சிலர் தங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய இலக்கை மிக முக்கியமானதாக வைத்திருப்பார்கள். அவர்கள் சிந்தனை, பேச்சு, செயல், பேச்சு எல்லாமே அந்த இலக்கைச் சுற்றியே இருக்கும். அந்த இலக்கை அடைவது முடியவே முடியாது என்ற நிலை வந்தால் அவர்கள் முழு வாழ்க்கையும் அஸ்தமித்து விட்டது போல் அவர்கள் உணர்வார்கள். அவர்களால் வேறு எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் உற்சாகத்தை மீட்டெடுத்துக் கொள்ள முடியாது. அந்த நிலைமையைத் தான் ஆம்பி குமாரன் தன் வாழ்க்கையில் எட்டியிருந்தான். கேகய மன்னனைக் கொன்றோ சிறைப்படுத்தியோ வெற்றியை நிலைநாட்டி விட்டு அலெக்ஸாண்டரின் இணையில்லாத நண்பனாக அப்பகுதியில் உலா வர வேண்டும், அவனைப் பார்த்து மற்றவர்கள் எல்லாம் பயப்பட வேண்டும், வணங்க வேண்டும் என்றெல்லாம் அவன் எதிர்பார்த்தது வீணாகப் போய் விட்டது. கேகய மன்னன் புருஷோத்தமன் பழைய மிடுக்குடன் அவன் எதிரிலேயே இருப்பதுடன் அலெக்ஸாண்டரின் இன்னொரு நண்பனாகவும் மாறி விட்டிருந்தது ஆம்பி குமாரனின் உற்சாகத்தை மட்டுமல்ல அவன் முக்கியத்துவத்தையும் முழுவதுமாகக் குறைத்திருந்தது.
அலெக்ஸாண்டர் இனி
என்ன முடிவெடுத்து தெரிவிப்பான் என்றும் தெரியவில்லை. அதனால் முடிவு தெரியும் வரை ஒவ்வொரு
கணமும் யுகமாக நகர்ந்தது. காந்தார அரசனும் கேகய மன்னனும் அலெக்ஸாண்டருக்கு அடிபணிந்த
பிறகு தங்களைப் போன்றவர்களால் இனி செய்ய முடிந்தது வேறெதுவும் இல்லை என்று புரிந்து
கொண்ட அருகில் இருக்கும் மற்ற குறுநில மன்னர்களும், தனிப்பகுதிகளின் தலைவர்களும் அலெக்ஸாண்டரைச்
சந்திக்க வந்த வண்ணம் இருந்தார்கள். பரிசுப் பொருள்கள் தந்து தங்கள் விசுவாசத்தைத்
தெரிவித்து அலெக்ஸாண்டரின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களைச் சந்திப்பதிலும் தன் ஆட்களுடன் ஏதோ பேசுவதிலுமே
அலெக்ஸாண்டரின் நேரம் சென்று கொண்டிருந்தது.
ஆம்பி குமாரனுக்கு
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை. மெல்ல அவன் சசிகுப்தனிடம் அவர்கள் என்ன
பேசுகிறார்கள் என்று கேட்டான். சசிகுப்தன் சொன்னான். ”இப்போதைய வெற்றியின் நினைவாக
போர் நடந்த இடத்தில் சக்கரவர்த்தி ஒரு நகரத்தை நிர்மாணிக்க விரும்புகிறார். அதே போல்
அவருடைய இறந்த குதிரையின் நினைவாகவும் ஒரு நகரை நிர்மாணிக்க விரும்புகிறார். அந்த நகரங்கள்
எப்படி நிர்மாணிக்கப் பட வேண்டும் என்பதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.”
ஆம்பி குமாரனுக்கு
அந்தக் குதிரை பாக்கியசாலி என்று தோன்றியது. சசிகுப்தன்
தொடர்ந்து சொன்னான். “அதோடு கேகய மன்னரை வென்றதைக் கொண்டாடும் வகையில் ஒரு நாணயம் வெளியிடுவது
பற்றியும் பேசிக் கொள்கிறார்கள். அந்த நாணயத்தில் அலெக்ஸாண்டர் தன் குதிரையுடனும்,
கேகய மன்னர் தன் யானையுடனும் இருந்து போராடுவது போன்ற காட்சியை வார்ப்பதாக உள்ளார்கள்”
ஆம்பி குமாரன் பெருமூச்சு
விட்டான். புருஷோத்தமன் அலெக்ஸாண்டரின் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் யவன நாணயத்திலும்
இடம் பிடிக்கப் போகிறான். நட்புக்கரம் நீட்டிய ஆம்பி குமாரனோ எதற்கும் நாதியில்லாமல்
அமர்ந்து கொண்டிருக்கிறான். என்ன கொடுமையிது? அவன் மெல்ல சசிகுப்தனைக் கேட்டான். “இனி
சக்கரவர்த்தியின் அடுத்த திட்டம் என்ன என்று யூகம் எதாவது இருக்கிறதா?”
சசிகுப்தன் சொன்னான். “இல்லை. எப்போதும் ஒரு பெரிய வெற்றிக்குப்
பிறகு சில நாட்களாவது அவர் ஓய்வெடுக்கும் பழக்கம் உள்ளவர். அதன் பின் தான் அடுத்த திட்டத்தைப்
பற்றி யோசிக்க ஆரம்பிப்பார்.”
அவன் சொன்னபடி அலெக்ஸாண்டர்
நான்கு நாட்கள் கழித்து அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ஆரம்பித்தான். பாரசீகத்தில்
அவன் நியமித்திருந்த அவன் பிரதிநிக்கு எதிராகக் கிளர்ச்சிகள் ஆரம்பித்துள்ளன என்ற செய்தியும்
வந்ததால் முதலில் சசிகுப்தனை அங்கு அனுப்பத் தீர்மானித்தான். “சசிகுப்தா நாளையே நீ
கிளம்பிச் சென்று அங்கிருக்கும் நிலைமையைச் சீர்ப்படுத்து. நீ என்னுடன் இருந்தால் எனக்கு
போரில் உதவியாக இருப்பதோடு மொழிபெயர்ப்பிலும் உதவியாக இருக்கும் என்றாலும் அங்கு நீ
சென்று நிலைமையைச் சீராக்குவது மிகவும் முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது...”
சசிகுப்தன் தலைவணங்கிச்
சரியென்றான். அலெக்ஸாண்டர் அடுத்ததாக ஆம்பி குமாரனையும், புருஷோத்தமனையும் பற்றி யோசிக்க
ஆரம்பித்தான். ஆம்பி குமாரனுக்கு புருஷோத்தமனை சகித்துக் கொள்வது சுலபமாக இல்லாததை
அலெக்ஸாண்டரால் கவனிக்க முடிந்தது. அவன் அளவுக்கு புருஷோத்தமன் தன் உணர்வுகளை வெளிப்படுத்திக்
கொள்ளா விட்டாலும் அவருக்கும் ஆம்பி குமாரனுடன் நல்லுணர்வுடன் இருப்பது முடியாத காரியம்
என்பது தெளிவாகவே தெரிந்தது. அதனால் இருவரில் ஒருவரை மட்டுமே தன்னுடன் தொடர் படையெடுப்புகளுக்கு
அழைத்துப் போவது புத்திசாலித்தனமாக அவனுக்குத் தோன்றியது. இருவரில் ஒருவர் என்று யோசிக்கும்
போது சற்று வயதானவராக இருந்த போதிலும் புருஷோத்தமனே பல விதங்களில் சிறந்தவராக அவனுக்குத்
தோன்றியது. வீரத்திலும் சரி, மனப்பக்குவத்திலும் சரி, போர் புரியும் விதங்களிலும் சரி
ஆம்பி குமாரனை விட அவர் மேம்பட்டவராக இருந்தார். அதனால் ஆம்பி குமாரனை தட்ச சீலத்துக்கே
அனுப்பி வைப்பது என்று அவன் தீர்மானித்தான்.
அவன் ஆம்பி குமாரனைப்
பார்த்துச் சொன்னான். “நண்பா. பாரசீகத்தில் பிரச்சினைகள் இருப்பதால் சசிகுப்தனை அங்கே
அனுப்புகிறேன். ஆனால் அடுத்து அருகிலிருக்கும் காந்தாரமும் பாதுகாக்கப்பட வேண்டியதும்
மிக முக்கியம் என்பதால் நீ
தலைநகர் தட்ச சீலத்திலேயே இருப்பது சிறந்தது என்று நினைக்கிறேன். அதனால் நாளையே நீயும்
தட்சசீலத்திற்குத் திரும்பி விடு. புருஷோத்தமன் என்னுடன் தொடர் படையெடுப்புகளுக்கு
வரட்டும்”
ஒரு விதத்தில் அவன்
சொன்னதில் ஆம்பி குமாரன் நிம்மதி அடைந்தான். இந்த புருஷோத்தமனைச் சகிப்பதிலிருந்து
தப்பித்துச் செல்வதே பெரிய விடுதலையாகத் தோன்றினாலும் இன்னொரு விதத்தில் அவன் இருக்க
ஆசைப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு புருஷோத்தமன் அலெக்ஸாண்டரின் நண்பனாக வலம் வரப்
போகிறான் என்பது பெருங்கசப்பாக இருந்தது. அதிருப்தியைக் காட்டிக் கொள்ள முடியாமல் அவன்
தலையசைத்தான்.
சந்திரகுப்தன் சாணக்கியரிடம் சொன்னான். “ஆம்பி குமாரன் தட்சசீலத்திற்குத்
திரும்பி விட்டான் என்ற செய்தி கிடைத்திருக்கிறது. அவன் மகிழ்ச்சியாக இல்லை என்றும்
சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபித்துக் கொள்கிறான் என்றும் அரண்மனை வேலைக்காரர்கள்
சொல்கிறார்கள்”
“முட்டாள்களும்,
சரியான முடிவுகளை எடுக்காதவர்களும் மகிழ்ச்சியாக இருந்ததாகச் சரித்திரமே இல்லை சந்திரகுப்தா.
ஆம்பி குமாரன் இரண்டு ரகத்திலும் சேர்ந்தவன் என்பதால் அவன் அப்படி இருப்பதில் ஆச்சரியமே
இல்லை” என்று சாணக்கியர் சொன்னார்.
“தோல்வியடைந்த புருஷோத்தமனை
அலெக்ஸாண்டர் மதித்து நண்பராக ஏற்றுக் கொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஆச்சாரியரே”
“போர்க்களத்தில்
அவர் வீரத்தைக் கண்ட பின் அவரைச் சிறைப்படுத்துவதை விட நண்பனாக்கிக் கொள்வது இலாபகரமானது
என்று அலெக்ஸாண்டர் நினைத்திருப்பான்....”
“ஆனாலும் அலெக்ஸாண்டர்
நடந்து கொண்ட விதம் பெருந்தன்மை அல்லவா ஆச்சாரியரே?”
சாணக்கியர் யோசனையுடன்
சொன்னார். “மாவீரனான அவன் வீரத்திற்கு மதிப்பு தந்ததாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதே
போல் இங்குள்ள வனத்தில் தண்டராய சுவாமியிடம் கோபத்தைக் காட்டாமல் பணிவைக் காட்டி அவரிடம்
பேசி வந்ததையும் ஞானத்திற்கு அவன் மதிப்பு தந்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால்
அலெக்ஸாண்டரைப் போன்றவர்கள் எல்லா நேரங்களிலும் இப்படியே பெருந்தன்மையாகவும், உயர்வை
மதிப்பவர்களாகவும் இருப்பார்கள் என்று நம்மால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது சந்திரகுப்தா.
சில சமயங்களில் நீச்சத்தனமாக நடந்து கொள்ளவும் அவர்கள் தயங்காதவர்களாகவும் இருப்பார்கள்.
அந்தந்த நேரங்களில் மேல்படும் உணர்வின் படி நடந்து கொள்ளக்கூடியவன் அலெக்ஸாண்டர் என்பதே
என் கணிப்பு...”
சந்திரகுப்தன் தலையசைத்து
விட்டு பின் மெல்லக் கேட்டான். “அலெக்ஸாண்டரை விரட்ட நீங்கள் எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள்
எந்த அளவு பயன் தருவதாக இருக்கின்றன ஆச்சாரியரே?”
“நான் விதைகளை நட்டிருக்கிறேன்.
விளைவுகள் இயற்கையின் விதிகளின் படியே அதனதன் காலத்திலேயே நடக்கும்....”
“இப்போது அலெக்ஸாண்டருடன்
புருஷோத்தமனும் சேர்ந்து கொண்டதுடன் பல குறுநில மன்னர்களும் தலைவர்களும் கூட இணைந்து
கொண்டிருக்கிறார்கள். என்பதால் அடுத்து அவன் படையெடுப்புகள் வேகம் எடுக்குமென்றே நினைக்கிறேன்
ஆச்சாரியரே. அவன் வேகமாக முன்னேறிச் சென்றால் நானறிந்த வரையில் மகதம் எட்டும் வரை அவனை
எதிர்க்க முடிந்தவர்கள் யாருமில்லை.”
“உண்மை தான் சந்திரகுப்தா.
நம் முயற்சிகள் எந்த அளவு வேலை செய்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.”
(தொடரும்)
என்.கணேசன்
Excellent characterization and superb narration
ReplyDeleteசிறப்பாக உள்ளது....
ReplyDelete