லும் போதே கூக்குரலிட்டுக் கொண்டு போ. அவர்களில் சிலராவது விழித்துக் கொண்டு என்ன என்று கேட்க வருவார்கள். கால தாமதத்தை ஓரளவு தவிர்க்கலாம்.”     

 

“உத்தரவு சேனாதிபதி” என்று சொல்லி விட்டு மீண்டும் குதிரை ஏறிய வீரன் பறந்தான். பத்ரசால் குதிரையேறி முன்னோக்கி விரைந்தான். அங்கே சில மகத வீரர்கள் முடிந்த வரை எதிரி வீரர்களுடன் போராடிக் கொண்டிருந்தார்கள். முடிந்த வரை சில வீரர்கள் பிரதான வாயிற்கதவை மூட முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாதென்பதை பத்ரசால் உணர்ந்தான். நகரக் காவல் தலைவன் உக்கிரமாக இரண்டு வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். பத்ரசால் வாளை உருவியபடி பாய்ந்து சென்று அந்த இரண்டு வீரர்களையும் வெட்டிச் சாய்த்து விட்டு அவசரமாக நகரக் காவல் தலைவனிடம் கேட்டான். “எப்படி ஆரம்பித்தது?”

 

நகரக் காவல் தலைவன் மூச்சு வாங்க சொன்னான். “முற்றுகை ஆரம்பித்து நாம் பிரதானக் கதவைச் சாத்துவதற்கு முன்பே இங்கே வந்து சேர்ந்திருந்த வணிகர்களில் பலர் எதிரியின் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் வந்து தாக்க ஆரம்பித்த பின் தான் அந்த உண்மை விளங்கியது சேனாதிபதி. அது மட்டுமல்ல நேற்று முதல் உங்களுடன் இருந்த வணிகர் தான் அவர்களுக்குத் தலைமை தாங்கி தாக்குதல் நடத்தினார். பின் வினோதமாய் ஒரு பறவை போல் கூக்குரலிட்டு வாயிற்கதவைத் திறந்து விட்டவர் அவர் தான்....”

 

பத்ரசால் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவனால் உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. சாவகாசமாக யோசித்துப் பார்க்க நேரமும் இல்லை. எதிரே அவன் வீரர்கள் பிரதான வாயிற்கதவருகே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவன் படை வீரர்கள் செய்தி கிடைத்து வரும் வரையாவது அவன் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அந்த முடிவெடுத்து அவன் அங்கு செல்வதற்கு முன் நகரக் காவல் தலைவனிடம் கேட்டான். “அந்த நயவஞ்சக வணிகன் தற்போது எங்கே?”

 

“அவர் அரண்மனைப் பக்கம் சென்றதைப் பார்த்தேன் சேனாதிபதி”

 

பத்ரசால் மனம் மாபெரும் குற்றவுணர்ச்சியால் நிறைந்தது. அவனுக்குப் பிரச்னை நிதிப்பற்றாக்குறை.  அது தனநந்தனின் கஞ்சத்தனத்தால் வந்தது என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அதனால் அவன் தன் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள இந்தக் குறுக்கு வழியைத் தேடிக் கொண்டானேயொழிய அது அவன் தாயகத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. மகதம் எதிரிகளிடம் வீழும் என்றும், அதற்கு அவன் காரணமாக இருப்பான் என்றும் நிச்சயமாகச் சிறிதும் எதிர்பார்த்ததுமில்லை. தனநந்தனை விட நிச்சயம் சுதானு சிறந்த அரசனாக இருப்பான் என்று அவன் இப்போதும் நம்பினான். சுகேஷை விட எல்லா விதங்களிலும் சுதானு சிறந்த அரசனாக இருப்பான் என்பதில் அவனுக்குச் சந்தேகமேயில்லை. அதற்கு உதவுவதில் தவறில்லை என்ற எண்ணமே சமீப கால நடவடிக்கைகளில் எந்தக் குற்றவுணர்ச்சியுமில்லாமல் அவனை ஈடுபட வைத்திருக்கின்றது. ஆனால் நடப்பதெல்லாம் வேறாக இருக்கிறது.

 

இங்கே வாயிற்கதவைத் திறந்து விட்டு கார்த்திகேயன் என்ற சாமர்த்தியமான வஞ்சகன் அரண்மனைப் பக்கம் போயிருக்கிறான் என்றால் அங்கே சுதானுவின் உயிருக்கும், தனநந்தன் உயிருக்கும் ஆபத்து காத்துக் கொண்டு இருக்கிறது என்று தான் அர்த்தம். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவனே அவர்கள் உயிருக்கு உலை வைத்தது போல் ஆகி விட்டது. பத்ரசாலுக்குத் தன் மீதே கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது.

 

எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு இப்போது என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்தான். உள்ளே நுழையவிருக்கும் பெரும்படையைத் தடுப்பதும் முக்கியம். தனநந்தன் மற்றும் சுதானு இருவரின் உயிரையும் காப்பதும் முக்கியம். இந்த இறுதி வேளையில் அவனால் பெரிதாக எதையும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் அவனால் முடிந்த வரை ஏதாவது செய்யா விட்டால் அவனையே அவனால் மன்னிக்க முடியாது....

 

இப்போதைக்கு மிக முக்கியம் எதிரிப்படை முழுவதுமாக உள்ளே வந்து விடாமல் தடுத்து நிறுத்துவது என்று அவனுக்குத் தோன்றியது. அவன் வேகமாகப் பாய்ந்து முன்னேறிச் செல்ல, அவன் வருவதைக் கண்டதும் வாயிற்கதவருகே போராடிக் கொண்டிருந்த அவன் வீரர்கள் உற்சாகமடைந்தார்கள்.  

 

(தொடரும்)

என்.கணேசன் 



என்.கணேசனின் நூல்கள் வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, May 19, 2025

யோகி 103


 த்சங்கம் முடிந்து திரும்பி வருகையிலும் முக்தானந்தா வேகமாக முன்னால் போய் விட்டார். சத்சங்கத்தில் அவர் அவனைத் திரும்பிப் பார்த்ததை சித்தானந்தாவும் கவனித்திருந்ததால் ஷ்ரவன் அவரிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “சுவாமி முக்தானந்தா ஒரு புதிராய் எனக்குத் தோன்றுகிறார். என்னை அடிக்கடி கூர்ந்து பார்க்கிறார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.”

 

சித்தானந்தா சொன்னார்.  அது தான் எனக்கும் ஆச்சரியமாய் இருக்கிறது. பொதுவாக யாராவது அவர் எதிரே போய் நின்றாலும் கூட அவ்வளவாகக் கவனிக்க மாட்டார்.”

 

அறைக்கு வந்து ஷ்ரவன் தியானம் செய்து முடித்த போதும் முக்தானந்தா அவனையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கவனித்த ஷ்ரவன் புன்னகையுடன் அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டான். “ஏன் சுவாமிஜி என்னையே பார்க்கிறீர்கள்? நான் தியானம் செய்வது சரியில்லையா?”

 

முக்தானந்தா சொன்னார். “நீ செய்யும் தியானம் யோகாலயத்தில் சொல்லிக் கொடுத்த தியானம் போல் தெரியவில்லையே

 

ஷ்ரவன் அவருடைய கவனிக்கும் திறனை வியந்தான். அவன் மந்திர ஜெபம் தான் இப்போதும் செய்து முடித்திருக்கிறான். அவர்கள் செய்யும் தியானம் செய்யாமல் வேறெதையோ செய்கிறான் என்பதைப் பார்வையிலேயே கண்டுபிடித்து விட்டாரே!

 

ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “உண்மை தான் சுவாமிஜி. நான் வேறொரு தியானம் தான் செய்தேன். போய்ச் சேரும் இலக்கு தானே முக்கியம் சுவாமிஜி, வழிகள் வேறு வேறாக இருந்தால் என்ன? நான் முன்கூட்டியே அந்த தியானம் செய்து பழக்கப்பட்டதால் அதில் என்னால் சீக்கிரமாய் லயிக்க முடிகிறது.”

 

முக்தானந்தாவும் அபூர்வமாய் புன்னகைத்தார். நல்ல வேளையாக இருவரும் அது என்ன தியானம், எப்படிச் செய்வது என்று அவர்கள் இருவரும் ஷ்ரவனைக் கேட்கவில்லை.

 

அன்றிரவும் நடுநிசியில் முக்தானந்தா பேசும் சத்தம் கேட்டு ஷ்ரவனுக்கு விழிப்பு வந்தது. முக்தானந்தா தாழ்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். “எல்லாம் நாடகம். எல்லாம் நாடகம்.” 

 

அவன் நாடகமாடுவதைச் சொல்கிறாரா? இன்றும் அதிர்ச்சியாக இருந்தது என்றாலும் நேற்றைய அளவுக்கு இல்லை. ஓரளவு பழகி விட்டது. உலகமே நாடகமேடை, நடப்பதெல்லாம் நாடகம் என்ற வகையில் அவர் தத்துவம் பேசியிருக்கவும் வாய்ப்புண்டு. அவன் கண்களை நன்றாகவே திறந்து அவரைப் பார்த்தான். அவர் நேற்று போல் அவனைப் பார்க்கும் நிலையில் தான் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்புறமிருந்து நிலவொளி வீசியதால் அவர் முக பாவனை அரையிருட்டில் அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை. அவன் கண்விழித்துப் பார்ப்பது அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் அவர் அவனிடம் எதாவது சொல்லவோ, கேட்கவோ முற்படாமல் கட்டிலில் சாய்ந்து கொண்டு வெளிப்பக்கம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

 

வேடிக்கையான மனிதர் என்று எண்ணியபடி ஷ்ரவன் மறுபடியும் உறங்கி விட்டான். காலையில் அவன் எழுந்த போது சித்தானந்தா குளியலறையில் இருந்தார். முக்தானந்தா அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

 

ஷ்ரவன் அவரிடம் நட்பு கலந்த உரிமையுடன் கேட்டான். “ஏன் சுவாமிஜி அடிக்கடி என்னையே பார்க்கிறீர்கள்? மற்றவர்கள் உங்கள் எதிரிலேயே வந்தாலும் கூட நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ள மாட்டீர்கள் என்று சுவாமி சித்தானந்தா சொன்னார்.”

 

முக்தானந்தா சொன்னார். “நீ எனக்கு வித்தியாசமாய் தெரிகிறாய். அதனால் தான் உன்னைப் பார்க்கிறேன். உன்னை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். மற்றவர்கள் எல்லாரும் ஆட்டு மந்தைகள். ஒன்றைப் பார்த்துப் புரிந்து கொண்டால் போதும். எல்லாவற்றையும் புரிந்து கொண்டது போலத்தான். அதனால் அவர்களைப் பார்க்கவும் சலிப்பாய் இருக்கிறது.”

 

அவர் பேசும் மனநிலையில் இருக்கிறார் என்பதால் நேற்றும், அதற்கு முந்தைய நாளும் அவர் சொன்ன வாக்கியங்களுக்கு என்ன அர்த்தம் என்று அவன் கேட்க நினைத்தான். ஆனால் அதற்குள் குளியலறையில் இருந்து சித்தானந்தா வெளியே வந்து விட்டார். அதனால் அந்தக் கேள்வியைக் கேட்பதை ஷ்ரவன் தவிர்த்தான்.

 

அன்று காலை உணவுக்குப் பின் ஷ்ரவன் தோட்ட வேலைக்குப் போன போது தூரத்தில் குமரேசன் தெரிந்தான். தோட்ட வேலையிலும் கூட ஆண் துறவிகள் ஒரு பக்கம், பெண் துறவிகள் ஒரு பக்கம் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். குமரேசன் பெண் துறவிகள் வேலை பார்க்கும் பகுதியில் இருந்தான். தொலைவிலிருந்து இருவரும் பார்த்துக் கொண்டாலும் அவர்கள் இருவருமே அன்னியர்கள் போலவே இருந்தார்கள். தோட்ட வேலையே அவனுக்கு ஒதுக்கப்பட்டாலும் குமரேசனிடம் நெருங்கிப் பேசும் வாய்ப்பு அதிகமில்லை என்பது ஷ்ரவனுக்குப் புரிந்தது. ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பாளன் ஒருவனாவது இருந்தான்.  யாராவது இருவர் பேசிக் கொள்வது தெரிந்தால் அவன் உடனடியாக அவர்களருகே சென்று விடுவதை ஷ்ரவன் கவனித்தான்.

 

கல்பனானந்தா ஷ்ரவனைப் பார்த்து நட்புடன் புன்னகைத்து அவன் செய்ய வேண்டிய வேலையை அவனுக்குத் தெரிவித்து விட்டுச் சென்று விட்டாள். அவள் முற்பகல், பிற்பகல் இரண்டு வேளைகளிலும், வேலை ஆரம்பிக்கும் சமயத்திலும், வேலை முடியும் சமயத்திலும் மட்டுமே இருப்பதை ஷ்ரவன் கவனித்தான். மற்ற சமயங்களில் அவளுக்கு என்ன பிரத்தியேக வேலை ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியவில்லை.

 

ஷ்ரவன் எங்கேயெல்லாம் வேலை செய்கிறானோ அந்த இடத்திலிருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் தெரிவதை எல்லாம் மிகவும் சூட்சுமமாகக் கவனித்து மனதில் குறித்துக் கொண்டான். உடன் இருக்கும் ஆட்களையும் கூர்ந்து கவனித்து யாரெல்லாம் யோகாலயத்தின் ஒற்றராக இருக்கக்கூடும் என்பதையும் கணித்து அந்த வகை ஆட்களிடம் சர்வ ஜாக்கிரதையாக நடந்து கொண்டான்.

 

ஆனால் எதுவுமே சைத்ரா வழக்குக்கு உதவுவது போல் இல்லை. சைத்ரா எந்த அறையில் தங்கி இருந்தாள், அவளுடன் தங்கியிருந்த துறவிகள் யார், இங்கு அவள் எப்படி ஆபத்தில் சிக்கினாள், அவளைக் காப்பாற்றும் உத்தேசத்தில் மொட்டைக் கடிதம் எழுதியது யார் என்றெல்லாம் கண்டுபிடிக்க எந்தவொரு வழியும் தெரியவில்லை. ஆண் துறவியாய் இருக்கும் அவன் அந்தப் பெண் துறவிகள் வசிக்கும் கட்டிடத்திற்குப் போகக்கூட முடியாது என்ற நிலைமையில் தான் இருக்கிறான். ஏதாவது ஒரு சின்னத் துப்பு கிடைத்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு சிறிதாவது முன்னேறலாம். ஆனால் அந்தச் சின்னத் துப்பும் அவனுக்கு அகப்படுவது போல் தெரியவில்லை...

 

டாக்டர் சுகுமாரனின் மனைவி இரவு கூர்க்கா மூலம், அவள் ஊரில் இல்லாத போது நடந்தது அனைத்தையும் அறிந்து கொண்டாள். கூர்க்கா சுகுமாரனை திருநீறோடும், சிலுவையோடும் பார்த்தது பற்றிச் சொன்ன போது அவளால் நம்பவே முடியவில்லை. ஆனால் மயான காளியின் படத்தை வாங்கும் அளவு முன்னேறி, டாமிக்குத் தாயத்து கட்டுமளவு நிலைமை முற்றியதை யோசித்துப் பார்க்கையில் அவளால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவளுக்கு அவர் தாயத்து கட்டிக் கொண்டதையாவது ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் டாமிக்குத் தாயத்து கட்டியது அபத்தத்திலும், அபத்தமாக அவள் அறிவுக்கே பட்டது. டாமியின் கழுத்திலிருந்து அதைக் கழட்டினால் கொலை விழும் என்று ஆக்ரோஷமாய் அவர் கத்தியது அவருக்குச் சித்தம் கலங்கி விட்டதை உறுதிப்படுத்தியது.

 

அவள் தன்னுடைய மிக நெருங்கிய தோழியிடம், இந்த விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்லி அழுத போது, அந்த தோழி, அவருக்கு ஆகாத யாரோ அவருக்குச் செய்வினை செய்திருக்கலாம் என்று சொல்லி மேலும் பயமுறுத்தினாள். அந்தச் செய்வினையே கூட அந்தத் தாயத்தில் இருக்கவும் கூடும் என்று அவள் தன் அனுமானத்தையும் சொன்னாள். அதனால் தான் அந்தத் தாயத்தை நாயிடமிருந்து கூட எடுக்க விடாமல் அவர் ஆக்ரோஷமாய் கத்துகிறார் என்று தோழி சுட்டிக் காட்டினாள். கத்துவது அவர் அல்ல, அவரைப் பீடித்திருக்கும் செய்வினை, அவரை விட்டு விலக மறுப்பதன் அறிகுறியே அது என்றும் சொன்னாள்.

 

அந்தத் தோழிக்குத் தெரியாதது எதுவுமில்லை என்ற அபிப்பிராயம் சுகுமாரனின் மனைவிக்கு உண்டு. தோழி சொன்னதெல்லாம், தற்போது நடந்து கொண்டிருப்பவைக்கு ஒத்தும் போவதால் இதற்கு என்ன தீர்வு என்று அவள் கேட்க, தோழி அவளுக்குத் தெரிந்த மந்திரவாதி ஒருவர் பெயரைச் சொன்னாள்.

 

டாக்டர் சுகுமாரனின் மனைவிஅந்த மந்திரவாதி எங்கேயிருக்கார்? கூப்பிட்டால் உடனடியாய் வருவாரா?” என்று ஆவலுடன் கேட்ட நேரத்தில் தான், தற்செயலாக டாக்டர் சுகுமாரன் அங்கே வந்தார்.

 

மனைவி கேட்ட கேள்விகள் காய்ச்சிய ஈயமாய் சுகுமாரனின் காதுகளில் விழுந்தன. ‘வரும் சோதனைகளுக்கு ஒரு அளவு இல்லையா?’

 

(தொடரும்)

என்.கணேசன்




என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்!