சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 12, 2024

யோகி 62

 

குமரேசன் மெல்ல கையில் உறையை மாட்டிக் கொண்டான்.  சில சமயங்களில் முட்செடிகளைக் கையாள்கையில் அவர்கள் கையில் உறையை மாட்டிக் கொள்வது வழக்கம் தான்.

 

குமரேசன் களைந்து வைத்திருக்கும் களைகளை சற்று தூரத்தில் கொண்டு போய்க் கொட்ட வேண்டும். அதற்கு அவன் பாண்டியனின் இருப்பிடத்தைத் தாண்டி தான் போக வேண்டும். ஒரு கூடையில் அந்தக் களைகளை போட்டுக் கொண்டு குமரேசன் கிளம்பினான். பாண்டியன் இருப்பிடத்தைத் தாண்டிப் போய் அந்தக் களைகளைக் கொட்டி விட்டுத் திரும்பி வருகையில் பாண்டியனின் வாசல் அருகே வரும் போது நின்று கூர்ந்து தரையைப் பார்த்தான். குனிந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொண்டு மறுபடியும் கீழே பார்த்து திருப்தி அடைந்தவன் போல் அங்கிருந்து நகர்ந்தான். யாராவது பார்த்தாலோ, கேட்டாலோ, ’முட்கள் விழுந்து கிடப்பது தெரிந்தது. அந்த முட்களைத் தான் மண்ணோடு எடுத்தேன்என்று சொல்லிக் கொள்ளலாம். வெறும் ஒரு கைப்பிடி மண்ணை அவன் எடுத்ததற்கு அவர்கள் வேறு விதமாய்ச் சந்தேகப்பட ஒன்றுமில்லை

 

குமரேசனின் செயலை கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் கவனிக்கவே செய்தான். எந்த நபர் பிரம்மானந்தா மற்றும் பாண்டியனின் இருப்பிடங்களுக்கு அருகே சென்றாலும் கூடுதல் எச்சரிக்கையுடன் கவனித்துத் தெரிவிக்க வேண்டியது அவனுடைய பொறுப்பு. தோட்டக்காரன் மருதகாசியாக அவன் அறிந்த குமரேசன், கூடையுடன் பாண்டியனின் இருப்பிடத்தைக் கடக்கும் போதும்  அவன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். களைகளைக் கொட்டி விட்டு காலி கூடையுடன் திரும்பி வந்த மருதகாசி, பாண்டியனின் இருப்பிடத்தருகே வந்து நின்று தரையை உற்றுப் பார்த்ததைக் கண்டவுடன் கண்காணிப்பாளன் முழுக்கவனத்தையும் அவன் மீது திருப்பினான்.

 

தோட்டக்காரன் மருதகாசி குனிந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு நிமிர்வது தெரிந்தது. நிமிர்ந்தவன் இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து நிற்பது தெரிந்தது. பின் பழையபடி நகர்வது தெரிந்தது. ’ஏதாவது கண்ணாடித் துண்டுகளையோ, முட்களையோ பார்த்து இருக்கலாம்அதை மண்ணோடு எடுத்துக் கொண்டு போயிருக்கலாம்…’

 

ஒரு துப்புரவுப் பணியாளன் யோகி பிரம்மானந்தாவின் இருப்பிடத்திற்குச் செல்வது இன்னொரு காமிராப் பதிவில் தெரிய, கண்காணிப்பாளனின் கவனம் அங்கு நகர்ந்தது.

 

ஷ்ரவனுக்கு அந்த மண் மதியம் மூன்று மணியளவில் கிடைத்தது. பரசுராமன் அதை 4.45க்கு அங்கு சென்று சேரும்படியாக அனுப்பி வைக்கும்படி சொல்லியிருந்தார். நாளை காலை பரசுராமன் துபாய் செல்கிறார் என்பதால், ஷ்ரவன் அவர் செல்வதற்கு முன் கடைசியாக ஒருமுறை அவரைச் சந்திக்க நினைத்து, தானே அந்த மண்ணை எடுத்துச் சென்றான்.

 

யோகாலயத்தில் அடுத்தநிலைப் பயிற்சிக்குச் செல்லவிருக்கும் அவன், அது முடிந்தவுடன் அதிக கால தாமதம் செய்யாமல் துறவியாக அங்கு சேர்ந்து கொள்ள முடிவெடுத்திருந்தான். அதன் பின் அவன் பரசுராமனிடம் போனில் கூடத் தொடர்பு கொள்வது சிரமம். பரசுராமன் மூன்று மாதங்கள் கழித்து சென்னைக்குத் திரும்பி வந்தால் கூட, தொடர்பு எல்லைக்கு அப்பால் யோகாலயத்தில் அவன் இருக்கும் சூழல் நிலவும் என்பதால் அச்சமயத்தில் ரகசியமாய்ச் சந்திக்கவும் வாய்ப்பில்லை. அதனால் இப்போதே அவரிடம் ஆலோசனை, சந்தேகம் எதாவது கேட்பதானால் கேட்டுக் கொள்ளலாம் என்று ஷ்ரவன் எண்ணினான்.

 

அவர் வரவேற்பறையில் வரைந்திருந்த ஒரு சின்னத்தில் அந்த மண்ணை வைக்கச் சொன்னார். அங்கு அந்த மண் இருந்த ப்ளாஸ்டிக் பையை ஷ்ரவன் வைத்து விட்டுக் கேட்டான். “உங்க பூஜையை எத்தனை மணிக்கு ஆரம்பிப்பீங்க சுவாமிஜி?”

 

பரசுராமன் சொன்னார். “6.35க்கு.”

 

அது வரைக்கும் உங்க கிட்ட பேசலாமா சுவாமிஜி?” 

 

தாராளமாய் பேசலாம்

 

ஷ்ரவன் நேற்றிரவு சுகுமாரனும், பாண்டியனும் செவென் ஸ்டார் மருத்துவமனைக்குச் சென்றதையும், இருவருக்கும் வயிற்றில் புண் இருப்பதாகத் தெரிவதாகவும் சொன்னான். பரசுராமன் தலையசைத்த விதத்திலிருந்து அது அவருக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை அவனால் உணர முடிந்தது. இருந்த இடத்திலிருந்தே அவர், அந்தப் பாதகர்களுக்கு இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்த முடிந்தது அவனுக்குப் பேராச்சரியமாக இருந்தது. இப்படி பலதைச் செய்ய முடிந்தும் கூட, சிலவற்றைச் செய்ய மட்டும் ஆட்களை அனுப்ப ஏன் சொன்னார் என்பது தான் அவனுக்குக் குழப்பமாய் இருந்தது. 

 

அதை அவன் வெளிப்படையாகவே அவரிடம் கேட்ட போது அவர் சொன்னார். “இப்போதைக்கு நான் செய்திருக்கிறது ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட். கூடவே, அமைதியாய், நிதானமாய் அவர்கள் இருக்க முடியாத நிலைமையையும் நான் உருவாக்கியிருக்கிறேன். சில நேரங்கள்ல அவங்களுக்கு காட்சிகள் தெரியும். சில நேரங்கள்ல தெரியாதுங்கறபடி என் சக்திப் பிரயோகங்களையே கொஞ்சம் இடைவெளி விட்டுத் தாக்கற மாதிரி தான் பயன்படுத்தியிருக்கேன். அதுமட்டுமில்லாமல், வெறும் என் சக்திகளால் மட்டும் அல்லாமல் உன் ஆட்கள் மூலமாவும் சில வேலைகள் நடந்திருக்கிறதனால அவங்களுக்கு கண்டிப்பாய் குழப்பம் தான் அதிகம் இருக்கும். என்னடா இது, சிலது தானாய் நடக்குது, சிலது யாரோ செய்யற மாதிரி தெரியுதுன்னு குழம்புவாங்க. அதனால தெளிவாய், அமைதியாய், தைரியமாய் இது வரைக்கும் வேலை செஞ்சுகிட்டிருக்கறவங்க இனி அப்படிச் செய்ய முடியாது. குழப்பம், அவசரம் பயத்தோட தான் இனி அவங்க செயல்கள் இருக்கும். இதை நீங்க சரியாய் பயன்படுத்திக்கலாம்…”

 

ஷ்ரவன் நன்றியுணர்வோடு தலையாட்டி விட்டு, தனக்கு வந்த புதிய சந்தேகத்தைக் கேட்டான். ”இன்னைக்கு நீங்க செய்யற பூஜை கடைசி பூஜை.. அப்படின்னா நாளையில இருந்து அவங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காதா?”

 

இன்னைக்குச் செய்யற பூஜை மகா உக்ர பூஜை. இது அவங்கள தொடர்ந்து எதாவது விதத்துல பாதிச்சுகிட்டேயிருக்கற விதத்துல பிரயோகத்தைச் செஞ்சு வெச்சுட்டு போறேன். ஆனால் கண்டிப்பாய் அவங்களும் சும்மா இருக்க மாட்டாங்க. தற்காப்புக்கு எதாவது செய்யத்தான் செய்வாங்க. ஆனா அது முழுசா அவங்களுக்குப் பாதுகாப்பும் தைரியமும் தந்துடாதபடியும் நான் சில வேலைகளை செஞ்சுட்டு போறேன். மீதி உன் கைல.”

 

ஷ்ரவனுக்கு அவர் சொல்வது புரிந்தும், புரியாமலும் இருந்தது. ஆனால் அவர் செய்திருப்பது மிகப்பெரிய உதவி என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. அன்று மிக அலட்சியமாகநான் நோய்களைப் பார்த்ததை விடப் பிரச்னைகளைப் பார்த்தது தான் அதிகம். அதனால ஏதாவது பிரச்னை வந்தா நான் பாத்துக்கறேன்என்று தன் மருத்துவமனை பொறுப்பாளரிடம் சொன்ன சுகுமாரன் இந்த ஆவி பிரச்சினையைத் தாள முடியாமல், தன் வீட்டிலேயே தங்கவும் முடியாமல், இரவு நேரங்களில் அங்குமிங்கும் அலைவதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.

 

அதே போல் குமரேசன் பாண்டியனைப் பற்றியும்அலட்டிக் கொள்ளாமல் அடுத்தவர்களை அச்சப்பட வைப்பதில் வல்லவர்என்று சொல்லியிருந்தான். அதை பரசுராமனும் உறுதிப்படுத்தியிருந்தார். கொலையில் பங்கிருந்தும், அலட்டாமல் சுகஜீவியாய் இருந்துவந்த பாண்டியனும் சுகுமாரனுடன் சேர்ந்து அலைவதும் ஷ்ரவனைத் திருப்தியடைய வைத்தது.  அதனால் அவன் பரசுராமனுக்கு மனதார நன்றி தெரிவித்தான்.

 

பரசுராமன் புன்னகையுடன் சொன்னார். “நன்றி சொல்ல அவசியமே இல்லை. ரொம்ப நல்ல மனுஷங்க கஷ்டப்படறதை நாம அனுமதிக்கக்கூடாது. அப்படிப்பட்ட மனுஷங்க இருக்கறதால தான் உலகம் ஒழுங்காய் இயங்கிட்டு இருக்கு. அந்த நல்ல மனுஷங்களும் நல்லவங்களாய் நீடிக்க முடியாமல் போனால், அப்புறம் இந்த உலகத்தை யாராலும் காப்பாத்த முடியாது. அதனால, நல்லதோட அருமை தெரிஞ்ச நம்மள மாதிரி ஆள்கள் செய்ய வேண்டிய வேலை தான் இது…”

 

தங்களை உயர்த்திக் காட்டுவதிலேயே குறியாய் இருக்கிற  பல ஆன்மீகக் குருக்கள் மத்தியில்  இவரைப் போன்றவர்களும் இருப்பது தான் ஆன்மீகத்தின் மரியாதையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்று ஷ்ரவன் நினைத்துக் கொண்டான்.

 

ஷ்ரவன் அவரிடம் கேட்டான். “சுவாமிஜி, இந்த சக்திகளுக்கு எல்லை இருக்கா?”

 

பரசுராமன் சொன்னார். “இந்த சக்திகள் வலிமையானது, பரந்தது. ஆனாலும் இந்த சக்திகளை எல்லை இல்லாததுன்னு சொல்ல முடியாது ஷ்ரவன்.  சரியாய் சொன்னால் இறைசக்தி தவிர மற்ற எல்லா சக்திகளுக்கும் எல்லை இருக்கு. இந்த சக்திகளுக்கு வலிமை கூடறதே மனிதனோட மனசை ஆக்கிரமிச்ச பிறகு தான். மனிதனோட உணர்வுகள், நம்பிக்கைகள், ஈகோ எல்லாத்தையும் ஆக்கிரமிச்சு அதிலெல்லாம் இருக்கற சக்தியை எல்லாம் தன்னுடையதாக்கின பிறகு தான், இது மாதிரியான சக்தி அவனை ஆட்டிப் படைக்க ஆரம்பிக்குது. ஒரு பெரிய ரகசியம் சொல்லட்டுமா ஷ்ரவன்? எந்தவொரு சக்தியும், ஒரு மனிதனோட மனசு ஒத்துழைக்காம, அவன் மனசு எதிர்வினைல பங்கெடுத்துக்காம, அவன் மேல ஆதிக்கம் செலுத்த முடியாது. அதனால தான் நாம மனசை எந்த நிலைல, எந்தப் பக்குவத்துல வெச்சிருக்கோம்கிறது எல்லா நேரங்கள்லயும் ரொம்ப ரொம்ப முக்கியம்…”

 

அவருடைய பொருள் பொதிந்த வார்த்தைகள் ஷ்ரவனை யோசிக்க வைத்தன. திடீரென்று அவர் பார்வை வரவேற்பறையில் வைத்திருந்த யோகாலயத்து மண் இருந்த ப்ளாஸ்டிக் பை மீது நிலைத்தது. அதில் அவர் கூடுதலாக எதையோ பார்த்து விட்டது போல் ஷ்ரவனுக்குத் தோன்றியது.

 

அவர் பார்வை கூர்மையாகியது. அடுத்ததாய் அவர் சொன்னது அவனை அதிர வைத்தது.


(தொடரும்)

என்.கணேசன்



4 comments:

  1. நேற்று ஈரோடு புத்தகக் கண்காட்சியில் சதுரங்கம் நாவல் வாங்கிவிட்டேன் சார்.. மாயப் பொன்மான் கிடைக்கவில்லை... விமலா டீச்சர் ஈரோடு

    ReplyDelete
  2. சாணக்கியன் பகுதி - 1மற்றும் ஜாதகம் பயன்படுத்துவது எப்படி இரண்டு புத்தகங்களும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் அய்யா

    ReplyDelete
  3. என்.கணேசனின் நூல்கள் வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

    ReplyDelete
  4. சக்திகள்... மனிதனை மனதை ஆக்கிரமித்து...அதனுடன் ஈகோ,உணர்வு, நம்பிக்கை சேரும் போது வலிமை அடைகிறது... உண்மையான வரிகள்...

    ReplyDelete