சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 24, 2023

சாணக்கியன் 71


ற்றன் புருஷோத்தமனையும், இந்திரதத்தையும் பணிவுடன் வணங்கி விட்டுச் சொல்ல ஆரம்பித்தான். ”கேகயத்தில் குடிமக்கள் பலர் இப்போது நம் வீரர்கள் வீடுகளுக்கு அடிக்கடிச் செல்கிறார்கள். யவனர்களை என்றைக்கும் நம்பி விடாதீர்கள். அவர்கள் உங்களைப் பலிகடாக்களாக்கி விடுவார்கள் என்று எச்சரிக்கிறார்கள். மஸ்காவதி வீரர்களைப் பிரிந்து செல்ல அனுமதித்து வஞ்சகமாகப் பின்னால் சென்று யவனர்கள் கொன்று குவித்ததைச் சுட்டிக் காட்டுகிறார்கள். எல்லாப் பகுதிகளிலும் யவனர்களுக்குத் தீவிர எதிர்ப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் வீதிகளுக்கு வந்து புரட்சி செய்யும் நாள் தொலைவில் இல்லை என்றும், அந்தச் சமயத்தில் யவன வீரர்களுக்குப் பதிலாக அப்பகுதி வீரர்களையே அனுப்பி அவர்களைப் பலிக்கடாக்களாக்க யவனர்கள் திட்டமிட்டு வருவதாகவும் எச்சரிக்கிறார்கள்.தாய் நாடும், உங்கள் மக்களும் உங்களுக்கு முக்கியமா, இல்லை, யவனர் ஆதிக்கம், யவன வீரர்களின் பாதுகாப்பு உங்களுக்கு முக்கியமாஎன்று கேட்கிறார்கள். இப்படித் தொடர்ந்து பல இடங்களில் நடந்து வருகிறது. இதைக் கேட்டு நம் வீரர்கள் மனம் குழம்பி வருவது நன்றாகவே தெரிகிறது” 

புருஷோத்தமனும், இந்திரதத்தும் உண்மையாகவே திகைத்தார்கள். ஆனால் அவர்கள் முகங்களையே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த பிலிப் அதை நடிப்பென்று நினைத்தான். புருஷோத்தமன் அதிர்ச்சியுடன் சொன்னார். “இது நான் இதுநாள் வரை கேள்விப்படாத ஒரு செயலாக இருக்கிறதே. குடியரசு நாடுகளிலாவது குடிமக்களின் தன்னிச்சையான போக்கைக் கவனித்திருக்கிறேன். என் மக்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்ளக்கூடியவர்கள் அல்லவே.”

 

பிலிப் சொன்னான். “தட்சசீலத்தின் கல்விக்கூட மாணவர்களும், அவர்களுடைய ஆசிரியரான ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரும் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிய வந்திருக்கிறது.”

 

புருஷோத்தமன் இந்திரதத்தைப் பார்த்தார். இந்திரதத் பிலிப்பும் அவரைக் கூர்ந்து கவனிப்பதைப் பார்த்தார். அவர் சொன்னார். “குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கேகயத்தின் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றால் தண்டனைக்குரியவர்கள் தான்.”

 

புருஷோத்தமன் கேட்டார். “ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரோ அவருடைய மாணவர்களோ கேகயத்தில் இப்போது நடமாடிக் கொண்டிருக்கிறார்களா?”

 

ஒற்றன் சொன்னான். “இல்லை. இப்போது அவர்கள் தட்சசீலத்தில் தான் இருக்கிறார்கள்”

 

புருஷோத்தமன் நிம்மதி அடைந்தவராகச் சொன்னார். “அப்படியானால் அவர்களைச் சிறைப்படுத்தி தண்டிக்க ஆம்பி குமாரன் தான் ஆவன செய்ய வேண்டும்”   

 

பிலிப் உடனே கேட்டான். “அப்படியானால் உங்கள் குடிமக்கள் இங்கே வீரர்களிடம் சென்று செய்யும் விஷமப் பிரசாரத்திற்குத் தண்டனை தேவை இல்லையா?”

 

இந்திரதத் சொன்னார். “குடிமக்கள் எத்தனை பேரைச் சிறைப்படுத்த முடியும். அத்தனை பெரிய சிறைச்சாலை இங்கே எங்கே இருக்கிறது? மேலும் அவர்கள் போராட்டம் செய்தால் அவர்களைத் தண்டிப்பது சரி…. ஆனால் தங்கள் கருத்துகளைச் சொல்வதற்காக மக்களைத் தண்டிப்பது தேவையில்லாத பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பது எனது தாழ்மையான கருத்து.”

 

பிலிப் சொன்னான். “இதையே அல்லவா உங்கள் நண்பர் விஷ்ணுகுப்தரும் அவரது மாணவர்களும் தங்களுக்கும் சொல்வார்கள்? கருத்துகளைத் தானே சொல்கிறோம்., போராட்டமா நடத்தினோம் என்று கேட்பார்கள் அல்லவா? அவர்களையும் அப்படியே விட்டு விடலாமா?”

 

இந்திரதத் இதற்கென்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். இந்த சமயத்தில் பிலிப்பின் காவலன் அங்கு வந்து பிலிப்பின் காதுகளில் தாழ்ந்த குரலில் என்னவோ சொன்னான். பிலிப் புருஷோத்தமன் பக்கம் திரும்பிச் சொன்னான். “புருஷோத்தமரே. போரில் தோல்வியுற்ற உங்களிடம் எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டு அரசனைப் போலவே நடத்தியவர் அலெக்ஸாண்டர்.  அவர் உங்களை நம்பி நிர்வாகப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். நாளை இங்கு ஏதாவது விபரீதம் நடந்தால் அவர் உங்களைத் தான் கேட்பார். இப்போதும் அவர் திரும்பி வர முடியாத தூரத்தில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் அவர் திரும்பி வரலாம். அதை நினைவில் வைத்து எச்சரிக்கையுடன் ஆட்சி நடத்துங்கள்.   நான் நாளையே இங்கிருந்து செல்ல வேண்டியிருக்கிறது. அப்படிச் செல்வதற்கு முன் உங்களை எச்சரிக்கும் கடமையை நான் செய்து விட்டேன். நீங்கள் மூவரும் செல்லலாம்….”

 

யார் மூவர்  என்று யோசித்த புருஷோத்தமனுக்கு தங்களோடு ஒற்றனையும் சேர்த்துச் சொன்னது மெள்ளப் புரிந்து அவமானம் கூடியது. அவர் எழுந்து கைகூப்பி விட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பினார். இந்திரதத்தும் அவர் பின்னால் செல்ல ஒற்றனும் கிளம்பினான்.

அரண்மனைக்குத் திரும்பியவுடனே புருஷோத்தமன் இந்திரதத்திடம் பொரிந்து தள்ளினார். “பார்த்தாயா இந்திரதத், பிலிப் எப்படி நம்மை நடத்துகிறானென்று. இன்றைய அவனுடைய கோபத்திற்குக் காரணம் உன் நண்பர் விஷ்ணுகுப்தர். அவர் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு மற்ற வேலைகளை எல்லாம் ஏன் செய்கிறார்?”  

 

இந்திரதத் பதில் எதுவும் சொல்லவில்லை. புருஷோத்தமனைப் போலல்லாமல் அவர் மனதிற்குள் தன் நண்பனை மெச்சினார். தனிமனிதனாக ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் என்ன செய்து விட முடியும் என்று பலமுறை அவர் தனக்குள் கேட்டிருக்கிறார். தனிமனிதர் சாதாரண மனிதர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு விஸ்வரூபம் எடுப்பது இப்போது புரிகிறது. பிலிப் போன்றவனே அவரால் அமைதியிழந்து தவிக்கிறான் என்பதை நேரிலேயே பார்க்க முடிந்தது. கேகய அமைச்சராகவும், புருஷோத்தமனுக்குப் பதில் சொல்ல வேண்டியவராகவும் அவர் சிறிது தர்மசங்கடப்பட வேண்டியிருந்த போதும் நண்பர் யவனர்கள் பார்த்து பயப்படும் நிலைக்கு உயர்ந்தது திருப்தியைத் தந்தது. ஆனால் யவனர்கள் இனி சும்மா இருக்க மாட்டார்கள், கடுமையாக எதிர்வினைகள் புரிவார்கள் என்பது நிச்சயம். அப்போது விஷ்ணுகுப்தர் என்ன செய்வார், இந்தக் குடிமக்களை எவ்வளவு தூரம் அவர் நம்ப முடியும். படையோடு வந்தால் குடிமக்கள் எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்றெல்லாம் எண்ணிப் பார்க்கையில் நண்பனுக்காகப் பயப்படவும் தோன்றியது.

 

”ஏன் பேச்சிழந்து நிற்கிறாய் இந்திரதத்? கேகயத்தில் சாதாரண குடிமக்களையும் தூண்டி விட்டு அவர் பிரச்சினை ஏற்படுத்துவது சரி தான் என்று நினைக்கிறாயா?” புருஷோத்தமனின் குரல் இந்திரதத்தின் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது.

 

இந்திரதத் சொன்னார். “குடிமக்கள் நம் வீரர்களிடம் போய்ப் பேசுவது இயல்பானதல்ல என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன் அரசே. ஆனால் அவர்கள் சிந்திக்கச் சொன்ன விஷயங்களில் இருக்கும் உண்மை தான் பிலிப்பின் கோபத்தை அதிகப்படுத்தியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த உண்மையை நம் வீரர்களும்  யோசிக்க ஆரம்பித்து விடுவார்களோ என்று தான் அவன் பயப்படுகிறான் என்று தோன்றுகிறது”

 

புருஷோத்தமன் கடுங்கோபத்துடன் சொன்னார். “போதும் இந்திரதத். நீ இதற்கு மேல் எதுவும் சொல்லாதே.  விஷ்ணுகுப்தரின் நண்பனாக யோசிக்காமல் கேகயத்தின் அமைச்சராக யோசி, பேசு. அது போதும்.”

 

பிலிப் முன் அடுத்த ஒற்றன் வந்து நின்றான். “மாளவத்திலும் ஷூத்ரகத்திலும் பிரச்சினைகள் தீவிரமாக ஆரம்பித்திருக்கின்றன பிரபு. அங்கு மக்கள் எந்த நேரத்திலும் புரட்சி செய்யலாம் என்ற நிலைமை உருவாகி இருக்கிறது. அவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளுக்காகவோ, அல்லது யாருடைய உத்தரவுக்காகவோ காத்திருப்பது போலத் தெரிகிறது. ஆகவே எந்த நேரத்திலும் அங்கே புரட்சி வெடிக்கலாம். அங்கிருக்கும் படைபலம் அந்தப் புரட்சியைச் சந்திக்கப் போதுமானதாக இல்லை “

 

பிலிப் திகைத்தான். தட்சசீலத்திற்குத் திரும்பப் போகலாம் என்று சற்று முன் வரை நினைத்துக் கொண்டிருந்த அவனுக்கு மாளவத்தில் அவன் இருக்க வேண்டியது மிக அவசியம் என்பது புரிந்தது.  பல இடங்களில் பிரச்சினைகள் முளைக்க ஆரம்பித்திருக்கிற இந்த வேளையில் அவன் சிறிது அசந்தாலும் அதன் இழப்புகள் அதிகமாகவே இருக்கும் என்பதையும் உணர்ந்தான். மிகவும் யோசித்து தெளிவான முடிவுகளை உடனடியாக அவன் எடுக்கா விட்டால் ஆபத்து என்று உள்ளுணர்வும் எச்சரிக்க வேகமாக யோசித்து பிலிப் ஒரு முடிவுக்கு வந்தான்.

 

“க்ளைக்டஸை உடனடியாக வரச் சொல்” என்று காவலனுக்கு உத்தரவிட்ட பிலிப் க்ளைக்டஸ் வந்தவுடன் உத்தரவு பிறப்பித்தான். “நீ உடனடியாக தட்சசீலம் திரும்பிப் போக வேண்டும் க்ளைக்டஸ். ஆம்பி குமாரனிடம் உடனடியாக ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரையும், அவரோடு சதிச்செயலில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களையும் சிறைப்படுத்தச் சொல். இது சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரின் பெயரால் நான் இடும் ஆணை என்று தெரியப்படுத்து.”

 

க்ளைக்டஸ் “அப்படியே தெரிவிக்கிறேன் சத்ரப்” என்று சொல்லி விட்டு வேகமாகக் கிளம்பினான்.  

 

பிலிப்பும் மாளவத்திற்கு உடனடியாகக் கிளம்பினான்.

 

(தொடரும்)

என்.கணேசன்


1 comment:

  1. புரட்சி வெடிக்கும் அந்த நாளை பார்க்கவே நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்....

    ReplyDelete