சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 4, 2022

யாரோ ஒருவன்? 92


வீடு திரும்புகையில் கல்யாண் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவன் எதை எதிர்பார்த்திருந்தாலும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் திருடப் போகும் போது பாம்புகளைப் பார்த்து பயந்து ஓடி வர வாய்ப்பு உள்ளதாக அவன் நினைத்திருந்தான். அல்லது நாகராஜ் அல்லது சுதர்ஷன் விழிப்படைந்து அவர்களைத் துரத்த வாய்ப்புள்ளதாகக் கூட நினைத்திருந்தான்ஆனால் அந்த ஒன்றே முக்கால் மணி நேரத்தில் என்ன நடந்ததென்றே தெரியாமல் அந்தத் திருடர்கள் விழிப்பார்கள் என்றோ, வெற்றிகரமான திருடன் என்று பெயரெடுத்த ஒருவன் வாங்கின முன் தொகையைத் திருப்பித்தந்து தோல்வியை ஒப்புக் கொள்வான் என்றோ சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போது யோசிக்கையில் நாகராஜ் திருடர்களை மட்டுமல்லாமல் அவனையும் அவன் தந்தையையும் உறங்க வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. சாதாரண காலத்திலேயே அவன் தந்தை அதிகம் உறங்காதவர். அப்படிப்பட்டவர் பக்கத்து வீட்டிலிருந்து நாகரத்தினம் திருடப்பட்டு கொண்டுவரப்படும் முக்கியமான நேரத்தில் கண்டிப்பாகத் தூங்கவே முடியாது. அவரும் உறங்கியிருக்கிறார், அவனும் அவனை அறியாமல் உறங்கியிருக்கிறான் என்றால் அதுவும் நாகராஜின் கைங்கர்யமாகவே இருக்க வேண்டும். கடைசியாக மணி எச்சரித்தது இப்போது நினைத்தாலும் அவனைத் திகிலடைய வைக்கிறது. இத்தனை செய்தவன் சத்தமில்லாமல் உயிரையும் எடுக்க முடிந்தவன், எச்சரிக்கையாக இருங்கள் என்று மணி சொன்னதில் உண்மை இருக்கிறது...

கல்யாண் வீட்டுக்குள் நுழைந்த போது வேலாயுதம் பேராவலுடன் ஓடி வந்தார். மகனின் களையிழந்த முகத்தைப் பார்த்து அவர்கள் வேலை முடியவில்லை என்பது அவருக்குப் புரிந்து ஏமாற்றம் அவரைப் பற்றிக் கொண்டது. “என்ன ஆச்சாம்... பாம்பைப் பார்த்து பயந்து ஓடிட்டானுகளா?”

கல்யாண் மணி சொன்னதைத் தெரிவித்த போது அவர் முகத்தில் ஈயாடவில்லை. நாகராஜ் அனைத்தையும் அறிவான் என்பதும், அவர்களை உறங்க வைத்தவன் அவன் தான் என்பதும் அவருக்கும் மெள்ளப் புரிந்தது. இத்தனை செய்ய முடிந்தவன் எதையும் செய்யமுடியும் என்கிற வகையில் மணி எச்சரித்ததைக் கேட்டு அவரும் பீதியடைந்தார்.

சிறிது யோசித்து விட்டு அவர் மெல்லக் கேட்டார். “அந்த ஒன்னே முக்கால் மணி நேரமும் அவனுக அப்படியே சிலை மாதிரி நின்னுட்டானுகளா? இதென்னடா புராணக்கதை கேட்கற மாதிரி இருக்கு.”

அவனுக்கு ஒன்னுமே புரியலை. ஆனா அப்படியே நின்னுகிட்டிருந்த மாதிரி தெரியலை.... என்னவோ நடந்திருக்கு, என்னவோ செஞ்சிருக்காங்க.... அவங்க யாருக்குமே அது எதுவுமே ஞாபகம் வராதது தான் பிரச்னை....”

இருவருமே தங்கள் தங்கள் சிந்தனை ஓட்டத்தில் தங்கினார்கள். இருவர் மனதிலுமே நாகராஜ் அடுத்ததாக என்ன செய்வான் என்ற கேள்வி பயத்துடன் விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் இருவருமே அதை வாய்விட்டுக் கேட்டுக் கொள்ள பயந்தார்கள்.


ஜீம் அகமதின் ஆட்கள் இரவு பன்னிரண்டு ஆக வேண்டிக் காத்திருந்தார்கள். ரோந்து போலீஸ் அந்த நெடுஞ்சாலையில் இரவு ரோந்து போகும் நேரம் பதினொன்றரையும் அதிகாலை மூன்றரை மணியும் என்பது விசாரித்த போது தெரிந்தது.   சென்ற முறை அவர்கள் ஆட்கள் இருவர் மாட்டிக் கொண்டது போல் இன்னொரு முறை ஆக அவர்கள் விரும்பவில்லை.  அன்று அந்த ஃபேக்டரியின் உள்ளே மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் இருக்கிறார்களா என்பதைக் கண்டிப்பாகக் கண்டுபிடித்துச் சொல்லும்படி அஜீம் அகமது கட்டளை பிறப்பித்திருந்தான். பதினொன்றரை மணிக்கான ரோந்து அப்பகுதியைக் கடந்து போய் விட்ட செய்தி பதினொன்றே முக்கால் மணிக்கு வந்து சேர்ந்தது. கால் மணி நேரம் மேலும் காத்திருந்து விட்டு இரண்டு பேர் பைக்கில் புறப்பட்டார்கள்.

நெடுஞ்சாலையில் இரவு நேர வாகனங்கள் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தனவே ஒழிய ஆட்களின் நடமாட்டமே இருக்கவில்லை. பைக்கில் சென்று அதைச் சுவரை ஒட்டி நிறுத்தி விட்டு இருவரும் இறங்கினார்கள். இருபக்கமும் பார்வையை ஓடவிட்டு விட்டு யாரும் பார்க்கவில்லை என்பது உறுதியானவுடன் ஒருவன் பூட்டைத் திறக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட மற்றவன் யாராவது கவனிக்கிறார்களா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஐந்து நிமிடத்தில் பூட்டைத் திறந்து இருவரும் வேகமாக உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டார்கள். உள்ளே சற்று தள்ளி தான் கட்டிடம் இருந்தது. அது இருளில் மூழ்கியிருந்தது. டார்ச் விளக்குடன் சத்தமில்லாமல் நடந்து கட்டிடத்திற்குள்ளே நுழைந்தார்கள்…. உள்ளே எங்காவது யாராவது இருக்கிறார்களா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டே போனவர்கள் கட்டிடத்தின் பின்பகுதியை அடைந்தார்கள்.

பின்பகுதியின் கடைசி இரண்டு அறைகளில் மயங்கிக் கிடந்த இருவரையும் கண்டுபிடித்த போது அவர்கள் அதிர்ந்து போனார்கள். அடுத்த நிமிடம் அவர்கள் தலைவனுக்குப் போன் செய்தார்கள். அந்தத் தலைவன் அஜீம் அகமதுக்குப் போன் செய்து தகவலைச் சொன்னான்.

அஜீம் அகமது மெல்லக் கேட்டான். “ரெண்டு பேரும் செத்துட்டாங்களா, உயிரோடு இருக்காங்களா?”

உயிரோடு தான் இருக்காங்க. ஆனா மயங்கிக் கிடக்கிறாங்க. ரொம்ப பலவீனமாய் இருக்காங்க. பாம்புக்கடியும் அவங்க உடம்புல இருக்கிறதா பசங்க சொல்றானுக…”

அவங்களக் கட்டிப் போட்டிருந்தாங்களா?”

இல்லை…”

அப்படின்னா அவங்களை அடைச்சிருந்த அறைகளைப் பூட்டி வச்சிருந்தாங்களா?”

அதுவும் இல்லைன்னு பசங்க சொல்றானுக.”

அஜீம் அகமதுக்குக் குழப்பமாக இருந்தது. அறையையும் பூட்டவில்லை, கட்டியும் போடவில்லை என்றால் இவர்கள் ரெண்டு பேரும் ஏன் தப்பித்து வந்துவிடவில்லை…. அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். இவர்களே போய் அங்கே ஒளிந்திருந்தால் தான் அப்படி இருக்க முடியும். ஆனால் இவர்களே போய் அங்கே ஒளிந்திருப்பது மிகவும் அபத்தமாகப் பட்டது.  சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “அவனுகள தூக்கிட்டு வந்துடுவோம். பிறகு என்ன ஏதுன்னு விசாரிக்கலாம்….”. அதோடு நிறுத்தாமல் அவர்களை எப்படி எடுத்து வருவதென்றும் விளக்கினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அஜீம் அகமதின் ஆட்கள்போதை ஒழிப்புத் துறைவேன் ஒன்றிலும், ஜீப் ஒன்றிலுமாக அந்த ஃபேக்டரியைச் சென்றடைந்தார்கள். ஜீப்பில் அதிகாரிகளின் சீருடையில் நடுத்தர வயது ஆளும், வயதான ஆளும் கம்பீரமாக வீற்றிருக்க, பின்னால் வந்த வேனில் ஏழு இளைஞர்கள் சீருடையில் இருந்தார்கள். ஒரு உண்மையான டாக்டர் ஒருவரும் அவர்களுடன் இருந்தார். ஒருவேளை போலீஸாரே பார்த்தாலும் இரண்டு வாகனங்களிலும் இருப்பவர்கள் போதை ஒழிப்புத்துறை ஆட்கள் அல்ல என்று சொல்ல முடியாதபடி இருந்தது அவர்கள் தோற்றமும், நடவடிக்கைகளும். ஜீப் மற்றும் வேன் டிரைவர்கள் வாகனங்களிலேயே இருக்க மற்றவர்கள் ஃபேக்டரிக்குள் விரைந்தார்கள்.

டாக்டர் மதன்லால், சஞ்சய் ஷர்மா இருவரின் நாடிகளையும் சோதித்துப் பார்த்து விட்டுச் சொன்னார். “ரெண்டு பேரும் ரொம்பவே பலவீனமாய் இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரம் கழிஞ்சிருந்தா செத்தே போயிருப்பாங்க. உடனடியா ஆஸ்பத்திரில அட்மிட் பண்றது நல்லது….”

டாக்டர் அவர்களைப் பரிசோதித்துக் கொண்டிருக்கையில் ஜீப்பில் வந்த அதிகாரிகள் தோற்றத்திலிருந்த இருவரும் அந்த அறைகளை ஆராய்ந்தார்கள். பின் மதன்லால் உடலையும் சஞ்சய் ஷர்மா உடலையும் ஆராய்ந்தார்கள். மிக நுட்பமாக ஆராய்ந்து விட்டு அவர்கள் தலையசைக்க மற்றவர்கள்  இரண்டு உடல்களையும் தூக்கிச் சென்றார்கள்.

அதிகாரிகளின் தோற்றத்திலிருந்தவர்களில் நடுத்தரவயதுக்காரன் அஜீம் அகமதுக்குப் போன் செய்தான். ”அவங்க ரெண்டு பேரையும் செக் பண்ணின டாக்டர் ரொம்பவே பலவீனமாய் இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா செத்திருப்பாங்கன்னு சொல்றார். ரெண்டு பேர் கை கால்கள்லயும் அவங்கள சங்கிலியால கட்டிப் போட்டிருந்த தழும்புகள் தெரியுது….”

அஜீம் அகமது கேட்டான். “பாம்புகள் ஏதாவது உங்க கண்ணுக்குப் பட்டுச்சா

இது வரைக்கும் படலை. நாங்க நேரா அவங்க இருக்கற இடத்துக்கே போயிட்டதால மற்ற இடங்கள்ல இருக்கான்னு தெரியலை….”  

அதையும் பாருங்க. பிறகு கிளம்பிடுங்க. அனாவசியமா அங்கே அதிக நேரம் தங்க வேண்டாம். அவங்க ரெண்டு பேரையும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டு போயாச்சா?”

இப்ப தான் போறாங்க சார்

சரி”  என்று அஜீம் அகமது இணைப்பைத் துண்டித்தான். அவர்கள் இருவரும் முதலில் போய் மதன்லாலையும், சஞ்சய் ஷர்மாவையும் கண்டுபிடித்த இருவருமாகச் சேர்ந்து அந்தக் கட்டிடம் முழுவதும் பாம்பு ஏதாவது தென்படுகிறதா என்று தேடினார்கள். எதுவும் அவர்கள் கண்ணில் படவில்லை.


(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.


2 comments:

  1. Episode by episode suspense and thrill increasing. Super sir.

    ReplyDelete
  2. இவர்கள் இருவரும் மணியைப் போல நினைவை இழந்திருப்பார்கள்...என் என் கணிப்பு...

    ReplyDelete