சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 17, 2023

சாணக்கியன் 70

 

ம்பிகுமாரன் நள்ளிரவில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கையில் கேட்ட மணியோசை கனவில் கேட்பதாகத் தான் ஆரம்பத்தில் நினைத்தான். சிறிது நேரம் இடைவெளி விட்டு மறுபடி மணியோசை கேட்கவே இது அவனுடைய காவலன் அடிக்கிற மணியோசை சத்தம் என்பதை மெள்ள உணர்ந்தான். மிக அவசர காலங்களில் மட்டுமே அந்த மணி ஒலிக்கும். உடனடியாக அவனுக்கு அறிவிக்க வேண்டிய முக்கியச் செய்தி ஏதாவது வந்திருக்க வேண்டும். ஆம்பி குமாரன் சலிப்புடன் எழுந்தான். நல்ல செய்தி எதுவுமிருக்க வாய்ப்பில்லை. நல்லதை நள்ளிரவிலேயே அறிவித்து விட வேண்டும் என்ற அவசியம் அவனுடைய காவலனுக்கும் இல்லை.  அவன் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. என்ன பிரச்சினைக்குரிய செய்தியோ?

 

அவன் அறைக் கதவைத் திறந்த போது காவலன் சொன்னான். “மன்னிக்க வேண்டும் மன்னரே. ஒரு அவசரச் செய்தி...”

 

“என்ன செய்தி?”

 

“தாங்கள் புதிதாகக் கட்டியிருந்த மாளிகை திடீரென்று இன்றிரவில் தீப்பற்றிக் கொண்டது. அதைக் கண்டவுடன் பலரும் தீயை அணைக்க கடும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால் எல்லா முயற்சிகளும் வீணாகி விட்டன. அதற்கு முன்பே அந்த மாளிகை முழுவதுமாக எரிந்து விட்டது”

 

ஆம்பி குமாரன் திகைப்புடன் தன் காவலனைப் பார்த்தான். ஆச்சாரியருக்காக அவன் கட்டியிருந்த அந்த மாளிகை தீப்பிடித்தது தான் ஆச்சரியமே ஒழிய அதை அணைக்க முடியாதது ஆச்சரியமல்ல. காரணம் தீப்பிடிக்க ஆரம்பித்தவுடனேயே மளமளவென்று தீ வேகமாகவும், முழுவதுமாகவும் பிடித்துக் கொள்ளும்படி தான் அந்த மாளிகையே கட்டப்பட்டிருந்தது. ஆச்சாரியர் அங்கே வசிக்க வந்த பிறகு அந்த மாளிகைக்குத் தீயைப் பற்ற வைக்க வேண்டும். தீப்பிடிக்க ஆரம்பித்தவுடன் யாரும் எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் அந்தத் தீயை அணைத்து விட முடியாதபடி இருக்க வேண்டும் என்பது தான் அவனுடைய திட்டம். ஆச்சாரியர் அங்கு வந்து வசிக்க ஆரம்பித்த பின் அவன் வைக்க வேண்டிய தீயை இப்போதே வைத்தது யாரென்று தெரியவில்லை. அவனுக்கு அந்த மாளிகையைக் கட்டித் தந்தவன் அவனுடைய முழுநம்பிக்கைக்குப் பாத்திரமானவன். அதனால் அவன் மூலம் வெளியே இந்தத் தகவல் கசிய வாய்ப்பேயில்லை. காலியாக உள்ள அந்த மாளிகைக்குத் தீ வைக்கவும் யாருக்கும் எந்தக் காரணமும் இல்லை.

 

யோசிக்கையில் அவனுக்கு ஆச்சாரியர் மேல் தான் சந்தேகம் வந்தது. அவர் தான் அந்தத் திட்டத்தை எப்படியோ அறிந்து கொண்டு  பற்ற வைத்திருக்க வேண்டும். ஆத்திரத்தினால் அவன் உடல் லேசாக நடுங்கியது. எல்லாம் யூகித்தும் எதுவுமே அறியாதவர் போல அவனிடம் எவ்வளவு இனிமையாகப் பேசினார். அதெல்லாம் நடிப்பு என்று இப்போது தான் அவனுக்குப் புரிகிறது. அவர் அவனை ஏளனம் செய்வது போல் தோன்றியது. அது அவனுக்கு மேலும் அவமானமாக இருந்தது. பிலிப் திரும்பி வரும் போது ஆச்சாரியரின் மரணத்தைச் சொல்லி அவன் பெருமையை அறிவிக்க நினைத்திருந்தது வீண் ஆகிவிட்டது. இது தெரிய வந்தால் பிலிப் அவனை மேலும் சிறுமையாக நினைப்பான்....

 

காவலன் மெல்லக் கேட்டான். “மன்னர் அந்த இடத்தைப் பார்வையிடப் போகிறீர்களா? அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லட்டுமா?”

 

ஆம்பி குமாரனுக்கு அந்தச் சாம்பலைக் கண்டு வர விருப்பமில்லை. இன்னொரு முறை அதைக் கண்டு வயிறெரிவதில் அர்த்தமில்லை. வேண்டாம். இனி அதைப் பார்த்து நான் செய்ய என்ன இருக்கிறது?” என்று சொல்லி விட்டு மீண்டும் சென்று படுக்கையில் சாய்ந்தான். ஆனால் உறக்கம் வர மறுத்தது. இந்த நாடகத்தில் அவன் எதுவும் அறியாதவன் போலவே நடந்து கொள்வது தான் உத்தமம் என்று தோன்றியது.

 

மறுநாள் காலையிலேயே ஆம்பி குமாரன் கல்விக்கூடத்திற்குச் சென்று ஆச்சாரியரிடம் சோகமாக இந்தத் தகவலைத் தெரிவித்தான். சாணக்கியர் அப்போது தான் அந்தத் தகவலை அறிவது போல அதிர்ச்சியைக் காட்டிக் கொண்டார்.  

 

ஆம்பி குமாரன் அவரைக் கூர்ந்து பார்த்தபடியே சொன்னான். “இந்தச் சதிச் செயலைச் செய்தது யார் என்று தெரியவில்லை ஆச்சாரியரே. தங்களுக்கு நான் தரும் கவுரவத்தை விரும்பாதவர்கள் யாராவது செய்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.”

 

சாணக்கியர் இருக்கலாம் என்பது போலத் தலையசைத்து விட்டுச் சொன்னார். செய்தது யாராக இருந்தாலும் இதை இறைவன் எனக்கு அனுப்பிய சகுனமாகவே நான் நினைக்கிறேன் ஆம்பி குமாரா. உன் குருபக்தி  என்னை நெகிழ வைக்கிறது என்றாலும் நான் ராஜகுருவாவதை இறைவன் அனுமதிக்கவில்லை என்றே இந்தத் தீவிபத்து தெரிவிப்பதாக எனக்கு நினைக்கத் தோன்றுகிறது….”

 

முகத்தில் பெரும் சோகத்தையும், ஏமாற்றத்தையும் காண்பித்துக் கொண்டு மனதில் கறுவியபடி ஆம்பி குமாரன் அங்கிருந்து கிளம்பினான். அவன் சென்ற பிறகு சந்திரகுப்தன் கடுகடுத்தான். “இவனை அந்த மாளிகையில் கட்டிப் போட்டுப் பிறகு தீயைப் பற்ற வைத்திருக்க வேண்டும்.  தீயிலும், பகைமையிலும் சிறிதும் மிச்சம் வைத்திருக்கக்கூடாது என்று எப்போதும் சொல்லும் நீங்கள் இவன் இந்தச் சதிவேலை செய்த பின்னும் அவனை அப்படியே விட்டு வைப்பது இவனுக்கு நீங்கள் தரும் தேவையில்லாத சலுகையாக எனக்குத் தோன்றுகிறது ஆச்சாரியரே”

 

சந்திரகுப்தனுக்கு இப்போதும் பசுமையாக நினைவிருக்கிறது. அவனும், ஆச்சாரியரும் பாடலிபுத்திரத்திலிருந்து வந்து கொண்டிருக்கையில் ஒரு முறை அவர் காலில் ஒரு முள்செடி குத்தி விட்ட போது பொறுமையாக அதை வேரோடு அழித்தது நினைவுக்கு வந்தது.  அப்படிப்பட்டவர் ஆம்பி குமாரன் விஷயத்தில் சலுகை காட்டுவதன் காரணம் அவனுக்குப் புரியவில்லை.


சாணக்கியர் மென்மையாகச் சொன்னார். “என்ன இருந்தாலும் ஆம்பி குமாரன் ஒரு காலத்தில் எனக்கு மாணவனாக இருந்தவன். ஒரு ஆசிரியனுக்கு மாணவர்கள் பிள்ளைகள் போலத் தான். அவன் வணங்கிய போதெல்லாம் தீர்க்காயுளாக இரு என்று ஆசிர்வதித்திருக்கும் நான் அவனை அழிப்பது சரியல்ல சந்திரகுப்தா.”

 

சந்திரகுப்தன் அவரைப் பிரமிப்புடன் பார்த்தான்.

 

பிலிப் உடனடியாக அவனை புருஷோத்தமன் வந்து காண வேண்டும் என்று ஆளனுப்பிய போது அவர் நொந்து போனார். இந்திரதத்திடம் அவர் சொன்னார். “இவன் என்னைப் பீடித்திருக்கும் பீடை போலத் தான் எனக்குத் தோன்றுகிறது இந்திரதத். என்னைக் காண அனுமதி கேட்டு அவன் வருவதற்குப் பதிலாக நான் போய் அவனைப் பார்க்க வேண்டும் என்று அவன் ஆணை பிறப்பிப்பதை என்னால் சகிக்க முடியவில்லை. அலெக்ஸாண்டரின் சேவகனும் அலெக்ஸாண்டர் போல நடந்து கொள்வது கடுங்கோபத்தை ஏற்படுத்துகிறது”

 

இந்திரதத்  அவரை இரக்கத்துடன் பார்த்தார். “என்ன செய்வது அரசே? அவன் மறுபடி தட்சசீலம் திரும்பிப் போகும் வரை அவனை நாம் சகித்துக் கொண்டு தான் ஆக வேண்டியிருக்கிறது.”

 

“இப்போது அவன் என்ன சொல்ல அழைக்கிறான் என்று தெரியவில்லையே? உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் அழைத்து ஏதாவது அறிவுரை சொல்கிறான். நானும் அவன் வேலையாள் போல சென்று கேட்டுக் கொண்டு வருகிறேன். இதெல்லாம் அவமானமாக இருக்கிறது. ஆனால் எதிர்க்கவும் முடியவில்லை ….”

 

இந்திரதத் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். பிலிப்பின் செயல்பாடுகள் புருஷோத்தமன் சொல்வது போல் தான் இருக்கின்றன.  இப்பகுதிகள் எல்லாம் தன் கட்டுப்பாட்டில் இருப்பதால் இவற்றை ஆள்பவர்களும், நிர்வாகம் செய்பவர்களும் தன் ஆணைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதை பிலிப் சூசகமாக அனைவருக்கும் தெரிவித்து வருகிறான். அவனைக் காண வந்து சென்ற அரசர்கள் எல்லாரும் ‘அலெக்ஸாண்டரே தேவலை. அவன் தேவையில்லாமல் இவனைப் போல இப்படி நம்மைத் தொந்திரவு செய்யவில்லை.’ என்று புலம்பி விட்டுப் போகிறார்கள்.

 

புருஷோத்தமனும் இந்திரதத்தும் பிலிப்பின் மாளிகைக்குப் போனார்கள். இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்த பிலிப் அவர்களை அமரச் சொல்லி விட்டு அவன் முன் நின்றிருந்த ஒற்றனிடம் “என்னிடம் சொன்ன தகவலை இவர்களிடமும் சொல்” என்று ஆணையிட்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

1 comment:

  1. நானும் ... ஆம்பிக்குமாரனுக்கு ஆச்சாரியார் ஒரு முடிவு கட்டி விடுவார்.... என்றே நினைத்தேன்...

    ReplyDelete