விஷ்ணுகுப்தர் அந்தத் தகவலை சந்திரகுப்தன் அறிந்து வைத்திருந்ததில்
திருப்தி அடைந்தார். அவருடைய
மாணவன் இப்போதெல்லாம் எந்த முக்கியத் தகவலையும் அறிந்து வைத்திராமல் இருப்பதில்லை. அவர் அவனிடம்
கேட்டார். “அந்த மாவீரனின் பெயர் என்ன? அவன் எந்த
நாட்டைச் சேர்ந்தவன்?”
“அவன் பெயர்
அலெக்சாண்டர் என்று சொன்னார்கள். எனக்குத் தகவல் தந்த இருவர் அவன் நாட்டின் பெயரை இருவிதமாக
உச்சரித்தார்கள். அதனால் சரியான பெயர் தெரியவில்லை ஆச்சாரியரே. ஆனால் பாரசீகத்தை
வெற்றி கொண்ட அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்வதாக இல்லை என்றே தோன்றுகிறது. நம் பாரதத்தைப்
பற்றி விவரமறிந்தவர்களிடம் அவன் விசாரித்துக் கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன்....”
விஷ்ணுகுப்தர் ஆழ்ந்த யோசனையுடன் சொன்னார். “அலெக்சாண்டர்
நம் பாரதம் நோக்கி வராமலிருந்தால் தான் அது ஆச்சரியம்.. நம் பாரதத்தின்
செல்வமும் செழிப்பும் அவனைக் காந்தமாக ஈர்க்கவே செய்யும். அப்படி
அவன் இங்கு வர முடிவு செய்தால் படையோடு வந்து சேர சில மாதங்கள் தான் ஆகும்....
இது போன்ற ஒரு சூழ்நிலையில் பாரதத்தின் தலைவாசலில் இருக்கும் காந்தாரம் அவன்
படையை எதிர்கொண்டு எல்லாவற்றையும் தீர்மானிக்கிற முக்கியத்துவம் பெறுகிறது. அந்த முக்கியத்துவத்தை
உணர்ந்து நடக்கிற நிலைமையில் காந்தாரம் இல்லை என்பது நம் துரதிர்ஷ்டமாக இருக்கிறது....”
விஜயன் உடனே அவரைக் கேட்டான். “ஏன் அப்படிச்
சொல்கிறீர்கள் ஆச்சாரியரே?”
சந்திரகுப்தனுக்கு இணையாக அவரிடம் கேள்விகள்
கேட்பவன் அவன் தான். சந்திரகுப்தன் எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்காக அவரிடம்
கேள்விகள் கேட்பான் என்றால் விஜயன் ஆச்சாரியர் அடுத்தடுத்து அவர்களிடம் தொடர்ந்து கேள்விகள்
கேட்டு விடாமலிருக்கும் பொருட்டு கேள்விகள் கேட்பான். சில சமயங்களில்
அவனுடைய யுக்தி அவரிடம் பலிக்காது. அவர் அவன் கேள்விகளுக்கு
மிகச் சுருக்கமான பதில்களை அளித்து விட்டு அதை வைத்தே அவனிடம் தொடர்ந்து கேள்விகள்
கேட்பார். சில சமயங்களில் தன் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்
என்று அவர் நினைக்கிற விஷயங்களை அந்தக் கேள்விகள் ஈர்க்கையில் அவர் நீண்ட பதில் சொல்லத்
துவங்குவதுமுண்டு.
இன்று அப்படியான சந்தர்ப்பமாக இருந்தது. விஷ்ணுகுப்தர்
சொன்னார். ”காந்தார அரசர் நல்லவர், திறமையான
நிர்வாகி என்றாலும் அவருடைய முதுமை அவரைப் பலவீனப்படுத்தி விட்டிருக்கிறது. அவருடைய
முதுமையைக் காரணம் காட்டி அவரிடமிருந்து சில நிர்வாகச் சுமைகளை ஏற்றுக் கொள்ள முன்
வந்திருக்கும் ஆம்பி குமாரன் அறிவோ, நல்ல பண்புகளோ இல்லாதவனாக
இருக்கிறான். விஜயனே கூட மாடுதிருடன் என்று விமர்சனம் செய்யும் அளவுக்குக்
கீழிறங்கி கேகய நாட்டுடன் போர் புரியும் சந்தர்ப்பத்திற்காகத் துடிப்புடன் காத்துக்
கொண்டிருக்கிறான். ஒற்றர்கள் யாரும் உண்மை நிலவரத்தை மன்னரிடம்
தெரிவிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதை நான் கேள்விப்படுகிறேன். இப்படியே போனால் காந்தாரத்திற்கும்,
கேகய நாட்டுக்கும் இடையே போர் மூள்வது உறுதி. அலெக்சாண்டர்
பாரதத்தை நெருங்கும் போது இவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அவனுக்கு
அது சாதகமாக அல்லவா போய் விடும்?.... சரி விஜயா, சந்திரகுப்தன் ஒற்றர்கள் வணிகர்கள் வேடத்தில் நடமாடுகிறார்கள் என்று சொல்கிறானே
அது எந்த நாட்டு ஒற்றர்கள் என்று நீ நினைக்கிறாய்?”
சாரங்கராவும்,
சந்திரகுப்தனும் கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக் கொள்ள விஜயன் ஆச்சாரியரிடம்
இந்த முறையும் தன்னுடைய யுக்தி பலிக்கவில்லையே என்று வருந்தியவனாக, யோசித்து விட்டுச் சொன்னான். “தற்போதைய சூழ்நிலையை யோசித்தால்
அது கேகய நாட்டு ஒற்றர்களாக இருக்கவே வாய்ப்பு அதிகமாக எனக்குத் தோன்றுகிறது ஆச்சாரியரே”
“சபாஷ் விஜயா, சரியாக அனுமானித்திருக்கிறாய். உனக்கு நல்ல அறிவிருக்கிறது. ஆனால் நிர்ப்பந்தப்படுத்தினால்
ஒழிய நீ உன் அறிவைப் பயன்படுத்த மறுக்கிறாய் என்பது தான் வருத்தமாக இருக்கிறது…”
விஜயன் ஆச்சாரியரின் அறிவிருக்கிறது என்ற வார்த்தைக்குப் புளங்காகிதமும்,
அறிவைப் பயன்படுத்த மறுக்கிறாய் என்றதற்குச் சிறு வருத்தத்தையும்
கலந்து உணர்ந்தவனாய் தலையசைக்க சாரங்கராவும், இன்னொரு நண்பனும்
அவன் முகபாவனையைப் பார்த்து
வாய் விட்டுச் சிரித்து விட்டார்கள்.
காந்தார இளவரசன் ஆம்பி குமாரன் தன் எதிரே அமர்ந்து
காலமறியாமல் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் ஜோதிடரைப் பொறுமை இழந்து பார்த்துக்
கொண்டிருந்தான். இந்த ஜோதிடர் என்றில்லை எல்லோருமே
காலம் அறிந்து விரைவாக செயல்படுவதில்லை என்பது தான் அவனுடைய சமீபத்திய அதிருப்தியாக
இருக்கிறது. எல்லோருமே மந்தமாகச் செயல்பட்டு அவனுடைய பொறுமையைச் சோதிக்கிறார்கள்….
ஜோதிடர்
தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னார். “தங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது
இளவரசரே…”
ஆம்பி
குமாரன் சொன்னான். “நாளை என்பதும் எதிர்காலம் தான். அடுத்த மாதம், அடுத்த வருடம் என்பதும்
எதிர்காலம் தான். பத்து வருடம் கழித்து என்பதும் எதிர்காலம் தான். தாங்கள் எந்த எதிர்காலத்தைச்
சொல்கிறீர்கள் ஜோதிடரே?”
“வருடக்கணக்கில்
தாங்கள் போக வேண்டியதில்லை இளவரசே. ஆறு மாதங்களில் தங்களுக்கு இராஜ யோகத்தைத் தரும்
ராகுவின் தசை ஆரம்பமாகிறது. அதன் பின் வெற்றி மீது வெற்றி உங்களை வந்தடையும்..”
வருடங்கள்
காத்திருக்க வேண்டியதில்லை ஆறு மாதங்கள் தான் என்று ஜோதிடர் மிகக்குறைந்த காலம் போலச்
சொன்னாலும் அதுவே கூட ஆம்பி குமாரனுக்கு அதிக காலம் போலத் தோன்றியது. அவன் கேட்டான்.
“தந்தையின் ஜாதகத்தையும் நிறைய நேரம் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அவர் ஜாதகம் என்ன
சொல்கிறது?”
ஜோதிடர்
குரலில் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னார். ”அவர் முடிவு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது
இளவரசே. சில பிராயச்சித்தங்கள் செய்தால் அதைத் தள்ளிப் போடலாம்….”
அவனுடைய
தற்போதைய பொறுமையின்மைக்கு மிக முக்கிய காரணமே அவர் உயிரோடு இருப்பது தான் என்பதால்
ஆம்பி குமாரன் அவரது முடிவு காலத்தைத் துரிதப்படுத்த ஏதாவது பூஜைகள், பிராயச்சித்தங்கள்
செய்யத் தயாராக இருந்தானேயொழிய அதைத் தள்ளிப் போட ஒரு துரும்பையும் நகர்த்த விரும்பவில்லை.
அவன் அலட்சியமாகச் சொன்னான். ”எதையும் அனுபவிக்க உடல் ஒத்துழைக்க மறுக்க ஆரம்பித்த
பின் மரணத்தைத் தள்ளிப் போடுவதில் அர்த்தம் என்ன இருக்கிறது ஜோதிடரே? முக்தி அடைவதல்லவா
நிம்மதி?”
ஜோதிடர்
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலையை மட்டும் அசைத்தார். ’இவனைப் போன்ற மகனைப்
பெற்ற அரசருக்கு மரணம் நிச்சயம் விடுதலையாகத் தான் இருக்கும்’ என்ற எண்ணம் அவருக்குள்
எழுந்தது. உயிருடனிருப்பதே உடல் சுகங்களை அனுபவிப்பதற்காகத் தான் என்று நம்பும் இவன்
இந்த நாட்டின் அரசனாக அரியணையில் அமர்வது காந்தாரத்தின் துரதிர்ஷ்டம் தான் என்று அவருக்குத்
தோன்றியது.
அந்தச்
சமயத்தில் காவலாளி வந்து ஆம்பி குமாரனிடம் சொன்னான். “இளவரசே. கேகய நாட்டிலிருந்து
தூதர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் அரசரைப் பார்க்க வேண்டுமாம்?
“அழைத்து
வா அவரை” என்று சொன்ன ஆம்பி குமாரன் அவசரமாகச் சில பொற்காசுகளை எடுத்து ஜோதிடரிடம்
தந்து அனுப்பி வைத்தான். ஜோதிடர்
வெளியே செல்ல கேகய நாட்டு தூதர் உள்ளே நுழைந்தார்.
“அமருங்கள்
தூதரே! என்ன செய்தி?” என்று ஆம்பி குமாரன் கேட்டான்.
கேகய
நாட்டு தூதர் அவன் காட்டிய இருக்கையில் அமரவில்லை. அவர் அவன் கேட்ட கேள்விக்குப் பதிலும்
அளிக்கவில்லை. அவருடைய பார்வை அங்குமிங்கும் எதையோ தேடுவது போல் இருந்தது. ஆம்பி குமாரன்
கேட்டான். “என்ன தேடுகிறீர்கள் தூதரே”
“காந்தார
அரசரைத் தேடுகிறேன் இளவரசே” என்றார் கேகய தூதர்.
“அரசர்
இங்கு இல்லை”
“நான்
செய்தி கொண்டு வந்திருப்பது காந்தார அரசருக்குத் தான் இளவரசே”
“அரசர்
மூப்பு காரணமாக நிர்வாகப் பணிகளையும் அயல் நாடுகளுடனான தொடர்பு விஷயங்களையும் என்னிடம்
தான் ஒப்படைத்திருக்கிறார் தூதரே. அதனால் அவை சம்பந்தமான விஷயங்களைக் கேட்பதும், முடிவெடுப்பதும்
என் பொறுப்பிலேயே இருக்கின்றன. எனவே செய்தியை என்னிடமே நீங்கள் தெரிவிக்கலாம்”
“இளவரசே.
உங்களிடம் காந்தார அரசர் ஒப்படைத்திருக்கும் பொறுப்புகளை நான் அறியேன். கேகய மன்னர்
காந்தார அரசருக்குத் தான் செய்தி அனுப்பியுள்ளார். அதனால் நான் அவரிடமே அதைத் தெரிவிக்க
வேண்டியவனாக இருக்கிறேன். அது முடியா விட்டால்
“செய்தியை காந்தார அரசரிடம் தெரிவிக்க முடியவில்லை” என்று திரும்ப கேகய மன்னரிடம் சென்று
சொல்ல வேண்டியிருக்கும்…” தூதர் மிக அமைதியாகச் சொன்னார்.
ஆம்பி
குமாரன் தன்னை விட அதிக முக்கியத்துவம் யார் பெறுவதையும் என்றுமே ரசித்ததில்லை. அரியணையில்
அமர ஆயத்தமாகி விட்ட இந்த மனநிலையிலோ அது அவனைக் கோபமூட்டவே செய்தது. அவன் கேகய தூதரைக்
கடுமையான பார்வை பார்த்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -
(அல்லது)
என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.