சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 27, 2021

யாரோ ஒருவன்? 65



பாம்பாட்டி வேலாயுதத்திற்கு எதையும் விளக்கப் போகாமல் தனக்குள் ஏதோ சிந்தனைகளில் இருந்தான். வேலாயுதம் அவனை மனம் விட்டுப் பேச வைக்க வேண்டும் என்று எண்ணியவராய் ஏளனமாய் சிரித்தார்.  “நாகரத்தினக்கல்லுங்கறதே நம்மாளுங்க காலகாலமாய் சொல்ற கற்பனைக் கதை தானேப்பா. இந்த விஞ்ஞான யுகத்திலயும் அதையெல்லாம் சொல்லிகிட்டு இன்னுமா திரியறீங்க?”

பாம்பாட்டி  “நம்பாட்டி போங்கய்யாஎன்று சொல்லி விட்டு யோசனையுடன் நடக்க ஆரம்பித்தான்.

அவனுடன் நடந்தபடியே வேலாயுதம் சொன்னார். “நம்பக் கஷ்டமாயிருக்குன்னு உண்மையை மறைக்காம சொன்னா நீ கோவிச்சுக்கறியேப்பா. இந்த நாகரத்தினம்னு சொல்றதெல்லாம் உண்மைச் சமாச்சாரம் தானா?”

ஆமா சார். உங்க பக்கத்து வீட்டு மகராஜுக்கு அத்தனை நாக சக்தி எப்படி வந்திருக்கும்னு நினைக்கிறீங்க. அந்த நாகரத்தினங்க குறைந்தது மூனாவது அவர் கிட்ட இருக்கும்

வேலாயுதம் நாகரத்தினம் பற்றி ஏதும் அறியாதவர் போலவே நடித்தபடி அவன் சொல்வதை ஆச்சரியத்துடன் கேட்டார்.  “அப்படியா அது பார்க்க எப்படி இருக்கும்? அது நாகரத்தினம்னு எப்படித் தெரியும்?”

அதோட ஜொலிப்பு சாதாரணமா இருக்காது சார். அது ஒன்னு இருந்தா சுபிட்சம். அது ரெண்டு இருந்தா பணத்தோட அதிகாரமும் இருக்கும். மூனு இருந்தா அமானுஷ்ய சக்திகளும் கிடைக்கும். மகராஜ் சொல்றதெல்லாம் பலிக்குதுன்னா, நாகசக்தி அதிகமாய் இருக்குன்னா நாகரத்தினம் மூனாவது அவர் கிட்ட இருக்கும்

வேலாயுதம் ஆச்சரியம் தாங்க முடிவதில்லை என்பதைப் போலக் காட்டிக் கொண்டு கேட்டார். “அப்படீன்னா நீயும் பார்த்திருக்கியா?”


அவன் கனவில் பேசுவது போல எங்கோ வெறித்துப் பார்த்தபடி சொன்னான். “ரொம்ப காலத்துக்கு முன்னாடி எனக்கே ஒன்னு கிடைக்கறதுக்கு இருந்துச்சு. ஆனால் கடைசி நேரத்துல கைய விட்டுப் போயிடுச்சு. எனக்குக் கொடுப்பினை இல்லை. வேறெதுவும் சொல்றதுக்கில்லை. பழைய கதை பேசி எதுவும் பிரயோஜனமில்லை.”

அவன் அவரிடம் விடைபெறத் தயாரானான்.

சரி பழைய கதை வேண்டாம். புதுக்கதையே பேசுவோம். நீ கொஞ்ச நேரம் முன்னால ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு தடவை மட்டும் உருவாகற நாகரத்தினம். அது அந்த வீட்டுல உருவாகியிட்டிருக்குன்னு சொன்னியே அதைப்பத்திச் சொல்லு

ஒரு கணம் அவன் முகத்தில் பயம் தெரிந்தது. தேவையில்லாமல் அதைப் பற்றி இந்தக் கிழவனிடம் பேசி விட்டோமோ என்று அவன் நினைப்பதும் புரிந்தது. அவனை அதிகம் யோசிக்க விட்டால்  அதை விவரிக்காமல் போய் விடுவான் என்று பயந்த வேலாயுதம் தன் சட்டைப்பையில் இருந்து நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அவன் கையில் திணித்து விட்டு  அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தபடிஉட்கார். பேசுவோம்என்றார். அவன் கையில் திணிக்கப்பட்ட நோட்டுக்களைத் தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டே தயக்கத்துடன் அவர் அருகில் உட்கார்ந்தான்வேலாயுதம் அங்கிருந்து தங்கள் வீடு தெரிகிறதா என்று பார்த்தார். இல்லை. அப்படியானால் அவர் பாம்பாட்டியோடு பேசுவதைப் பக்கத்து வீட்டுக்காரனும் பார்க்க முடியாது. நல்லது...

வேலாயுதம் பரபரப்புடன் அவனைக் கேட்டார். “சொல்லுப்பா. அந்த உருவாகிட்டிருக்கிற நாகரத்தினத்தைப் பத்தி எப்படி உனக்குத் தெரியும்?”

பாம்பாட்டி சிறிது தயங்கிவிட்டு மெல்லச் சொன்னான். “அந்த நாகரத்தினம் உருவாகறப்ப ஒரு வித்தியாசமான மணம் வரும். அந்த மணம் அந்த வீட்டுல இருந்து வந்துது

நான் பக்கத்து வீட்டுல தான இருக்கேன். எனக்கொன்னும் அந்த மாதிரி மணம் வரலையே

அது எல்லாருக்கும் வராது. அதுக்கு பிரத்தியேகமான மூக்கு வேணும்.”

அதான் சொன்னியே மூனு நாகரத்தினமாவது அங்கேயிருக்குன்னு. அதுல இருந்து அந்த மணம் வந்திருக்கலாமில்லயா

பழைய நாகரத்தினங்கள்ல இருந்து ஜொலிப்பு வெளிவருமே தவிர மணமெல்லாம் வராது. அபூர்வமான விசேஷ நாகரத்தினம் உருவாகறப்ப தான் அதுல இருந்து ஒரு வித்தியாசமான மணம் வரும். நாகரத்தினமே அபூர்வமானது தான்னாலும் இப்ப அங்கே உருவாகியிட்டிருக்கிற நாகரத்தினம் ரொம்ப அபூர்வமானது. பெருசு. சுமார் ஆயிரம் வருஷத்துல ஒரு தடவை தான் இப்படியொரு ரத்தினம் உருவாகும். ஒன்னு ரெண்டு நாள்ல அந்த ஆளுக்கு அந்த ரத்தினம் கிடைச்சுடும். அது மட்டும் கிடைச்சா அந்த ஆள் கடவுள் மாதிரியாயிடுவான். அவன் நினைக்கிறது தான் விதின்னு ஆயிடும்...”

வேலாயுதம் திகைத்தார். “என்னப்பா சொல்றே? நம்ப முடியலையே. எல்லாம் மாயாஜாலக்கதை மாதிரி இருக்கே

பாம்பாட்டி சொன்னான். “சில உண்மைகள் மாயாஜாலக் கதைகளை விடப் பிரம்மாண்டமாய் தான் ஐயா இருக்கும். இந்த விசேஷ நாகரத்தினத்தைப் பத்தி பரம்பரைக் கதையாய் எங்க வீடுகள்ல சொல்லிட்டு வருவாங்க. எந்தக் காலத்துல எவனுக்குப் பார்க்கக் கிடைக்குதோ அவன் அதிர்ஷ்டமானவன்னு சொல்வாங்க. அது உருவாகறப்ப அந்தப் பாம்பு அதை உதிர்க்கிறதுக்கு ரெண்டு நாள் முன்னாடியே மூனு விதமான பூக்களோட மணம் கலந்த ஒரு வாசனை வீச ஆரம்பிச்சுடும்னு சொல்வாங்க. இந்த மாதிரியான ரத்தினம் உருவாகியிட்டிருக்கறப்ப அந்தப் பாம்பு இருக்கிற இடம் ரொம்ப சுத்தமா இருக்கணுமாம். தெய்வீக சூழல் வேணுமாம். அதுக்குத் தனிமை வேணுமாம். வெளியாளுக யாரும் அந்தப் பாம்பிருக்கிற பக்கமே போகக்கூடாதாம்.   இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். இதெல்லாம் சரிவர அமைஞ்சு அந்த நாகம் உதிர்க்கப்போகிற ரத்தினம் சாதாரணமான ரத்தினமா இருக்காதுன்னு சொல்வாங்க….”

வேலாயுதத்திற்கு இப்போது தான் எல்லாம் மெள்ளப் புரிகிறது. நாகராஜ் அந்த நாகரத்தின வரவுக்காகத் தான் அக்கம் பக்கம் கூடத் திரும்பாமல், யாரிடமும் பேச்சு வளர்த்தாமல், யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கிறான். இரவு நேரங்களில் அவன் விசேஷ பூஜைகள் செய்வதும் அதற்காகத் தான் போலிருக்கிறது. விசேஷ தியானம் ஏதோ செய்வதற்காக இன்று காலை வாக்கிங் கூட அவன்  போகவில்லை என்பதை தீபக் சொன்னது நினைவுக்கு வந்தது. இரண்டு மூன்று நாள் வாக்கிங் வர மாட்டான்னு சொன்னதாவும் ஞாபகம். அவரும் சுதர்ஷன் மட்டும் தான் வெளியே போய் வந்ததைப் பார்த்திருக்கிறார்…. பக்கத்து வீடு பெரிய வீடு. தனியாளாக இருந்தும் அத்தனை பெரிய வீட்டை அவன் வாடகைக்கு எடுத்திருப்பது அதனாலேயே இருக்கலாம். வீட்டின் ஒரு பகுதியை அந்த நாகத்திற்காகவே அவன் ஒதுக்கியிருக்கலாம். இவன் சொல்வதும் நடப்பதும் கச்சிதமாக ஒத்து வருகிறதே.

பாம்பாட்டியின் வார்த்தைகள் திரும்பவும் அவர் மனதில் ஒலித்தன. ”ஒன்னு ரெண்டு நாள்ல அந்த ஆளுக்கு அந்த ரத்தினம் கிடைச்சுடும். அது மட்டும் கிடைச்சா அந்த ஆள் கடவுள் மாதிரியாயிடுவான். அவன் நினைக்கிறது தான் விதின்னு ஆயிடும்...”
                                                  
வேலாயுதம் மெல்லக் கேட்டார். “இந்த விஷயம் தெரிஞ்சு யாராவது அந்த நாகத்தை அப்படியே கடத்திட்டாங்கன்னா என்னாகும்?”

பாம்பாட்டி சிரித்தான். “அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை. இந்த நேரத்துல அந்தப் பாம்பை நெருங்கறதே ஆபத்து. தூரத்துல இருந்தே விஷத்தைக் கக்கும். ஒரு நிமிஷத்துல உயிர் எடுக்கறமாதிரியான ஆலகால விஷம் அது. உங்க கிட்ட உண்மையைச் சொல்றதுல தப்பில்ல. நான் சும்மா என்னோட பாம்பு ஒன்னை அந்த வீட்டுக்கு அனுப்பிச்சுப் பாத்தேன். அதுவே அங்கே நெருங்க முடியாமல் திரும்பி ஓடி வந்துடுச்சுன்னா பார்த்துக்குங்களேன்…”

அவனுடைய பாம்பு போன வேகத்தையும், வந்த வேகத்தையும், அவன் அதை அமைதிப்படுத்தின விதத்தையும் மறைந்து நின்று பார்த்த அவருக்கு அவன் சொல்வதெல்லாம் உண்மை என்று இப்போது புரிய ஆரம்பித்தது.

அந்தப் பாம்பு திரும்பவும் அந்த மாதிரி ஒரு ரத்தினத்தை மறுபடி உருவாக்காதா?”

இல்லை ஐயா. அந்த நாகரத்தினத்தை உதிர்த்ததற்கப்புறம் அந்த நாகம் செத்துடும்….”

வேலாயுதம் சிறிது யோசித்து விட்டு ஆர்வமாகக் கேட்டார். “அதுக்கப்புறம் வேறொருத்தன் கைல அந்த நாகரத்தினக்கல் கிடைச்சுட்டா?”

பாம்பாட்டி சொன்னான். “அப்படிக் கிடைச்சுட்டா உலகத்திலேயே அந்த ஆள் தான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியா இருப்பான்.”

வேலாயுதத்தின் கண்கள் கனவில் மின்னின. உலகத்திலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டம் அவர் அறையிலிருந்து சில அடிகள் தொலைவில் தான் இருக்கின்றது. மிகப்பக்கம் தான் அது.


(தொடரும்)
என்.கணேசன்




3 comments:

  1. Very interesting. Velayudham and Kalyan will try to steal the nagarathinam I think.

    ReplyDelete
  2. வேலாயுதத்தின் அடுத்த திட்டம் அந்த நாகரத்தினத்தை திருடறது தான்... இனி மனுசன் இதே வேலையா தான் திரியப் போறார்...

    ReplyDelete
  3. knot is getting tight. Pidi irugi konde pogirathu.

    ReplyDelete