சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 27, 2023

சாணக்கியன் 67

 

பிலிப்பிடம் பேசி விட்டு வந்த பின் புருஷோத்தமன் நீண்ட நேரம் மன ஆத்திரம் ஆறாமல் தவித்தார். அலெக்ஸாண்டர் சக்கரவர்த்தி. அதனால் அவனுக்கு புருஷோத்தமனை அரசனாகவே நடத்தத் தெரிந்திருந்தது.  ஆனால் பிலிப் அலெக்ஸாண்டரின் சேவகன். அதனால் அவனுக்கு புருஷோத்தமனைச் சேவகனாகவே நடத்த முடிகிறது. அலெக்ஸாண்டர் அதிகாரம் செலுத்தினாலும் அதில் தலைமைப்பண்பு இயல்பாக இருந்ததால். அதில் புருஷோத்தமன் மனம் புண்படவில்லை. அதிகாரத்தை இரவல் வாங்கிய பிலிப்புக்கு தலைமைப்பண்பு இயல்பாய் இல்லாததால் அவன் கடுமையாக நடந்து கொண்டு தலைமைப் பண்பை ஸ்தாபிக்க வேண்டி இருந்தது. அது புருஷோத்தமனைக் காயப்படுத்தியது.

 

இந்திரதத் கூடுமான வரை அவருக்கு ஆறுதல் சொன்னாலும் அவர் ஆத்திரம் அடங்கவில்லை. சிறிது நேரத்தில் அவர் ஆத்திரம் பிலிப்பிடமிருந்து ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் மீது இடம் பெயர்ந்தது. “நம் நாட்டில் மக்களிடம் தெரிகிற வித்தியாசமான நடவடிக்கைகளுக்கும் காரணம் உன் நண்பர் விஷ்ணுகுப்தர் தான் என்று பிலிப் சொல்கிறான். இது உனக்கு முன்பே தெரியுமா?”

 

“நிச்சயமாக இல்லை அரசே”

 

”தட்சசீலத்து ஆச்சாரியர் இங்கு இப்படி ரகசிய வேலைகளில் ஈடுபடுவது தன் நண்பன் கேகய நாட்டு அமைச்சர் என்ற தைரியத்தால் தானோ?”    

 

”விஷ்ணுவுக்குத் தைரியம் தர யாருடைய பதவியும், தயவும் தேவையில்லை அரசே. அறிவும் தைரியமும் இயல்பாகவே நிறைய என் நண்பனுக்கு இருக்கிறது”

 

“அதை வைத்து என் மண்ணில் அந்த ஆள் தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நான் ரசிக்கவில்லை இந்திரதத்.”  

 

இந்திரதத் மெல்லக் கேட்டார். “இதை நம் மண் என்று நாம் பிலிப் முன்னால் சத்தமாகச் சொல்ல முடியுமா அரசே?”

 

புருஷோத்தமன் ஒரு கணம் பேச்சிழந்து தன் அமைச்சரைப் பார்த்தார். மறுபடி பேசிய போது அவர் குரலில் விவரிக்க முடியாத வலி தெரிந்தது. “என்னை நீயும் ஏளனம் செய்வது என்று முடிவெடுத்து விட்டாயா இந்திரதத்?”

 

“என்னை மன்னியுங்கள் அரசே. உண்மையில் நம்மை நம் விதி தான் ஏளனம் செய்கிறது. நான் உண்மை நிலவரத்தை நினைவுபடுத்தினேன் அவ்வளவு தான். பிலிப் சொல்வதைப் பார்த்தால் வித்தியாசமான சூழ்நிலைகள் கேகயத்தில் மட்டும் உருவாகவில்லை. யவனர் வென்ற எல்லாப் பகுதிகளிலும் உருவாகிக் கொண்டு தானிருக்கிறது. அதன் பின்னணியில் விஷ்ணுகுப்தர் இருக்கிறார் என்ற சந்தேகமும் பிலிப் சொன்ன பிறகுதான் எனக்கே தெரிகிறது. எல்லா இடங்களிலும் இந்திரதத் அமைச்சராக இல்லை. அதனால் இந்திரதத் இருக்கும் தைரியத்தில் விஷ்ணுகுப்தர் எதையும் செய்து கொண்டிருக்கவில்லை என்பது நிச்சயம்.”

 

புருஷோத்தமன் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டுச் சொன்னார். “ஒரு சாதாரண ஆசிரியனால் தான் வசிக்கும் இடம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் என்னென்னவோ செய்ய முடிகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை இந்திரதத். உன்னால் நம்ப முடிகிறதா?”  

 

இந்திரதத் புருஷோத்தமன் சிறிதும் எதிர்பார்க்காத பதிலைச் சொன்னார். “நம்ப முடிகிறது அரசே”

 

புருஷோத்தமன் திகைப்புடன் பார்க்க இந்திரதத் சொன்னார். “ஏனென்றால் விஷ்ணுகுப்தன் சாதாரண ஆசிரியன் அல்ல அரசே....”

 

“அலெக்ஸாண்டரின் வலிமைக்கு முன் பர்வதேஸ்வரன் என்று பாராட்டப்படும் நானும் என் பெரும்படையும் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் உன் நண்பன் எத்தனை அசாதாரணமானவனாக இருந்தாலும் கூட, சிலரைத் தன் பின்னால் சேர்த்துக் கொண்டால் கூட, அலெக்ஸாண்டர் ஒடுக்க நினைத்தால் எதிர்த்து என்ன செய்து விட முடியும்?”

 

“எத்தனை யோசித்தாலும் எனக்கும் அது பிடிபடவில்லை அரசே. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்”

 

புருஷோத்தமன் உறுதியாகச் சொன்னார். “கேகய மண்ணில் என்ன நடக்க வேண்டும் என்பதை உன் நண்பன் தீர்மானிப்பதை நாம் அனுமதிக்க முடியாது. இங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதை நாம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதற்கு உங்கள் நட்பு தடையாக இருக்கக்கூடாது”

 

பிலிப்புக்கு புருஷோத்தமன் மீதும், இந்திரதத் மீதும் பலத்த சந்தேகம் ஏற்படத் துவங்கியது. ஆம்பி குமாரன் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் இந்திரதத்தின் நண்பர் என்று அவனிடம் முன்பே கூறியிருந்தான். ஆனால் அவர் ஏதோ சதிவலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று அவன் சொன்ன பிறகு இருவரும் விஷ்ணுகுப்தரை அறிந்திருப்பது போலவே காட்டிக் கொள்ளவில்லை.  அந்தப் பெயரைச் சொன்னவுடன் புருஷோத்தமன் இந்திரதத்தைப் பார்த்த பார்வை அவரும் அவர்களிருவருக்கிடையே இருக்கும் நட்பை அறிந்திருப்பதைக் காட்டிக் கொடுத்து விட்டது. ஆனால் அவரும் கூட வாய் திறந்து அது குறித்து ஒன்றும் சொல்லாதது விஷ்ணுகுப்தரின் சதியில் இவர்களிருவருக்கும் கூடப் பங்கிருக்குமோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவது போலிருந்தது.

 

ஆம்பி குமாரன் அறிவாளியல்ல என்றாலும் துரோகியும் அல்ல. ஏனென்றால் அவன் தானாகவே அலெக்ஸாண்டரிடம் ஆரம்பத்திலேயே நட்புக்கரம் நீட்டியவன். ஆனால் புருஷோத்தமன் அப்படியல்ல. ஆரம்பத்தில் அலெக்ஸாண்டரை எதிர்த்து, பிறகு போரிட்டு, போரில் தோற்ற பின் வேறு வழியில்லாமல் நட்புக் கரம் நீட்டியவர். இப்போதும் தன் படைகளை கேகயத்துக்குத் திருப்பிக் கொண்டு வரத் துடிக்கிறார். அதையெல்லாம் யோசிக்கும் போது அலெக்ஸாண்டரும் இங்கில்லை என்ற சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறாரோ என்ற சந்தேகம் பிலிப் மனதில் தோன்ற ஆரம்பித்தது.

 

அவனது காவலன் வந்து சொன்னான். “தட்சசீலத்திலிருந்து க்ளைடக்ஸ் தங்களைக் காண வந்திருக்கிறார் பிரபு”

 

க்ளைடக்ஸ் அவனால் தட்சசீலத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் யவன சேனாதிபதி. அவனைத் தான் யவன வீரர்களின் கொலை பற்றி விசாரித்து வர பிலிப் ஆணை பிறப்பித்திருந்தான். “உள்ளே அனுப்பு”

 

சிறிது நேரத்தில் க்ளைடக்ஸ் அவன் முன் வணங்கி நின்றான். அவனை அமரச்  சொன்ன பிலிப் உடனே விஷயத்திற்கு வந்தான். “குற்றவாளிகள் யார் என்பது தெரிந்ததா?”

 

“இல்லை பிரபு. நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களை அழைத்துக் கொண்டு நான் தட்சசீலத்தை அடுத்திருக்கும் வனப்பகுதிக்குப் போய் விசாரித்தேன். ஆனால்  கொள்ளையர் பற்றி எந்தத் துப்பும் கிடைக்கவில்லை….”

 

“காட்டில் வசிக்கும் துறவிகளும், சாதுக்களும் என்ன சொல்கிறார்கள்”

 

“அவர்களிடம் கேள்வி கேட்டால் அவர்கள் ஆகாயத்தை நோக்கிக் கை காண்பிக்கிறார்கள். அதன் பொருள், ஆகாயத்தில் இருக்கும் ஆண்டவனுக்குத் தான் தெரியும் என்பதா எல்லாம் அவன் செயல் என்பதா என்று தெரியவில்லை. நாங்கள் காட்டை சல்லடையாக சலித்துத் தேடிப் பார்த்து விட்டோம். கொள்ளையர்கள் யாரும் அங்கு இல்லை. கொள்ளையடித்தவுடன் அங்கிருந்து அவர்கள் இடம் பெயர்ந்திருக்க வேண்டும்…”

 

பிலிப்பின் முகத்தில் அதிருப்தி தெளிவாகத் தெரிந்தது. ”ஏன் மற்ற வீரர்கள் அல்லாமல் வெறும் யவன வீரர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று விசாரித்தாயா?”

 

“பல அரசர்கள் கட்டிய கப்பத் தொகை அதிகமாக இருப்பதால் வசூலித்த அதிகாரி நம்பகமான நம் வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார். இது வரை இதுபோன்ற வழிப்பறிகள் நம் வீரர்களிடம் நடந்திருக்காததால், இப்படியெல்லாம் செய்ய யாரும் துணிய மாட்டார்கள் என்று நினைத்ததால் அவர் அப்படி அனுப்பியிருக்கிறார்…“

 

“இனி இது போல் செய்யாமல் செல்வத்தை அனுப்புவதாக இருந்தால் அதிக வீரர்களின் பாதுகாப்பில் அனுப்பவும், நம் வீரர்கள் மட்டுமல்லாமல் இங்குள்ள வீரர்களையும் சேர்த்து அனுப்பவும் சக்கரவர்த்தி பெயரால் ஆணையிட்டு அனைவருக்கும் தகவல் அனுப்ப ஏற்பாடு செய்”

 

“உத்தரவு பிரபு.” என்று சொன்ன அவன் முகத்தில் லேசாக ஒருவித பயம் தோன்றி மறைந்ததை பிலிப் கவனித்தான். அது என்ன என்று கேட்க நினைத்தும் அவன் கேட்கவில்லை. கேட்டறிந்து தன் பயத்தை அதிகப்படுத்திக் கொள்ள அவன் விரும்பவில்லை.

 

ஆம்பி குமாரன் ஆயுதக்கிடங்கில் கொள்ளை அடித்தவர்களைக் கண்டுபிடித்து விட்டானா?”

 

“இல்லை பிரபு. ஆனால் அவருக்கு முடிந்த வகையில் விசாரித்துக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. இப்போது ஆயுதக்கிடங்கில் எப்போதும் பலத்த காவல் இருக்கிறது…”

 

“ஆம்பி குமாரனின் பிரச்சினையே ஓரிரு விஷயங்களுக்கு மேல் யோசிக்க முடியாதது தான். இன்னொரு இடத்தில் இன்னொரு பிரச்சினை உருவாகும் வரை இனி ஆயுதக்கிடங்கின் பக்கம் மட்டுமே அவன் பார்வை இருக்கும். முன் கூட்டியே யோசிப்பதும், அதற்குத் தயாராக இருப்பதும் அவனால் முடிந்தவை அல்ல. வேறெதாவது முக்கியச் செய்தி இருக்கிறதா க்ளைக்டஸ்

 

“ஆச்சார்ய விஷ்ணுகுப்தர் தட்சசீலம் திரும்பி வந்திருக்கிறார்”   

 

(தொடரும்)

என்.கணேசன்

 


  

1 comment:

  1. ஆச்சாரியார் தட்சசீலம் வந்து விட்டார் எனில் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து விட்டார் என்று அர்த்தம்....

    ReplyDelete