சேதுமாதவன் வீட்டுக்கு ஒரு பெரிய காரில், சுமார் ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு நபர் வந்திறங்கினார். காரில் ’போலீஸ்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. கம்பீரமான தோற்றமும், மிடுக்கான நடையும் கொண்ட அந்த நபர் சேதுமாதவனிடம் தன்னை குற்றவியல் சிறப்புப் பிரிவு டி.எஸ்.பி குணசேகரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருடைய அடையாள அட்டையையும் காட்டினார். சேதுமாதவன் வணக்கம் தெரிவித்து, அவரை அமரச் சொன்னார்.
நாற்காலியில் அமர்ந்த குணசேகரன் கேட்டார். “நீங்க தான்
டாக்டர் கிருஷ்ணமூர்த்தியா?”
“இல்லை. அது என்
மகன். இப்ப அவன் உயிரோட இல்லை. சில மாசங்களுக்கு
முன்னாடி தற்கொலை பண்ணிகிட்டான்.” என்று சேதுமாதவன் சொன்னார்.
குணசேகரன் முகத்தில் அதிர்ச்சியும், இரக்கமும்
கலந்து தெரிந்தன. பின் மெல்லச் சொன்னார். “க்ரைம்
ப்ராஞ்ச் ஸ்பெஷல் விங்ல ஒவ்வொரு வருஷமும், போலீஸ்
ஸ்டேஷன்கள்ல கொடுக்கப்பட்ட கேஸஸ்ல சிலதை எடுத்து அதெல்லாம் சரியாய் விசாரிக்கப்பட்டிருக்கான்னு
இன்ஸ்பெக்ஷன் பண்றது வழக்கம். அந்த வகைல
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தன் மகள் சைத்ரா உயிருக்கு ஆபத்துன்னு சந்தேகப்பட்டு கொடுத்த
புகாரும் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கு. அதனால அதை விசாரிக்க
தான் நான் வந்திருக்கேன்.”
சேதுமாதவன் வறண்ட குரலில் சொன்னார். “கிருஷ்ணமூர்த்தியும்
உயிரோட இல்லை. சைத்ராவும் உயிரோட இல்லை.”
குணசேகரன் ஒரு குறிப்பேடும் பேனாவும்
எடுத்துக் கொண்டே கேட்டார். “என்ன ஆச்சு?”
சேதுமாதவன் சொன்னார். “கோர்ட்ல
ஹேபியஸ் கார்பஸ் கேஸ் போட்டோம். சைத்ராவை அவங்க கோர்ட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. தனக்கு
ஆபத்து எதுவும் இல்லைன்னு அவள் கோர்ட்டில் சொன்னாள். அதோட அந்தக்
கேஸ் முடிஞ்சுடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சு கோவிட்ல அவள் இறந்துட்டாள். அந்த துக்கம்
தாங்க முடியாமல் கிருஷ்ணமூர்த்தியும் இறந்துட்டான்.”
குணசேகரன் தன் குறிப்பேட்டில் எதையோ
எழுதிக் கொண்டே கேட்டார். “உங்கள் பேத்தி மரணத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா?”
“இல்லை”
குணசேகரன் சொன்னார். “ஏதாவது
கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் நீங்கள் என் கிட்ட தாராளமாய் சொல்லலாம். நாங்க மேல்மட்டத்துல
ரகசியமாய் மறுவிசாரணை செய்ய முடியும். சந்தேகம் ஏதாவது
வந்து தனிப்பட்ட முறையில உண்மையைக் கண்டுபிடிக்க நீங்கள் தனியார் யாரையாவது ஏற்பாடு
செய்திருந்தாலும் அதை மறைக்காமல் சொல்லணும். அப்படி
ஏதாவது இருந்து நீங்கள் சொல்லலைன்னா அது, போலீஸ் கிட்ட உண்மையை
மறைக்கற மாதிரியாயிடும். சட்டப்படி அது குற்றம்.”
சேதுமாதவன் விரக்தியாகச் சொன்னார். “வழக்கு, விசாரணைக்கெல்லாம்
ஏற்பாடு செய்ய எனக்கு மனசு, பணம், காலம் மூனுமே இல்லை. எனக்கும்
சாவு வந்து அவங்க கூட நானும் போய்ச் சேர்ந்துக்கணும்கிற ஒரு ஆசை மட்டும் தான் இப்ப
இருக்கு.”
குணசேசகரன் முகத்தில் இரக்கத்தைக் காட்டி
விட்டுச் சொன்னார். “உங்களுக்குப் பதிலாய், உங்கள்
சார்பாய், வேற யாராவது அது சம்பந்தமான முயற்சி எடுத்துகிட்டு இருக்காங்களா?”
“என்னைத்
தவிர வேற யாருமே இங்க இல்லையே”
குணசேகரன் யோசனையுடன் சில வினாடிகள்
மௌனமாய் இருந்துவிட்டுக் கேட்டார். ”உங்களுக்கு அந்த
வழக்கு சம்பந்தமாய் ஏதாவது சந்தேகம் இருக்கா?”
“இல்லை.”
குணசேகரன் சொன்னார். “அப்படின்னா, அந்த வழக்கு
விசாரணை சம்பந்தமாய் உங்களுக்கு யார் மேலயும், புகாரோ, சந்தேகமோ
இல்லைன்னும் மறு விசாரணைக்கு அவசியம் இல்லைன்னும் நான் எழுதிக்கலாமா?”
“தாராளமாய்
எழுதிக்கலாம்.”
குணசேகரன் வணக்கம் தெரிவித்து விட்டுக்
கிளம்பினார். அவர் கார் ஏறிக் கிளம்புகையில் சேதுமாதவன் அந்தக் காரின்
எண்ணை மனதில் குறித்துக் கொண்டார். பின் வீட்டுக்குள்
வந்தமர்ந்து முதல் வேலையாக ஷ்ரவன் கொடுத்திருந்த அலைபேசி எண்ணுக்குப் போன் செய்தார்.
நான்கைந்து முறை அடித்த பிறகு போன்
எடுக்கப்பட்டது. மறுபக்கத்திலிருந்து எந்தச் சத்தமும் இல்லை. மறுபக்கத்திலிருந்து
பதில் எதுவும் வராது என்று ஷ்ரவன் முன்பே சொல்லி இருந்ததால் சேதுமாதவன் நேரடியாக விஷயத்தை
விரிவாகச் சொல்லி, அந்தப் போலீஸ் வாகனத்தின் எண்ணையும் சொல்லி வைத்து விட்டார்.
வந்து விசாரித்த காரணம் தெரியா விட்டாலும், வந்து போன
ஆள் போலி என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை.
பாண்டியனிடம் கண்ணன், தங்கள்
ஆள் சேதுமாதவனிடம் போய்ப் பேசி விட்டு வந்த பேச்சின் ஒலிப்பதிவைத் தந்தார். அதை முழுவதுமாகக்
கேட்டு விட்டு பாண்டியன் சொன்னார். “கிழவன் அழுத்தக்காரனாய்
இருப்பான் போலருக்கு”
“அப்படி
இல்லாட்டி மகன், பேத்தி இறந்ததுக்கப்பறமும் கிழவன் உயிரோட இருக்க முடியுமா?” கண்ணன்
சொன்னார்.
ஆமென்று தலையசைத்த பாண்டியன் கேட்டார். “நம்ம யோகாலயத்தை
வேவு பார்க்கறது யார்னு ஏதாவது துப்புக் கிடைச்சுதா?”
“இல்லை. அவங்க போலீஸ், சிபிஐ, பெரிய துப்பறியும்
நிறுவனம் இதில் ஏதாவது ஒன்றாய் இருக்கலாம். அவங்க வேவு
பார்க்கும் விதத்துல அந்த அளவு புத்திசாலித்தனம் தெரியுது”
அந்தத் தகவல் பாண்டியனை யோசிக்க வைத்தது. அவர் சொன்னார். “ஆனால் அந்தக்
கிழவன் மேல நாம சந்தேகப்படறதுலயும் அர்த்தமில்லை. இந்த அளவு
செல்வாக்கு உள்ள ஆளாய் அவன் இருந்திருந்தால் அவன் ஆரம்பத்துல பேத்தி, மகன் இருக்கறப்பவே
பயன்படுத்தியிருக்கலாமே?”
கண்ணன் சொன்னார். “அது தான்
குழப்பமாயிருக்கு.”
பாண்டியன் பற்களைக் கடித்துக் கொண்டு
சொன்னார். “வேவு பார்க்கறதுல எவனாவது ஒருத்தன் நம்ம கைல கிடைச்சாலும்
போதும். கண்டுபிடிச்சுடலாம்”
கண்ணன் சொன்னார். “எல்லாருக்கும்
தெரியற மாதிரி பிடிக்கறதா இருந்தா எப்படியாவது பிடிச்சிரலாம். ஆனால் இப்ப
ரோட்டுல போறவன் வர்றவன் கைல எல்லாம் மொபைல் ஃபோன் இருக்கு. என்ன நடந்தாலும்
வீடியோ எடுத்து சோஷியல் மீடியால போட்டு விட்டுடறான்க. அதனால தான்
ரொம்ப யோசிக்க வேண்டியதாயிருக்கு. இதுவே யோகாலயத்துக்கு உள்ளேன்னு சொன்னால் நாம் யோசிக்கவே
வேண்டியதில்லை.”
அன்று மாலை ஷ்ரவன் தோட்ட வேலை முடிந்து வந்த பின், மூவரும்
சத்சங்கத்திற்குக் கிளம்பினார்கள். ஒரே சமயத்தில் செல்வதால், பக்கத்து
அறைகளிலிருந்து வரும் துறவிகளும் சற்று முன்னும் பின்னும் அவர்களுடன் வந்தாலும் துறவிகளுக்கு
இடையே புன்னகையைத் தவிரக் கூடுதலாக பேச்சுகள் இருக்கவில்லை. சித்தானந்தாவே
கூட அறைக்குள்ளே அவனுடன் இயல்பாகப் பேசினாலும் அறைக்கு வெளியே அவனுடன் அதிகம் பேசுவதைத்
தவிர்த்தார். பேசினால் அழைத்துக் கண்டிப்பார்களோ என்னவோ என்ற சந்தேகம்
ஷ்ரவனுக்கு வந்தது.
அன்றைய சத்சங்கத்தில் துறவி யாரும்
பேசுவதற்குப் பதிலாக பிரம்மானந்தா ஐ ஐ டி டில்லியில் பேசிய பேச்சு ஒன்றை ஒளிபரப்பினார்கள். தலைப்பு “யோகாவும், தியானமும்
நவீன காலத்திற்கு எந்த அளவு உதவும்?”. அதுகுறித்து, யோக சூத்திரங்களிலும், மற்ற நூல்களிலும்
சொல்லப்பட்டவற்றை அதில் அழகாகப் பேசியிருந்தார் பிரம்மானந்தா. ஆனால் வழக்கமாகவே
தன் பராக்கிரமங்களையும், அசாதாரண சக்திகளையும் கூச்சமில்லாமல் பறைசாற்றும் பிரம்மானந்தா
அந்தக் காணொலியில் தன் கற்பனையைப் பறக்க விட்டிருந்தார்.
“நான் கோரக்கரால்
அழைக்கப்பட்டு சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கத்தின் அருளால் நனைக்கப்பட்ட அந்த சம்பவத்திற்குப்
பின், நான் தியானம் செய்யும் நாட்களில் எல்லாம் என்னைப் பார்த்தவர்களுடைய
கண்கள் கூசும். அவர்கள் என்னை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கண்களைத்
தாழ்த்திக் கொள்வார்கள். அந்த அளவு என்னுடைய யோகசக்தி என்னை ஒளிமயமாக்கி இருந்தது. இது எனக்கே
தர்மசங்கடத்தைத் தந்தது. அதனால் நான் என் இறைவன் சுந்தர மகாலிங்கத்தை வேண்டி என் யோகசக்தியின்
வீச்சை குறைத்துக் கொண்டேன். என் முழு யோகசக்தியின் வீச்சு முன்பு போலவே இன்றும் தெரியுமானால்
என் எதிரே நீங்கள் இத்தனை பேர் உட்கார்ந்திருக்க முடியாது. இதை ஏன்
சொல்கிறேன் என்றால் யோகசக்தியின் வலிமை எல்லையில்லாதது. அந்த யோகசக்தியை
மட்டும் நீங்கள் பெற்று விட்டால் எதிலும் உங்களுக்கு உங்கள் கற்பனை தான் எல்லையாக இருக்க
முடியும்...”
இந்தக் காணொளியை ஷ்ரவன் இதுவரை பார்த்திருக்கவில்லை. இது அவர்
சில நாட்களுக்கு முன் பேசியதாக இருக்க வேண்டும். ஷ்ரவன்
மனதுக்குள் சிரித்துக் கொண்டான். அதை உணர்ந்தவர் போல் அவனுக்கு இரண்டு வரிசை முன்பாக அமர்ந்திருந்த
முக்தானந்தா திடீரென்று அவனைத் திரும்பிப் பார்த்தார். அவன்
பிரம்மானந்தாவின் காணொளியில் மூழ்கியிருப்பது போல் காண்பித்துக் கொண்டான். அவர் மறுபடி திரும்பிக்
கொண்டார்.
சாதாரணமாக எதையும் அதிகமாய் லட்சியம் செய்பவராகத் தோன்றாத அவர், பிரம்மானந்தரின் அந்தப்
பேச்சை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்று பார்த்தது போல் தான் அவனுக்குத் தோன்றியது.
புதிராய் மட்டுமல்லாமல், வில்லங்கமாகவும் இருக்கிறாரே
என்று ஷ்ரவன் மனதில் எண்ணிக் கொண்டான்.
பிரம்மானந்தாவின் பித்தலாட்டங்களை யோகாலயம் நம்புகிறது சரி... ஆனால், உலக நாடுகள் எப்படி நம்புகிறது? என்பது தான் குழப்பமாக உள்ளது....
ReplyDeleteNice story...very thrilling ...waitefor next episode ...
ReplyDeleteVery thrilling sir...nice story...eagerly waiting for next episode ....
ReplyDelete