கிருஷ்ணமூர்த்தி தன்னை விதி தனியாகத் தேர்ந்தெடுத்து சோதிப்பதாக
உணர்ந்தார். சைத்ராவுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து தான் என்ன, அவள் தற்போது
எந்த நிலைமையில் இருக்கிறாள் என்பது தெரியாமல் கழியும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு
யுகமாக அவருக்குத் தோன்றியது. கொரோனா தொற்று எப்போது தீரும், நிலைமை
எப்போது சகஜத்திற்கு மாறும் என்று யாருக்குமே தெரியவில்லை. தினமும்
பல கருத்துகளும், பல யூகங்களும் சொல்லப்பட்டன. கொரோனா
தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்தது. ஓரிரண்டு
நாட்கள் முன்பு வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர்கள், திடீரென்று
கொரோனாவால் தாக்கப்பட்டு உயிரிழந்த செய்திகள் வந்து கொண்டிருந்தன. அனைவரும்
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். அமீர் பாயும் மைக்கேலும்
அதே வீதியில் வசித்தாலும் கூட, அவர்களும் கூட சேதுமாதவனுடைய வீட்டுக்கு வரவில்லை. இந்த ஊரடங்கு ஒரு விதத்தில் ஊடகங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளிலிருந்து
கிருஷ்ணமூர்த்திக்கும் சேதுமாதவனுக்கும் தற்காலிக விடுதலை வாங்கித் தந்தது என்றாலும்
நீதிமன்றத்தில் இருந்த அவர்கள் மனு கிணற்றில் போட்ட கல் போல் அப்படியே இருந்தது.
அமீர் பாய் தன் வீட்டில் அடைந்து கிடந்தாலும் தன்னால் முடிந்த துப்பறியும் வேலைகள் எல்லாம் செய்தார். அவருடைய உறவினர் மூலமாக இன்ஸ்பெக்டர் செல்வத்துடன் பணிபுரியும் போலீஸ்காரர்களை விசாரித்தார். அவருடைய உறவினருக்கு அந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு மிகவும் பரிச்சயமானவர். கிருஷ்ணமூர்த்தி புகார் செய்துவிட்டுப் போனவுடன் இன்ஸ்பெக்டர் செல்வம் யோகாலயம் போனது உண்மை தான் என்று தெரிவித்த ஏட்டுக்கு, யோகாலயத்தில் என்ன நடந்தது என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் யோகாலயத்திலிருந்து மாதா மாதம் ஒரு தொகை இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு வந்து சேர்கிறது என்பதை அவர் ரகசியமாகத் தெரிவித்தார். அதற்கு மேல் யூகங்கள் செய்வதற்கு அவசியம் இருக்கவில்லை.
’சேதுமாதவன் குடும்பத்திற்கு இறைவன் இப்படி ஒரு கஷ்டத்தைத் தந்திருக்கக் கூடாது” என்று அமீர் பாய் ஆத்மார்த்தமாக வருந்தினார்.
சேதுமாதவன் எப்போதும் தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்குச்
செய்யத் தயங்கியதில்லை. அமீர் பாயின் மளிகைக் கடையில் தான் சேதுமாதவன் மளிகை சாமான்கள் வாங்குவார்.
சேதுமாதவன் மத்திய அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கத்
திரும்பி வந்த காலத்திலிருந்து அப்படித் தான் இருவருக்கும் ஆரம்பத்தில் பரிச்சயம்.. அமீர் பாய் சேது மாதவனை விட பத்து வருடங்கள் இளையவர். மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் கொண்ட குடும்பத்தின்
தலைவர். சேதுமாதவன் பொருள்கள் வாங்க அமீர் பாயின் கடைக்கு வந்தால்,
அவருடன் சிறிது நேரம் பேசி விட்டுப் போவார்.
அப்படி இருந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் அமீர் பாய் மாரடைப்பு
வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அச்சமயத்தில் மகன்களில் ஒருவன் கல்லூரியிலும், இன்னொருவன் பள்ளியிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். அவருடைய இதய அறுவைச் சிகிச்சைக்குப் பெரியதொரு தொகை தேவைப்பட்டது. அந்த அளவு சேமிப்பு அவர்களிடம் இருக்கவில்லை. இருக்கும்
நகை எல்லாம் விற்றும், சிகிச்சைக்கு வேண்டிய தொகையில் பாதி கூடத்
தேறவில்லை. நெருங்கிய
உறவினர்களில் சிலர் உதவ முடிந்த செல்வ நிலையில் இருந்த போதும் உதவ முன்வரவில்லை.
பணத்தைத் திரட்ட வேறு வழியில்லாமல் மளிகைக்கடையை விற்று விட அமீர் பாயின்
மனைவி முடிவு செய்தாள்.
மளிகைக் கடையை விற்க பேரம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் தான்
சேதுமாதவன் நிலவரத்தை அறிந்து, அமீர்பாய் வீட்டுக்குப் போய் கவலையுடன் கேட்டார். “மளிகைக் கடையை வித்துட்டா,
பாய் நலமாய் திரும்பி வந்தால் அப்புறம் ஜீவனத்துக்கு என்ன வழி?”
அமீர் பாயின் மனைவி கண்கலங்கியபடி சொன்னாள். “எங்களுக்கு அவரைக் காப்பாத்த
வேற வழியே இல்லைங்க.”
“உங்களுக்கு எவ்வளவு பணம் போதாம இருக்கு”
“மூனு லட்சம்…”
“நான் தர்றேன். மளிகைக் கடையை விக்காதீங்க.”
அமீர் பாயின் குடும்பமே திகைத்து கண்கலங்கியது. சொல்லி இரண்டு மணி நேரத்தில்
சேதுமாதவன் பணத்தைக் கொண்டு வந்து அமீர் பாயின் மனைவி கையில் தரும் வரை அவர்களுக்கு
அதை நம்ப முடியவில்லை. அப்படித் தந்த போதும், அந்தப்
பணத்தைத் திருப்பித்
தருவது பற்றிய பேச்சு எதுவும் அவர் பேசவில்லை. அமீர் பாயின் மனைவி அது பற்றிப் பேச ஆரம்பித்த
போது கூட ”அதெல்லாம்
அப்பறம் பார்த்துக்கலாங்க.
முதல்ல, பாய் பிழைச்சு நல்லபடியா வரட்டும்.”
என்று சொல்லி விட்டு சேதுமாதவன் போய் விட்டார்.
அந்தச் சமயத்தில் மைக்கேலும், சேதுமாதவனும்
மட்டுமே நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அவரிடம்
கூட சேதுமாதவன் தான் செய்திருக்கும் இந்த உதவியைப் பற்றிச் சொல்லவில்லை. வேறொருவர்
மூலமாகத் தகவல் அறிந்து
மைக்கேல் திகைத்தார். ஏனென்றால் அக்காலக்கட்டத்தில் அது பெரிய தொகையே. ’இத்தனை பெரிய தொகையை இவர் எந்த தைரியத்தில்
அந்தக் குடும்பத்திற்குத் தருகிறார்?’
ஆனால் ஐந்து பிள்ளைகள் உள்ள அந்தக்
குடும்பத்தலைவன் உயிரோடு நலமாகத் திரும்பி வரவேண்டும், இனி ஆக
வேண்டிய காரியங்கள் அந்தக் குடும்பத்தில் நிறைய இருக்கின்றன என்று மட்டுமே சேதுமாதவன்
நினைக்கிறார் என்பது அவரிடம் பேசும் போது மைக்கேலுக்குத் தெரிந்தது.
அமீர் பாய் அறுவை சிகிச்சை முடிந்து
நலமான பிறகு தான் மனைவி மூலம் அனைத்தையும் அறிந்தார். நெருங்கிய
உறவுகளும் கைவிட்ட நிலையில், பேச்சளவு மட்டுமே பரிச்சயம் உள்ள சேதுமாதவன் காட்டிய கருணை
அவரை உருக்கியது. அவர் மனைவி கண்கலங்கியபடி சேதுமாதவன் அன்று கேட்ட அந்த வார்த்தைகளைச்
சொன்னாள். “மளிகைக் கடையை வித்துட்டா, பாய் நலமாய் திரும்பி வந்தால்
அப்புறம் ஜீவனத்துக்கு என்ன வழின்னு கேட்டார் அவர்.”
இந்தக் காலத்தில் யார் இப்படி இன்னொரு
குடும்பத்தின் எதிர்காலத்தை யோசித்துப் பார்க்கிறார்கள்? அல்லாவே
அனுப்பி வந்தவர் போல சேதுமாதவன் அவருக்குத் தோன்றினார். நலம் விசாரிக்க
மருத்துவமனைக்கு வந்த சேதுமாதவனிடம் அமீர் பாய் கண்கலங்கி கைகூப்பி நன்றி சொல்ல முற்பட்ட
போது சேதுமாதவன் லேசான கூச்சத்துடன் சொன்னார். “என்னால
முடிஞ்சதை தான் செஞ்சேன். மனுஷனுக்கு மனுஷன் முடிஞ்சதக் கூட செய்யலேன்னா எப்படி?”
அதற்குப் பின் அதுபற்றி அவர் பேச விடவில்லை. நலமாகி
வந்து சிறிது சிறிதாக மூன்று லட்சம் ரூபாயைத் திருப்பித் தந்து விட்டாலும் அமீர் பாய்
நிரந்தரமாய் அந்த நல்ல மனிதனுக்குக் கடன்பட்டிருப்பதாகவே உணர்ந்தார். ஒரு இக்கட்டான
சூழ்நிலையில் அவருடைய குடும்பத்திற்காகவும், அவர்களது
எதிர்கால ஜீவனத்திற்காகவும் அக்கறையுடன் கவலைப்பட்ட அந்த நல்ல மனிதரைத் தன் சகோதரனுக்கும்
மேலாக மதித்தார். அதன் பின் தான் அவர்களுடைய நட்பு ஆழமானது.
நெருக்கமான பின் கிருஷ்ணமூர்த்தியும், தந்தையைப்
போலவே மிக நல்ல மனிதர் என்பதை அமீர் பாயால் உணர முடிந்தது. அதிகம்
யாருடனும் நெருக்கமாகப் பழகும் மனிதராக கிருஷ்ணமூர்த்தி இருக்காவிட்டாலும், பல ஏழை
நோயாளிகளுக்கு பணம் எதுவும் வாங்காமல் இலவச சிகிச்சை செய்வது போன்ற தர்ம காரியங்கள்
நிறைய செய்வதை அவர் கண்டார்.
அதிகம் படிக்காதவர்களுடன் மைக்கேல்
நெருங்கிப் பழகுபவரல்ல. ஆனால் அமீர் பாய் சேதுமாதவனிடம் நெருக்கமான பிறகு, அவருடைய
நல்ல மனதால் கவரப்பட்டு, மைக்கேலும் அவருக்கு நெருக்கமானார். அமீர் பாய்க்கு
படிப்பறிவு அதிகம் இல்லா விட்டாலும், உலக ஞானமும், தைரியமாய்
செயல்படும் தன்மையும் இருப்பது மைக்கேலையும் கவர்ந்தது. அதன் பின்
மூவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்தார்கள்.
அமீர் பாய்க்கு இத்தனை நல்ல மனிதர்களான
சேதுமாதவனுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இப்படிப்பட்ட சோதனை வந்திருப்பது மிக
வருத்தத்தை ஏற்படுத்தியதால் தினமும் ஐந்து முறை தொழும் போதும் அல்லாவிடம் அந்தக் குடும்பத்திற்காக
வேண்டிக் கொண்டார்.
காலம் மெள்ள உருண்டது. அமெரிக்காவில்
முதலமைச்சர் அருணாச்சலத்துக்கு வெற்றிகரமாகச் சிகிச்சை முடிந்தாலும், கோவிட்
நிலைமை காரணமாக ஒரு மாதம் கழிந்து தான் திரும்பி வருவார் என்ற செய்தி வந்தது.
மைக்கேல் நீதித்துறையில் மேலிடத்தில்
இருக்கும் தன்னுடைய நெருங்கிய உறவினர் மூலமாக சைத்ராவின் ஆள் கொணர்வு மனுவைத் துரிதப்படுத்த
முயற்சிகள் மேற்கொண்டார். நீதிமன்றங்கள் செயல்படத் துவங்கியவுடனேயே அந்த வழக்கு முன்னுரிமை தந்து எடுத்துக்
கொள்ளப்படும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.
அதே போல நீதிமன்றங்கள் பழையபடி இயங்க
ஆரம்பித்தவுடனேயே அந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நீதிபதி, சைத்ராவை
நீதிமன்றத்தில் ஆஜராக்க வேண்டும் என்று யோகாலயத்துக்கு ஆணையிட்டார்.
(தொடரும்)
என்.கணேசன்