சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 7, 2023

யோகி 8

 

நீதிமன்றம் முன்னுரிமை தந்து வழக்கை எடுத்துக் கொண்டு, சைத்ராவை நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஆஜராக்க உத்தரவிட்டது மறுபடியும், பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளை, அதில் பெரிதாக ஆர்வம் காட்ட வைத்தது. கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டிலேயே அதிகம் முடங்கிக் கிடந்ததால் பொதுவெளியில் சுவாரசியமாக எதுவும் நடக்கவில்லை. கொரோனா கொடுமை பற்றியும், மரணங்கள் பற்றியும் சொல்லிச் சொல்லியே சலித்திருந்த ஊடகங்கள் ஒரு மாறுதலுக்குக் கிடைத்த இந்த சுவாரசிய செய்தியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். பத்திரிக்கைகள் கேள்விக்குறிகள், ஆச்சரியக்குறிகள் போட்டு தங்கள் கற்பனை யூகங்களை மறுபடியும் எழுத ஆரம்பித்தன. தொலைக்காட்சிகள் அரைகுறை செய்திகளை, சந்தேகப்படும் தொனியில் சொல்லி மக்கள் மனதில் பலப்பல கேள்விகளை எழுப்ப வைத்தன.

 

மறுபடியும் நிருபர்கள் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குப் படையெடுத்து வர ஆரம்பித்தார்கள். முகக்கவசங்களுடன் முறையாக வந்த அவர்களை, முகக்கவசத்துடன் வந்து அமர்ந்திருந்த அமீர் பாய் எதிர்கொண்டு சுருக்கமாகப் பதில் சொல்லித் திருப்பி அனுப்பினார். ஆனால் வில்லங்கமான கேள்விகளுடன் வந்திருந்த ஒரு நிருபர், பிடிகொடுக்காத சுருக்கமான பதில்களால் திருப்தியடையவில்லை என்பதோடு அங்கிருந்து போகவும் மறுத்து, “நீ யார் என்னைப் போகச் சொல்ல? எங்கே சைத்ராவின் அப்பாவும், தாத்தாவும்?” என்று கேட்க, அமீர் பாய் அவரை நன்றாகத் திட்டி விரட்டி விட்டார்.

 

கோபமடைந்த அந்த நிருபர் ஒரு இஸ்லாமியரின் ஆதிக்கத்தில் சைத்ராவின் தந்தையும், தாத்தாவும் இருப்பதாகவும், அவருடைய தூண்டுதலால் தான் யோகாலயத்துக்கு எதிராக இந்த வழக்கு போடப்பட்டிருக்கிறது என்றும் தன் பத்திரிக்கையில் எழுதினார்., மற்ற ஊடகங்கள் அதைப் பலமாகப் பிடித்துக் கொண்டன. அந்தக் கோணத்தில் இந்த விஷயத்தை அலச ஆரம்பித்தன. மறுபடியும் பல யூகங்கள், கற்பனைகள், கேள்விக்குறிகள், ஆச்சரியக் குறிகள், விவாதங்கள்...

 

சேதுமாதவனும், கிருஷ்ணமூர்த்தியும் பத்திரிக்கைகள் படிப்பதையும், தொலைக்காட்சி பார்ப்பதையும் நிறுத்தி விட்டார்கள். சைத்ராவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் நாள் வரும் வரை எப்படியோ தாக்குப் பிடித்தார்கள். காலம் ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் முடிவில் அந்த நாள் வந்தது.

 

அன்று நீதிமன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. எத்தனையோ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த போதும், அதைப் பொருட்படுத்தாமல்  முகக்கவசங்கள் அணிந்து கொண்டு மக்கள் வந்திருந்தார்கள். போலீசாருக்கு அவர்களைக் கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருந்தது. கொரோனா தொற்றால் வீட்டில் அடைந்து கிடந்து அலுத்துப் போன மக்கள், இந்த சுவாரசியமான வழக்கை ஒரு சாக்காக வைத்து விட்டு வெளியே வந்திருப்பதாக ஒரு நிருபர் இன்னொரு நிருபரிடம் சொன்னது கிருஷ்ணமூர்த்தியின் காதில் விழுந்தது. அவர்களது பிரச்சினை மக்களுக்குச் சுவாரசியமான பொழுது போக்காக இருப்பதைக் கேட்டு கிருஷ்ணமூர்த்தி மனம் நொந்தார்.  

 

நீதிமன்றத்துக்கு அமீர் பாயும், மைக்கேலும் கூட வந்திருந்தார்கள். அமீர் பாயைப் பார்த்தவுடன் அவரால் விரட்டியடிக்கப்பட்ட நிருபர் விரைந்து வந்தார். அவர் கிண்டலாக அமீர் பாயைக் கேட்டார். ”உங்களுக்கும் இவர்களுக்கும் என்ன உறவு?”

 

அமீர் பாய் பதில் சொல்வதற்கு முன் மைக்கேல் புன்னகையுடன் சொன்னார். “உங்களுக்கும் உண்மைக்கும் உள்ளதைப் போல் அல்லாமல் நெருங்கிய உறவு தான்

 

அதற்கு மேல் கேள்விகளால் துளைக்கப்படாதபடி கிருஷ்ணமூர்த்தியின் வக்கீல் அவர்கள் நால்வரையும் நீதிமன்றத்தின் உள்ளே அழைத்துக் கொண்டு போனார்.

 

நீதிமன்றம் துவங்குவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாக யோகாலயத்தினர் சைத்ராவை நீதிமன்றத்துக்கு ஒரு காரில் அழைத்து வந்தார்கள். சைத்ராவுடன் யோகாலயத்தின் வக்கீல், ஒரு பெண் துறவி, ஒரு ஆண் துறவி இருந்தார்கள். சைத்ராவைப் பார்த்தவுடன் நீதிமன்றத்துக்கு வெளியே இருந்த நிருபர்களின் கூட்டம் விரைந்தது. போலீஸார் சைத்ராவை நிருபர்கள் நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியிருந்தும் தொலைவில் இருந்தபடியே நிருபர்கள் கேள்விகள் கேட்டார்கள். ”நீங்கள் யோகாலயத்தில் சுதந்திரமாகத் தான் இருக்கிறீர்களா?” “உங்களுக்கு ஆபத்து இருப்பது உண்மையா?” “ஏன் நீங்கள் உங்கள் தந்தையைச் சந்திக்க மறுத்தீர்கள்?” “ஏதாவது பதில் சொல்லுங்கள்.”

 

எந்தக் கேள்வியும் காதில் விழாதவள் போலவே சைத்ரா நேர் பார்வை பார்த்தபடி நடந்து சென்றாள். உள்ளே சென்ற பின்னும் தந்தையையோ, தாத்தாவையோ அவள் திரும்பியும் பார்க்கவில்லை. வெறித்த நேர் பார்வை பார்த்தவளாக அவள் அமர்ந்திருந்தாள்.

 

மகளை நேரில் பார்த்தவுடன், அவள் உயிரோடிருக்கிறாள் என்பது உறுதியானதால் கிருஷ்ணமூர்த்திக்கு உடனடியாகக் கண்களில் நீர் நிறைந்தது.  மனம் சற்று நிம்மதியடைந்தாலும் அவள் அவர் பக்கம் திரும்பியும் பார்க்காதது அவருக்கு நெருடலாக இருந்தது. அவள் மட்டுமல்லாமல் அவளுடன் இருந்த ஆண் துறவியும், பெண் துறவியும் கூட எந்தப் பக்கமும் திரும்பாமல் நேர் பார்வை பார்த்தபடியே அமர்ந்திருந்தார்கள்.  

 

கிருஷ்ணமூர்த்தி தந்தையிடம் சொன்னார். “சைத்ரா கூட இருக்கிற அந்த சன்னியாசி தான் யோகாலயத்தில் என் கிட்ட பேசின ஆள்.”

 

சேதுமாதவன் பேத்தியையும், பேத்தியுடன் இருக்கும் இரண்டு துறவிகளையும் கூர்ந்து பார்த்தார். மூவரும் மிக அமைதியாக நேர் பார்வை பார்த்தபடி அமர்ந்திருப்பது இயல்பானதாகத் தெரியவில்லை. துறவிகள் அமைதியாக இருப்பது சரிதான். ஆனால் இராணுவத்தினர் அணிவகுப்பில் இருப்பது போல் இறுக்கமான அமைதியாய் இருப்பது துறவிகளுக்கான அமைதி அல்ல. பேத்தியுடன் இருந்த துறவிகளின் அமைதி, மேலதிகாரியின் கண்காணிப்பில் இருக்கும் இராணுவ வீரர்களின் இறுக்கமான அமைதி போல் தான் தோன்றியது. ஆனால் சைத்ராவின் அமைதி விரக்தியின் காரணமாக எழுந்த அமைதி போலிருந்தது.

 

நீதிபதி வந்தவுடன் அனைவரும் எழுந்தார்கள். பின் நடந்ததெல்லாம் மிக வேகமாக நடப்பது போல் சேதுமாதவனும், கிருஷ்ணமூர்த்தியும் உணர்ந்தார்கள்.  அவர்களது வக்கீலும், யோகாலயத்தின் வக்கீலும் நீதிபதி அருகில் சென்று அவரிடம் பேசினார்கள். பின் நீதிபதி எதோ சொல்ல, இரண்டு வக்கீல்களும் தலையசைத்தார்கள்.  பின் இரண்டு வக்கீல்களும் அவரவர் இருக்கைகளுக்கு வந்தார்கள்.

 

யோகாலயத்தின் வக்கீல், நீதிமன்ற ஆணைக்கு இணங்க துறவி சைத்ராவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருப்பதாகச் சொன்னார்.  பின் சைத்ரா அழைக்கப்பட, அவள் எழுந்து சாட்சிக் கூண்டுக்குச் சென்றாள். அவளிடம் நீதிபதி கேட்டார். ”உங்களுக்கு யோகாலயத்தில் ஆபத்தோ, அச்சுறுத்தலோ இருக்கிறதா?”

 

சைத்ரா உடனடியாகச் சொன்னாள். “இல்லைஅந்தப் பதில் வந்த வேகம் கிருஷ்ணமூர்த்திக்கு இயல்பாய்த் தெரியவில்லை.

 

பின் நீதிபதி, கிருஷ்ணமூர்த்தியின் வக்கீல் சைத்ராவைக் கேள்வி கேட்க அனுமதித்தார்.  கிருஷ்ணமூர்த்தியின் வக்கீல் எழுந்து சில கேள்விகள் கேட்டார்.  கிருஷ்ணமூர்த்திக்கு வந்த மொட்டைக் கடிதத்திற்கு என்ன காரணங்கள் இருந்திருக்கக்கூடும், விரும்பிச் சென்ற துறவு வாழ்க்கைக்கு எதிரான சூழல்கள் அல்லது கட்டாயங்கள் யோகாலயத்தில் இருக்கின்றனவா, உண்மையிலேயே கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து, ஆபத்து அச்சுறுத்தல் இல்லை என்று சொல்ல விரும்பவில்லையா அல்லது அதைச் சொல்ல அனுமதி மறுக்கப்பட்டதா, விரும்பவில்லை என்றால் என்ன காரணம் என்றெல்லாம் கேட்டார்.

 

மொட்டைக்கடிதம் பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்று சொன்ன சைத்ரா, தன் துறவற வாழ்க்கைக்கு எதிராக யோகாலயத்தில் எந்தக் கட்டாயங்களும், சூழல்களும் இல்லையென்றும், தனக்கு ஆபத்தோ, அச்சுறுத்தலோ இல்லையென்றும் சொன்னாள். ஆசிரம விதிகளின் படியே உண்மையான துறவியாக இருக்க விரும்பியதால், ஆசிரமம் அனுமதித்த போதிலும், உறவின் அடிப்படையில் விசாரிக்க வந்த கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்துப் பேச விரும்பவில்லை என்றும் சைத்ரா சொன்னாள். ஆனால் அப்போதும் ஒரு முறை கூட அவள் பார்வை கிருஷ்ணமூர்த்தி, சேதுமாதவன் பக்கம் வரவில்லை.

 

அந்தப் பதில்களை சைத்ரா எந்திரத்தனமாகச் சொல்வது போல் கிருஷ்ணமூர்த்திக்குத் தோன்றியது. ஆனால் அதற்கு மேல் கேட்க அவரது வக்கீலுக்கு கேள்விகள் இருக்கவில்லை. இறுதியில் மகள் உயிருடன் தான் இருக்கிறாள் என்ற திருப்தியுடன் கிருஷ்ணமூர்த்தி வழக்கை முடித்துக் கொள்ள வேண்டி வந்தது.

 

நீதிமன்றத்திலிருந்து வெளியே செல்லும் போதும் சைத்ரா தந்தையையோ, தாத்தாவையோ பார்க்கவில்லை. அவளை, உடனிருந்த துறவிகளும், அவர்களது வக்கீலும், வேகமாக அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள். பல கேள்விகள் கேட்டபடி நின்றிருந்த நிருபர்களைக் கடந்து அவள் போலீஸ் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டாள்.

 

சேதுமாதவன், கிருஷ்ணமூர்த்தி, அமீர் பாய், மைக்கேல் நால்வரும் வெளியே வந்தார்கள். சைத்ரா காரில் ஏறுவதற்கு முன் திடீரென்று திரும்பிப் பார்த்தாள். கூட்டத்தில் தந்தையையும், தாத்தாவையும் அவள் விழிகள் தேடுவது தெரிந்து கிருஷ்ணமூர்த்தி சற்று முன்னால் வந்தார். ஒரே ஒரு கணம் தான் அவள் பார்வை அவர் மீதும், அவர் பின்னால் நின்றிருந்த சேதுமாதவன் மீதும் நிலைத்தது. பின் அவள் காரில் ஏறிக் கொள்ள, கார் வேகமாக அங்கிருந்து கிளம்பியது.

 

(தொடரும்)

என்.கணேசன்







3 comments:

  1. யோகாயல துறவிகள் மற்றும் சைத்ரா மட்டுமல்ல.... அங்கு உள்ள யோகா ஆசிரியர்கள் கூட இராணுவத்தினர் போலவே இருப்பார்கள்.... அதன் தலைவர் நாம் ஒரு கேள்வி கேட்டால் அவர் ஒரு பதில் சொல்வார்....

    ReplyDelete
  2. புத்தகம் வாங்கியாச்சு... ஈரோடு புத்தகத் திருவிழாவில்

    ReplyDelete
  3. 10 percent discount..₹720 only

    ReplyDelete