சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 19, 2023

சாணக்கியன் 40

 

ற்ற மாணவர்கள் உறங்கச் சென்று விட்ட பிறகும் கூட சந்திரகுப்தன் நள்ளிரவு வரை சாணக்கியருடன் பேசிக் கொண்டிருந்தான். மற்றவர்கள் முன்னால் சொல்ல வேண்டாம் என்று நினைத்து, பிறகு இருவரும் தனியாக இருக்கையில் மனம் விட்டுச் சொல்லிக் கொள்ளக்கூடிய விஷயங்களை அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

சந்திரகுப்தன் ஆச்சாரியரை தனநந்தன் அவமானப்படுத்தியதற்காக நிறையவே மனம் கொதித்தான். அவருடைய முடியாத குடுமி எப்போதும் அதை நினைவுபடுத்தும் விதமாகத் தொங்கிக் கொண்டிருப்பது அவனுக்கு வேதனையாக இருந்தது. உணர்வுகளை எப்போதும் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய அவரே அவ்வளவு கொந்தளித்து சபதமெடுத்துக் கொண்டு இருக்கிறாரென்றால் எவ்வளவு வேதனையையும், அவமானத்தையும் அவர் அந்தக் கணத்தில் உணர்ந்திருப்பார் என்று யோசித்துப் பார்க்கையில் அவனுக்கு மிக வருத்தமாக இருந்தது. அதை அவன் குரலடைக்க அவரிடம் தெரிவித்த போது அவர் வருத்தத்துடன் புன்னகைத்தார்.

 

எனக்காக நான் உணர்ந்த அவமானம் மிகச்சிறியது சந்திரகுப்தா. ஆனால் நான் என் தேசத்திற்காக உணர்ந்த அவமானம் மிகப் பெரியது. குறுகிய மனங்களும். மரத்துப் போன இதயங்களும் உள்ள மனிதர்கள் இந்தப் புனித  தேசத்தில் நிறைந்து விட்டார்களே என்று தான் அதிக வருத்தப்பட்டேன். விஷ்ணுகுப்தன் என்ற தனியொரு மனிதன் கால ஓட்டத்தில் தோன்றி மறையக்கூடிய ஒரு புள்ளி. அதற்கு பெருமையென்ன, அவமானமென்ன? ஆனால் இந்த வேத பூமி அப்படியல்ல. தனநந்தன் தன்னுடைய இலாபம் கருதியாவது படையெடுத்து இங்கு வரச் சம்மதித்திருந்தால் அவன் என்  தந்தையைக் கொன்றதைக்கூட நான் மன்னித்திருப்பேன். ஆனால் தாயகத்தைக் காப்பாற்ற முடிந்த வலிமையிருந்தும், கடமைப்பட்டவனாக இருந்தும், அவனுக்கு லாபமிருந்தும் கூட அவன் மறுத்தது தான் என்னைக் கோபமூட்டி பழைய பகையையும் சேர்த்துப் புதுப்பித்தது. கோபத்தை அடக்குவதற்குப் பதிலாக அதை வளர்த்திக் கொண்டு அதையே ஒரு சக்தியாக்கி அஸ்திவாரமாக்கி தான் சபதம் போட்டேன். நான் என்றும் பின்வாங்கி விடக்கூடாது என்பதற்காகவே அதைச் செய்தேன்...”

 

அவர் தன் அவமானத்தை விட அதிகமாய் தாய்நாட்டுக்காக உணர்ந்தது அதிகம் என்று மறுபடியும் புரிந்த போது சந்திரகுப்தன் மனம் பிரமித்தது. எத்தனை பேரால் இப்படி உணர முடியும் என்று யோசித்துப் பார்த்தான். அவனாலேயே கூட அப்படி முடிந்திருக்காது. பாரதம் என்ற சொல்லையே அவன் அவர் மூலமாக அல்லவா கேட்டும் புரிந்து கொண்டும் இருக்கிறான்....

 

சாணக்கியர் தொடர்ந்து சொன்னார். “சரியாகப் பார்த்தால் நான் ஆம்பி குமாரன் மீது தான் அதிக கோபம் கொண்டிருக்க வேண்டும். அவன் தான் அலெக்ஸாண்டருக்கு நட்புக்கரம் நீட்டி இந்த மண்ணிற்குள் காலடி எடுத்து வைக்க அனுமதி தந்தவன். ஆனால் அந்த முட்டாள் மீது அதிக கோபம் எனக்கு வராததற்கு என்ன காரணம் என்றால் அவன் நட்புக்கரம் நீட்டியிருக்கா விட்டால் அலெக்ஸாண்டருடன் போர் புரிந்து தோற்றுத் தான் போயிருப்பான். அவன் புருஷோத்தமனிடம் சேர்ந்து அலெக்ஸாண்டருடன் போரிட்டிருந்தால்  மட்டும் தான் வெல்லும் வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆம்பி குமாரனின் தந்தை உயிரோடும், பழைய வலிமையோடும் இருந்திருந்தால் முன்பிருந்தே கொண்ட நட்பால் அவரும் புருஷோத்தமனும் இணைந்திருக்கலாம். இருவரும் இணைந்து அலெக்ஸாண்டரை வென்று துரத்தியடித்தும் இருக்கலாம். ஆனால் ஆம்பி குமாரன் ஆரம்பத்திலிருந்தே புருஷோத்தமனை எதிரியாக நினைப்பவன். புருஷோத்தமனும் அப்படித்தான். அப்படி இருக்கையில் அவர்கள் இணைந்து செயல்படும் வாய்ப்பே அவர்கள் மனநிலைப்படி இல்லை. ஆம்பி குமாரனின் அறிவு வளர்ச்சியும் அதற்கு உதவுவதாக இல்லை....”


சந்திரகுப்தன் மெல்லக் கேட்டான். “இனி நாம் என்ன செய்யப் போகிறோம் ஆச்சாரியரே? அலெக்ஸாண்டரை வெல்ல கேகய நாட்டுக்கு ஏதாவது வகையில் உதவி செய்யப் போகிறோமா?”

 

சாணக்கியர் மறுக்கும் பாவனையில் தலையசைத்தார். “கேகய நாடு கண்டிப்பாக அலெக்ஸாண்டரை வெல்ல முடியாது சந்திரகுப்தா. அதற்கு நாம் அவர்களுக்கு உதவவும் வழியில்லை.”

 

சந்திரகுப்தன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “தாங்கள் கேகய நாட்டுப் படையையும், புருஷோத்தமரின் வீரத்தையும் குறைத்து மதிப்பிடுவதாக எனக்குத் தோன்றுகிறது ஆச்சாரியரே. பர்வதேஸ்வரன் என்ற பெயர் படைத்த அந்த மாவீரர் இப்போது பெரும்படையையும் வைத்திருக்கிறார். அவருடைய சமீபத்திய வெற்றிகள் அவர் படையைப் பெருமளவு வளர்த்தியிருக்கின்றன. அதனால் அவர் மனம் வைத்தால் அலெக்ஸாண்டரை வெல்ல முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது. மேலும் இப்போது மழைக்காலம். மழையும், விதஸ்தா நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமும் கூட ஓரளவு கேகய நாட்டுக்கே அனுகூலமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் அவர்கள் இந்த வெள்ளத்திற்குப் பழக்கப்பட்டவர்கள். யவன வீரர்கள் அதற்குப் பழக்கப்படாதவர்கள்…”

 

சாணக்கியர் தன் மாணவனின் புத்திசாலித்தனமான புரிதலை மெச்சும் வகையில் புன்னகைத்தார். பிற்காலத்தில் ஜீலம் நதி என்றழைக்கபடவிருக்கும் விதஸ்தா நதியை வெள்ளப்பெருக்கோடும் காலத்தில் கடப்பது சுலபமல்ல. யவனப்படைக்கு அது மிகவும் சிரமம் மட்டுமல்ல. புதிய அனுபவமாகவும் இருக்கும். காந்தாரப்படைக்கு அருகில் உள்ள பகுதியைப் பார்த்துப் பழக்கமிருக்கலாம் என்பதால் யவனப்படையை விட ஓரளவு சிரமம் குறைவாக இருக்கலாம் என்றாலும் அவர்களுக்கும் அதில் பயணித்துப் பழக்கமில்லை. இதை எல்லாம் வைத்து தான் சந்திரகுப்தன் சொல்கிறான்…

 

சாணக்கியர் சொன்னார். “நீ நினைக்கிற படி தான் புருஷோத்தமனும் கேகய படையும், நினைத்து சற்று அலட்சியமாக இருக்கும் வாய்ப்பு அதிகம் சந்திரகுப்தா. ஆனால் அலெக்ஸாண்டர் பல விதங்களில் வித்தியாசமாக சிந்தித்துப் பழக்கப்பட்டவன். அதனால் அவன் இந்தப் போரை வித்தியாசமாக அணுக வாய்ப்பு இருக்கிறது. அவனைப் போன்ற புத்திசாலி எதிலும் அலட்சியம் காட்ட மாட்டான். அதனால் அவன் ஏதாவது ஒரு வழி கண்டுபிடிப்பான்… பல நேரங்களில் வெல்வது படையின் வலிமையை விட யுக்தியின் வலிமை தான் சந்திரகுப்தா…”

 

சந்திரகுப்தனுக்கு அவரளவுக்குத் தீர்மானமாக எதையும் சொல்ல முடியவில்லை. அவன் மூளை ஒன்றைச் சொல்கிறது. ஆனால் ஆச்சாரியரின் மூளை இன்னொன்றைச் சொல்கிறது. எந்தக் கணக்கு பலிதமாகும் என்பது போருக்குப் பின்னால் தான் தெரியும்….

 

சந்திரகுப்தன் அவரிடம் கேட்டான். “ஆச்சாரியரே. நீங்கள் சொல்வது போல் அலெக்ஸாண்டர் வென்றால் அது நமக்கு இன்னும் ஆபத்தல்லவா? அவன் தொடர்ந்து பாரதத்தின் உள்ளே முன்னேறிச் சென்று கொண்டே இருப்பானே. நீங்கள் எதற்குப் பயந்தீர்களோ அது முழுமையாகவல்லவா நடந்தேறி விடும். இதை நாம் எப்படிக் கையாளப்போகிறோம்? நாம் இனி செய்ய வேண்டியது என்ன?”

 

சாணக்கியர் சொன்னார்.  ”பாடலிபுத்திரத்திலிருந்து கிளம்பிய கணத்திலிருந்து நான் இதைப் பற்றியே தான் யோசித்துக் கொண்டு வந்தேன் சந்திரகுப்தா. இப்போது நமக்கு இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள். தெற்கில் தனநந்தன். வடக்கில் அலெக்ஸாண்டர். இருவரையும் நாம் வென்றாக வேண்டும்…”

 

சந்திரகுப்தன் திகைத்தான். இரண்டு பேரும் மாபெரும் படைகளை வைத்திருக்கக்கூடிய பேரரசர்கள். இவர்களோ தனி மனிதர்கள். இவர்களிடம் நாடும் இல்லை. படைகளும் இல்லை. செல்வமும் இல்லை….

 

அவனுடைய திகைப்பைப் பார்த்து சாணக்கியர் புன்னகை பூத்தார். ”சந்திரகுப்தா என்ன யோசிக்கிறாய்?”

 

சந்திரகுப்தன் திகைப்பின் காரணத்தை வாய்விட்டே சொன்னான். “ஆச்சாரியரே. நீங்கள் எதிரிகளாகச் சொல்பவர்கள் பேரரசர்கள். படைவலிமை கொண்டவர்கள். அவர்களிடம் செல்வத்திற்கும் எந்தக் குறையும் இல்லை. நிலைமை இப்படி இருக்கையில் நாம் எப்படி அவர்களை வெல்லப் போகிறோம்? நம்மிடம் என்ன இருக்கிறது?”

 

சாணக்கியர் சொன்னார். “நம்மிடம் சிந்திக்கும் அறிவு இருக்கிறது. நம்மிடம் நம்பிக்கை இருக்கிறது. நம்மிடம் உறுதி இருக்கிறது. காரியம் முடியும் வரை காத்திருக்கும் பொறுமையும் இருக்கிறது. இன்று நாம் தனியர்கள். இதுபோலவே நாம் கடைசி வரை இருந்து விடப்போவதில்லை. எதெல்லாம் இப்போது நம்மிடம் இல்லை என்று சொல்கிறாயோ அதெல்லாம் இனியும் இல்லாமலேயே போய்விடும் என்று அர்த்தமில்லை. இல்லாதவைகளை அறிவுடையவன் பெற்றுக் கொள்ள முடியும். எல்லாவற்றிற்கும் முயற்சிகள் தேவை. அதைச் செய்யத் தயாராவோம்.”

 

அவர் வார்த்தைகள் மிக நிதானமாக வந்தன. உணர்ச்சி வேகத்தில் சொல்லப் பட்ட வார்த்தைகள் அல்ல அவை. கணக்கிட்டு உறுதியுடன், தெளிவுடன், தீர்மானமாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை. வார்த்தைகளை வெறுமனே அள்ளி வீசுபவரல்ல அவர் என்பதால் சந்திரகுப்தனுக்கு திகைப்புடன் குழப்பமும் சேர்ந்து கொண்டது.

 

சாணக்கியர் சந்திரகுப்தனிடம் தன் திட்டத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அலெக்ஸாண்டரைத் துரத்த ஒரு திட்டம். தனநந்தனை வெல்ல ஒரு திட்டம். சாணக்கியர் படிப்படியாக எல்லாவற்றையும் யோசித்து வைத்திருந்தார். அவர் சொல்லி முடித்த பிறகும் சந்திரகுப்தனுக்கு இதெல்லாம் முடியுமா, ஆகிற காரியமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை. ஆனால் அவன் எல்லாவற்றையும் விட அவரை அதிகமாக நம்பினான். அவனுடைய ஆச்சாரியர் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கை அவன் அறிவு எழுப்பிய சந்தேகங்களை விட மேலானது. அவரிடம் இம்மியளவு சந்தேகமும் தென்படவில்லை. அதை அவனால் உணர முடிந்தது. இது வரை அவர் அவ்வளவு உறுதியாகச் சொன்ன எதுவும் நடக்காமல் போனதில்லை…

 

சந்திரகுப்தன் மெல்லக் கேட்டான். “அப்படியானால் இப்போதைக்கு இந்தப் போரைப் பொருத்த வரை…”

 

சாணக்கியர் சொன்னார். “நாம் எதுவும் செய்யப் போவதில்லை. வேடிக்கை பார்ப்போம்”

 

(தொடரும்)

என்.கணேசன்




2 comments:

  1. Each line is excellent and thoughtful. Hats off sir.

    ReplyDelete
  2. இது எவ்வாறு நடக்கும் என்ற சந்தேகம் எங்களுக்கும் எழுகின்றது.... ஆச்சாரியார் அதை செய்யக்கூடியவர்.... தான்

    ReplyDelete