சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 6, 2023

யாரோ ஒருவன்? 128


மேகலா, ரஞ்சனி, தீபக், தர்ஷினி நால்வரும் மனம் படபடக்கப் பார்த்துக் கொண்டிருக்கையில் அசைவற்ற நிலையில் இருந்த மூவர் நொந்த மனதுடன் இனி என்ன வரப்போகிறதோ என்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். வேலாயுதம் தன் மனதில் தீபக்கை கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தார். “.... சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டிங்கற கதையாய் இந்த நாயி அவன்கிட்ட போய் பெரிய புடுங்கி மாதிரி பேசினதால வந்த வினை இது. இல்லாட்டி ரஞ்சனியை எப்படியாவது சமாளிச்சு அனுப்பிச்சிருக்கலாம். வேலியில போற ஓணானை எடுத்து மடியில விட்டுகிட்ட மாதிரி பக்கத்து வீட்டுக்காரனை வரவழைச்சு படமாவே எல்லாத்தையும் இந்த கிறுக்கு நாய் ஓட வைக்க விட்டுட்டானே... ஐயோ... ஐயோ...”

அடுத்த காட்சி விரிந்தது. மணாலி கடைத்தெருவில் மூன்று நண்பர்களும் ஒவ்வொரு கடையில் நின்று பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். மாதவன் கையில் ஒரு அழகான சந்தனக் குங்குமச்சிமிழும், சில வித்தியாசமான கண்ணாடி வளையல்களும் இருக்கின்றன. சிறிது நேரத்தில் ஒன்று சேர்கிறார்கள்.

மாதவனிடம் சரத் கேட்கிறான். “யாருக்குடா?”

மாதவன் புன்னகையுடன் “குங்குமச் சிமிழ் அம்மாக்கு. வளையல் ரஞ்சனிக்கு.” என்று சொல்லிக் கொண்டே பையில் பத்திரமாய் உள்ளே வைக்கிறான். ”ரெண்டு பேருக்குமே என் செலக்‌ஷன் ரொம்ப பிடிக்கும். வேணும்னா பாரேன்...”

அடுத்த  காட்சி...

மாதவன், கல்யாண், சரத் மூவரும் ஒரு மலை ஏறிக் கொண்டிருக்கிறார்கள். கல்யாண் மாதவனிடம் சிரித்துக் கொண்டே என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறான். சில அடிகள் பின்னால் சரத் வந்து கொண்டிருக்கிறான். மாதவன் முகத்தில் வருத்தம் தெரிந்தது.

கல்யாண் கேட்டான். “என்ன விஷயம்டா?”

மாதவன் வருத்தத்துடன் சொன்னான். “எனக்கு அந்த நாகரத்தினக்கல் கிடைச்சுதுன்னு சந்தோஷப்படறேன். ஆனா அந்த ஆள் எவ்வளவு துக்கத்துல இருப்பான்னு நினைக்கிறப்ப கஷ்டமாயிருக்கு. அடுத்தவன் நஷ்டத்துல நமக்கு லாபம் வேணுமா, அது நியாயமான்னு நேத்திலிருந்தே மனசாட்சி கேட்குது... ரிசர்வேஷன்ல வந்ததால ரயில்வே டிபார்ட்மெண்ட் மூலமா அவன் அட்ரஸை வாங்கிடலாமில்ல”

“பைத்தியமாடா நீ. அந்தப் பாம்பை நீயா அந்த சூட்கேஸ்ல இருந்து உன் பைல போட்டுகிட்டே. அதுவா உன் பைக்கு வந்திருக்கறதுக்கு நீ என்னடா பண்ணுவே”

”இல்லை. நான் திறந்து பார்த்த சூட்கேஸ சரியா இடைவெளி இல்லாம மூடியிருந்தா அது அவன் சூட்கேஸ்லயே இருந்திருக்குமில்லையா” மாதவனுக்கு இன்னும் அது உறுத்தலாக இருந்தது.

மலை உச்சியை அவர்கள் அடைகிறார்கள். மலை உச்சியின் அழகில் மெய்மறந்து மாதவன் நிற்க,  கல்யாண் உச்சியிலிருந்து ஆழத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாதவன் சொன்னான். “ரஞ்சனி மட்டும் நம்ம கூட வந்திருந்தா இங்கே அழகா ஒரு கவிதை எழுதியிருப்பா”

கல்யாண் சொன்னான். “ஆமா. இந்த மலையுச்சி ரொம்ப அழகாயிருக்கில்ல.. வேணும்னா இங்கே இருந்தே நீ ரஞ்சனி கிட்ட பேசு..”

“இங்கெல்லாம் டவர் கிடைக்காதுடா” என்று மாதவன் சொல்ல ”எதுக்கும் குடுடா பார்ப்போம்” என்று கல்யாண் சொன்னான்.

தன் மொபைல் போனை எடுத்து கல்யாணிடம் கொடுத்த மாதவன் சொன்னான். “நாம நாலு பேரும் மொபைல் போனை வாங்கினதுக்கு வீட்டுல எவ்வளவு திட்டினாங்கல்ல. வந்து மூனே வருஷத்துல வாங்கறதுக்கு நாம என்ன பணக்காரங்களான்னு கேட்டாங்க..... நாம தான் பிடிவாதமா வாங்கினோம். பணம் வந்தா இந்த ஓட்டை போனைக் குடுத்துட்டு நல்ல மாடலா ஒன்னு வாங்கணும்”

கல்யாண் மாதவன் மொபைலை வாங்கிப் பார்த்துட்டு “ஆமாடா.  நீ சொன்ன மாதிரி சிக்னல் இல்லை” என்று சொல்லி விட்டு உச்சியிலிருந்து எதையோ பார்த்த மாதிரி அதிசயித்தான். “மாதவா இங்கே பார்த்தியா?”

மாதவன் அவனருகில் வந்து உச்சியில் இருந்து அவன் காண்பித்த இடத்தில் மெல்ல எட்டிப் பார்க்கிறான். திடீரென்று கல்யாண் மாதவனைப் பலமாகத் தள்ளி விட மாதவன் நிலை தடுமாறி அந்த மலைப்பள்ளத்தாக்கில் விழுகிறான். சில அடிகள் தள்ளி இருந்த சரத் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.

காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி பெருந்துக்கத்துடன்மாதவாஎன்று கூக்குரலிட்டு விம்மி அழ ஆரம்பிக்க படபடக்கும் இதயத்துடன் மேகலா அவள் தோளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். தீபக்கும், தர்ஷினியும் தங்கள் கண்களை நம்ப முடியாமல் அதிர்ந்தார்கள். ஒருவர் கையை ஒருவர் இறுக்கப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் அதிர்ச்சி குறையாமல் தங்களையுமறியாமல் காட்சியில் மறுபடி லயித்தனர்.



மலையுச்சியில் ஒரு நிமிடம் கண்களை மூடி நின்ற கல்யாண் நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டே எட்டிப் பார்க்கிறான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மாதவனைக் காணவில்லை. மாதவனின் மொபைல் போனைத் தூக்கி தொலைதூரத்திற்கு எறிந்து விட்டு கல்யாண் சரத்தை திரும்பிப் பார்க்கிறான். சரத் உடல் நடுங்க ஆரம்பித்தது.

கல்யாண் சரத் அருகே போய் அமைதியாய் சொன்னான். “எல்லாம் முடிஞ்சுடுச்சு. இனி நாம எப்படி இதைக் கையாள்றோம்கிறது முக்கியம். நீ அமைதியாயிரு. ரிலேக்ஸ்... உனக்கும் ரஞ்சனிக்கும் இடையில இனி யாரும் தடையாயில்லை.... சந்தோஷப்படு... ரிலேக்ஸ்.... எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். நான் பேசிக்கறேன்.... நீ அமைதியாயிரு....”

அடுத்த காட்சி. ஓட்டலுக்குள் கல்யாணும், சரத்தும் நுழைகிறார்கள். ரிசப்ஷனில் கல்யாண் கேட்டான். “மாதவன் வந்தானா?”

ரிசப்ஷன் ஆள் கேள்விக்குறியுடன் பார்க்க கல்யாண் கேட்டான். “எங்க நண்பன்..”

ரிசப்ஷன் ஆள் “இல்லை” என்று தலையசைத்தான். கல்யாணும், சரத்தும் தங்கள் அறைக்குள் நுழைகிறார்கள். முதல் வேளையாக மாதவன் தன் சூட்கேஸில் பத்திரமாக ஒரு காகிதத்தில் சுற்றி வைத்திருந்த நாகரத்தினத்தை எடுத்து தன் சூட்கேஸில் பாதுகாப்பாக வைத்து விட்டு கல்யாண் சொன்னான். “இனி இந்த பாம்பு நமக்கு பிரச்சினை தான். இதுக்கும் குட்பை சொல்லணும்” என்று சொல்லிவிட்டு அந்த அட்டைப் பெட்டியைத் தள்ளி விட பாம்பு தரையில் விழுந்தது.

“வா போகலாம்” என்று சரத்திடம் சொல்லி விட்டு வேகமாக வெளியே வந்த கல்யாண் “பாம்பு.... பாம்பு.... எங்க அறையில் பாம்பு”

சிறிது நேரத்தில் ஆட்கள் கம்புகளோடு அந்த அறைக்குள் புகுந்து அந்தப் பாம்பை அடித்துக் கொன்றார்கள். கடைசியில் ஒருவன் கம்பின் நுனியில் செத்த பாம்பை எடுத்துக் கொண்டு வந்து அனைவரிடமும் ”எத்தனை நீளமான பாம்பு” என்று காட்டி விட்டு வெளியே கொண்டு போனான். சரத் பிரேதக்களையுடன் நிற்க கல்யாண் அவனை அமைதிப்படுத்தினான். “இனி நிம்மதியா தூங்கலாம்.”

சரத் அறைக்குள் போன பிறகு கவலையுடன் கேட்டான். “மாதவன் எங்கேன்னு யாராவது கேட்டா?”

கல்யாண் அமைதியாகச் சொன்னான். ”ராத்திரி வரைக்கும் பார்த்துட்டு நாமளே மாதவனைக் காணோம்னு போலீஸுக்கு புகார் கொடுப்போம்.”

சரத் சந்தேகத்துடன் கேட்டான். “நம்ம மேல சந்தேகம் வராதா?”

கல்யாண் சொன்னான். “பாரு மாதவன் நம்ம நெருங்கிய நண்பன். நமக்குள்ள எந்த சண்டையுமில்லை. போலீசுக்குத் தெரியற மாதிரி அவனைக் கொன்னு நமக்கு கிடைக்கப் போகிற லாபமும் ஒன்னுமில்லை. நாம மூனு பேரும் சந்தோஷமா ஒன்னா இருக்கோம், சண்டையெல்லாம் எதுவும் போட்டுக்கலைன்னு இந்த ஓட்டல்காரனுக கூட சாட்சி சொல்வாங்க. அப்பறம் எப்படி சந்தேகம் வரும்”

சொல்லிக் கொண்டே அவன் டிவி ரிமோட்டை எடுத்து ‘ஆன்’ செய்ய டிவியில் மணாலியில் ஒரு டாக்ஸியில் நடந்த வெடிகுண்டு விபத்தைப் பற்றி செய்தி வந்து கொண்டிருந்தது. வெடிகுண்டு விபத்தில் ஒரு பிணம் முழுவதுமாகக் கருகி  இருப்பதால் யாருடையது என்று தெரியவில்லை என்றும் டாக்சி டிரைவர் அதிர்ச்சியில் எதையும் சொல்லும்  நிலையில் இல்லை என்றும் செய்தி வாசிப்பாளர் சொன்னார்.

அதைக் கேட்டு விட்டு கல்யாண் வேகமாக எழுந்தான். மாதவன் சூட்கேஸில் இருந்து அவனுடைய டிரைவிங் லைசென்ஸை எடுத்தான்.

“சரத் இதைப் பிடிடா” என்று சொல்ல சரத் அதைப் பிடித்துக் கொள்ள சிகரெட் லைட்டரால் அந்த டிரைவிங் லைசென்ஸை பாதி எரிய வைத்து அவன் புகைப்படம் இருக்கிற பகுதி தெளிவாகத் தெரிகிற மாதிரி  இருக்கையில் அணைத்தான். 

அடுத்த காட்சியில் அவர்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்தார்கள். பாதி கருகிய டாக்சி உடைந்த கண்ணாடிகள் என்று களேபரமாகக் காட்சியளித்த இடத்தைச் சுற்றியும் கயிறு கட்டியிருந்தார்கள். இப்போதும் பலர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை அவன் கண்கள் அலசின. கூட்டத்தோடு நின்று கொண்டிருக்கையில் ஓரிடத்தில் பாதி எரிந்திருந்த லைசென்ஸை கல்யாண் நழுவ விட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. Very interesting update. Feeling sad for Madhavan.

    ReplyDelete
  2. ரஞ்சனி -யோட மணநிலையை தங்கள் கோணத்தில் அறிய ஆர்வமாக உள்ளது.

    ReplyDelete
  3. கல்யாண் எந்த அளவு யோசித்து... எவ்வளவு சாமர்த்தியமாக வேலைகளை செய்திருக்கிறான்...

    ReplyDelete
  4. Nagarajukum Madhavanukkum enna sambandam.

    ReplyDelete
  5. eagerly waiting for next episode sir. i felt nagaraj might be madhavan.

    ReplyDelete