சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 17, 2023

யோகி 5

 

கிருஷ்ணமூர்த்தி போன வேகத்திலேயே அந்த மொட்டைக் கடிதத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார். சொன்னபடியே அந்த மொட்டைக் கடிதத்தை இணைத்து தன் கைப்பட புகாரை எழுதிக் கொடுத்தார். கொடுக்கையில் இன்ஸ்பெக்டரிடம் அவர் அழாத குறையாக வேண்டிக் கொண்டார். “என் மகளுக்கு ஏதாவது ஆகறதுக்கு முன்னாடி தயவு செஞ்சு சீக்கிரம் போய் விசாரிங்க....” சொல்லச் சொல்ல அவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

 

இதற்கு முன்பே ஏதாவது ஆகியிருக்கவும் வாய்ப்பிருக்கிறதே என்றும் அவர் அறிவு அவரை எச்சரித்தது. காரணம் கடிதம் தபாலில் தான் வந்திருக்கிறது. இன்று தபாலில் வந்து சேர்கிறது என்றால், நேற்று எழுதி தபால் பெட்டியில் அது போடப்பட்டிருக்க வேண்டும். ஒரு நாள் கழிந்து விட்டது...

 

இன்ஸ்பெக்டர் செல்வம் சொன்னார். “கவலையே படாதீங்க சார். இனி நான் செய்யப் போற முதல் வேலையே இது தான். போய்ட்டு வந்து நிலவரத்தை ராத்திரிக்குள்ளே உங்களுக்குச் சொல்றேன்... நிம்மதியாய் இருங்க. நீங்க பயப்படற அளவுக்குப் பெருசா எதுவும் நடக்கவோ, நடந்திருக்கவோ வாய்ப்பில்லை. ஏன்னா, சோஷியல் மீடியா, பத்திரிக்கை எல்லாம் இருக்கறதுனால ரொம்ப தைரியமா ஆசிரமத்து ஆள்களும் தப்பு செஞ்சுட முடியாது... ”

 

இன்ஸ்பெக்டர் சொன்னது சற்று தைரியம் தந்தது. கிருஷ்ணமூர்த்தி கைகூப்பினார். ”ரொம்ப நன்றி.”

 

கிருஷ்ணமூர்த்தி திரும்ப வீடு வந்து சேரும் போது சாயங்காலமாகி விட்டது. அதன் பின் தான் அவரும், சேதுமாதவனும் மதிய சாப்பாட்டையே அரைகுறையாய் சாப்பிட்டார்கள். இயல்பாக ருசித்துச் சாப்பிட முடிந்த மனநிலையில் இருவருமே இல்லை.

 

சேதுமாதவனுக்கும், கிருஷ்ணமூர்த்தி சொன்ன தகவல்கள் மனநிம்மதியைக் குலைத்திருந்தன. சிறிய விஷயத்தை ஆசிரமத்து ஆட்கள் பெரிதாக்குகிறார்கள் என்று தோன்றியது. திரும்ப யோசிக்கையில், அது சிறிய விஷயம் அல்லவோ என்ற சந்தேகமும் பலமாக எழுந்தது.   

 

சிறிது நேரத்தில் சேதுமாதவனின் நண்பர்கள் அமீர் பாயும், மைக்கேலும் வந்தார்கள். அமீர் பாய் அத்தெருவில் ஒரு சிறு மளிகைக்கடை வைத்திருக்கிறார். மைக்கேல் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். அவர்கள் இருவர் வீடுகளும் அதே தெருவில் தான் இருந்தன. தினமும் மூவரும் சேர்ந்து தான் வாக்கிங் போவார்கள். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பூங்கா வரை நடந்து சென்று, அந்தப் பூங்காவில் சுமார் முக்கால் மணி நேரம் அமர்ந்து பேசி விட்டுத் திரும்புவார்கள். அன்று நடந்துள்ளதை எல்லாம் கேள்விப்பட்டு அவர்களும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தார்கள்.

 

அமீர் பாய் வருத்தத்தோடு சொன்னார். “இப்ப எல்லாம் ஆன்மீகம்கிற பேர்ல அக்கிரமங்க அதிகமாய் நடக்குது. எல்லா மதங்கள்லயும் இது தான் நிலைமை.”  மைக்கேல் அதை ஆமோதித்து தலையசைத்தார்.

 

அந்த நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியின் கைபேசி இசைத்தது. பேசியது இன்ஸ்பெக்டர் செல்வம் தான். “சார் யோகாலயத்துல நான் போய் விசாரிச்சேன். உங்க மகள் கிட்டயே பேசினேன். அவங்க ஆபத்து எதுவும் இல்லைன்னும், பாதுகாப்பாய் அங்கே இருக்கறதாவும் சொல்லிட்டாங்க.”

 

கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “அதை அவ என்கிட்டயே வந்து நேர்லயே சொல்லி இருக்கலாமே. ஒரு நிமிஷத்துல என் சந்தேகமும், பயமும் தீர்ந்திருக்குமே

 

அதைத் தான் சார் நானும் உங்க மகள் கிட்ட கேட்டேன். அவங்களுக்கு ஆசிரம விதிமுறை எதையும் மீற மனசில்லையாம். அதனால தான் உங்களை நேர்ல சந்திச்சு பேச விரும்பலையாம். அதனால அவங்களுக்கு ஆபத்துன்னு நினச்சு  நீங்க பயப்பட அவசியமேயில்ல சார். நிம்மதியாய் இருங்க...”

 

கிருஷ்ணமூர்த்திக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்ஸ்பெக்டர் போனை வைத்து விட்டார்.

 

சேதுமாதவன் மகனைக் கேட்டார். “என்னடா விஷயம்?”

 

கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சியிலிருந்து மீளாமல், இன்ஸ்பெக்டர் சொன்னதை அப்படியே சொன்னார். கேட்டு விட்டு சேதுமாதவனும் திகைத்தார்.

 

மைக்கேல் கேட்டார். “சைத்ரா அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லைன்னு நீங்க நினைக்கிறீங்களா?”

 

கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “ஆமா சார். ஏன்னா எங்க குடும்பத்துல எப்பவுமே சடங்கு, சம்பிரதாயம், வழிமுறைகளை விட அதுக்குப் பின்னாடி இருக்கற அர்த்தம், சாராம்சத்துக்கு அதிக முக்கியம் தருவோம். அப்பா அதைச் சொல்லி சொல்லி எனக்கும், சைத்ராவுக்கும் கூட எங்க வாழ்க்கைல அது ஒரு பகுதியாவே ஆயிடுச்சு. நான் அவள் சன்னியாசியானதைக் கூட எதிர்த்தவன் கிடையாது. இன்னைக்கு அவளைப் பார்க்கப் போனது கூட எங்க உறவைப் புதுப்பிச்சுக்க அல்ல. அப்படி இருக்கறப்ப என் மகள் நேர்ல வந்துஎந்த ஆபத்தும் இல்லை, தைரியமா போங்கன்னு சொல்ல ரெண்டு வினாடி கூட ஆகாது. அதை சொல்ல அவங்க அனுமதிக்கலை. அப்படிச் சொல்ல என் மகளும் விரும்பலைன்னு சொல்றதை என்னால நம்ப முடியல சார். என் மகளைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். நீங்க என்னப்பா சொல்றீங்க?”

 

சேதுமாதவன் சொன்னார். “எனக்கும் சைத்ரா அப்படி சொல்லியிருப்பாள்னு தோணல

 

சிறிது நேரம் அங்கே கனத்த மௌனம் நிலவியது. அமீர்பாய் சொன்னார். “என் சொந்தக்காரன் அந்தப் போலீஸ் ஸ்டேஷன் இருக்கற ஏரியால தான் இருக்கான். அந்த இன்ஸ்பெக்டரைப் பத்தி அவன் கிட்ட கேட்டால் அவன் சரியாய் சொல்வான். அந்த இன்ஸ்பெக்டர் பேரென்ன?”

 

கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “செல்வம்

 

அமீர்பாய் உடனே கைபேசியில் அந்த உறவினருக்குப் போன் செய்து பேசினார். பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டுக் கேட்டார். “உங்க ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் எப்படிப்பட்ட ஆள்?”

 

ரொம்ப மோசமான ஆள் பாய் அவன். சரியான வசூல் ராஜா. ஏன் பாய் கேட்கறீங்க?”

 

என்னோட நண்பர் ஒருத்தர் அங்கே ஒரு புகார் தந்துட்டு வந்திருக்கார். அந்த ஆள் நேர்மையா அதை விசாரிப்பானான்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. அதான் கேட்டேன்.”

 

அவரு அவன் கிட்ட புகாரோட கொஞ்சம் பணத்தையும் குடுத்துட்டு வந்திருந்தா அவன் சரியா விசாரிப்பான். எவனை விசாரிக்கிறானோ அவன் அதை விட அதிகம் பணத்தை குடுத்தா அந்த ஆளுக்குச் சாதகமா ரிப்போர்ட் எழுதிடுவான். அவன் இந்த ஸ்டேஷனுக்கு வந்து நல்லா சம்பாதிச்சுட்டான் பாய்....”

 

அமீர்பாய் கைபேசியை சட்டைப்பையில் வைத்தபடி சொன்னார். “அப்படின்னா அந்த இன்ஸ்பெக்டர் காசை வாங்கிட்டு தான் அவங்களுக்கு சாதகமா உங்க கிட்ட சொல்லியிருக்கணும்

 

மைக்கேல் யோசனையுடன் சொன்னார். “மேலிடத்துல செல்வாக்கு இருக்கற யாராவது நமக்குத் தெரிஞ்சவங்க இருந்தா தான் நமக்கு உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க முடியும்...”

 

கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “முதலமைச்சரே அப்பாவோட நெருங்கிய நண்பர் தான் சார். எங்க நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். சி எம் இன்னைக்கு காலைல தான் ட்ரீட்மெண்டுக்காக அமெரிக்கா போனார்...”

 

சுமார் பதினைந்து ஆண்டுகளாக சேதுமாதவனிடம் நெருங்கிப் பழகியிருந்த போதும் அவர் இதுவரை முதலமைச்சருடன் இருந்த நட்பு குறித்து ஒரு முறை கூடச் சொல்லி இருக்காததால், அமீர் பாயும், மைக்கேலும் ஆச்சரியத்துடன் சேதுமாதவனைப் பார்த்தார்கள்.

 

சேதுமாதவன் மெல்லச் சொன்னார். “ஆமா.... ஒன்னாம் க்ளாஸ்ல இருந்து காலேஜ் வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் படிச்சோம்

 

அமீர் பாய் குற்றம் சாட்டும் பாவனையில் சொன்னார். “இத்தனை நாள் பழகியும் நீங்க சொல்லவேயில்லை...”

 

அதைப் பெருமையாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்பது போல் சேதுமாதவன் மௌனம் சாதித்தார்.

 

கிருஷ்ணமூர்த்தி அமீர் பாயிடம் சொன்னார். “முதலமைச்சரான பிறகு இவர் போய் அவரை ஒரு தடவையும் பார்க்கவுமில்லை...”

 

சேதுமாதவன் அன்று மதியம் கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்ன காரணங்களையே தயக்கத்துடன் தன் நண்பர்களிடமும் சொன்னார். இப்படியும் ஒரு மனிதரா என்று அவர்கள் இருவரும் சேதுமாதவனைப் பார்த்தார்கள்.

 

கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “ஒருவேளை இவர் அவர் கிட்ட போய்ட்டு வந்துட்டு இருந்திருந்தா அவரோட செகரட்டரி அல்லது அவருக்கு வேண்டிய வேற யாராவது நெருங்கின ஆள்களோட பரிச்சயம் ஆயிருக்கும்... அவங்க கிட்ட நாம உதவி கேட்டிருக்கலாம்...”

 

அமீர் பாய் கேட்டார். “முதலமைச்சரோட பர்சனல் போன் நம்பராவது இருக்கா?”

 

சேதுமாதவன் இல்லை எனத் தலையசைத்தார்.

 

போன் நம்பர் இருந்தா அவர் அங்கே போனவுடனயாவது பேசலாமேன்னு தான் கேட்டேன்என்றார் அமீர் பாய்.

 

மைக்கேல் சொன்னார். “இப்ப வர்றப்ப ந்யூஸ் பாத்துட்டு தான் வர்றேன். அவர் அங்கே போய்ச் சேர்ந்தவுடனே நேராய் ஆஸ்பத்திரிக்குத் தான் போறாராம். அந்த நிலைமைல தான் அவர் இருக்கார்

 

அப்படியானால் முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள வாய்ப்பேயில்லை. சேதுமாதவனை நினைவு வைத்திருக்கக்கூடிய முதல்வரின் மனைவியும் தற்போது உயிருடன் இல்லை. இனி என்ன செய்வது என்று அவர்கள் நால்வரும் யோசித்தார்கள்.


(தொடரும்)

என்.கணேசன்






4 comments:

  1. Can anybody give me a hint about which scam this novel is inspired from?

    ReplyDelete
    Replies
    1. *ஷா யோக மையமாக தான் இருக்கும் என நினைக்கிறேன்... ஐயாவும் அதே ஊர்...

      Delete
  2. Everybody knows sir..

    ReplyDelete
  3. ஐந்து பகுதிகளை படித்து விட்டேன்... எல்லாவற்றிலும் உள்ள நிகழ்வுகளும் பிரபலமான ஒரு யோகாலயத்தையே நினைவுபடுத்துகின்றன....

    ReplyDelete