சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 25, 2022

யாரோ ஒருவன்? 95



ப்படியெல்லாம் நடக்க முடியும், நடந்திருக்கிறது என்று வேறு யாராவது நரேந்திரனிடம் சொல்லியிருந்தால் ஹேரி பாட்டர் கதை போல் அல்லது அம்புலிமாமா கதை போல் தான் அவனால் எடுத்துக் கொண்டிருக்க முடியும். நாகராஜ்எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாமல் போஎன்று சொன்ன போது கோயமுத்தூரில் உட்கார்ந்து கொண்டு இவனால் டெல்லியில் நடப்பதை எப்படித் தீர்மானிக்க முடியும், கட்டுப்படுத்த முடியும் என்ற சந்தேகம் அவனுக்கு வராமல் இல்லை.  ஆனால் பாதி அற்புதத்தை நாகராஜ் நடத்திக் காட்டி விட்டான். தாமோதரும் தன் பங்குக்கு அவநம்பிக்கையைத் தெரிவித்து விட்டு தான் ஃபேக்டரிக்குப் போனான். மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் சாவது ஒன்று தான் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு என்றும் அவர்கள் உயிரோடு இருக்கையிலேயே அவர்களின் இரும்புச் சங்கிலியை அவிழ்த்து விட்டு வருவது தற்கொலைக்கு சமானம் என்றும் சொன்னான். நரேந்திரன் வற்புறுத்திச் சொன்னதற்குப் பின் தான் அவன் அரைமனதோடு போனான். போய் விட்டு வந்தவன் மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் பாம்பு கடித்து மயக்க நிலையில் இருப்பதை ஆச்சரியத்தோடு சொன்னான். ஆனால் அவர்கள் சாகாமல் உயிர் தப்பி நடந்ததை எல்லாம் பேசவும் செய்தால் என்ன செய்வது என்று கேட்ட கேள்விக்கு நரேந்திரனிடமும் பதில் இல்லை.

கோயமுத்தூரில் இருந்து கொண்டே அவர்களை பாம்பு கடித்து மயக்கமடையச் செய்ய முடிந்த நாகராஜுக்கு முடியாதது வேறு என்ன இருக்க முடியும் என்று கேட்டுக் கொண்டே அவன் சிறிது நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டிருந்தான்.  ஆட்கள் யாரும் அந்த ஃபேக்டரிக்குள் பாம்புகளுடன் உள்ளே நுழையவில்லை என்பதை அவன் உறுதியாக அறிவான். பின் எப்படி இந்த அற்புதம் நிகழ்த்தப்பட்டது என்று தெரியவில்லை.  

இரவு மதன்லாலும், சஞ்சயும்  மீட்கப்பட்ட விதமும், அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதும் கூட அவனுக்கு  ஒற்றர்கள் மூலம் தெரிய வந்தது. இன்று மாலைக்குள் சுய நினைவுக்கு வருவார்கள் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்ற தகவலும் அவனுக்குக் கிடைத்தது. இனி அவன் எதுவும் செய்வதற்கில்லை. இத்தனை பார்த்துக் கொண்ட நாகராஜ் மீதத்தையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் தான் அவன் இருக்கிறான்.    

கோயமுத்தூரிலிருந்து கிளம்ப அவன் தயாராகி விட்டான். டெல்லியில் அவனுக்கு ஆக வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன.  போவதற்கு முன் அவன் கல்யாணையும் சரத்தையும் இன்னொரு முறை சந்தித்துச் சில கேள்விகள் வேண்டியிருக்கிறது


னார்தன் த்ரிவேதி ஃபேக்டரி முதலாளி மகனிடம் அனுப்பிய ஆள் அவருக்குப் போன் செய்து சொன்னான். “ஐயா அந்த ஆள் அந்த பூட்டின ஃபேக்டரிக்கு உள்ளே ஆள் இருந்த சமாச்சாரமே தெரியாதுன்னு ஒரேயடியாய் சாதிக்கிறார். நேத்து காலைல தான் யாரோ போன் பண்ணி ஃபேக்டரி கேட்ல பூட்டு இல்லைன்னு சொன்னதா சொல்றார். உடனடியா போலீஸ்லயும் புகார் குடுத்திருக்கறாராம். உள்ளே என்னவெல்லாம் திருட்டுப் போயிருக்குன்னு இனிமே தான் தெரியும்னு சொல்றார்.  உள்ளே இருந்தது யார் என்னன்னு என்னை குடைஞ்சு கேட்டார். உள்ளே திருட்டுப் போயிருக்கலாம்னு வேற அந்த ஆள் சந்தேகப்படறதால எதுக்கு வில்லங்கம்னு நான் சொல்லப் போகல. உங்கள கேட்டு சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்

நல்லது. சஞ்சய் மதன்லால் ரெண்டு பேரு கிட்டயும் பேசிட்டு தேவைப்பட்டா அப்பறம் அந்த ஆள் கிட்ட மறுபடியும் பேசலாம். அந்த ஆள் கிட்ட பேசறப்ப அந்த ஆள் நடிக்கற மாதிரி தோணிச்சா. உண்மைய சொல்ற மாதிரி தோணுச்சா

உண்மைய சொல்ற மாதிரி தான் தோணுச்சுங்கய்யா. யார் அடைக்கப்பட்டு வெச்சிருக்காங்கங்கற  தகவல சொன்னா உடனே போய் போலீஸுக்குச் சொல்ல தான் அவர் துடிக்கிறார். வேணும்னு செய்யற ஆளாயிருந்திருந்தா அமுக்கமா அப்படியே விடத்தான பாத்திருப்பார். பேச்சோட பேச்சா நரேந்திரன் இதுல சம்பந்தப்பட்டிருக்கறது தெரியுமான்னு கேட்டேன். அதுக்கு அவர் என்ன சொல்றார்ங்கறத வெச்சு நரேந்திரனை அவருக்குத் தெரியுமான்னு தீர்மானிக்கலான்னு நினைச்சேன். ஆனா அவர் தம்பி பேரும் நரேந்திரனாம். அவர் உடனே தம்பி மேல சந்தேகப்பட்டுட்டார். ’சொத்து தகராறுல தான் ஃபேக்டரிய இழுத்து மூடினோம். அப்படியிருக்கறப்ப அவன் உள்ளே ஆள்கள ரகசியமா வெச்சிருந்தான்னா கண்டிப்பா மெஷினரி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா திருடி வித்துத் தின்னுருப்பான்னு சொல்லி பொங்கிட்டார். என் முன்னாலயே தம்பிக்குப் போன் போடப் போனார். நான் ஆள விட்டா போதும்னு ஓடி வந்துட்டேன்….”

ஜனார்தன் த்ரிவேதி யோசித்து விட்டுக் கேட்டார்அவன் போலீஸ்ல உண்மையாகவே புகார் செஞ்சிருக்கானா, இல்லை நம்ம கிட்ட அப்படிச் சொல்றானான்னு விசாரிச்சியா

இல்லங்க ஐயா. இதோ அரை மணி நேரத்துல விசாரிச்சு சொல்றேன்என்றவன் சொன்னபடி அரை மணி நேரத்தில் விசாரித்தும் சொன்னான். “அவர் சொன்னது சரிதான்யா. போலீஸ்ல நேத்து காலைலயே புகார் குடுத்திருக்கார்.”

சிறிது நேரத்தில் ஜனார்தன் த்ரிவேதியின் ஆளொருவன் ஆஸ்பத்திரியிலிருந்து போன் செய்தான். “ஐயா ரெண்டு பேரும் சுயநினைவுக்கு வந்துட்டாங்க ஐயா

நல்லது. நான் உடனடியா அங்கே வர்றேன். நான் அவங்கள பாத்து பேசற வரைக்கும் அவங்க ரெண்டு பேரையும் யாரும் சந்திக்கவோ, பேசவோ அனுமதிக்க வேண்டாம்னு சொல்லி வைஎன்று சொன்ன ஜனார்தன் த்ரிவேதி உடனடியாகக் கிளம்பினார்.  உண்மையை முழுவதுமாக அறிந்த பின் அவர்கள் வாக்குமூலத்தை தங்களுக்குச் சாதகமாக எப்படி எந்த வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி வெளிவிட வேண்டும் என்பதை அவர் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.


பிரச்னைகள் வர ஆரம்பித்தால் அவை தனியாக இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக வருவதில்லை. வரிசையாக இடைவெளியில்லாமல் வர ஆரம்பிக்கின்றன. சில சமயங்களில் ஏக காலத்தில் பல பக்கங்களிலிருந்தும் ஒரேயடியாக வந்து சேர்கின்றன.  கல்யாண் அந்த உண்மையை முதல் முறையாக உணர்ந்தான். அவனுடைய கம்பெனியில் மிகத் திறமையாகவும், நேர்மையாகவும் வேலை செய்த மூன்று பேர் நேற்று தான் ராஜினாமா செய்தார்கள். மூவருமாகச் சேர்ந்து தனித் தொழில் செய்யத் தீர்மானித்திருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் மூவரும் கம்பெனி நிர்வாகத்திற்கு அச்சாணி போன்றவர்கள் என்பதால் கல்யாண் சம்பளத்தை உயர்த்தி, வேறு சலுகைகளும் செய்து தருவதாகச் சொல்லி அவர்களை மனம் மாற்றப் பார்த்தான். அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. அவர்கள் தங்கள் முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு அவர்கள் ஏற்றுமதி செய்த பல கோடி மதிப்புள்ள பொருள்களை தரம் சரியில்லை என்று ஏற்க மறுப்பதாகச் சிறிது நேரத்திற்கு முன்பு தான் தகவல் வந்தது. க்வாலிட்டி கண்ட்ரோல் என்ற தரக் கட்டுப்பாடு இது போன்ற வெளிநாட்டு ஏற்றுமதிகளில் மிக முக்கியமானது என்பதால் தர பரிசோதனை செய்யாமல் அவர்கள் எப்போதும் ஏற்றுமதி செய்வதில்லை. ஒருவருக்கு இருவராக எல்லாம் சரியாக உள்ளது என்று உறுதி செய்த பின்னரே அனுப்புவார்கள். அதையும் மீறி எப்படி எங்கே இந்த முறை தவறு நடந்திருக்கிறது என்றே புரியவில்லை. இப்படி அவர்கள் கம்பெனியில் நடப்பது இதுவே முதல் முறை.  அவர்களிடம் இனிமேல் தான் பேசிப் பார்க்க வேண்டும்.

இதில் அவன் மிகுந்த மன உளைச்சலில் மூழ்கி இருந்த போது தான் நரேந்திரன் போனில் பேசினான். இன்று மாலை ஏழு மணிக்கு வருவதாகவும், மிக முக்கியமான சில கேள்விகள் மட்டும் கேட்க வேண்டியிருக்கிறது என்றும் அதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் தேவைப்படாது என்றும் சொன்னான்.

ஐந்து நிமிடங்களில் சரத் அவன் அறைக்குள் நுழைந்த போது நரேந்திரன் சரத்திடமும் பேசியிருக்கிறான் என்பது புரிந்தது. சரத் கவலையோடு கேட்டான். “திரும்ப என்ன கேட்க வர்றான்?”

கல்யாண் சலிப்போடு சொன்னான். “யாருக்குத் தெரியும். என்ன கேட்டாலும் நாம பழைய விஷயங்களை ஒரே மாதிரி தான் சொல்லப்போகிறோம். ஏதாவது மாத்தி சொன்னா தானே பிரச்சனை…”

மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து சொல்ல வேண்டிய விஷயங்களைக் கோர்வையாக மறுபடி ஒருமுறை சொல்லித் தந்து சரத்துக்கு நினைவுபடுத்தினான்.

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.



2 comments:

  1. Very interesting and thrilling.

    ReplyDelete
  2. இந்த முறை மன உளைச்சல் காரணமாக கல்யாண் உளறிவிட வாய்ப்புள்ளது...

    அவுங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆனது?? அதை அறிய தான் ஆவலாக உள்ளேன்...

    ReplyDelete