சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 29, 2024

சாணக்கியன் 124

 

ராக்‌ஷசர் காணச் சென்ற போது தனநந்தன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். பொதுவாக நடன மங்கையரின் நடனங்களைக் கண்டு ரசிப்பதும், சதுரங்கம் ஆடுவதும், இசையை ரசிப்பதுமே அவன் காலம் கழிக்கும் விதங்கள். குடும்பத்தினருடன் அவன் கழிக்கும் காலங்களும் குறைவே. அரசியல், நிர்வாக காரியங்களில் அவன் ஈடுபடுவது என்றால் ராக்‌ஷசர் உடன் இருக்க வேண்டும். இந்தக் காரணங்களால் தான் ராக்‌ஷசரை அவன் தனிமையும் சிந்தனையும் ஆச்சரியப்படுத்தின. அவனை வணங்கி விட்டு “என்ன ஆழ்ந்த சிந்தனை அரசே?” என்று ராக்‌ஷசர் கேட்டார்.

 

தனநந்தன் அவரைக் கண்டதும் புன்னகைத்தான். ”என் மகள் துர்தராவுக்கு சீக்கிரமே திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். தகுந்த வரன் யாரும் என் நினைவுக்கு வரவில்லை. அது குறித்து தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு யாராவது நினைவுக்கு வருகிறார்களா? தகுந்த அரசர்கள், இளவரசர்கள்?”

 

ராக்‌ஷசர் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “சட்டென்று யாரும் நினைவுக்கு வரமாட்டேன்கிறார்கள் அரசே. ”

 

தனநந்தன் சொன்னான். “நமக்கு இணையானவர்கள் என்ற அளவில் வரனைத் தேடினால் இணையானவர்களே எங்குமில்லை. சிறிதாவது அடுத்த நிலையில் என்று பார்த்தாலும் திருப்தி தரும் வகையில் யாருமில்லை. இது வரை பல இடங்களிலிருந்து அவளை மணக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் என் மகளின் அழகுக்கும், நம் அந்தஸ்துக்கும் ஏற்ற வகையில் யாருமில்லை. என் மனைவி நான் தந்தை என்ற பொறுப்பில்லாமல் நடனம், சதுரங்கத்திலேயே காலம் கழிப்பதாக என்னைக் குறைகூறிக் கொண்டே இருக்கிறாள். அவள் திருமணத்தை முடித்து விட்டு இளவரசன் சுகேஷ் திருமணத்தையும் முடித்து விட வேண்டும் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்.”


ராக்‌ஷசர் புன்னகைத்தார். ’குடும்பம் என்று வரும் போது அரசன் நிலையும் சாதாரண மனிதனின் நிலையும் ஒரே போல் தான் இருக்கின்றது.’    

 

தனநந்தன் சொன்னான். “நீங்களும் அவளுக்குத் தகுந்த வரன் பற்றி யோசித்துச் சொல்லுங்கள். அவள் அழகுக்கு ஏற்றவனாக இருக்க வேண்டும். அது மிக முக்கியம்”

 

ராக்‌ஷசர் தலையசைத்தார். தனநந்தன் சொன்னான். “நீங்கள் ஏதோ முக்கியமான விஷயம் குறித்துப் பேச வந்திருப்பது போல் தோன்றுகிறது. சொல்லுங்கள்.”

 

சென்ற முறை கேகய மலயகேதுவும், சந்திரகுப்தனும் இணைந்து கொண்டதையும் இருவரும் சேர்ந்து யூடெமஸை கொன்றதையும் அவர் சொன்ன போது தனநந்தன் முகம் போன போக்கு ராக்‌ஷசருக்கு நினைவு வந்தது. ஆனால் கூடுதலான கசப்பான இந்தத் தகவலையும் சொல்லாமல் இருக்க வழியில்லை.

 

“யூடெமஸைக் கொல்லச் சென்ற இடத்தில் சந்திரகுப்தனுக்கு ஏதோ ஒரு பெரிய புதையல் கிடைத்திருப்பது போல் தோன்றுகிறது அரசே. அவன் இப்போது அந்த நிதியை வைத்துக் கொண்டு யானைகள், குதிரைகள், ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பதாக ஒற்றன் சொல்கிறான். படை வலிமையை அவன் அதிகரித்தும் வருகிறானாம்.”

 

தனநந்தன் முகம் இருண்டது. சந்திரகுப்தனுக்குப் பின்னால் இருந்து அனைத்தையும் ஆட்டி வைக்கும் அந்த அந்தணர் மட்டும் அவனிடம் சபதம் இட்டுப் போகாமல் இருந்திருந்தால் அவன் இதை ஒரு பொருட்டாகவே நினைத்திருக்க மாட்டான். யார் எத்தனை உயர்ந்தாலும் அவன் உயரத்துக்கு ஈடாக மாட்டார்கள். ஆனால் ஒரு சாதாரண அந்தணனாக இருந்த ஒரு அகங்கார மனிதன் வெற்றி மேல் வெற்றி பெற்று முன்னேறும் தகவல் தொடர்ந்து கிடைப்பதை தனநந்தனால் ரசிக்க முடியவில்லை.  அந்தப் புதையல் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது என்று தெரிந்திருந்தால் அவன் இதயம் வெடித்திருக்கும். ஆனால் ஒற்றன் அனுமானித்துச் சொன்னதை ராக்‌ஷசரும் நம்பி அப்படியே சொன்னதால் தனநந்தனின் பெருந்துக்கம் தள்ளிப் போயிற்று.

 

தனநந்தன் மெல்லக் கேட்டான். “அத்தனை பெரிய புதையலை அங்கே யார் புதைத்து வைத்திருப்பார்கள்?”

 

ராக்‌ஷசர் சொன்னார். “அலெக்ஸாண்டர் பல இடங்களை வென்று கொண்டே வந்த போது ஒவ்வொரு இடத்திலும் கைப்பற்றியது நிறையவே இருந்திருக்கும். எத்தனையை அவன் தன் வசமே வைத்திருக்கவோ கொண்டு போகவோ முடியும்? ஏதாவது ஒரு கட்டத்தில் பாதுகாப்பாய் ஓரிடத்தில் ஒளித்து வைக்கலாம் என்று நினைத்து அப்படி புதைத்து வைத்திருக்கலாம். இப்போது அதிர்ஷ்டத்தின் செல்லப் பிள்ளையாக சந்திரகுப்தன் இருப்பதால் அவனுக்கு அது கிடைத்திருக்கிறது போலிருக்கிறது. அவன் இப்போது செய்யும் ஏற்பாடுகள் நமக்கு எதிராகச் செய்யும் ஆயத்தமாகக் கூட இருக்கலாம் என்று நான் சந்தேகப்படுகிறேன் அரசே”

 

தனநந்தனுக்கு அவர் சந்தேகமே சங்கடத்தை ஏற்படுத்தியது. “அவன் எத்தனை தன்னை வலிமைப் படுத்திக் கொண்டாலும் நமக்கு இணையான படை வலிமையை அவன் உருவாக்கிக் கொள்ள முடியுமா?” என்று அவரிடம் கேட்டான்.

 

“அது என்றைக்கும் சாத்தியமில்லை அரசே” என்று ராக்‌ஷசர் ஒத்துக் கொண்டார்.

 

“அதனால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அதிர்ஷ்டம் யாருடைய செல்லப் பிள்ளையாகவும் அதிக காலம் இருப்பதில்லை. அவன் தன் படைவலிமையை அதிகரித்துக் கொண்டு நம்மை எதிர்க்க வந்தால், உள்ளது எல்லாம் இழந்து பரிதாபமாக நிற்கப் போகிறான். ஆனாலும் அந்த முட்டாள்தனத்தை அவன் செய்ய முற்பட்டால் அதற்குப் பதிலடி கொடுக்க நாம் எப்போதும் தயாராக இருப்போம்”

 

ராக்‌ஷசர் தலையசைத்தார். தனநந்தன் சொல்வது போல என்ன தான் சந்திரகுப்தன் முயன்றாலும் அவன் அவர்களுக்குச் சமமில்லாத எதிரி தான். ஆனால் அவனுடன் விஷ்ணுகுப்தரும் இருக்கிறார். அவரது சேர்க்கை தான் ராக்‌ஷசரை யோசிக்க வைக்கிறது. அது தனநந்தனையும் பாதித்திருக்கிறது என்பது விஷ்ணுகுப்தர் பெயரை அவன் சொல்ல மறுத்ததில் ராக்‌ஷசருக்கும் புரிந்தது. அவர் சொன்னார். “நான் அவர்களைக் கூர்ந்து கவனித்து வரும்படி நம் ஒற்றர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்”

 

அவர்கள் கூர்ந்து கவனிக்கும் அளவுக்கு சாணக்கின் மகனும், மாடு மேய்க்கும் சிறுவனும் வளர்ந்ததே தனநந்தனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ராக்‌ஷசரைப் பார்க்கையில் அவர் அவர்கள் வளர்ச்சி தங்களுக்கு ஆபத்து என்று கவலைப்படுவதை அவனுக்கு உணர்த்தியது. ’ஏற்கெனவே மிக வலிமையான படைகளை நாம் வைத்திருக்கிறோம் என்பது மட்டுமல்ல அவனுக்குக் கிடைத்திருக்கக்கூடிய புதையலை விடப் பலமடங்கு நிதி நம் கஜானாவிலும், கங்கைக் கரையிலும் இருக்கிறது. அதை வைத்து நாம் எப்போதும் எதுவும் செய்ய முடியும். கவலைப்படாதீர்கள் ராக்‌ஷசரே’ என்று சொல்லி தனநந்தன் அவரை ஆசுவாசப்படுத்த ஒரு கணம் நினைத்தான். கூடவே, இத்தனை நாள் தெரிவிக்காத அந்தப் புதையல் இரகசியத்தை இப்போது அவரிடம் சொல்வது எதற்கு என்றும் அவனுக்குத் தோன்றியது. ஒருவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் மட்டுமே என்றைக்கும் இரகசியமாக இருக்க முடியும் என்றும் தோன்றவே அதை அப்போது சொல்வதையும் தனநந்தன் தவிர்த்தான்.

 

தே சமயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சாணக்கியரும் ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்.  சந்திரகுப்தன் வந்து அவர் கவனத்தைக் கலைத்தான். “என்ன ஆச்சாரியரே. ஏதாவது பிரச்சினையா?”

 

பிரச்சினைக்குரிய நேரங்களில் அவர் சிந்திக்கும் விதம் வேறுமாதிரியாக இருக்கும். அவரையே கவனித்து வளர்ந்திருந்த அவனுக்கு அதைக் கண்டுபிடிக்க முடிந்ததை எண்ணிப் புன்னகைத்த சாணக்கியர் சொன்னார். ”பிரச்சினை என்று சொல்வதைக் காட்டிலும் சாதகமில்லாத சூழ்நிலை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் சந்திரகுப்தா”

 

“என்ன ஆச்சாரியரே?”

 

“மகதத்தை எதிர்க்க நாம் சேர்த்திருக்கும் படை போதாது சந்திரகுப்தா.”

 

“ஏன் ஆச்சாரியரே அப்படிச் சொல்கிறீர்கள்? காந்தாரமும், கேகயமும் நம்முடன் சேர்ந்தால் நாம் நன்றாகவே சாதிக்கலாமே?”

 

“இப்போதைக்கு காந்தார உதவியும், கேகய உதவியும் நாம் பெற முடியாது”

 

“ஏன் ஆச்சாரியரே?”

 

“தங்களை எதிர்த்து நிற்கும் காந்தாரத்தின் மீதும் கேகயத்தின் மீதும் செல்யூகஸ் எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வரலாம். க்ளைக்டஸ் கோபத்தோடு காந்தாரத்தை விட்டுப் போயிருப்பதாக ஆம்பி குமாரன் சொல்கிறான். அவன் போய் தெரிவித்தவுடன் செல்யூகஸ் எப்போது கிளம்பி வருகிறானோ தெரியவில்லை. அப்படி அவன் வந்தால் காந்தாரமும், கேகயமும் சேர்ந்து அவனை எதிர்த்தால் தான் தங்களைக் காத்துக் கொள்ள முடியும். அதனால் நாம் அந்த இரண்டு இடங்களில் இருந்தும் படைகளை விலக்குவது அவர்களைப் பலவீனப்படுத்துவதாகி விடும். ஒரு முறை துரத்திய யவனர்கள் திரும்பவும் உள்ளே நுழைய நாம் அனுமதிப்பது போலாகி விடும்.”

 

அவர் சொல்வது சந்திரகுப்தனுக்கும் சரியாகத் தோன்றியது. அவன் செல்யூகஸ் திரும்ப வரலாமென்பதை மறந்து விட்டிருந்தான்.

 

சாணக்கியர் சொன்னார். ”நம்மிடமிருக்கும் மற்ற படைகளையும் முழுவதுமாக நாம் கொண்டு போய் விட முடியாது. ஏனென்றால் நாம் மகதம் நோக்கிப் போன பின் இங்கு யாராவது படையெடுத்து வந்தால் தற்காத்துக் கொள்ளவும் கணிசமான படையை இங்கு நாம் விட்டுப் போக வேண்டியிருக்கிறது. இப்போது நம் கருவூலத்தில் தனநந்தனின் செல்வம் நிறையவே இருக்கிறது. அதையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது”

 

சந்திரகுப்தன் கவலையுடன் கேட்டான். “அப்படியானால் நாம் என்ன செய்வது ஆச்சாரியரே?”   

 

(தொடரும்)

என்.கணேசன்





2 comments:

  1. தனநந்தனிடம் பெரிய அளவு படைபலம் இருந்தாலும்... மகத வாசிகளே அவனுக்கு எதிராக உள்ளனர்... நேரடியாக பேருக்கு செல்லாமல்... மகதத்தில் தனநந்தனுக்கு எதிராக உள்ளவர்களை, சாணக்கியர் பயன்படுத்துவார்...என்றே தோன்றுகிறது....

    ReplyDelete
  2. 'இப்போது அதிர்ஷ்டத்தின் செல்லப் பிள்ளையாக சந்திரகுப்தன் இருப்பதால்'
    🤣🤣🤣🤣🤣🤣

    ReplyDelete