ஒரு நிமிடம் கழிந்து இரட்டிப்பு வேகத்துடன்
பாம்பாட்டியின் பாம்பு வெளியே வந்து சாலையைக் கடந்து பாம்பாட்டி இருக்கும் இடத்தை அடைந்தது. பாம்பாட்டி
அதிர்ச்சியுடன் அதைப் பார்த்துக் கொண்டு நின்றதும் அருகில் வந்த்தும் அந்தப் பாம்பை
எடுத்துத் தடவிக் கொடுத்ததும் இருவருக்கும் தெரிந்தது.
வேலாயுதம் சொன்னார். “அந்தப்
பாம்பே பயந்து போன மாதிரியும் அவன் அதைத் தடவிக் கொடுத்து அமைதிப்படுத்தற மாதிரியும்
தெரியுதுடா”
அவர் சொன்னபடி தான் கல்யாணுக்கும் தெரிந்தது. பாம்பாட்டி
திகைப்போடு ஒரு நிமிடம் நின்று நாகராஜ் வீட்டை வெறித்துப் பார்த்துவிட்டு அந்தப் பாம்பை
மறுபடி தன் பெரிய துணிப்பையில் போட்டுக் கொண்டு மெள்ளக் கிளம்பினான்.
கல்யாண் தந்தையைப் பார்த்துத் தலையசைத்தான். வேலாயுதம்
தலையசைத்து விட்டுக் கிளம்பினார். பாம்பாட்டி தெருவின் எதிர்ப்பக்கம் நடக்க ஆரம்பிக்க வேலாயுதம்
தங்கள் வீட்டு வரிசையிலேயே அவன் போகும் திசையிலேயே நடக்க ஆரம்பித்தார். சிறிது
தூரம் போனவுடன் தெருவை அவசரமாகக் கடந்த அவர் அவனை நெருங்கினார். அவன் அவரைச்
சந்தேகமாகப் பார்த்தான்.
வேலாயுதம் அவனைப்
பார்த்துக் கனிவாகப் புன்னகைத்து விட்டுக் கேட்டார். “ஏம்ப்பா
நீ ரொம்ப நேரமாய் அங்கே உட்கார்ந்து அந்த வீட்டையே பார்த்துகிட்டு இருந்ததைக் கவனிச்சேன். என்னப்பா
விஷயம்?”
பாம்பு போய்த் திரும்பி
வந்த காட்சியைப் பார்த்தது போல் அவர் காட்டிக் கொள்ளவில்லை.
‘அது உனக்கு
அனாவசியம்’ என்பது போல அந்தப் பாம்பாட்டி மவுனமாக நடந்தான்.
வேலாயுதம் அவனுடனே
நடந்தபடி கேட்டார். “அந்த வீட்டுக்காரன் கிட்ட அப்பாயின்மெண்ட் வேணும்னா தெருவுல
உட்கார்ந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. அஞ்சு லட்ச ரூபாயோடு
நீ ஆறு மாசம் காத்திருக்கணும். இது தான் அவனோட இப்போதைய ரேட். உன்னைப்
பார்த்தா அத்தனை பணம் வெச்சிருக்கறவன் மாதிரி தெரியல.”
பாம்பாட்டி திகைத்து
நின்று விட்டான். ஆனால் அந்த திகைப்பு ஐந்து லட்ச ரூபாய்க்காகவோ, ஆறு மாதக்
காத்திருப்புக்காகவோ இருக்கவில்லை. அவனுக்கு அந்த வீட்டிற்குள்
ஆள் இருக்கிறார்கள் என்பதே அதிர்ச்சியாக இருந்தது. ஒன்றுக்கும்
மேற்பட்ட பாம்புகள் அந்த வீட்டில் இருக்கும் போது கூடவே மனிதர்களும் இருப்பார்களா! அவன் சந்தேகத்துடன் அவரைக் கேட்டான். “அந்த வீட்டுல
ஆள் இருக்கா?”
வேலாயுதமும் திகைத்தார். நிறைய நேரம்
கண்காணித்த சமயத்தில் வீட்டிலிருந்து
யாரும் வெளியேயும் வரவில்லை, யாரும் உள்ளேயும் போகவில்லை என்பதைக் கவனித்து விட்டு அந்த
வீட்டில் ஆள் இல்லை என்று நினைத்து தான் இந்தப் பாம்பாட்டி பாம்பை அனுப்பிப் பார்த்திருக்கிறானா? திருட்டுப்பயல்
போலிருக்கிறது. அவர் அவனிடம் நட்பு தொனியிலேயே சொன்னார். ”வீட்டில்
ஒரு ஆள் இல்ல, ரெண்டு பேர் இருக்கானுக!”.
அவர் தன் சட்டைப்பையில்
இருந்து ஐநூறு ரூபாய் எடுத்து அவன் கையில் திணித்தார். “மனுஷங்க ஒருத்தருக்கொருத்தர் உதவிக்காட்டி
அப்புறம் வாழ்க்கைல என்ன அர்த்தம் இருக்கு சொல்லு பார்ப்போம்...
நீ நிறைய நேரம் அப்படித் தெருவில் உக்காந்திருந்தது ஏனோ என் மனசைப் பாதிச்சுடுச்சு. இத்தனை
நேரம் ஏன் அங்கே உட்கார்ந்திருந்தே? இப்ப ஏன் போறே?”
பாம்பாட்டி தன் கையில் திணிக்கப்பட்ட
ஐநூறு ரூபாயைத் தடவியபடியே அவரைச் சந்தேகத்துடன் பார்த்தான். வேலாயுதம்
அவனை ஊக்குவித்தார். “சும்மா சொல்லு. அந்த வீட்டுல என்ன
இருக்குன்னு பார்த்துகிட்டிருந்தே? பாம்பா, பணமா?...”
பாம்பாட்டி மெல்லச் சொன்னான். “பணம் இந்தப்
பக்கத்து வீடுங்க எல்லாத்துலயும் இருக்குன்னு தெரியும். அந்த வீட்டுல
பாம்பும் இருக்குதுன்னு தெரிஞ்சுது. வெளியே வந்தால்
அதைப் புடிச்சுகிட்டுப் போகலாம்னு நினைச்சேன்....”
அவன் உண்மையான காரணத்தைச் சொல்லவில்லை
என்பது அவருக்கு உடனடியாகத் தெரிந்து விட்டது. பொய் சொல்வதில்
தனித்தேர்ச்சி பெற்றிருந்த வேலாயுதத்திற்கு யாராவது பொய் சொல்கிறார்கள் என்றால் நுட்பமாகக்
கண்டுபிடித்து விடும் திறமை இருந்தது. ’பாவி ஐநூறு ரூபாய்
வாங்கிட்டுப் பொய் சொல்றியேடா!’ என்று மனதிற்குள் அவனைத் திட்டிவிட்டுக் கேட்டார். “பாம்பு
இருக்கிறது உனக்கெப்படி தெரிஞ்சுது?”
“என் வாழ்க்கையே
பாம்புகளைச் சுத்தி தான் இருக்கு. நூறடி தூரத்துக்குள்ள பாம்பு எங்கே இருந்தாலும் எனக்குத்
தெரிஞ்சுடும். அந்த வீட்டைக் கடக்கறப்ப என்னால பாம்பை மோப்பம் பிடிக்க முடிஞ்சுது. அந்த வீட்டுல
ஆளில்லை போல இருக்கு, அதான் பாம்பு உள்ளே குடியிருக்குன்னு நினைச்சேன்...”
“புரியுது. அதைப் புடிச்சுட்டுப்
போனா உன் தொழிலுக்காகும்னு நினைச்சே. சரிதானே. பின் ஏன்
அதுக்கு முயற்சி செய்யாமல் கிளம்பிட்டே?”
”பாம்பு
வெளியே வரலை. அதனால கிளம்பிட்டேன்...”
அவன் அப்போதும்
அந்த வீட்டுக்குப் பாம்பு அனுப்பி அது வேகமாகத் திரும்பி வந்ததை அவரிடம் சொல்லாமல்
மறைத்தது அவருக்கு ஆள் அழுத்தக்காரன் என்பதைத் தெரிவித்தது. அவன் ஆர்வமாக
அவரிடம் கேட்டான். “அந்த வீட்டுக்காரர் நாகசக்தி படைச்ச ஆள்னு சொன்னீங்களே. ரொம்ப சக்தி
இருக்கிறவரோ?”
“சக்தி இல்லாம
யாராவது ஒரு தடவை அவனைப் பார்க்கறதுக்கு அஞ்சு லட்ச ரூபாய் தருவாங்களா?”
முன்பு அவர் சொல்லியிருந்த போதும் அவன்
புத்தியில் உறைத்திருக்காத அந்தத் தொகை அவனுக்கு இப்போது உறைத்தது. அவன் மெல்லச்
சொன்னான். “வட இந்தியாவுல மகராஜ்னு நாகசக்தி படைச்சவர் ஒருத்தர் இருக்கார்னு
கேள்விப்பட்டிருக்கேன். அவர் பாம்புகள் கூட விளையாடுவாராம். பாம்புகள்
கூடவே தூங்குவாராம். அவர் கிட்ட நாகரத்தினங்கள் இருக்குன்னும் சொல்வாங்க....
சினிமா ஸ்டாருங்க எல்லாம் அவரைப் பார்க்க மாசக்கணக்குல காத்திருப்பாங்கன்னும்
சொல்வாங்க. இங்கேயும் அப்படியொரு ஆளா?”
“அதே ஆள்
தான் இவன். இப்ப இங்கே தான் இருக்கான்” என்று வேலாயுதம்
சொன்னார்.
அதிர்ந்து போன அவன்
பீதியுடன் பின்னால் திரும்பி அந்த வீடு இருக்கும் பகுதியைப் பார்த்தான். இப்போது
அந்த வீடு கண்பார்வைக்குத் தெரியவில்லை என்றாலும் அவன் உடல் லேசாக நடுங்கியது. அவன் கண்களை
மூடிக் கொண்டு யோசித்தான். சிறிது நேரம் தெரிந்த குழப்பத்தின் ரேகைகள் பின் நீங்கியது
என்றாலும் அவன் முகத்தில் பயம் குறையவில்லை. அங்கிருந்து
போனால் போதும் என்று நினைத்தவனாக அவன் மறுபடியும் நடக்க ஆரம்பித்தான். ஆனால் இப்போது
நடையில் வேகம் கூடியிருந்தது.
வேலாயுதத்திற்கு
அந்தத் தெளிவும் பயமும் ஆர்வத்தை மேலும் தூண்டின. எதில் இவன்
தெளிவடைந்தான்? எதற்கு இவன் பயப்படுகிறான்? அவன் வேகமாக
நடப்பது எரிச்சலைத் தந்தது? ஏனிப்படி ஓடுகிறான்? மனதிற்குள்
அவனைத் திட்டினார். ’மெதுவா போடா. நான் திரும்ப என்
வீட்டுக்குப் போகணும்டா. என்னை நிறைய தூரம் நடக்க வெச்சுடுவே போலருக்கே’
இன்னொரு ஐநூறு ரூபாயை
எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு அவர் சொன்னார். ”ஏம்ப்பா
பயப்படறே. அந்த ஆள் பயங்கரமானவனா?”
அவர் கையில் ஐநூறு
ரூபாய் நோட்டு இருப்பதைப் பார்த்தவுடனேயே தானாக அவன் நடையில் வேகம் குறைந்தது. ஆனாலும்
நாகராஜ் வீட்டுப் பகுதியை ஒரு தடவை பின்திரும்பிப் பார்த்துக் கொண்டான். பின் ஒன்றும்
சொல்லாமல் அவர் கையிலிருந்த பணத்தையே பார்க்க அவர் அதை அவனிடம் நீட்டினார். அவன் அதை
வாங்கிக் கொண்டபடி சொன்னான். ”அவர் கோபத்தைச் சம்பாதிச்சுடக்கூடாது. அது பேராபத்து” சொல்லும்
போது அவன் உடல் லேசாக நடுங்கியது.
“ஏன் அப்படிச்
சொல்றே?” என்று அவர் கேட்டார்.
அவன் சொன்னான். “ஏற்கெனவே
ரொம்ப சக்தி வாய்ந்தவர் அவர். இப்ப அவர் சக்தி ரெண்டு மடங்காகப் போகுது.”
வேலாயுதம் சந்தேகத்தோடு
கேட்டார். “அதெப்படி சொல்றே?”
“அவருக்கு
ஒரு விசேஷ நாகரத்தினம் கிடைக்கப் போகுது..... அது சுமாரா ஆயிரம்
வருஷங்களுக்கு ஒரு தடவை மட்டும் உருவாகற நாகரத்தினம். அது அந்த
வீட்டுல உருவாகியிட்டிருக்கு”
வேலாயுதம் ஒரு கணம்
மூச்சுவிட மறந்தார். “என்னப்பா சொல்றே?”