சாணக்கியர் தன் முன்னாள் மாணவனின் வேண்டுகோளுக்கு சரி என்றோ முடியாது என்றோ சொல்ல முடியாதவராய் யோசித்தார். ஆம்பி குமாரன் திருந்தி வந்திருக்கிறான் என்று அவர் நம்பவில்லை. அவனால் அவருடைய எந்த அறிவுரையையும் பின்பற்ற முடியும் என்றும் அவர் நம்பவில்லை, அவனுடைய ராஜகுருவாக ஆக அவருக்கு விருப்பமும் இல்லை. ஆனால் அவன் உத்தேசம் என்ன என்பதை அவர் அறிந்து கொள்ள விரும்பினார். அதனால் அவனிடம் சொன்னார். “முக்கியமான எந்த விஷயத்திலும் நான் தீர்மானிப்பதற்கு முன் இறைவனின் அனுமதியைப் பெற்ற பின்பே முடிவெடுப்பது வழக்கம். ஏனென்றால் இறைவனின் அனுமதியும் ஆசிர்வாதமும் இல்லா விட்டால் நல்லது எதுவும் நடக்க முடியாது….”
ஆம்பி குமாரன் ஆச்சாரியரின் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர் தன்னைத் தவிர,
தன் அறிவைத் தவிர வேறு எதையும் நம்பியோ, கடவுள்
உட்பட யாருடைய அனுமதியை எதிர்பார்த்தோ அவன் இதுவரை கண்டதில்லை. எதிலும் தெளிவான முடிவை உடனடியாக எடுக்கக்கூடிய மனிதர் இப்போது என்ன புதுக்கதை
சொல்கிறார் என்று யோசித்தவனாகக் கேட்டான். ”இறைவனின் அனுமதியை
எப்படிப் பெறுவீர்கள் ஆச்சாரியரே?”
“இறைவன் அனுமதிப்பதும், மறுப்பதும் சகுனங்கள் வழியாக எனக்குத்
தெரிய வரும் ஆம்பி குமாரா. அதற்கு சில நாட்கள் கால அவகாசம் வேண்டும்.”
“நல்ல விஷயங்களுக்கு இறைவனின் அனுமதி எப்போதும் மறுக்கப் படுவதில்லை என்று நான்
நம்புகிறேன் ஆச்சாரியரே. எதற்கும் தாங்கள் தங்களுக்காகக் கட்டியிருக்கும்
மாளிகையைப் பார்வையிடும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மிகவும்
ஆலோசித்துத் தான் கட்டியிருக்கிறோம் என்றாலும் சிறு திருத்தங்கள் ஏதாவது செய்தால் மேலும்
சிறப்பாக இருக்கும் என்று தாங்கள் நினைத்தால் அவற்றையும் உடனடியாகச் செய்துவிட நான்
விரும்புகிறேன். அதனால் தாங்கள் இப்போதே அதனைப் பார்வையிட வர
வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
கல்வி கற்கும் காலத்திலிருந்தே எந்த நல்லதையும் உடனடியாகச் செய்து
பழக்கமில்லாத ஆம்பி குமாரன் இப்போது படும் அவசரத்தைப் பார்க்கையில் அது நல்லதாக இருக்க
வாய்ப்பில்லை என்று சாணக்கியருக்கு மீண்டும் உறுதியாகியது.
“உன் விருப்பம்
அதுவானால் இப்போதே செல்வோம்.” என்று சாணக்கியர் எழ ஆம்பி குமாரனும் பரமதிருப்தியுடன் எழுந்தான்.
”ஆச்சாரியருக்காகக்
கட்டப்பட்டிருக்கும் மாளிகையைக் காண நானும் வருகிறேன்” என்று சந்திரகுப்தன்
போலி உற்சாகத்தை வெளியில் காட்டி, நிஜத்தில்
எச்சரிக்கையுடன் சொன்னான்.
ஆம்பி குமாரன் யோசிப்பதற்குள் சாணக்கியர்
சந்திரகுப்தனிடம் சொன்னார். “நான் மன்னருடன் செல்கிறேன். நீ பின்னாலேயே
வா சந்திரகுப்தா”
அதற்கு மேல் சொல்ல எதுவும் தோன்றாததால்
ஆம்பி குமாரன் கிளம்பினான். ஆச்சாரியரை அவன் தன் ரதத்தில் ஏற்றிக் கொள்ள அவர்களைப் பின்
தொடர்ந்து சந்திரகுப்தன் குதிரையில் சென்றான்.
செல்லும் வழியில் சாணக்கியர் கேட்டார். ”என் மேல் உனக்கிருக்கும்
அன்பையும், என் சௌகரியங்களிலும், என் விருப்பங்களிலும்
உனக்கிருக்கும் அக்கறையையும் எண்ணி வியக்கிறேன். உன் இந்த திடீர்
விருப்பத்திற்குக் காரணம் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா ஆம்பி குமாரா”
“இந்த விருப்பம் திடீரென்று ஏற்பட்டதல்ல ஆச்சாரியரே. நீண்ட
நாளாக மனதில் இருந்தது தான். சமீப காலமாக மக்களிடையேயும் ஏதோ
ஒரு வித்தியாச எழுச்சியை என்னால் காண முடிகிறது. அந்த சமயத்தில்
காந்தார நிர்வாகத்திலும் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியதால்
நீண்ட நாள் எண்ணத்தை உடனடியாக செயல்படுத்துவது என்று முடிவு செய்தேன்.”
குழப்பாமல் இயல்பாக அவரிடம் இப்படிச் சொல்ல முடிந்ததற்காக ஆம்பி
குமாரன் தன்னையே மனதிற்குள் பாராட்டிக் கொண்டான். மெல்ல ஆச்சாரியர் மனதில் இருப்பதையும் தெரிந்து
கொள்ள விரும்பியவனாக அவன் தந்திரமாகக் கேட்டான். “ஆச்சாரியரே
சமீப காலமாக மக்களிடம் தெரிய ஆரம்பித்திருக்கும் மாற்றம் உங்கள் கவனத்திற்கும் வராமல்
இருந்திருக்காதே. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இப்போது சில காலமாக நீங்கள் அதிகமாய் பயணங்களையும் மேற்கொள்வதால் மக்கள் மனதை
அறிவது உங்களுக்குச் சுலபமாக இருக்குமென்பதால் தான் கேட்கிறேன்.”
சாணக்கியர் அவனைக் கூர்ந்து பார்த்துச் சொன்னார். “மக்கள் இத்தனை நாட்களாக
ஜடங்களாக இருந்தார்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைத் தாண்டி,
தனிப்பட்ட இலாப நஷ்டங்களைத் தாண்டி, அவர்கள் சிந்தனைகள்
சென்றதில்லை. ஆனால் இப்போது அவர்கள் பார்வைகளும், சிந்தனைகளும் விரிவடைந்திருப்பதை என்னால் பார்க்க முடிகிறது.”
ஆம்பி குமாரன் மெல்லக் கேட்டான். “அதற்குக் காரணம் என்னவாக
இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஆச்சாரியரே?”
“யவனர்கள் அவர்களைச் சிந்திக்க வைத்து விட்டதாகத் தான் தோன்றுகிறது.”
என்று சாணக்கியர் சுருக்கமாகச் சொன்னார்.
அது எந்த வகையில் என்று கேட்க நினைத்தாலும் அது அளவுக்கும் மீறி
குடைந்து கேட்பது போலாகி விடும் என்று நினைத்தும், அவர் நீண்ட பிரசங்கம் செய்ய வாய்ப்பிருப்பதால்
அது தலைவலி ஏற்படுத்தக்கூடும் என்று நினைத்தும் ஆம்பி குமாரன் அதற்கு மேல் கேள்விகள்
கேட்காமல் நிறுத்திக் கொண்டான்.
ஆச்சாரியருக்காக அவன் கட்டியிருந்த மாளிகையை அடைந்தார்கள். அவர்கள் இருவரும் மாளிகைக்குள்
நுழைந்த போது சந்திரகுப்தனும் கூடவே இருந்தான். அவன் பார்வை உறுதியாகவும்,
சுற்றிலும் இருப்பதைக் கவனமாகப் பார்ப்பதில் அலட்சியம் இல்லாததாகவும்
இருந்ததை ஆம்பி குமாரன் கவனித்தான். ஆச்சாரியருக்கு ஏதாவது ஆபத்து
என்றால் அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்வதற்குள் தன் உயிரைப் பலி கொடுக்கவும் அவன்
தயங்க மாட்டான் என்பது தெரிந்தது. இது ஆச்சாரியரின் பாக்கியம் என்று ஆம்பி குமாரனுக்குத் தோன்றியது. அவன் கல்வி கற்கும் போதும் ஒருசில மாணவர்கள் அவரிடம் இதே உணர்வுடன் இருந்தார்கள்….
மாளிகை பெரியதாகவும்,
சகல வசதிகளும் கொண்டதாகவும் இருந்தது. சாணக்கியர்
மாளிகையைச் சுற்றிப் பார்த்த போது ஆம்பி குமாரன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனிடம் இருந்த பதற்றத்தை அவன்
சிரமப்பட்டு வெளியே காண்பிக்காமல் இருந்தாலும் அவரால் அதை உணர முடிந்தது. ஆனால் உணர்ந்ததை அவரும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவர் மிகுந்த ஆர்வத்துடன் அங்கிருந்த வேலைப்பாடுகளை ரசித்துப் பாராட்டிக் கொண்டிருந்தார்.
அவருடன் இருந்த சந்திரகுப்தன் ஜன்னல்களையும், கதவுகளையும்,
சுவர்களையும் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவற்றிலும் கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் நிறைய இருந்தன.
ஆம்பி குமாரன் பணிவோடு சொன்னான். “ஏதாவது மாற்றங்கள்,
கூடுதல் வசதிகள் தேவையானால் என்னிடம் சொல்லுங்கள். உடனே அதற்கு ஏற்பாடுகள் செய்கிறேன்.”
சாணக்கியர் சொன்னார்.
“இதுவே அடியவனுக்குத் தாராளம் ஆம்பி குமாரா. இத்தனை
செலவு செய்து ஆடம்பரமாக இதனைக் கட்டியிருக்கத் தேவையில்லை.”
ஆம்பி குமாரன் முகத்தில் திருப்தியும் நிம்மதியும் தெரிந்தன. “உங்களுக்கு இனியும் நான்
அதிக செலவு செய்திருந்தாலும் அது உங்கள் தகுதிக்கும், பெருமைக்கும்
ஈடாகாது ஆச்சாரியரே” என்று பணிவுடன் கைகூப்பிச் சொன்னான்.
சாணக்கியர் சொன்னார். “பார்ப்போம். எனக்கு
சகுனங்கள் என்ன உத்தரவினைத் தருகிறதென்று. சில நாட்களில்
பதில் சொல்கிறேன்.”
ஆம்பி குமாரன் அவரைத் திரும்பவும் கல்விக்கூடத்தில்
கொண்டு போய் விட்டுச் சென்றான்.
அவன் போன பிறகு சாணக்கியர் சந்திரகுப்தனைக் கேட்டார். “மாளிகை எப்படி இருந்தது சந்திரகுப்தா?”
சந்திரகுப்தன் கோபத்தில் கொதித்தபடி சொன்னான். “ஆச்சாரியரே எனக்குத் தெரிந்தது
உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தும்
அவனைச் சகித்துக் கொண்டு உங்களால் எப்படி இயல்பாகப் பேச முடிகிறது?”
சாணக்கியர் சொன்னார்.
“சந்திரகுப்தா. காலத்தாலும், அனுபவங்களாலும் மாற்ற முடியாத மனிதர்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.
அவர்களோடு நாம் ஒட்டி உறவாடா விட்டாலும், அவர்களாக
நம்மிடம் வரும் போது அவர்களைச் சகித்துக் கொள்ளவே வேண்டியிருக்கிறது. நீ உன் வாழ்வில் உயரங்களுக்குப் போகும் போது இந்தக் கலையை முக்கியமாகக் கற்றுக்
கொள்ள வேண்டும். அதை விடு. நீ ஏன் கோபப்படுகிறாய்
அதற்கான காரணத்தைச் சொல்.”
“எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்களை எல்லாம் வைத்து மாளிகையைக் கட்டி இருக்கிறான்
ஆச்சாரியரே. உங்களை உயிரோடு எரிக்கும் திட்டத்தை உங்கள் முன்னாள்
மாணவன் தீட்டியிருக்கிறான்.”
ஆச்சாரியர் புன்னகைத்தார். சந்திரகுப்தன் அதைக் கண்டுபிடிக்காமலிருந்தால்
தான் அவருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். “மகாபாரதத்தில் அரக்கு
மாளிகையில் பாண்டவர்களைக் கொல்ல துரியோதனன் செய்த சதியை இங்கே அரங்கேற்கப் பார்க்கிறான்
ஆம்பி குமாரன். அவனுடைய அறிவுக்குத் தனித்துவமாக எதுவும் எட்டாது.
சதியிலும் எங்காவது கடன் வாங்கி தான் அவன் யோசிக்க முடியும்.
பாவம்!”
(தொடரும்)
என்.கணேசன்
ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 165, 166 (தமிழ்த்தேசம் புத்தக அங்காடி) யில் என் நாவல்கள் அனைத்தும் கிடைக்கும்.
சாணக்கியருக்கு வலை விரித்து அதில் ஆம்பி குமாரனே சிக்கிக்கொள்வான் போல....
ReplyDelete