சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 6, 2021

யாரோ ஒருவன்? 62


னார்தன் த்ரிவேதி காளிங்க சுவாமியை அதன் பின்பு சந்திக்காததற்குக் காரணம் பதவி போன விரக்தியும், காளிங்க சுவாமி பதவியைத் தக்க வைத்துக் கொள்ள எந்த உதவியும் செய்யவில்லை என்ற வருத்தமும் கலந்ததாக இருந்தது. அடுத்த தேர்தல் வரை இந்த அரசு கவிழ வாய்ப்பில்லை என்பதால் காளிங்க சுவாமியிடம் சென்று கேட்கவும் அவருக்கு எதுவும் இருக்கவில்லை. அப்படி மறந்திருந்த அவரிடம் மேனேஜர் காளிங்க சுவாமியை இப்போது ஞாபகப்படுத்தியதும் அவர் மிகவும் பரபரப்படைந்தார். காளிங்க சுவாமி காணாமல் போன பொருட்கள் எங்கே இருக்கின்றன, யாரிடம் இருக்கின்றன என்பதை எல்லாம் தன் திவ்ய திருஷ்டியால் பார்த்துச் சொன்னது எதுவும் இது வரை பொய்த்ததில்லை....

ஜனார்தன் த்ரிவேதி கேட்டார். “அமாவாசை எப்போ?”

அதுக்கு இன்னும் ஒன்பது நாள் இருக்கே ஐயா. போன்ல பேச முயற்சி செய்வோமாய்யா?”

காளிங்க சுவாமிக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் மட்டும் அவரிடம் அவசர சமயங்களில் செல்போனிலும் தொடர்பு கொண்டு கேட்க முடியும் என்றாலும் அந்தக் காட்டுக் கோயிலின் முகப்பில் மட்டுமே பேசுவதற்கு சிக்னல் கிடைக்கும். அவரிடம் செல்போன் கிடையாது, அவர் செல்போனில் பேசுவதில்லை என்றாலும் அவருடைய இரண்டு சீடர்களிடமும் செல்போன்கள் உண்டு. அவர்கள் எப்போதாவது செல்போனோடு கோயில் முகப்பில் வரும் போது அபூர்வமாகப் பேச முடிவதுண்டு. அவசர சமயங்களில் மிக வேண்டப்பட்டவர்கள் அவர்களிடம் ஏதாவது சொன்னால் அவர்கள் காளிங்க சுவாமியிடம் கேட்டுச் சொல்வதுண்டு. 

“போன்ல பேச முடியணுமே... எதுக்கும் முயற்சி செஞ்சு பாரு”

மேனேஜர் எல்லா வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு அந்த இரு சீடர்கள் எண்ணையும் மாறி மாறி தொடர்பு கொள்ள முயன்றான்...


ல்யாண் ஒரு முக்கிய வாடிக்கையாளருடன் பேசிக் கொண்டிருக்கையில் அவன் தந்தையின் அலைபேசி அழைப்பு மூன்று முறை வந்து விட்டது. பக்கத்து வீட்டில் வினோதமாக எதையாவது பார்த்திருப்பார்... அந்த வாடிக்கையாளர் போன பிறகு கல்யாண் தந்தையை அழைத்தான். “என்னப்பா?”

சாயங்காலத்துல இருந்து ஒரு பாம்பாட்டி நம்ம வீட்டுக்கு எதிர்ப்பக்கம் உட்கார்ந்துட்டிருக்கான்டா

சரிப்பா. அதுக்கென்ன?”

அவன் பக்கத்து வீட்டையே பார்த்துகிட்டிருக்கான்டா.”

அதுக்கு பக்கத்து வீட்டுக்காரன் தானப்பா கவலைப்படணும்

பக்கத்து வீட்டுக்காரன் வெளியே வந்தா தானே அவனுக்கு தெரியறதுக்கு. அப்பப்ப அந்த பாம்பாட்டி நம்ம வீட்டையும் பார்க்கிறான். அவன் பார்வையே சரியில்லைடா”   

கல்யாண் சலிப்புடன் சொன்னான். “அப்பா பக்கத்து வீட்டுல பாம்பு இருக்கறத எப்படியோ அவன் மோப்பம் புடிச்சுட்டு வந்திருப்பான் போல. அதனால நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நாகராஜ் தான் கவலைப்படணும். ஒரு வீட்டையே பார்த்துட்டு இருக்க அவனுக்கு போரடிச்சிருக்கும். அதான் இடையில அந்த வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற நம்ம வீட்டையும் பார்க்கிறானா இருக்கும்....”

வேலாயுதம் சற்று நிம்மதியடைந்தார். “இருக்கலாம். நம்ம வாசல்ல அவன் இருந்தா கூப்பிட்டு கேட்கலாம். எதிர் வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்கறவனை நாம என்ன கேட்க முடியும்? ஆனாலும் மனசுல எதோ ஒரு கலக்கம். அதனால உனக்குப் போன் பண்ணினேன்...”

கல்யாண் வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தவுடன் தந்தை சொன்னதை முழுவதுமாக மறந்து வேலையில் ஐக்கியமானான்.

இரவு ஏழு மணிக்கு அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது வேலாயுதம் வாசலிலேயே நின்றிருந்தார். அவரைப் பார்த்தபின் தான் அவர் மாலையில் அழைத்துச் சொன்ன தகவல் நினைவுக்கு வந்தது. காரிலிருந்து கல்யாண் இறங்கியதும் வீட்டின் எதிர்ப்பக்கம் பார்த்தான். எதிர் வீட்டுப்பக்கம் யாரோ தரையில் உட்கார்ந்திருப்பது தெருவிளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் தெரிந்தது.

வேலாயுதம் விரைந்து வந்து சொன்னார். “நான் சொன்னது அந்த ஆளைத் தான். நான் நம்ம கூர்க்காவை அனுப்பி அவனுக்கு என்ன வேணும், ஏன் அங்கே உட்கார்ந்திருக்கான்னு கேட்கச் சொன்னேன். அவன் போய்க் கேட்டதுக்கு அந்தப் பாம்பாட்டிஉனக்கென்ன வேணும். நான் இங்கே உட்கார்ந்திருக்கறதுல உனக்கென்ன பிரச்சனைன்னு கேட்கிறான். என்ன கொழுப்பு இருக்கணும் பாரு அவனுக்கு

அந்த எதிர்வீட்டு ஆள் கிட்ட சொல்லி அவனைக் கிளப்ப வேண்டியது தானே?” என்று கல்யாண் கேட்டான்.

எதிர்வீட்டுக்காரன் அந்தமான் டூர் போயிருக்கான். அவன் வீட்டுல யாருமில்லை

சரிப்பா.... அவன் இருந்துட்டு போகட்டும். நமக்கென்ன? நான் அப்பவே சொன்ன மாதிரி கவலைப்பட வேண்டியவன் நாகராஜ். அவன் எதாவது செய்வான். விடுங்க.”

கல்யாண் அதற்கு மேல் அதற்கு முக்கியத்துவம் தரவில்லை. மறுபடி பாம்பாட்டிப் பக்கம் திரும்பவில்லை. இரவு சாப்பிட்டு விட்டுத் தனதறைக்கு உறங்கப் போகும் போது யதேச்சையாக ஜன்னல் வழியாகப் பார்த்த போது தான் அந்தப் பாம்பாட்டியைப் பார்த்தான். தெருவிளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் அப்போதும் அவனால் அந்தப் பாம்பாட்டியை சரியாகப் பார்க்க முடியவில்லை.

அலட்சியப்படுத்த நினைத்தாலும் ஏதோ ஒன்று அவனை அலட்சியப்படுத்தவிடாமல் தடுத்தது. பீரோவிலிருந்து பைனாகுலரை எடுத்தவன் அந்தப் பாம்பாட்டியைத் தெளிவாகப் பார்க்க விரும்பினான்.

பைனாகுலரில் காட்சியைக் குவித்து அந்தப் பாம்பாட்டியைப் பார்த்த அவன் மறுகணம் மின்சாரத்தைத் தொட்டவன் போல அதிர்ந்து வேகமாகப் பின்வாங்கினான். இதயம் சம்மட்டி அடிகள் அடிக்க ஆரம்பித்தன. அவன் மனதில்இந்த ஆள் ஏனிங்கே வந்தான்?” என்ற கேள்வி பிரம்மாண்டமாய் எழுந்தது.

பிறகு அறிவுபூர்வமாக யோசிக்க யோசிக்க அவன் முதலில் உணர்ந்த பயம் அர்த்தமற்றது என்பது புரிந்தது. கண்டிப்பாக அவன் விலாசம் அறிந்து அந்தப் பாம்பாட்டி அங்கே வந்திருக்க வழியில்லை.  இப்போதும் கூட அந்தப் பாம்பாட்டியின் பார்வை பக்கத்து வீட்டின் மேலேயே இருந்தது. எப்போதாவது ஓரிரு முறை இந்தப் பக்கமும் அவன் பார்த்தான் என்றாலும் அவன் பார்வை முக்கியமாகவும், அதிகமாகவும் லயித்திருந்தது பக்கத்து வீட்டின் மேல் தான். அவன் பக்கத்து வீட்டில் பாம்புகள் இருப்பதை எப்படியோ அறிந்து தான் வந்திருக்கிறான் என்று தோன்றியது. அந்தப் பாம்புகளைப் பிடித்துக் கொண்டு போக வந்திருக்கிறானா அல்லது வேறு ஏதாவது உத்தேசம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் அவன் தேடி வந்தது தன்னையல்ல என்ற புரிதல் ஓரளவு அவனை அமைதிப்படுத்தியது.

அந்தப் பாம்பாட்டி அவனை இப்போது நேருக்கு நேர் பார்த்தாலும் இத்தனை வருடங்கள் கழித்து அவனை நினைவில் வைத்திருப்பது கஷ்டம் தான். ஏனென்றால் இந்த இருபத்தியிரண்டு வருடங்களில் கல்யாண் தோற்றத்தில் எத்தனையோ மாறியிருக்கிறான். அப்படி அவனுக்குப் பார்த்தது போல் தோன்றினாலும் எப்போது எங்கே பார்த்தோம் என்று நினைவிருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு... அப்படியே நினைவிருந்தாலும் கூட அவர்களது முந்தைய சந்திப்புக்குப் பின் நடந்த நிகழ்வுகளை அவன் அறிந்திருக்க வழியில்லை. அதனால் பிரச்சினை ஒன்றுமில்லை... கல்யாணின் மனம் நிம்மதியடைந்தது.

மறுபடி பைனாகுலர் மூலம் அந்தப் பாம்பாட்டியைப் பார்த்த போது பாம்பாட்டி இப்போதும் பக்கத்து வீட்டைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். நிம்மதி அடைந்து கல்யாண் மெல்லத் திரும்பிய போது அவன் மனைவி மேகலா சலித்துக் கொண்டாள். “வர வர உங்கப்பா மாதிரியே நீங்களும் ஆயிட்டு வர்றீங்க. நேரங்காலமில்லாம அவர் பக்கத்து வீட்டைப் பார்க்கிறார். நீங்க எதிர் வீட்டைப் பார்க்கிறீங்க. என்ன நடக்குதுன்னே ஒன்னும் புரியலை...”

கல்யாண் புன்னகைத்தான். “எதிர்வீட்டு வாசல்ல எவனோ உக்காந்திருக்கான். அங்க ஆளுக இல்லை. அந்தமான் போயிருக்காங்க. அதனால உட்கார்ந்திருக்கறவன் திருடனாய் இருக்குமோங்கற சந்தேகத்துல பார்த்தேன். அவ்வளவு தான்...”

சொல்லி விட்டு இயல்பாக வெளியேறுவது போல அறையை விட்டு வெளியே கல்யாண் வந்தான். அவனுக்கு அவன் தந்தையிடம் பேச வேண்டியிருக்கிறது...


(தொடரும்)
என்.கணேசன்  

  

5 comments:

  1. Very interestingly new persons come and increase the suspense factor of that incident happened 22 years ago.

    ReplyDelete
  2. பாம்பாட்டியா இது என்ன புதிரான இன்னொரு ஆள்? ஒரே குழப்பமாக உள்ளதே....

    ReplyDelete
  3. Sir, சாணக்யன் எப்படி வந்திருக்கு. நிச்சயம் நல்லபடியா வந்திருக்கும்.புத்திசாலியான hero and villain.அதான் சாணக்கியன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றாக எழுதியிருப்பதாக நினைக்கிறேன். நூல் உங்கள் கைகளில் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் கிடைத்து விடும். சத்ரபதியையும் விடப் பெரிய நூலாக இருக்கும்.

      Delete