தீபக்
பக்கத்து வீட்டிற்குள் நுழையும் தன் பின்னாலேயே வந்த தர்ஷினியிடம் சொன்னான். “நான்
போய்ட்டு வர்றேன். நீ இங்கேயே இரு”
“நானும் வருவேன்.
அந்த ஆள் ஆபத்தானவரா தெரியறாரு. உன்னை எதாவது செஞ்சாலும் செஞ்சுடுவாரு” என்ற தர்ஷினியைக்
காதலுடனும், கெஞ்சலுடனும் பார்த்தபடி தீபக் சொன்னான். “எங்கப்பாவைக் கொலைகாரர்னு எங்கம்மா
கிட்ட சொல்லியிருக்காரு. அதை ஏன் சொன்னார், எப்படிச் சொன்னார்னு தெரிஞ்சுக்காட்டி என்
மண்டை வெடிச்சுடும்னு கேட்கப்போறேன். தயவு செஞ்சு வீட்டுக்குப் போடி. வந்துடறேன்”
“உங்கப்பாவை மட்டுமா
கொலைகாரன்னு சொன்னாரு. எங்கப்பாவையும் தான். அப்ப நான் வந்து கேட்க வேண்டாமா? எனக்கு
மட்டும் உண்மை தெரிய வேண்டாமா?”
“எனக்காவது அவர்
கூடப்பேசி பழக்கம் இருக்கு. உன்னையும் பார்த்தா அவர் ஒன்னுமே சொல்லாம அனுப்பிச்சுடுவார்டி.
சொன்னா கேளு. பத்து நிமிஷத்துல வந்துடறேன்”
“பத்து நிமிஷத்துல
நாம ரெண்டு பேரும் சேர்ந்தே இங்கேயிருந்து போயிடலாம்டா” என்று தர்ஷினி உறுதியாகச் சொல்லவே
வேறு வழியில்லாமல் அவளுடனேயே உள்ளே போனான்.
வரவேற்பறையில் அதே
நாற்காலியில் இப்போதும் அமர்ந்திருந்த நாகராஜ் இறுகிய முகத்துடன் தீபக்கிடம் சொன்னான்.
“நான் உங்க ரெண்டு பேருக்கு அப்பாயின்மெண்ட் தரலையே”
“சாரி அங்கிள்.
நீங்க எங்க ரெண்டு பேர் அப்பாவையும் கொலைகாரங்கன்னு சொன்னது வீட்டையே சுடுகாடு மாதிரி
ஆக்கிடுச்சு. அவங்க ரெண்டு பேரும் அந்த மாதிரி ஆள்களல்ல. நீங்க எப்பவுமே சரியா சொல்வீங்க.
ஆனா இன்னைக்கு சொன்னதுல உண்மையில்லை. நீங்க இன்னொரு தடவை யோசிச்சு பார்த்து சரியா சொன்னீங்கன்னா
நல்லாயிருக்கும். அப்புறம் நான் வந்து தொந்திரவு செய்ய மாட்டேன்... ப்ளீஸ்”
“நான் சொன்னது உண்மையில்லைன்னு
தெரிஞ்சதுக்கப்பறம் ஏன் கவலைப்படறே. நான் போலீசும் அல்ல. போலீஸ் கிட்ட புகார் குடுக்கறவனும்
அல்ல. அதனால பயப்படாதே. உதறித்தள்ளிட்டு போயிட்டே இரு” என்று நாகராஜ் நாற்காலியிலிருந்து
எழுந்தான்.
“அங்கிள் நீங்க
எல்லாம் தெரிஞ்சவங்க. எங்க ரெண்டு பேர் நிலைமைல ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க.
உங்க அப்பாவை கொலைகாரர்னு யாராவது சொன்னா அதை உதறித்தள்ளிட்டு போயிட்டே இருப்பீங்களா?”
“உண்மையில்லைன்னு
தெரிஞ்சா கண்டிப்பா அதைக் கண்டுக்க மாட்டேன்...”
“ஆனா சொன்ன ஆள்
நீங்க ரொம்ப மதிக்கற ஆளாயிருந்தா... ஏன் சொன்னார் எதுக்கு சொன்னார்னு தெரிஞ்சுக்காம
உங்களால நிம்மதியாய் இருக்க முடியுமா?”
“எங்கப்பா மேல எனக்கு
நூறு சதவீதம் நம்பிக்கை இருந்தா என்னால நிம்மதியாய் இருக்க முடியும்”
“நீங்க மதிக்கற
அந்த ஆள் ஏன் அப்படிச் சொன்னார்னு தெரிஞ்சுக்க நீங்க முயற்சியே பண்ண மாட்டீங்களா?”
நாகராஜ் ஏளனமாகச்
சொன்னான். “ஒருத்தர் உண்மைகளைத் தெரிஞ்சு சொல்வார்னு ஒருத்தர் கிட்ட போறீங்க. அப்பறம்
அவர் உண்மை சொன்னார்னா ஏன் அப்படிச் சொல்றார்னு ஆதங்கப்படறீங்க. இப்படி நீங்களே முரண்பாட்டோட
மொத்த வடிவமா இருந்தா நான் என்ன செய்ய முடியும்? உன் கிட்ட பேச எனக்கு நேரமில்லை தீபக்.
எனக்கு வாக்கிங் போக நேரமாயிடுச்சு. நீ போகலாம்”
தீபக் முகமும் இறுகியது.
”எங்கப்பா அப்படிப்பட்டவர் அல்ல. அவருக்கு அந்த அளவு தைரியமும் கிடையாது. அந்த மாதவன்
அவரோட எதிரியும் அல்ல. அந்த நண்பனை சாகடிச்சு அவர் அடைய முடிஞ்ச லாபமும் எதுவும் இருக்கலை.
அப்படி இருக்கறப்ப நீங்க ஏன் எங்கம்மா கிட்ட அப்படி சொன்னீங்கன்னு என் கிட்ட சொல்லாம
நான் இங்கேயிருந்து போக மாட்டேன்....”
தீர்மானமாகச் சொன்ன அவனை நாகராஜ் எரித்து
விடுவது போல் பார்த்தான். தீபக் அந்த
எரிபார்வையில் அசரவில்லை. “நான்
உனக்கு ரொம்பவே இடம் கொடுத்து தப்பு பண்ணிட்டேன்” என்று கடுமையான குரலில் அவனிடம் சொன்ன
நாகராஜ் தர்ஷினியிடம் சொன்னான். “இந்தப் பைத்தியக்காரனைக்
கூட்டுகிட்டு போம்மா?”
“நானும்
பைத்தியம் தான். எங்கப்பாவை நீங்க ஏன் கொலைகாரன்னு சொன்னீங்கன்னு எனக்கும் தெரியணும்.
உண்மையைத் தான் சொல்றீங்கன்னு சொன்னா ஆதாரம் காட்டுங்க. போயிடறோம். அப்பறம் உங்களை
எப்பவுமே தொந்திரவு செய்ய மாட்டோம்…” என்று தீபக்கின் கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு
தர்ஷினி சொன்னாள்.
நாகராஜ்
சிறிது நேரம் அவர்களிருவரும் உறுதியாய் நிற்பதைப் பார்த்து விட்டு வறண்ட குரலில் கேட்டான்.
“ஆதாரத்தை நான் உங்க ரெண்டு பேருக்கு மட்டும் காட்டணுமா. இல்லை உங்க குடும்பத்துக்கே
ஒட்டு மொத்தமா காட்டணுமா?”
தீபக்கும்
தர்ஷினியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். தீபக்
சொன்னான். “எங்கம்மா அவங்க கண்ணால பார்க்காம எதையும் நம்ப மாட்டாங்க. அவங்க இதுல ரொம்பவே
பாதிக்கப்பட்டிருக்காங்க. அதனால எங்க குடும்பத்துக்கே ஆதாரத்தை காட்டினா யாருமே இனி
எப்பவுமே சந்தேகப்பட முடியாது. நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு என்னென்னைக்கும் நன்றிக்கடன்
பட்டிருப்போம்”
“சரி
வாக்கிங் போயிட்டு வந்து காட்டறேன்” என்ற நாகராஜை இருவரும் நம்ப முடியாத திகைப்போடு
பார்த்தார்கள்.
“அப்ப
எல்லாரையும் கூட்டிகிட்டு எப்ப வரட்டும்?” தீபக் ஆவலோடு கேட்டான்.
“நாளைக்கு
வீட்டைக் காலி பண்ணிட்டு போகப்போறேன். அதனால இங்கே பேக்கிங் வேலையெல்லாம் இருக்கு.
ஆட்சேபணை இல்லைன்னா நான் பக்கத்து வீட்டுக்கே வந்து ஆதாரத்தைக் காட்டறேன்”
பக்கத்து வீட்டின்
பக்கம் பார்வையைக் கூட அதிகம் திருப்பாத நாகராஜ் அவனே அங்கு வந்து ஆதாரத்தைக் காட்டுவதாகச்
சொன்னது இருவரையும் திகைக்க வைத்தது. “ரொம்ப நன்றி” என்று இருவரும் சேர்ந்து சொன்னார்கள்.
தீபக் கேட்டான். “எத்தனை மணிக்கு வர்றீங்க?”
“ஆறு
மணிக்கு”
“தேங்க்ஸ்
அங்கிள்” என்று சொன்ன தீபக்கின் குரலில் உண்மையாகவே நன்றியுணர்வு இருந்தது.
நாகராஜ்
இறுக்கம் குறையாமல் தலையசைத்து விட்டு உள்ளே போனான்.
இருவரும்
வெளியே வந்தார்கள். கல்யாண் வீட்டில் எல்லோருமே வீட்டு முன் உள்ள புல்வெளியில் இந்த
வீட்டைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்கள். மேகலாவுக்கு இவர்களிருவரும் போய்
ஏடாகூடமாய் ஏதாவது பேசி நாகராஜ் கோபத்தில் ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம் இருந்தது.
வேலாயுதம் கவலையுடன் மகனிடம் சொன்னார். “அவன் பாம்பு எதாவது மேல விட்டாலும்
விடுவான்”. சரத்துக்கும் கல்யாணுக்குக் கூட அந்தப் பயம் லேசாக இருந்தது. அவர்கள் ரஞ்சனியைப்
பார்க்க அவள் வேறெதோ உலகில் இருந்தாள். மகனும் தர்ஷினியும் போனபிறகு அவள் வாயே திறக்கவில்லை.
மௌனமாகவும் சோகமாகவும் பழைய நினைவுகளில் அவள் தங்கி இருந்தது போலிருந்தது.
தீபக் தர்ஷினி இருவரையும்
பார்த்தவுடன் அவர்கள் நிம்மதியடைந்தார்கள். தீபக்கிடம் நாகராஜ் என்ன சொல்லியிருப்பான்
என்ற ஆவல் அனைவருக்கும் இருந்தது. ரஞ்சனியும்
தன் நினைவுகளிலிருந்து மீண்டு மகனைப் பார்த்தாள். சரத், கல்யாண், வேலாயுதம் மூவரும்
பரபரப்புடன் எழுந்து விட்டார்கள்.
ஆவலோடு எதிர்பார்த்துக்
கொண்டிருந்தவர்களிடம் தீபக்கும், தர்ஷினியும் மாறி மாறி அங்கு என்ன நடந்தது என்று சொன்னார்கள்.
ஆதாரத்துடன் ஆறு மணிக்கு அவனே வருவதாய் சொன்னதை அணுகுண்டு போட்டது போல உணர்ந்தவன் சரத்
தான். அவன் சர்வ பலத்தையும் சேகரித்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
“ஆதாரமா? அவனே கொண்டு
வர்றதா சொன்னானா? அவன் கொண்டு வர்றது என்ன ஆதாரமாம்?“ என்று கேட்ட வேலாயுதத்தை தீபக்கும்,
தர்ஷினியும் எரிச்சலுடன் பார்த்தார்கள்.
“இன்னும்
ஒரு மணி நேரம் பொறுக்க முடியாதா தாத்தா?” என்று தர்ஷினி அவரைத் திட்டினாள்.
“இல்லை….
அவன் எதாவது சொன்னானான்னு கேட்டேன். அவ்வளவு தான்” என்று வேலாயுதம் சமாளித்தபடி கல்யாணை
யோசனையுடன் பார்த்தார்.
நேரடியாகவே
வந்து ஆதாரத்தைக் காட்டுவதாக நாகராஜ் சொன்னது கல்யாணை அதிர வைத்திருந்தது. கல்யாண்
அது என்ன ஆதாரமாக இருக்க முடியும் என்று எண்ணிப் பார்த்தான். எதுவும் இருக்க வழியில்லை.
அப்படி இருக்கையில் நாகராஜ் எப்படி அவ்வளவு தைரியமாக சொன்னான்?
வேலாயுதம்
சொன்னார். “எனக்கென்னவோ அவன் உங்களைத் துரத்த வேற வழி தெரியாமல் அதைச் சொல்லியிருப்பான்னு
தோணுது. அவனெல்லாம் நம்ம வீட்டுக்கு வர மாட்டான்….”
தீபக்
உறுதியாகச் சொன்னான். “சொன்னால் அவர் செய்வார். அனாவசியமாய் வாக்கு குடுக்கற ஆள் அவரல்ல….
அவர் சொல்ற ஆதாரத்தை நம்மால ஏத்துக்க முடியுதா இல்லையாங்கறது வேற விஷயம்…”
பரிதாபமாக
உட்கார்ந்திருந்த சரத்தைப் பார்க்கையில் அவனுக்குப் பாவமாக இருந்தது. ‘யானைக்கும் அடி
சறுக்கும் என்று சொல்வது போல இந்த விஷயத்தில் நாகராஜ் அங்கிள் கணிப்பிலும் எதோ தவறு
நேர்ந்திருக்கிறது. அவரே உணர்ந்து மன்னிப்பு கேட்டாலும் கேட்பார்.’ என்று தீபக் நினைத்துக்
கொண்டான்.
அவனையே
வெறித்துப் பார்த்தபடி சோகமே வடிவாக அமர்ந்திருந்த ரஞ்சனியைப் பார்க்கையில் தீபக்கின்
மனம் உருகியது. அவன் அம்மாவை இப்படித் தளர்வான சோகமான நிலைமையில் என்றுமே பார்த்தது
கிடையாது. தாய் அருகே அமர்ந்து அவள் தோளை இறுக்கிப் பிடித்தபடி சொன்னான். “இந்தக் குழப்பம்
எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல தீர்ந்துடும்மா. கவலைப்படாதே. அபூர்வமாய் அவர் கணக்கில்
எதோ தப்பாயிருக்கு.”
(தொடரும்)
என்.கணேசன்
Tension is building more and more. Super.
ReplyDeleteஅடுத்த வாரம் நாகராஜ் வெளிப்படுத்தும் ஆதாரம் மாதவன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஒன்றாக இருக்குமோ...?
ReplyDeleteI read this story. .climax azha வைத்துவிட்டது
ReplyDeleteஅந்த நாகரத்தினம் தான் ஆதாரமாக இருக்கும்னு நினைக்கிறேன்....
ReplyDeleteMadhavan vaarisu deepak?..
ReplyDelete