என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 1, 2025

சாணக்கியன் 159

சுதானு இன்றிரவே அந்த வணிகனை அழைத்து வாருங்கள் என்று சொன்னவுடன் பத்ரசால் சரியென்று உடனே தெரிவித்தாலும் நண்பனான கார்த்திகேயனை எப்படி சந்திப்பது, சுதானுவின் வேண்டுகோளைச் சொல்வது என்ற யோசனை எழுந்தது. ஆனால் நல்ல வேளையாக அன்று மாலையே பத்ரசாலைக் காண சின்ஹரன் வந்தான்.

 

பத்ரசால் அவனைக் கண்டவுடன் மகிழ்ந்தவனாகச் சொன்னான். “உங்களை நான் எப்படியாவது இன்று கண்டு பேச வேண்டும் என்று எண்ணியிருந்தேன் நண்பரே. நல்ல வேளையாக நீங்களே வந்து விட்டீர்கள்.”

 

சின்ஹரன் சொன்னான். “என்ன விஷயமாகப் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தீர்கள் நண்பரே.”

 

பத்ரசால் தாழ்ந்த குரலில் சொன்னான். “நீங்கள் சொல்லியிருந்தபடியே இளவரசர் சுதானுவுக்கு நான் நெருக்கமாகி விட்டேன் நண்பரே. எதிரிகள் இங்கே முற்றுகை இட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த மகான் சுதானுவிடம் நாளை இரவுக்குள் தடைகளை நீக்கி விட்டால் நினைப்பது நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறாராம். நீங்களும் அந்த மகானின் பக்தர் தான் என்று தெரிந்தவுடன்  அவர் உங்களுடைய ஆலோசனையையும் இந்த விஷயத்தில் பெற விரும்புகிறார்

 

சின்ஹரன் சிறிது தயக்கம் காட்டி விட்டு பின் சம்மதித்தான். அன்று இரவு அவன் ரகசியமாய் சுதானுவைச் சந்திப்பதற்கு பத்ரசால் ஏற்பாடு செய்தான்.

 

பத்ரசால் சின்ஹரனை அறிமுகப்படுத்தியவுடன் சுதானு பார்வையால் சின்ஹரனை அளந்தான். இவனை எந்த அளவுக்கு நம்பலாம் என்று அவன் யோசித்தது போல் இருந்தது.

 

சின்ஹரன் சொன்னான். “நீங்கள் பாக்கியம் செய்தவர் இளவரசே. இல்லா விட்டால் அந்த மகானை நீங்கள் சந்தித்திருக்க முடியாது. அவர் எப்போதுமே அரண்மனைகளைத் தேடிச் சென்றது கிடையாது.”

 

சுதானுவுக்கு அவனுடைய அதிர்ஷ்டத்தைப் பற்றி யாராவது உறுதிப்படுத்த வேண்டியதாக இருந்ததால் அவன் உடனே உச்சி குளிர்ந்தான்.  இப்போது பேசிக் கொண்டிருப்பவன் தான் மகான்  வேடத்தில் முன்பு வந்தவன் என்ற சந்தேகம் அவனுக்குச் சிறிதும் வரவில்லை. ஏனென்றால் அந்த மகானின் குரலும் தோற்றமும் இப்போது வந்திருப்பவனுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாததாகவே இருந்தன.

 

சுதானு சொன்னான். “நானும் அவரைச் சந்தித்ததை என் பாக்கியமாகவே உணர்கிறேன். அவர் சொன்னபடியே எல்லாம் நடந்து வருகின்றன. எதிரிகளின் முற்றுகையும் நடந்து விட்டது.  நாளை நான் தடைகளை நீக்கிக் கொண்டால் என் நோக்கம் நிறைவேறுவது உறுதி என்று அவர் சொல்லி இருக்கிறார்....”

 

சொல்லி விட்டு அவன் பத்ரசாலைப் பார்க்க பத்ரசால் சின்ஹரனிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “நீங்கள் அறியாதது எதுவுமில்லை நண்பரே. இவர் அரியணை ஏறத் தடைகள் என்னென்ன என்பது உங்களுக்கும் தெரியும்.   என் கனவிலும் மகான் வந்து இவருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று சொன்னதை நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இப்போது என்ன செய்வது எப்படிச் செய்வது என்பது பற்றித் தான் நாங்கள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறோம்....திடீரென்று உங்கள் நினைவு வந்தது. உங்களிடமிருந்து நல்ல புத்திசாலித்தனமான ஆலோசனை கிடைக்கும் என்று சொல்லி தான் உங்களை இவரிடம் அழைத்து வந்தேன்.”

  

சின்ஹரன் இருவரையும் யோசனையுடன் பார்த்தான். பின் சொன்னான். “முதலில் பேச்சு வார்த்தையாலோ, உபாயத்தாலோ தடையை நீக்க முடிகிறதா என்று பார்ப்பது தான் புத்திசாலித்தனம். முதலில் பொறுமையாக மன்னரிடம் பேசிப் பாருங்கள்..”

 

சுதானு சொன்னான். “அதை முயன்று பார்த்து விட்டேன். மன்னர் ஒத்துக் கொள்ளவில்லை.”

 

சின்ஹரன் தாழ்ந்த குரலில் சொன்னான். ”அப்படியானால் நீங்கள் பலம் பிரயோகித்தே ஆக வேண்டியிருக்கும்.  மன்னரே ஒத்துக் கொள்ளவில்லை என்றால், ராக்‌ஷசரும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அவர் மன்னரை விட அதிக இடைஞ்சலாகலாம். எதைச் செய்வதானாலும், அவர் இடைஞ்சலாகி விடாதபடி பார்த்துக் கொள்வது முக்கியம். அரண்மனைக்குள் உங்களுக்கு மிக  நம்பிக்கையான வீர்ர்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியே நகரப் பாதுகாவல் வேலைக்கு அனுப்பி விடுங்கள். உள்ளே நடப்பது எதுவும் வேலை முடிகிற வரை வெளியே இருப்பவர்களுக்கு - முக்கியமாக மன்னருக்கும், ராக்‌ஷசருக்கும் - தெரியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். வேலை முடிகிற வரை இருவரையும் தனிமைப்படுத்தி வைப்பது புத்திசாலித்தனம்….”

 

சுதானுவுக்கு அவன் விரைவில் நிலைமையைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாகப் பேசிய விதம் பிடித்திருந்தது.


சின்ஹரன் தொடர்ந்து சொன்னான். “இதெல்லாம் முடியும், நீங்களும் இடையில் மனம் மாறி முயற்சியைக் கைவிட்டுவிட மாட்டீர்கள் என்ற உறுதி உங்களுக்கு இருந்தால் மட்டுமே இதில் இறங்குங்கள். ஏனென்றால் அரைகுறை முயற்சிகள் ஆபத்தானவை… அப்படி உங்களுக்கே உறுதியில்லா விட்டால் அல்லது தைரியம் போதா விட்டால் ஆரம்பத்திலேயே இந்த யோசனையைக் கைவிட்டு உங்களுக்கு விதித்தது அவ்வளவு தான் என்று இருந்து விடுவது நல்லது…”

 

அப்படி இருந்து விட முடியாத சுதானுவுக்கு அந்தக் கடைசி அறிவுரை கசந்தது.

 

சின்ஹரன் சொன்னான். “பழைய கார்த்திகேயனாக இருந்திருந்தால் நானே உங்களுக்கு உதவியாக இதில் இறங்கியிருப்பேன் இளவரசே. ஏனென்றால் ஒரு காலத்தில் நானே மாளவத்தின் சிறு படைத்தலைவனாக இருந்தவன் தான். இப்போதும் வீரத்தழும்புகள் என் உடலில் இருக்கின்றன…” அவன் தன் மேலாடையைத் தளர்த்தி தன் வலிமையான தோளில் இருந்த போர்த்தழும்புகளை அவர்களுக்குக் காட்டி மறுபடி ஆடையை சரிப்படுத்திக்  கொண்டு விட்டுத் தொடர்ந்து சொன்னான். “ஆனால் பின்பு எனக்கு போர் சலித்து விட்டது. வீரத்தை விடச் செல்வத்தில் ஈடுபாடு அதிகமாகி விட்டது. அதனால் வணிகனாகி விட்டேன்….”

 

சுதானுவுக்கு நினைத்த வேலை முடியும் வரை இவனைப் போன்றவன் உடனிருப்பது மிக உதவியாக இருக்கும் என்று தோன்றியது. அவன் பத்ரசாலைப் பார்க்க அவனும் அதையே நினைப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. சுதானு சொன்னான். ”நண்பரே. நீங்கள் எனக்காக பழைய கார்த்திகேயனாக மாற வேண்டும். எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நம் முயற்சிகள் வெற்றி பெற்றால் வாணிபம் மூலம் தங்களுக்குக் கிடைப்பதை விடப் பல மடங்கு செல்வத்தை நான் உங்களுக்கு அளிப்பேன்…”

 

தயக்கம் காட்டிய சின்ஹரனை சுதானுவும், பத்ரசாலும் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தார்கள்.

 

தாரிணி ஏகாதசி நாளில் காலையிலேயே இனம் புரியாத அச்சத்தை உணர்ந்தாள். எதிரிகளின் பெரும்படை ஒன்று வெளியே முற்றுகை இட்டிருக்கிற இந்த வேளையில் மகனின் ரகசிய சதியாலோசனைகள் பேராபத்தை விளைவிக்கலாம் என்று அவள் பயந்தாள். மகன் புதிய புதிய மனிதர்களுடன் மணிக்கணக்கில் ரகசியமாகப் பேசுவதும், தந்தைக்கும், தமையனுக்கும் எதிராகக் களம் இறங்கியிருப்பதும் அவள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்திருந்தன.  அவனுடைய திட்டங்கள் தோல்வி அடைந்தால் அழிவை ஏற்படுத்திவிடும் என்று பயந்தாள்.

 

அதனால் அவள் தன் பயத்தைச் சொல்லி அவனை எச்சரித்தாள். அவன் அவளிடம் சொன்னான். “தாயே என் பாட்டனார் ஆபத்து என்று முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் அவர் மட்டுமல்ல, என் தந்தையும், நானுமே இப்போதும் சவரத்தொழிலாளிகளாக இருந்திருப்போம். எல்லா பெரிய வெற்றிகளுக்கும், செல்வத்திற்கும் பின்னால் பேராபத்து இருந்திருக்கிறது. அந்த ஆபத்தைத் தாண்டியே பெரும்வெற்றி அடைவதும், பெருஞ்செல்வம் சேர்ப்பதும்  சாத்தியமாகிறது. அந்த மகான் இன்று முயன்றால் என் வெற்றி உறுதி என்று சொன்னதை நீ மறந்து விட்டாயா?”

 

அதற்கு என்ன சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் என்ன செய்யப் போகிறான் என்றோ அதை எப்படிச் செய்யப் போகிறான் என்றோ  அவள் கேட்கவில்லை.  கேட்டுத் தெரிந்து கொண்டால் இருக்கிற அச்சம் இரட்டிப்பாகிவிடும் என்று பயந்தவளாக மௌனமானாள்.


ராக்‌ஷசருக்கும் சுதானுவும், பத்ரசாலும் அடிக்கடி ஒன்றுகூடிக் கலந்தாலோசிக்கிறார்கள் என்றும் நேற்றிரவு புதிய யாரோ ஒருவனும் ஆலோசனையில் இணைந்து கொண்டிருக்கிறான் என்றும் தகவல் வந்து சேர்ந்தது. வழக்கமாக அவர் அவர்களிருவர் கூடிப் பேசுவதில் சந்தேகம் கொள்வார் என்றாலும் இந்த முறை அவர் சந்தேகிக்கவில்லை. ஆலோசனைக் கூட்டத்தில் அரண்மனைக் காவலை சுதானுவும், பாடலிபுத்திரத்தின் காவலை பத்ரசாலும் ஏற்றுக் கொண்டு இருப்பதால் அது குறித்து ஒன்று சேர்ந்து பேசுகிறார்கள் என்று அவர் எண்ணிக் கொண்டார். புதிதாய் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் இது போல் தங்கள் புதிய வேலையில் அதீத ஆர்வம் காட்டுவதும், தாங்கள் திறமையானவர்கள் என்று நிரூபிக்க பல விதமாய் ஆலோசிப்பதும் அவர் அடிக்கடி காணும் ஒன்று தான். உடன் புதிய யாரோ ஒருவன் இணைந்திருப்பது தான் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றாலும் எந்த வெளியாளும் இந்த முற்றுகைக் காலத்தில் வெளியிலிருந்து வந்து இணையும் வாய்ப்பு இல்லை என்பதால் அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

 

ஒருவிதத்தில் சுகேஷை விட சுதானு பரவாயில்லை என்று அவருக்குத் தோன்றியது. சுதானு ஏதோ புதிய முயற்சிகளையாவது எடுக்கிறான். சுகேஷ் நேற்று எதிரிகளைத் தாக்கும் யுக்திகள் பற்றி அவருடன் சேர்ந்து ஆலோசிக்க வந்திருந்தான். ஒரு புதிய ஆலோசனை கூட அவன் வாயிலிருந்து வரவில்லை. நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்டுக் கொள்கிறேன், அப்படியே செய்வோம் என்பது போல் இருந்தது அவன் செயல்பாடு. அவனை ஒப்பிடுகையில் தனநந்தன் எவ்வளவோ தேவலை!...

 

அன்று மாலையில் கவலை தரும் செய்தியோடு ஒற்றர் தலைவன் அவரிடம் வந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




என்.கணேசனின் நாவல்கள், நூல்கள் வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

1 comment:

  1. சந்திரகுப்தனும், சாணக்கியரும் இந்த பெரும் படையில் உள்ளார்கள் என்ற செய்தியாக தான் இருக்கும்....

    ReplyDelete