சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 5, 2024

யோகி 61

 

பாண்டியனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்படியானால் சிசிடிவி காமிரா மூலம் இந்த நெருப்பு பற்றிய நிஜத்தைக் கண்டுபிடிக்க வழியில்லை. அவர்  கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டரை. அவர் சுகுமாரனிடம் கேட்டார். “இப்ப தோட்டத்துல ஆவி தெரியுதா?”

 

சுகுமாரன் அறைக்குப் போய் ஜன்னல் வழியாகப் பார்த்து விட்டு வந்து சொன்னார். ”இல்லை

 

இப்ப வீட்டுக்குள்ளேயும் இல்லை. வந்தது ஆவியாய் இருந்தால் இப்ப மட்டும் ஏன் அதைக் காணோம். ரெஸ்ட் எடுத்துக்குதா? கண்டிப்பாய் இதுக்குப் பின்னாடி யாரோ ஆட்கள் இருக்காங்க டாக்டர். நாம அதைக் கண்டுபிடிக்கணும்

 

சுகுமாரன் குழப்பத்துடன் கேட்டார். “நீங்க ஏன் அப்படி சொல்றீங்க?”

 

பாண்டியன் தன் மனதில் எழுந்த கேள்விகளைக் கேட்டார். “என் உள்ளுணர்வு இது வரைக்கும் பொய்யானதில்லை. நீங்களே யோசிங்க. ஏன் உங்க டாக்டர் வாசுதேவன் ஆவி வரலை? ஏன் சைத்ரா ஆவி மட்டும் வருது? அதுவும், அந்தப் பொண்ணு இறந்து இத்தனை காலம் கழிச்சு ஏன் வர ஆரம்பிக்குது? இதுக்கும் முன்னாடி எத்தனையோ பேர் இறந்து போயிருக்காங்க. அப்படி இறந்த ஆவிகள் ஏன் வரலை?”

 

ஒரு ஆவி வந்து படற பாடு போதாதா? இந்த ஆள் ஏன் மத்த ஆவிகள் வரலைன்னு கேட்கறான்? கல்லெடுத்து எறிஞ்சு அது இவன் மேல பாய வந்தும் சந்தேகப்படறான்னா என்ன சொல்றது?’ என்று மனதினுள் கடுகடுத்த சுகுமாரன் சொன்னார். “அதை ஆவிகளைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்க கிட்ட தான் கேக்கணும்.”

 

திடீரென்று டாமி குரைக்க ஆரம்பித்ததும் இருவரும் திடுக்கிட்டார்கள். டாமி எங்கு பார்த்து குரைக்கிறது என்று பார்த்தார்கள். ஹாலின் ஒரு மூலையைப் பார்த்து தான் டாமி குரைத்தது, அவர்கள் இருவரும் அங்கு திரும்பிப் பார்த்தார்கள். ஹாலில் அந்த மூலையில் கருகிப் போன சடலம் சுவர் ஓரமாகத் தெரிந்தது. சுகுமாரனின் இதயம் துடிப்பதை ஒரு கணம் நிறுத்தியது. பாண்டியனும் திடுக்கிட்டார் என்றாலும் அவர் பார்வை ஆராய்ச்சிப் பார்வையாக இருந்தது. குறிப்புகள் எடுக்கப் போகும் ஆராய்ச்சியாளன் பார்ப்பது போல அவர் பார்த்தார். ஓட முயன்ற சுகுமாரன் கையை இறுக்கமாகப் பிடித்து நிறுத்தினார்.

 

பாண்டியனின் பிடி இரும்புப் பிடியாய் இருந்தது. பார்வையை அந்தச் சடலத்தின் மீதிருந்து எடுக்காமல் பாண்டியன் சுகுமாரனிடம் கேட்டார். “இப்படி எத்தனை நாள் தான் ஓட முடியும்?”

 

அந்த கருகிய சடலத்திலிருந்து உடனடியாக, காரப்புகை மண்டலம் கிளம்ப ஆரம்பித்தது.  அந்தக் காரப் புகையை சுவாசித்துக் கொண்டு அங்கேயே இருவராலும் இருக்க முடியவில்லை. இருமியபடியே, வேறுவழியில்லாமல் பாண்டியனும் எழுந்து, சுகுமாரனுடன் வேகமாக வெளியே வந்தார். ஆனால் ஆவியால் துரத்தப்பட்டு வெளியேறும் நிலைமையை யோசிக்கையில் அவருக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

 

செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் ஸ்கேன்கள் எடுத்து அவர்கள் இருவரையும் பரிசோதித்த டாக்டர் அவர்கள் அமிலங்களுக்கு இணையான எதையும் உட்கொள்ளாமல் இப்படி வயிறு புண்ணாகியிருக்க வாய்ப்பேயில்லை என்று நினைத்தார். குடித்த மது அதிகமாகி, போதையில் வேறெதோவும் குடித்திருந்தால் ஒழிய இப்படி ஆகியிருக்காது என்பது அவரது அனுமானமாக இருந்தது. ஆனால் மேனேஜிங் டைரக்டரிடம் அதை அவரால் நேரடியாகச் சொல்ல முடியவில்லை. இன்னும் பத்து நாட்களுக்காவது புளி, காரம் சேர்க்காத பத்திய உணவைத் தான் சாப்பிட வேண்டும் என்று மட்டும் சொன்னார்.

 

சுகுமாரன் தலையசைத்தாலும் அவர் கவனம் அந்த டாக்டர் சொன்னதில் இருக்கவில்லை. இன்று மாலை அவர் மனைவியும், மகளும் கும்பகோணத்திலிருந்து திரும்பிவரப் போகிறார்கள். அவர்கள் பார்வைக்கும் ஆவி தெரிய வருமா, இல்லையா, என்று யோசித்துக் கொண்டிருந்தார். தெரிய வந்தால் அவர்கள் எதிர்வினை எப்படி இருக்கும்? ஒருவேளை அவர்களுக்கு ஆவி தெரியவரா விட்டாலும், டாமிக்குத் தெரிந்து அவன் குரைத்துக் கொண்டே இருந்தாலும், அவர் மனைவி திட்டுவாள். இந்த ஆள் கண்டிப்பாக இன்றைக்கு இரவு வரமாட்டான். இன்று இரவு ஆவி எப்படித் தெரியுமோ, என்ன செய்யுமோ? மனைவி, டாமி, ஆவி மூன்றையும் சேர்த்து சமாளிப்பது எப்படி?

 

பெருங்கவலையில் மூழ்கிய சுகுமாரன் பாண்டியனைத் தனதறைக்கு அழைத்துச் சென்று அமரவைத்துக் கேட்டார். “இனி நாம என்ன செய்யறது?”

 

பாண்டியன் சொன்னார். “அதைத் தான் நானும் யோசிச்சுகிட்டு இருக்கேன்

 

சுகுமாரன் தன் மிகப் பெரிய கவலையைச் சொன்னார். “இன்னைக்கு சாயங்காலம் என் மனைவியும், மகளும் வர்றாங்க.”

 

பாண்டியன் சொன்னார். “கூர்க்காவுக்கு ஆவி தெரியாத மாதிரி அவங்களுக்கும் தெரியாதுன்னு தோணுது. வேணும்னா நீங்களும், உங்கள் நாயும் எதாவது காரணம் சொல்லி வீட்டுல இன்னைக்குத் தங்காதீங்க.”

 

ஒரு நாளைக்கு சரி. நாளைக்கு, அடுத்த நாள்...? எதுக்கும் யோகி பிரம்மானந்தாவையும் கலந்தாலோசிக்கறது நல்லதில்லையா. இந்த மாதிரி விஷயங்கள்ல அவருக்குக் கண்டிப்பாய் நம்மள விட அதிக ஞானமிருக்கும்.”

 

நீங்க சொல்றதும் சரி தான். ஆனா அவர் நாளைக்கு மதியம் தான் வர்றார். வந்தவுடன் பேசுவோம். நிச்சயமாய் எதாவது வழி கண்டுபிடிப்போம். இன்னைக்கு ராத்திரி மட்டும் எப்படியாவது சமாளியுங்க.”

 

அவரளவு பாதிக்கப்படாமல் இன்னமும் பாண்டியன் ஓரளவு தைரியமாக இருந்தது சுகுமாரனையும் ஓரளவு தைரியப்படுத்தியது. அவர் மெல்லத் தலையசைத்தார். இருவரும் மௌனமானார்கள். நேற்றிரவே அவர்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து விட்டார்கள். இங்கு தான் உறங்க முயற்சித்தார்கள். ஆனால் இருக்கிற நிலைமை இருவரையும் உறங்க விடவில்லை. காலை ஆனவுடன் வயிறு சம்பந்தப்பட்ட டாக்டரை உடனடியாக வரவழைத்து, பரிசோதனை நடத்தி விட்டுத் தான் யோசிக்கிறார்கள்...

 

சுகுமாரன் வயிற்றுப் புண்ணிற்காகத் தானும் மருந்தை உட்கொண்டு பாண்டியனுக்கும் தந்தார். அதைக் குடித்து விட்டு பாண்டியன் கிளம்பினார். அவர் காரை ரிப்பேருக்குத் தர வேண்டும். கருகிய கார் சீட்டை மாற்ற வேண்டும். வழக்கமாய்ச் செய்யும் வேலைகளுடன் இந்த ஆவியைச் சமாளிக்கும் வேலையும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மற்ற வேலைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்ற தெளிவான சிந்தனை அவரிடம் இருக்கிறது. ஆனால் உண்மையாகவே ஆவி சமாச்சாரம் தானென்று அவரால் இன்னமும் முழுமையாக நம்ப முடியாத இந்த வேலை தான் புதியது, குழப்பமானது...

 

அவர் கூடுமான வரை எந்தப் பிரச்சினையையும், பிரம்மானந்தா வரைக்கும் செல்ல விடுவதில்லை. தானே பிரச்சினையைத் தீர்த்து விடுவார். அதன் பின்னும் அந்தப் பிரச்சினை வந்திருந்ததையே தேவைப்பட்டால் தான் அவர் பிரம்மானந்தாவிடம் சொல்வார். ஆனால் முதல் முறையாக பிரம்மானந்தாவை இந்தப் பிரச்சினை எட்ட வேண்டியிருக்கிறது

 

குமரேசனிடம் நேற்று மாலை தான் ஷ்ரவன் இந்த வேலையை ஒப்படைத்திருந்தான். வெளிப்பார்வைக்கு இது சுலபமான வேலை தான். ஆனால் யோகாலயத்தில் கண்காணிக்கும் நபர்களையும், காமிராக்களையும் மீறி, எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல் பாண்டியன் தங்குமிடத்தின் அருகே ஒரு பிடி மணலை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல. முடிந்த வரை கையுறை அணிந்து கொண்டு அந்த மண்ணை எடுத்துக் கொண்டு வந்தால் நல்லது என்றும் ஷ்ரவன் சொல்லியிருந்தான்.

 

பாண்டியன் தாவர அழகை ரசிப்பவரல்ல. அதனால் பாண்டியனின் இருப்பிடத்திற்கு அருகே தோட்டம் இல்லை.   தோட்டம்  அங்கு இல்லாததால் தோட்டக்காரர்கள் அந்தப் பகுதிக்குப் போக முடியாது. தவறி யாராவது போவது தெரிந்தால்  உனக்கு அங்கே என்ன வேலை?” என்று கேட்டுக் கொண்டு யாராவது வந்து விடுவார்கள்.  சொல்லும் பதில் அவர்களுக்குத் திருப்தி தராவிட்டால் அன்றோடு வேலையிலிருந்து நிறுத்தப்படும் அபாயமும் இருக்கிறது.

 

இப்போதைக்கு மண் எடுப்பதில் பெரிய கேள்விகள் எழப் போவதில்லை என்றாலும், சில நாட்களில் சந்தேகம் எழ வாய்ப்பிருக்கிறது என்று ஷ்ரவன் சொல்லியிருந்தான். அதனால் பாண்டியனின் தோட்டத்திலிருந்து சற்று தள்ளியிருந்த தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குமரேசன், யாருக்கும் எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல், எப்படி அந்த வாசலருகே இருந்து மண் எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். நேற்றிரவே பாண்டியன் எங்கேயோ வெளியே போயிருந்ததால் அவர் இருப்பிடத்திற்குச் சென்று வருபவர்களின் நடமாட்டம் இப்போது இல்லை. ஆனால் அவர் எந்த நேரத்திலும் வந்து விடலாம். அவர் வந்து விட்டால், அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டமும், கண்காணிப்பும் அதிகமாகி விடும். அதனால் விரைந்து செயல்பட வேண்டும்

 

இன்னொரு தோட்டக்காரன் சற்று தள்ளி மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். பாண்டியனின் வாசற்கதவுக்கு மேல் ஒரு கண்காணிப்பு காமிரா இருக்கிறது. ஆனால் நேரடியாகக் கண்காணிக்கும் நபர்கள் அருகில் யாரும் தற்போது இல்லை. அதனால், எல்லாக் கண்காணிப்பு காமிராக்களையும் கவனித்துக் கொண்டு இருக்கும் ஆள் மட்டும் அவன் நடவடிக்கையைக் கவனிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இயல்பாக அந்த வேலையைச் செய்து விட ஒரு உபாயம் குமரேசன் மனதில் மெல்ல உருவாகியது


(தொடரும்)

என்.கணேசன்




2 comments:

  1. மனைவி, டாமி, ஆவி மூன்றையும் சேர்த்து சமாளிப்பது எப்படி?



    Semmmmmaa sir.., nalla sirichiten..

    ReplyDelete
  2. பூந்தொட்டியில் நிரப்ப புதிய மண் தேவை என்று, பாண்டியன் இருப்பிடத்தில் குமரேசன் மண் எடுப்பார் என நினைக்கிறேன்....

    ReplyDelete