சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 14, 2023

யோகி 9


 

வீட்டுக்குத் திரும்பி வரும் போது சேதுமாதவனும், கிருஷ்ணமூர்த்தியும், முழு திருப்தியுடனோ, முழு அதிருப்தியுடனோ இருக்க முடியாத இரண்டும் கெட்டான் மனநிலையில் இருந்தார்கள். சைத்ரா உயிரோடிருக்கிறாள் என்பதில் திருப்தி ஏற்பட்டிருந்தாலும், அவள் எந்திரம் போல் நடந்து கொண்டது அவர்கள் மனதுக்கு நெருடலாகவே இருந்தது. கடைசியாக பார்வையால் துழாவி ஒரு கணம் மட்டுமே அவள் அவர்களைப் பார்த்தது எதனால், அந்தக் கணம் அவள் என்ன நினைத்தாள், ஏனப்படி நடந்து கொண்டாள் என்ற கேள்விகள் மனதில் விஸ்வரூபம் எடுத்து தங்கின.

 

அவர்களுடன் காரில் இருந்த மைக்கேலும், அமீர் பாயும் கூட நடந்திருப்பதில் செயற்கைத்தனமும், ஏதோ தில்லுமுல்லும் இருப்பதாக உணர்ந்தார்கள். மைக்கேல் சொன்னார். “சைத்ரா கூட இருந்த ரெண்டு சன்னியாசிகளும் கூட ரொம்ப டென்ஷனாய் உட்கார்ந்திருந்ததாய் எனக்குத் தோணுச்சு. கோர்ட்டை விட்டு வெளியே போறப்ப தான் அவங்க ரெண்டு பேரும் ரிலேக்ஸ் ஆனதை நான் கவனிச்சேன்.”

 

அமீர் பாய் சொன்னார். “ஆமா. நானும் அதைக் கவனிச்சேன்

 

கிருஷ்ணமூர்த்தி விரக்தியுடன் சொன்னார். “ஆனாலும் இனி நாம எதுவும் செய்ய வழியில்லை. ஒரே ஒரு ஆறுதல் என்னன்னா, அவளுக்கு ஆபத்து இருக்குன்னு நாம நினைக்கறதை உலகத்துக்கே தெரியற மாதிரி செஞ்சுட்டோம். அதனால அவளுக்கு எதிரா இனி ஏதாவது வில்லங்கமான காரியம் செய்யறதுக்கு அவங்க தயங்குவாங்கன்னு நினைக்கிறேன்…”

 

அந்த நம்பிக்கையுடன் அவர்கள் வாழ ஆரம்பித்தார்கள். கொரோனா வைரஸின் தாக்கம் குறைவது போல் தோன்றி மறுபடியும் அதிகரிக்க ஆரம்பித்தது. எல்லா மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்ப ஆரம்பித்தன. பல மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. அரசு மருத்துவமனைகளில் இடமில்லாமல் வேறு கட்டிடங்களிலும் நோயாளிகளுக்கு இடவசதி செய்து தர வேண்டிய நிலைமை உருவாகியது. ஒருவர் இறந்தோ, குணமாகியோ படுக்கை காலியானால் அதற்காக மூன்று பேர் போட்டி போட்டுக் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாக ஆரம்பித்தது. கொரோனா பாதிப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் தினமும் அதிகரிக்க ஆரம்பித்தது.

 

டாக்டரான கிருஷ்ணமூர்த்தியும் நேரம் காலம் பார்க்காமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை தந்தார். ஒரே வீதியில் இருந்தும் அமீர் பாயும், மைக்கேலும், சேதுமாதவனும் கூட, சந்திக்க முயற்சி செய்யாமல் மறுபடியும் பாதுகாப்பாக அவரவர் வீடுகளில் இருந்து கொண்டார்கள்.

 

இப்படிப்பட்ட சூழலில் தான் ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தியை யோகாலயத்தில் இருந்து அழைத்தார்கள். யோகாலயத்தில் நான்கு துறவிகள் கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் அதில் சைத்ராவும் ஒருத்தி என்றும் சொன்னார்கள். பயப்படும்படியான நிலைமை இல்லை என்றும்நால்வரையும் மருத்துவமனைகளில் சேர்க்க முயற்சி எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கெனவே நீதிமன்றம் சென்ற அவரிடம் இத்தகவலைத் தெரிவிக்காமல் போனால், அதையும் அவர் தவறாக எடுத்துக் கொண்டு தகராறு செய்யும் வாய்ப்பு உள்ளது என்ற முன்னெச்சரிக்கையுடன் தகவல் தெரிவிக்கும் தொனி அந்த நபர் பேசியதில் தெரிந்தது.    

 

பயப்படும்படியான நிலைமை இல்லை என்று அந்த நபர் சொன்னதால் கிருஷ்ணமூர்த்தி பயப்படவில்லை. முன்பு போலல்லாமல், இப்போது அவரை மதித்து தகவல் தெரிவிக்கிறார்கள் என்பதே அவருக்குத் திருப்தியாக இருந்தது. வீட்டுக்கு வந்து தந்தையிடமும் அத்தகவலைச் சொன்னார். மறுநாள் மாலை மறுபடியும் அதே நபர் அழைத்து, நால்வருக்கும் ஒரே மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை என்றும் சைத்ராவையும், இன்னொரு துறவியையும்  செவென் ஸ்டார் மருத்துவமனையிலும், மற்ற இரண்டு துறவிகளை கங்கா மருத்துவமனையிலும் சேர்த்திருப்பதாகத் தகவல் சொல்லும் தொனியில் தெரிவித்தார். நால்வரும் நலமாகத் தான் இருக்கிறார்கள் என்றும் சொன்னார்

 

கிருஷ்ணமூர்த்தி அன்றிரவு வீட்டுக்கு வந்து தன் தந்தையிடம் சொன்னார். “இதையே ஒரு சாக்காய் வெச்சு நாளைக்கு அவளைப் பார்த்து பேசிட்டு வந்தா என்னன்னு யோசிக்கிறேன்ப்பா. அவ கிட்ட ஒரே ஒரு தடவை பேசிட்டா கொஞ்சம் நிம்மதியாய் இருக்கும்.”

 

சேதுமாதவனுக்கும் அது நல்லதென்று தோன்றியது. கிருஷ்ணமூர்த்தி சைத்ராவின் தந்தை மட்டுமல்லாமல், ஒரு டாக்டரும் கூட என்பதால், அந்த மருத்துவமனைக்குச் சென்று அவளை அவர் சந்திப்பதில் பிரச்சினை எதுவும் இருக்காது என்றும் சேதுமானதவனுக்குத் தோன்றியது.  ஒருவேளை, யோகாலயத்து ஆட்களின் ஈகோ பிரச்சினையால் தான் விதிமுறைகளை மீறிச் சந்திக்க அன்று அனுமதிக்கவில்லையோ, அதே காரணத்தினால் தான் பின்வாங்க மனமில்லாமல் கோர்ட் வரை சென்றார்களோ என்று அவரும், கிருஷ்ணமூர்த்தியும் பேசிக் கொண்டார்கள். அப்போது ஒத்துக் கொள்ள முடியா விட்டாலும், அடுத்த சந்தர்ப்பம் வரும் போது தாங்கள் நியாயமாக நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்ளத் தான் இப்போது ஒவ்வொரு நடவடிக்கையையும் சொல்கிறார்கள் என்றும் நினைத்துக் கொண்டார்கள்.

 

அன்று நள்ளிரவு ஒன்றரை மணிக்கு கிருஷ்ணமூர்த்தியின் கைபேசிக்கு அழைப்பு வந்தது. இந்த முறை அழைத்தது வேறு நபர்.. இரவு திடீரென்று சைத்ராவின் உடல்நிலை மோசமாகி விட்டதாகவும், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் கோவிட்-19 ன் திடீர் விளைவுகளிலிருந்து சைத்ராவைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், அவள் சில நிமிடங்களுக்கு முன் இறந்து விட்டதாகவும் வருத்தமான குரலில் அந்த நபர் சொன்னார். அவர் அந்த மருத்துவமனையில் இருந்து தான் பேசுவதாகவும் சொன்னார்.

 

கிருஷ்ணமூர்த்தி உடைந்து போனார். நடந்ததை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவருக்கு விளங்கவில்லை. தகவல் கேள்விப்பட்டு சேதுமாதவனும் துக்கத்தில் மூழ்கினார்.

 

கிருஷ்ணமூர்த்தி அப்போதே செவென் ஸ்டார் மருத்துவமனைக்குப் போனார். இந்த முறை மருத்துவமனையின் வாசலில் அவரைச் சந்தித்துப் பேசியது யோகாலயத்திலிருந்து வந்திருந்த வேறொரு நபர். அவர் தான் போனில் பேசியவர். இரவு எட்டு மணிக்கு மேல் திடீரென்று சைத்ரா மூச்சு விடச் சிரமப்பட ஆரம்பித்ததாகவும், உடனே ஐ சி யூவுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை செய்தும் பலன் அளிக்கவில்லை என்றும் மிக வருத்தமான தொனியில் சொன்னார்கிருஷ்ணமூர்த்தி ஜீவனில்லாமல் தலையாட்டினார்.

 

கொரோனாவால் சைத்ரா மரணம் அடைந்திருப்பதால் நோய்த் தொற்று பரவாமல் இருக்க, பிணம் யோகாலயத்திடமோ, கிருஷ்ணமூர்த்தியிடமோ ஒப்படைக்கப்படவில்லை. மறு நாள் மதியம் சைத்ராவின் சாம்பல் மட்டும் தான் கிருஷ்ணமூர்த்திக்குக் கிடைத்தது.

 

பேரழுகை அழுது ஓய்ந்து, நடந்ததை எல்லாம் யோசித்துப் பார்த்த போது, நடந்தது எல்லாமே நாடகமோ என்ற சந்தேகம் கிருஷ்ணமூர்த்தியின் மனதில் பலமாக எழ ஆரம்பித்ததுசைத்ராவைக் கொல்ல கோவிட் நிலைமையை யோகாலயத்தில் பயன்படுத்திக் கொண்டார்களோ என்ற சந்தேகம் வலுத்தது. ஒரேயடியாகச் சொல்வதற்குப் பதிலாக  படிப்படியாக நாடகத்தை அவர்கள் அரங்கேற்றியிருக்கிறார்கள் என்றே கிருஷ்ணமூர்த்தியும், சேதுமாதவனும் நினைத்தார்கள். தொலைபேசியில் அவர்களிடம் பேசிய மைக்கேல் மற்றும் அமீர் பாயின் கருத்தும் அதுவாகவே இருந்தது. தான் மிகவும் தந்திரமாக ஏமாற்றப்பட்டிருப்பதை கிருஷ்ணமூர்த்தி மெள்ள உணர்ந்தார்.

 

கிருஷ்ணமூர்த்தி அடுத்த நாள் காலை செவென் ஸ்டார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே வரவேற்பறையில் ஒரு நர்சிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்த டாக்டர் அவருக்கு மிகவும் பரிச்சயமான நபராகத் தோன்றவே ஒரு கணம் நின்று உற்றுப் பார்த்தார். முகக்கவசம் இருந்ததால் அவருக்கு முதலில் நிச்சயமாகத் தெரியவில்லை என்றாலும், அந்த டாக்டரின் வலது கையிலிருந்த தழும்பைப் பார்த்த பின் உறுதியானது. அவருடன் மருத்துவக் கல்லூரியில் படித்த வாசுதேவன். சற்று நெருங்கிச் சென்று மெல்ல அழைத்தார். “வாசு

 

வாசுதேவன் திரும்பி அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தார். கிருஷ்ணமூர்த்தி தன் முகக்கவசத்தைக் கழற்றிய போது அவர் அடையாளம் கண்டு கொண்டு,. “கிருஷ்ணா!” என்று ஆச்சரியத்துடன் அழைத்தார். பல வருடங்கள் கழித்து நண்பனைப் பார்த்த உற்சாகம் வாசுதேவனிடம் தெரிந்தது. “எத்தனை வருஷமாச்சு கிருஷ்ணா? வா வா…” என்று சொல்லி அவருடைய அறைக்கு அழைத்துப் போனார்.

 

கிருஷ்ணமூர்த்தி கேட்டார். “நீ மதுரையில் அல்லவா இருந்தாய்? இங்கே எப்போது வந்தாய்?”

 

இங்கே வந்து நாலு வருஷமாச்சு.  நீ எப்படியிருக்கே கிருஷ்ணா?”

 

நான் முந்தாநாளும், நேத்தும் இங்கே வந்திருந்தேன். அப்பவெல்லாம் உன்னைப் பார்க்கலயே.”

 

முந்தாநாள் ராத்திரி பத்து மணி வரைக்கும் இங்கே இருந்தேனே. பிறகு தான் போனேன். மதுரை போயிருந்தேன். மாமனார் அங்கே ஒரு ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருந்தார். அவரைப் பார்த்துட்டு வரப் போனேன். இன்னைக்கு காலைல தான் திரும்பி வந்தேன். நீ என்ன விஷயமாய் நேத்தும், முந்தாநாளும் இங்கே வந்திருந்தாய்?” என்று கேட்டபடியே மேசையிலிருந்த பாட்டில் தண்ணீரை எடுத்துக் குடித்தார்.

 

என் மகள் சைத்ரா முந்தாநாள் ராத்திரி கோவிட்ல இறந்து போனா. அவ யோகாலயத்துல சன்னியாசியா இருந்தவ...”

 

தண்ணீர் குடிப்பதை நிறுத்தி விட்டு பாட்டிலை அந்தரத்தில் பிடித்தபடியே வாசுதேவன் அதிர்ச்சியுடன் நண்பனைப் பார்த்தார்.


(தொடரும்)

என்.கணேசன்



2 comments:

  1. சைத்ரா இறந்துட்டாறா....?என்னங்க ஐயா... நாவல் ஆரம்பத்துலையே அதிர்ச்சிய தரிங்க??

    ReplyDelete
  2. Chaitra did not die. Yogi group plotted. That is why Dr. Vasudevan raised his water bottle in surprise or shock. Chaitra is alive and well. She was not at admitted in the hospital.

    ReplyDelete