சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 26, 2024

யோகி 64

 

சுகுமாரன், ஊரிலிருந்து வந்திருக்கும் அவருடைய மனைவியிடம், இன்று நண்பர் ஒருவரின் நாயின் பிறந்த நாள் என்றும், அவர் டாமியை அழைத்துக் கொண்டு விருந்துக்கு வரும்படி சொல்லியிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

 

அவர் மனைவி ஆச்சரியப்பட்டாள். “நாய்க்கு பர்த்டே பார்ட்டியா? கலி காலம். எந்த ஃப்ரண்டு?”

 

அவர் புது ஃப்ரண்டு. உனக்குத் தெரியாதுஎன்று சொல்லச் சொல்ல அவருக்கு காதில் வழக்கமான ரீங்காரம் கேட்க ஆரம்பித்தது. ‘ன்று இவ்வளவு சீக்கிரமாகவேவா?’ என்று மனதிற்குள்ளே அதிர்ந்த சுகுமாரன்சீக்கிரமே போகலாம்னு நினைக்கிறேன். நிறைய ப்ரோகிராம்ஸ் இருக்காம். ராத்திரி ஒரு மணி வரைக்கும் இருக்கும். பெரிய ரிசார்ட் ஒன்னை புக் பண்ணியிருக்கார்…”

 

அவர் மனைவி ஒன்றும் சொல்லவில்லை. அவள் பார்வை அவர் அறையில் வைத்திருந்த மயானகாளியின் படத்தில் நிலைத்தது. ”இதெல்லாம் வீட்டில் வெச்சுக் கும்பிடறதில்லையே. இது யார் தந்தது? அதுவும் நாத்திகரான உங்களுக்கு…?”

 

அந்த ஃப்ரண்டு தான்என்று அந்தப் பழியையும், இல்லாத அந்த நண்பர் மேல் சுகுமாரன் சுமத்தினார். புதிதாய் யாரையும் யோசித்துச் சொல்ல நேரமில்லை.

 

மகாலக்ஷ்மி, பராசக்தி, காமாட்சி, மீனாட்சின்னு எத்தனையோ சாந்தமான கடவுள்கள் இருக்கறப்ப மயான காளியை உங்களுக்குக் கொடுத்திருக்கிற அந்த ஃப்ரண்டு மெண்டலா?”

 

வயிற்றில் எரிச்சலும் அந்த நேரத்தில் வர ஆரம்பிக்கவே சுகுமாரன், நடிகர் சிவாஜி கணேசன் போல் அழுகையும், சிரிப்பும் கலந்த ஒரு கலவையை வெளிப்படுத்தினார். என்னவென்று சொல்ல?

 

டாமி வெளியே ஆக்ரோஷமாய் குரைக்க ஆரம்பித்தான். இதயம் படபடக்க சுகுமாரன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.  தோட்டத்தில் வழக்கமான பகுதியில் இப்போது ஒரு மண்டை ஓடு மட்டும் அந்தரத்தில் தெரிந்தது. சுகுமாரன் ஒரு கணம் மூச்சு விட மறந்தார்.

 

சுகுமாரனின் முகம் பேயறைந்தது போல மாறியதைக் கவனித்த அவர் மனைவி பதறிப் போனாள். “என்னாச்சு?”

 

சுகுமாரனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் மனைவி, கணவன் எதைப் பார்த்து இப்படிப் பயக்கிறார் என்று எண்ணியவளாய் ஜன்னல் அருகே வந்து பார்த்தாள். டாமி தோட்டத்தில் ஒரு வெற்றிடத்தைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.  அவள்டாமிஎன்று அதட்டி அழைத்த போது டாமி தோட்டத்திலிருந்து ஜன்னல் அருகே ஓடி வந்தாலும், அது பழையபடி அதே இடத்தைப் பார்த்துக் குரைத்தது.

 

சுகுமாரனின் மனைவிக்கு கணவர் பீதியும் புரியவில்லை, டாமி குரைப்பதற்கான காரணமும் தெரியவில்லை. “என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்?” என்று கணவனைக் கேட்டாள்.

 

அவளுக்கு மண்டை ஓடு தெரியவில்லை என்பது சுகுமாரனுக்குப் புரிந்தது. இனியும் இங்கிருப்பது பிரச்சினையை வளர்க்கும் என்று எண்ணியவராய் அவர் கிளம்பினார். பேச வார்த்தைகள் வராததால் கையால் மனைவியிடம்போய் வருகிறேன்என்று சைகை செய்தார். அவள் திகைப்புடன் பார்ப்பதைப் பொருட்படுத்தாமல் வெளியேறி அவர் காரில் அமர்ந்தார். டாமியும் ஓடி வந்து தாவி காரில் அமர்ந்தது. ஆவியிடமிருந்து ஓட்டமெடுப்பது இன்றைக்கு மூன்றாவது நாளானதால் அதற்கும் பழகி விட்டது.

 

கூர்க்காவும் அவசரமாக கேட்டைத் திறந்தான். காரைக் கிளப்பிய சுகுமாரன், வெளியேறுவதற்கு முன் தோட்டத்தைப் பார்த்தார். அந்தரத்தில் மண்டையோடு இப்போதும் தெரிந்தது.

 

காரைப் பக்கத்து தெருவில் வண்டியை நிறுத்தி சுகுமாரன் தனக்குப் பேச வருகிறதா என்று பரிசோதித்துப் பார்த்தார். ”டாமிஎன்று அவர் சத்தமாக அழைத்தார். டாமி வாலாட்டியது. பேச்சு வருகிறதா என்று சோதித்துப் பார்த்துப் பேச வேண்டிய நிலைக்கு வந்து விட்டோமே என்று மனம் நொந்தவராக அவர் பாண்டியனுக்குப் போன் செய்தார்.

 

பாண்டியன் அப்போது தான் வாசலில் ஓநாயைப் பார்த்து சித்தம் கலங்கியிருந்தார். கைபேசி இசைக்கும் சத்தம் கூட, பழைய ரீங்கார ஒலியுடன் சேர்ந்து, ஆம்புலென்ஸ் சத்தம் போல் அவர் காதில் இரைச்சலாக விழுந்தது. இதயம் படபடக்க, அழைப்பது யாரென்று கைபேசியில் பார்த்தார். சுகுமாரன் பெயரைப் பார்த்து விட்டு எடுத்து, பேசினார். ”ஹலோ என்ன விஷயம்?”

 

சுகுமாரன் பதற்றத்துடன் நாக்கு குழறியபடி சொன்னார். “எங்க வீட்டுக்கு இப்பவே ஆவி வந்துடுச்சு.... இன்னைக்கு மண்டை ஓடு மட்டும் வந்திருக்கு.... நீங்க சொன்னபடி ஆவி என் மனைவிக்குத் தெரியலை. எனக்கும் டாமிக்கும் மட்டும் தான் தெரியுது... தோட்டத்துல அந்தரத்துல அந்த மண்டை ஓடு மட்டும் தெரியுது...”

 

ஒரு பிரச்சினை நமக்கு மட்டுமல்ல, இன்னொருவனுக்கும் இருக்கிறது என்பதே பல நேரங்களில் ஆறுதல் தான். பாண்டியன் லேசான புன்னகையுடன் சொன்னார். “உங்களுக்குத் தேவலை. இங்கே ஓநாய் வந்திருக்கு

 

அதிர்ச்சியில் சுகுமாரனின் கைபேசி கைநழுவிக் கீழே விழுந்தது. சுதாரித்துக் கொண்டு அதை எடுத்த சுகுமாரன் திகிலுடன் கேட்டார். “அது ஆவியா? இல்லை, நிஜ ஓநாயா?”

 

அதைக் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி உங்க போன்கால் வந்துடுச்சு. கொஞ்சம் பொறுங்க. மறுபடி நானே கூப்டறேன்என்று சொல்லி இணைப்பைத் துண்டித்த பாண்டியன் மறுபடி ஜன்னல் வழியே பார்த்தார். அதே இடத்தில் இப்போதும் ஓநாய் நின்றிருந்தது. இப்போதும் அதன் கண்கள் நெருப்பாய் ஜொலித்தன. அவர் கூர்ந்து பார்த்த போது அது அவரை ஆக்ரோஷமாய் பார்த்தது. அவர் வயிற்றில் தானாய் ஏதோ ஒரு முடிச்சு விழுந்து கடுமையாய் வலித்தது.

 

பாண்டியன் கண்களை மூடி, பற்களைக் கடித்தபடி அந்த வலியைப் பொறுத்துக் கொண்டார். இந்த அனுபவத்தை அவருக்குத் தருவது ஆளானாலும் சரி, ஆவியானாலும் சரி அவர் பழிவாங்காமல் இருக்க மாட்டார்.  சற்று வலி குறைந்ததா, இல்லை வலி பழகி விட்டதா என்று தெரியவில்லை. வலியின் தீவிரம் சற்று குறைந்தது போலிருந்தது.

 

பாண்டியன் கண்களைத் திறந்த போது அவருடைய பணியாள் அவருக்கு உணவு கொண்டு வந்து கொண்டிருப்பது ஜன்னல் வழியாகத் தெரிந்த்து. ஓநாய் இப்போதும் அங்கேயே நின்று கொண்டிருந்தாலும், அவர் மறுபடியும் அந்த ஓநாயைக் கூர்ந்து பார்ப்பதைத் தவிர்த்தார். இப்போது அவர் கவனம் அந்தப் பணியாளுக்கு ஓநாய் தெரிகிறதா என்பதில் தான் இருந்தது.

 

பணியாள் எந்தப் பாதிப்புமில்லாமல் வருவதைப் பார்த்த போது அவன் கண்களுக்கு ஓநாய் தெரியவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அவன் அந்த ஓநாய் இருக்கும் இடத்தைக் கடந்த கணத்தில் அவனையும் அறியாமல் நடுங்கினான். அப்படி நடுங்கியது அவனையே திகைத்த வைத்தது போல் தான் தெரிந்தது.  ஆனால் ஓநாய் அவன் பக்கம் திரும்பக்கூட இல்லை.

 

பணியாள் வேகமாக வாசலைத் தாண்டி உள்ளே வருவது தெரிந்தது. அவன் மிகுந்த பணிவுடன் உணவுப் பையை அவர் அறையில் வைத்த போது  அவர் ஒன்றும் அறியாதவர் போல் கேட்டார். “உள்ளே வர்றப்ப திடீர்னு நடுங்கினியே என்ன ஆச்சு? குளிருதா?”

 

பணியாள் அசடு வழியச் சொன்னான். “இல்லீங்கய்யா.... என்னன்னு தெரில....”

 

ஏன் நடுங்கினான் என்ற காரணத்தை அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. அவன் போய் விட்டான்.  பாண்டியன் யோசித்து விட்டு காமிராப் பதிவைப் பார்த்தார். நேரில் தெரியும் ஓநாய் காமிராப் பதிவில் தெரியவில்லை.

 

சுகுமாரனுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னார். சுகுமாரன் யோசித்தபடி சொன்னார். “என் வீட்டு கூர்க்காவுக்கு ஆவி தெரியவுமில்லை. அவன் நடுங்கவுமில்லை. ஆனா உங்க வேலைக்காரனுக்கு ஆவி தெரியாட்டியும் நடுங்கறான். ஒன்னுமே புரியலையே.

 

இன்னைக்கு ஒரு நாள் பொறுங்க. நாளைக்கு யோகிஜி வந்துடுவார்.”

 

சுகுமாரன் கேட்டார். “யோகிஜி கிட்ட விஷயத்தைச் சொல்லியிருக்கீங்களா?”

 

இல்லை. நாளைக்கு வந்த பிறகு தான் சொல்லணும்.”

 

யோகிஜிக்கு ஆவியை ஓட்டத் தெரியுமா?”

 

அந்தச் சூழ்நிலையிலும் பாண்டியனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சத்தமில்லாமல் சிரித்தார். சுகுமாரன் பாண்டியனின் மௌனத்திலேயே பதிலை உணர்ந்து அழாத குறையாய் சொன்னார். “அப்படின்னா அவரும் யாரையாவது வரவழைச்சோ, கேட்டோ  தானே இந்தப் பிரச்சனையைச் சரி செய்யணும். அதை இங்கே வந்து தான் செய்யணும்னு இல்லையே. அங்கேயிருந்தே இப்பவே செய்யலாமே. போன்ல கூப்ட்டு உடனடியாய் விஷயத்தைச் சொல்லுங்களேன். சும்மா லேட் பண்றதுல என்ன அர்த்தமிருக்கு?”

 

இந்த மூன்று நாட்களில் முதல் முறையாக டாக்டர் சுகுமாரன் அறிவுபூர்வமாய் பேசுவதாக பாண்டியனுக்குத் தோன்றியது. “சரி பேசறேன்என்றார். இந்த ஆவி விஷயத்தில் ஒரு தீர்வை எட்டுவது அவருக்கும் உடனடி அவசியமாய் இருந்தது.

 

(தொடரும்)

என்/.கணேசன்





3 comments:

  1. யோகஜி தான் டுபாக்கூர் சாமியாராச்சே...!!! அவர் என்ன செய்வார்?
    பணம், திறமையான பேச்சாற்றல் இதை தவிர வேறொன்றும் தெரியாதே...!!!

    ReplyDelete
    Replies
    1. That speaking skills are rare and great presence of mind needed for it. Somehow that person posses better skills than a normal person. They are able to use the psychological dependency of a person with low EQ and prosper. A real Yogi never tried to portray he is a Yogi and never tries to preach anyone.

      Delete
    2. It's not that person alone doing but it appears done great forces behind such people and people forget that all are going to die one day. Just the time is not known but we are walking towards graveyard. In this, so many things we create.

      Delete