சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 7, 2022

சாணக்கியன் 12

காலம் வேகமாக உருண்டோடியது. சந்திரகுப்தன் தட்சசீலம் வந்து பத்து ஆண்டுகள் கழிந்து விட்டன. அவன் அழகும், வீரமும் மிகுந்த இளைஞனாகி விட்டான். தட்ச சீலத்தின் பிரசித்தி பெற்ற அந்தக் கல்விக்கூடத்தில் முன்னணி மாணவர்களில் ஒருவனாகவும் அவன் இருக்கிறான்.  அங்கும் மற்ற ஆசிரியர்களிலிருந்து ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் பல விதங்களில் மாறுபட்டிருப்பதை சந்திரகுப்தன் கவனித்தான். மற்றவர்களுக்கு அது அவர்களின் உத்தியோகமாக மட்டும் இருந்தது. மாணவர்களுக்கு கற்றுத்தரும் பணி முடிந்த பின் மீதியிருக்கும் காலம் அவர்களுக்கு ஓய்வுக்காலமாகவும், ஒருவரிடம் ஒருவர் பேசிக் கொண்டு பொழுது போக்கும் காலமாகவும் இருந்தது. சிலர் ஏடுகள், சுவடிகள் வாசிக்கும் பழக்கமும் வைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு மேல் அவர்கள் அதிகம் எதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை

 

ஆனால் விஷ்ணுகுப்தர் ஓய்வு எடுத்துக் கொள்ளும் காலம் மிக அபூர்வமாகவே இருந்தது. சதாசர்வகாலம் எதையாவது படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார். அல்லது கல்விக்கூடத்திற்கு வருகை தரும் வெளியாட்களிடம் விசாரித்து வெளியுலகத் தகவல்களைத் தெரிந்து கொள்வதில் ஈடுபட்டிருப்பார். உள்ளூர்வாசிகளானாலும் சரி, வெளியூர்களிலிருந்து வரும் யாத்திரீகர்களானாலும் சரி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள அவருக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அதனால் அரசர்கள், மந்திரிகள், சேனாதிபதிகள், அரசகுடும்பத்தினர் பற்றிய தகவல்கள் பற்றியும், மற்ற தேசங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் பற்றியும் அவர் நிறைய அறிந்தவராக இருந்தார்.

 

சந்திரகுப்தனிடம் அவர் ஒரு முறை சொன்னார். “எந்த ஒரு தகவலையும் அறிவாளி அலட்சியப்படுத்தக் கூடாது. எது எப்போது பயன் தரும் என்று யாராலும் தீர்மானமாகச் சொல்ல முடியாது.  எங்கேயோ நடக்கிற விஷயத்தை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அது நாளை நாமிருக்கும் இடத்திலும் கூட நடக்கலாம். சக மனிதர்களின் அந்தரங்க விஷயங்கள் நமக்கு அனாவசியம். ஆனால் ஆள்பவர்களின் அந்தரங்க விஷயங்களும், ஆள்பவர்களுக்கு நெருக்கமானவர்களின் அந்தரங்க விஷயங்களும் அலட்சியப்படுத்தக் கூடாதவை. ஆட்சியில் நடக்கும் மாற்றங்களை அவை தீர்மானிக்க முடிந்தவைகளாக இருக்கலாம்.  சில முக்கியத் தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பவர்கள் அந்தத் தகவல்களால் அதிக லாபமடைபவர்களாக இருக்கிறார்கள். எனவே அரசனாக விரும்புபவன் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டவே கூடாது…”

 

அரசனாக விரும்புபவன் என்ற வார்த்தையைச் சொல்லும் போதெல்லாம் அவர் வார்த்தைகளில் அழுத்தம் இருக்கும். அதைக் கேட்கும் போதெல்லாம் சந்திரகுப்தனின் கண்களில் ஒரு ஒளி வீசும். அவர் சொன்ன எந்த விஷயத்தையும் சந்திரகுப்தன் அலட்சியப்படுத்தியதில்லை என்றாலும் அந்த வார்த்தையுடன் அவர் சொல்லும் விஷயங்களில் சிறு குறையும் காண முடியாதவனாக இருந்தான். அவர் கற்றுத் தந்த பாடங்கள் அல்லாமல் மற்ற பாடங்களிலும் பயிற்சிகளிலும் அவனுடைய ஒவ்வொரு முன்னேற்றத்தையும் அவர் கூர்ந்து கவனித்து வந்தார். அதில் உண்மையாகவே சாதனை என்று அவர் நினைத்த விஷயங்களையும், இன்னும் கவனம் தேவை, முயற்சியும் பயிற்சியும் தேவை என்று அவர் நினைத்த விஷயங்களையும் அவனிடம் அவ்வப்போது தெரிவிக்க அவர் தயங்கவில்லை. அவர் எதில் எல்லாம் முயற்சியும் பயிற்சியும் தேவை என்று சொல்கிறாரோ அதையே அவர் இன்னொரு முறை சொல்லும் சந்தர்ப்பத்தை சந்திரகுப்தன் ஏற்படுத்தித் தரவில்லை.

 

விஷ்ணுகுப்தர் எல்லா மாணவர்களிடமும் அக்கறை காட்டினார் என்றாலும், விசேஷத் திறமைகள் கொண்டவர்களிடம் கூடுதல் அக்கறையும் கவனமும் அவர் எடுத்துக் கொண்டார். அவர் அவர்களை ஒரு தனிக்கும்பலாக உருவாக்கினார். பல வேலைகளை அவர்கள் சேர்ந்து செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுக்குள் நல்ல நட்பும் ஆரோக்கியமான போட்டியும் உருவாக வைத்தார்.  அந்த வகையிலும் சந்திரகுப்தனைச் சுற்றி ஒரு உயர்வகைக் கூட்டம் எப்போதும் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்.

 

சந்திரகுப்தன் அவர் ஆழ்ந்து உறங்கியோ, ஓய்வு எடுக்கும் வேளையிலோ பார்த்தது இந்தப் பத்து வருடங்களில் விரல் விட்டு எண்ணிய நாட்களில் மட்டுமாக இருந்தது. அந்த நாட்களும் அவர் அபூர்வமாக உடல்நலம் குன்றி இருந்த நாட்களாக இருந்தன. மற்ற நாட்களில் எல்லாம் அவன் உறங்கப் போகும் போது அவர் ஏதாவது படித்துக் கொண்டிருப்பார். அவன் விழித்தெழும் போதும் ஏதாவது படித்துக் கொண்டிருப்பார் அல்லது தியானத்தில் இருப்பார்.

 

ஒரு முறை சந்திரகுப்தன் அவரிடம் கேட்டான். “ஆச்சாரியரே நீங்கள் எப்போது தான் ஓய்வெடுத்துக் கொள்வீர்கள்?”

 

என் பாரதம் வலிமையாகவும், சுபிட்சமாகவும் ஆகும் போதுஎன்று அவர் புன்னகையுடன் சொன்னார்.   

 

பாரதம் என்ற சொல்லை அவர் போல மற்றவர்கள் அதிகம் பயன்படுத்தியதை சந்திரகுப்தன் பார்த்ததில்லை. வேதங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் காணப்பட்ட அந்த சொல் நிகழ்காலத்திற்குச் சம்பந்தம் இல்லாத பழஞ்சொல்லாகவே மாறி விட்டிருந்த காலத்திலும் அவருக்கு மட்டுமே அந்தச் சொல் இன்றும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பாரதமும், பரதக் கண்டமும் பழைய பொலிவோடு நிகழ்கால நிஜமாக வேண்டும் என்ற அவரது பேராவலை முடிந்த வரை அவர் தன் மாணவர்கள் மனதில் பதிக்க முயன்றார். அவரைப் பொருத்த வரை அந்தக் கனவு எதிர்கால நிஜமாகப் போகிற ஒன்று தான். அதில் சந்திரகுப்தன் ஒரு நாள் முடிசூடுவான்.  அவர் அதை அவனிடம் வாய் விட்டு நேர்படச் சொன்னதில்லை என்றாலும்  அவன் மனதிலும் அந்த இலக்கைக் கொழுந்துவிட்டு எரியச் செய்திருந்தார். அரசனாக வேண்டும் என்ற அவனது இயல்பான ஆசையுடன் பாரதத்தை ஒட்ட வைத்தது அவர் தான்.

 

பரந்த பாரதத்தின் சக்கரவர்த்தியாக அவன் முடிசூட வேண்டும், முழு பாரதமும் அவன் ஆட்சியில் சுபிட்சமாக விளங்க வேண்டும் என்ற அவருடைய பெருங்கனவு நிஜமாகும் அறிகுறி அவனுக்கு மங்கலாகக் கூடத் தெரியவில்லை. சந்திரகுப்தன் இயல்பாகவே அறிவுக்கூர்மை இருப்பவன். ஆச்சாரியரின் மாணவனாக அவன் ஆன பின் அந்த அறிவுக்கூர்மை பல மடங்காகி இருந்தது. தட்சசீல கல்விக்கூடத்தின் தலைசிறந்த மாணவன் என்ற நிலையை மட்டுமே அவன் எட்டியிருந்தான். அந்தத் தகுதி அவனைச்  சக்கரவர்த்தியாக்கப் போதுமானதல்ல என்பதையும், சக்கரவர்த்திகள் அப்படி உருவாக்கப்படுவதில்லை என்பதையும் அவன் அறிவான். அவன் அரச குடும்பத்தவனும் அல்ல. அப்படி இருக்கையில் அவன் ஒரு குறுநில மன்னனாக ஆவதற்குக் கூட வழியில்லை. பின் எப்படி என்கிற சந்தேகம் எழுந்து அவனிடம் அவ்வப்போது உற்சாகக்குறைவை ஏற்படுத்துவதுண்டு.

 

அவனுடைய மனதில் ஓடும் எண்ணங்களை அவன் இருப்பையும், முகத்தையும் பார்த்தே படித்து விட முடிந்த விஷ்ணுகுப்தர் அவனிடம் ஒரு நாளிரவு சொன்னார். “நீ தயார் நிலையில் இரு. வாய்ப்புகள் தானாக வரும். வாய்ப்புகள் வந்தபின் தயார்ப்படுத்திக் கொள்ள காலம் போதாது.” அவர் வார்த்தைகளில் சிறு துளியளவும் சந்தேகம் இல்லை. அவர் எப்படி அதை நிச்சயமாக நம்புகிறார் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் அவனை விடப் பலமடங்கு அறிவும் தீர்க்கதரிசனமும் உள்ளவர். நிஜத்துக்கு ஒத்து வராத எதையும் அவரிடம் அவன் பார்த்ததுமில்லை. எனவே அந்த உற்சாகக்குறைவான காலங்களிலும் அவர் உறுதியைப் பார்த்தே அவன் உற்சாகத்தைப் பெற்றான்.

 

வில்வித்தை, மற்போர் மற்றும் போர்வீரனுக்கான பயிற்சிகள் அவனுக்கு அங்கே முறையாகக் கற்றுத்தரப்பட்டன. அவனுடன் இரண்டு சிற்றரசர்களின் மகன்களும், ஒரு சேனாதிபதியின் மகனும் கூடக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் அவர்களை விடப் பலமடங்கு முன்னேற்றம் சந்திரகுப்தனிடம் இருந்ததைக் கவனித்த போதெல்லாம் விஷ்ணுகுப்தர் சொந்த மகனின் முன்னேற்றத்தைப் பார்த்துப் பெருமிதம் அடையும் தந்தையின் மனநிலையில் இருப்பார்….

 

இருட்டிய பிறகும் சில சமயங்களில் அவர் தன் மாணவர்களிடம் பேசிக் கொண்டு அமர்ந்திருப்பதுண்டு. அந்தச் சமயங்களில் பேச்சு பல விஷயங்களில் நகரும். சில நாட்கள் கடுமையான விவாதங்கள் நடக்கும். இரு பிரிவுகளாக அவர்களைப் பேச வைத்துக் கேட்டு முடிவில் அவர் தன் அபிப்பிராயங்களைச் சொல்வதுண்டு. சில நாட்களில் அவர் நாட்டு நடப்பை மாணவர்களிடம் கேட்பதுண்டு. அவர் தனிப்பட்ட முறையில் பலரிடம் விசாரித்து அதைத் தெரிந்து வைத்திருந்தாலும் கூட அவருடைய மாணவர்களும் தங்கள் வழியில் முக்கியமானதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்ப்பதுண்டு. அதனாலேயே சந்திரகுப்தனும் அவன் நண்பர்களும் நாட்டு நிலவரத்தை அதிகமாகவே தெரிந்து வைத்திருப்பதுண்டு.

 

ன்றைய தினம் அப்படிப்பட்ட தினமாக இருந்ததுவிஷ்ணுகுப்தர் தன் மாணவர்களிடம் சொன்னார். “நாம் வசிக்கும் காந்தார தேசம் பாரதத்தின் தலைவாசலில் இருக்கிறது. அதனால் காந்தாரம் பாரதத்தின் வரலாற்றில் மிக முக்கியமான பங்கை அளிப்பதாக இருக்கிறது. சில நாட்களாக காந்தாரத்தில் கவலையளிக்கும்படியான நிலைமை உருவாகி வருவதாக நான் கேள்விப்படுகிறேன். அது உண்மை தானா? என்ன பிரச்சினை? எங்கே பிரச்சினை? காந்தாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?”

 

(தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.


2 comments:

  1. Like Chandragupta we are also fortunate, because of you. Thank you Ganeshan sir.

    ReplyDelete
  2. நன்றாக சென்றுகொண்டிருக்கிறது... அருமை

    ReplyDelete