என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, May 5, 2025

யோகி 101

 

ன்று காலை உணவுக்குப் பின் முக்தானந்தாவும், சித்தானந்தாவும் தங்களுடைய வேலைகளுக்குச் செல்ல, ஷ்ரவன் அலுவலகத்திற்குச் சென்றான். அது பெரிய அலுவலகம். வாசலிலேயே இருந்த இளம் துறவி ஒருவர் முதலில் உள்ள அறையிலேயே அவனை உட்காரச் சொன்னார். அதற்குப் பின்னும் இரண்டு அறைகளும், ஒரு பெரிய ஹாலும் அவற்றில் நிறைய கம்ப்யூட்டர்களும் இருப்பதை ஷ்ரவன் கவனித்தான்.

 

சிறிது நேரத்தில் பாண்டியனும், கண்ணனும் வந்தார்கள். பெரும்பாலும் இது போன்ற வேலைகள் ஒதுக்கும் வேலைக்கெல்லாம் பாண்டியன் வருவதில்லை. கண்ணன் தான் அதைச் செய்வார். ஆனால் ஷ்ரவனை நேரில் பார்த்துப் பேசும் ஆர்வம் பாண்டியனுக்கு வந்திருந்தது. என்ன தான் காமிராவில் பார்த்தாலும் நேரில் பார்த்துப் பேசுவதற்கு ஈடாகிவிடாது என்று அவர் உறுதியாக நம்பினார். மனிதர்களை துல்லியமாக எடை போட நேரில் பார்த்துப் பேசுவது மட்டுமே உதவும் என்பது அவருடைய அபிப்பிராயமாக இருந்தது. அதனால் தான் அவர் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு வந்தார்.

 

ஷ்ரவன் எழுந்து நின்று இருவரையும் வணங்கினான். கண்ணன் பாண்டியனை ஷ்ரவனுக்கு அறிமுகப்படுத்தினார். “இங்கே பொது நிர்வாகம் செய்வது ஐயா தான்என்றார். ஷ்ரவன் மீண்டும் கைகூப்பினான். பாண்டியன் பார்வை அவனை ஊடுருவிப் பார்த்தது.

 

ஒரு படிவம் தந்து அதை நிரப்பித் தரும்படி கண்ணன் சொன்னார். அதில் ஷ்ரவனுக்கு இருக்கும் திறமைகளும், விருப்பங்களும் கேட்கப்பட்டிருந்தன. ஷ்ரவன் முதல் திறமையாக கம்ப்யூட்டர் பாதுகாப்பு என எழுதினான். இணைய வைரஸ் மற்றும் ஹேக்கிங்கிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், அழிந்த டேட்டாக்களை மீட்டுத் தருவதில் திறமையுள்ளதாக எழுதினான்.  அவனுடைய இதற்கு முந்தைய உத்தியோகம் அதுவாகத் தான் இருந்தது என்றும் எழுதினான்.

 

அடுத்ததாக கடிதப்போக்குவரத்தில் தனக்கு அனுபவம் நிறைய இருப்பதாய் எழுதினான். கடைசியாக தோட்ட வேலை அவனுக்கு மிகப்பிடித்த பொழுதுபோக்கு என்று எழுதினான்.

 

அவனிடமிருந்து அந்தப் படிவத்தை வாங்கியபடி கண்ணன் சொன்னார். “நீங்கள் எழுதியிருக்கும் வேலைகளில் ஒன்றைத் தர முயற்சி செய்வோம். ஆனால் அதையே தான் தருவோம் என்று உத்தரவாதம் தரமுடியாது. எங்களுக்கு ஆட்கள் தேவைப்படும் வேலையைத் தான் தரமுடியும்

 

ஷ்ரவன் தலையசைத்து விட்டுச் சொன்னான். “எனக்கு நீங்கள் கூட்டித் துடைக்கும் வேலையையோ, கழிவறை கழுவும் வேலையையோ தந்தால் கூட அந்த வேலையையும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும்.”

 

பாண்டியனுக்கு ஷ்ரவனின் பதில் மிகவும் பிடித்திருந்தது. படித்தவர்கள் நிறைய பேர் இப்படிச் சொல்ல முடிந்தவர்களாய் இருப்பதில்லை. ஆனால் அவர் சிலாகித்தது அவர் முகத்தில் வெளிப்படவில்லை. ஆரம்பத்தில் பைத்தியக்காரனாகத் தெரிந்த இந்த இளைஞன், அவர் நினைத்த அளவு பைத்தியக்காரன் இல்லையோ என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

 

கண்ணன் ஷ்ரவன் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததைப் படித்து விட்டு அதைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னார். பாண்டியன் தலையசைத்தார்.

 

முதல் வேலையை அவர் அவருடைய முழுநம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருசில ஆட்களுக்கு மட்டுமே தரமுடியும். அதனால் அதை அவர் ஷ்ரவனுக்குத் தர வாய்ப்பே இல்லை. கம்ப்யூட்டர் பயன்படுத்திச் செய்யும் சில அன்றாட வேலைகளை வேண்டுமானால் அவனிடம் தரலாம். யார் யாருக்கு என்னென்ன வேலையை இன்று ஒதுக்கியிருக்கிறார்கள் என்று பதிவு செய்து கொள்வது போன்ற வேலைகளில் ரகசியம் காக்க எதுவும் இல்லை. மேலும் அது தனி கம்ப்யூட்டரில் செய்யும் வேலை. மற்ற கம்ப்யூட்டர்களுடன் அது தொடர்பில் இல்லை. அதனால் அதில் வேலை செய்யும் போது மற்ற முக்கிய கம்ப்யூட்டர்களின் டேட்டாக்களைப் பார்க்க வழியில்லை. இப்போதைக்கு அதைச் செய்ய வேறு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை தரும்போதோ, அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாத போதோ வேண்டுமானால் ஷ்ரவனுக்கும் அந்த வேலையை ஒதுக்கலாம்.

 

இரண்டாவது வேலை முதல் வேலை அளவுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த வேலை அல்ல என்றாலும் அந்த வேலையையும் அவரால் புதியவர்களுக்குத் தர முடியாது. அவர்களுடைய எத்தனையோ முக்கியத் தகவல்களைத் தெரிவித்துவிடக்கூடிய வேலை அது. மூன்றாவதான தோட்ட வேலையில் பிரச்சினை இல்லை.

 

அதனால் இப்போதைக்கு ஷ்ரவனுக்குத் தோட்ட வேலை ஒதுக்கப்பட்டது. அதைத் தெரிவித்த கண்ணன் ஷ்ரவனிடம் தொடர்ந்து சொன்னார். “சில குறிப்பிட்ட நாட்களில் எங்களுக்கு வேறு ஒரு வேலைக்கு ஆள் தேவைப்படும். அப்படி வேலை மாறுபடும் நாட்களில் உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து விடுவோம். நீங்கள் அந்த நாட்களில் அந்த வேலையைச் செய்ய வேண்டி வரும்.”

 

ஷ்ரவன் தலையசைத்தான். அவன் பாண்டியன் தன்னிடம் எதையாவது கேட்பார் என்று எதிர்பார்த்தான். ஆனால் பாண்டியன் அவனிடம் எதையும் கேட்கவில்லை. அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததோடு நிறுத்திக் கொண்டார்.

 

கண்ணன் சொன்னார். “முற்பகல் வேலையில் பாதி நேரம் முடிந்து விட்டது. அதனால் நீங்கள் மதியத்திற்கு மேல் ஆரம்பிக்கும் வேலையில் சேர்ந்து கொள்ளலாம். தோட்ட வேலை சுவாமினி கல்பனானந்தாவின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. மதியத்திற்கு மேல் நீங்கள் போய் அவரைப் பாருங்கள்.”

 

ஷ்ரவன் நன்றி தெரிவித்து, இருவரையும் வணங்கி விட்டு ஷ்ரவன் தங்கள் அறைக்குத் திரும்பினான். சித்தானந்தாவும், முக்தானந்தாவும் தங்கள் முற்பகல் வேலை முடிந்து இன்னும் வரவில்லை. ஒருவிதத்தில் அதுவும் நல்லதாகத் தோன்றியது. ஷ்ரவன் அறையை ஆராய்ந்தான். அறைக்குள் காமிராக்கள் இல்லை. வெளியே வராந்தாவில் தான் காமிராக்கள் இருக்கின்றன.

 

முக்தானந்தாவின் கட்டிலில் அமர்ந்து ஜன்னல் வழியாகப் பார்த்தான். அந்த ஜன்னலிலிருந்து பார்க்கையில் மைதானமும், பாண்டியனின் இருப்பிடம் வரையும் நன்றாகத் தெரிந்தது. அதைத் தாண்டி இருக்கும் பிரம்மானந்தாவின் இருப்பிடம் தெரியவில்லை. இங்கிருந்து இரவெல்லாம் முக்தானந்தா பார்த்துக் கொண்டிருப்பது பாண்டியனின் இடத்திற்கு யார் போய் வருகிறார்கள், அவர் எப்போது வெளியே போய் எப்போது வருகிறார் என்பதையெல்லாம் தானோ?

 

இதையெல்லாம் யோசித்துப் பார்க்கையில், சைத்ராவுக்கு ஆபத்து என்ற மொட்டைக் கடிதத்தை எழுதியது முக்தானந்தா தானோ என்ற சந்தேகமும் ஷ்ரவனுக்கு வந்தது. அவர் பிரச்சினையான எதையாவது பார்த்திருக்கலாம்ஆனால் அவருக்கு சைத்ராவின் வீட்டு விலாசம் எப்படிக் கிடைத்திருக்க முடியும்? அவளே அவருக்குத் தந்திருப்பாளோ? குழப்பமாக இருந்தது.

 

சிறிது நேரத்தில் சித்தானந்தாவும், முக்தானந்தாவும் வந்தார்கள். சித்தானந்தா அவனுக்கு என்ன வேலையை ஒதுக்கியிருக்கிறார்கள் என்பதை ஆர்வத்துடன் கேட்டார். அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதை முக்தானந்தாவும் ஆர்வத்துடன் கவனிப்பது ஷ்ரவனுக்குத் தெரிந்தது.

 

ஷ்ரவன் சொன்னான். “தோட்ட வேலை. அது எனக்குப் பிடிக்கும். ஆனால் அந்த வேலைகளை மேற்பார்வை பார்ப்பது சுவாமினி கல்பனானந்தா என்று கண்ணன் சுவாமிஜி சொன்னார். ஆனால் ஆண் துறவிகள், பெண் துறவிகள் இடையே எந்தத் தொடர்பும் இங்கு இருக்கக்கூடாது என்றும் அவர் தான் சொன்னார். அது எப்படி?”

 

ஆச்சரியமாக சித்தானந்தாவுக்குப் பதிலாக முக்தானந்தாவே பதிலைச் சொன்னார். ”யோகாலயத்தில் எல்லாவற்றுக்கும் விதிவிலக்குகள் இருக்கின்றன. சுவாமினி கல்பனானந்தா மாதிரியான ஒரு சிலர் ஆண் துறவிகளைச் சந்திக்கவோ, பேசவோ, வேலை வாங்கவோ தடையில்லை. அதே போல் சுவாமிஜி கண்ணன் போன்றவர்கள் பெண் துறவிகளைச் சந்தித்துப் பேசி வேலை வாங்க எந்தத் தடையும் இல்லை.”

 

சித்தானந்தா மறுபடியும் திகைப்புடன் முக்தானந்தாவைப் பார்த்ததை ஷ்ரவன் கவனித்தான். அதிகமாகப் பேசாத முக்தானந்தா இப்படி நீண்ட பதில் சொன்னது சித்தானந்தாவை ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும்.

 

ஷ்ரவன் புன்னகையுடன்அப்படியா?” என்று கேட்டுக் கொண்டான். பத்து நிமிடங்கள் அவர்கள் களைப்பாறியிருப்பார்கள். மதிய உணவுக்கான மணி அடித்தது. மூவரும் கிளம்பினார்கள். போகும் போது அவர்களுடனேயே போனாலும் உணவு உண்ண அவர்களுடன் முக்தானந்தா அமரவில்லை.    

 

உணவருந்தி விட்டு சிறிது இளைப்பாறி விட்டு ஷ்ரவன் தோட்ட வேலைக்குச் சென்றான். கல்பனானந்தா அவனைப் பார்த்ததும் சற்று திகைத்தது போல் இருந்தது. 

 

ஷ்ரவன் அவளைக் கைகூப்பி வணங்கினான். திகைப்பிலிருந்து மீண்ட கல்பனானந்தா லேசாகப் புன்னகைத்தாள். “நீங்கள் சொன்னபடியே துறவியாக இங்கே இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்களே?” என்றாள்.

 

நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடுவது நல்லதல்லவே சுவாமினிஎன்று ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான்.

 

அவள் புன்னகையுடன் தலையசைத்தாள். அவனுக்குத் தோட்டக்கலை பற்றி எந்த அளவு தெரியும் என்பதை அவள் விசாரித்தாள். ஷ்ரவன் அதற்குத் தன்னை நன்றாகவே தயார்ப்படுத்திக் கொண்டு வந்திருந்தான். அதனால் அவன் சொன்ன பதில்கள் அவளைத் திருப்திப்படுத்தியது போல் தோன்றியது. அவள் அவனுக்கு அன்றைய வேலை என்ன என்பதைச் சொன்னாள். ஏற்கெனவே அங்கே மூன்று துறவிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஷ்ரவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

 

குமரேசன் மதியம் இரண்டு மணிக்கே போயிருப்பான் என்பதால் அவனை ஷ்ரவனால் சந்திக்க முடியவில்லை. நாளை காலை கண்டிப்பாக அவனைச் சந்திக்க முடியும். இந்த வேலையை ஷ்ரவனுக்கு அவர்கள் ஒதுக்கியிருப்பதில் சாதகமான அம்சம் அது தான். ஆனால் அவர்களுக்குச் சிறிதும் சந்தேகம் ஏற்படாத விதத்தில் குமரேசனுடன் பேச முடிவது கஷ்டமே. இப்போதும் கூட கல்பனானந்தாவின் பார்வை அவன் மீதே இருந்தது. அவள் இன்னும் அவனை முழுமையாக நம்பி விடவில்லையோ?


(தொடரும்)

என்.கணேசன்




1 comment:

  1. கல்பனானந்தா தான் அந்த மொட்டைக் கடிதம் போட்டவராக இருக்கக் கூடும்...

    ReplyDelete