சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 9, 2021

இல்லுமினாட்டி 132




ஜிப்ஸி விஸ்வத்திடம் சொன்னபடியே அவன் ஓட்டல் அறைக்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடம் அங்கே இருந்தான். அவனைப் பார்த்த போது விஸ்வத்துக்குப் பொறாமையாக இருந்தது. எத்தனை சக்திவாய்ந்தவர்கள் இவர்கள்? இவர்களுக்குத் தூரங்கள் ஒரு பிரச்சினையே அல்ல. போக்குவரத்தும் பிரச்சினையே அல்ல. இவன் எந்தக் கிரகத்திலிருந்து வந்தானோ அந்தக் கிரகத்தில் எல்லோரும் இவனளவு சக்தி படைத்தவர்களாக இருப்பார்களா, இல்லை இவன் ஏதாவது விசேஷப் பிறவியா? இவனும், க்ரிஷின் வேற்றுக்கிரகவாசி நண்பனும் ஒரே கிரகத்தைச் சேர்ந்தவர்களா? இல்லை இவன் வேறு கிரகமா? இருவரும் பரிச்சயமானவர்களா? அவனைப் பார்த்தவுடன் இத்தனை கேள்விகள் விஸ்வத்தின் மனதில் எழுந்தன. அந்தக் கேள்விகளை ஜிப்ஸி அறிந்திருப்பான் என்பது நிச்சயம். ஆனால் ஏதும் தெரியாதவன் போல் அவன் அமைதி காத்தான்.

முடிந்தால் இவன் போல தூரங்களைக் கடக்க முடிய வேண்டும் என்று விஸ்வத்துக்குத் தோன்றியது. மனிதர்களுக்கு ஏதாவது வகையில் முடியக் கூடிய விஷயமாக அது இருந்தால் அதைக் கற்றுக் கொள்ளும் முதல் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தவுடன் மட்டும் ஜிப்ஸியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.   

ஏன் நான் நினைத்ததற்குச் சிரிக்கிறாய்?” என்று விஸ்வம் கேட்டான்.

அவன் நான் மனதில் நினைத்ததை நீ கண்டுபிடித்து விட்டாயா, உன்னிடம் அந்தச் சக்தி இருக்கிறதா என்றெல்லாம் கேட்காமல் அவன் சக்தியை உணர்ந்தவன் போலவே இந்தக் கேள்வி கேட்டது ஜிப்ஸியின் புன்னகையை விரிவாக்கியது. அவன் சொன்னான். “இந்த ஒரு விஷயத்தில் நீயும் க்ரிஷும் ஒத்துப் போகிறீர்கள். அவனும் ஒவ்வொரு எல்லையாகக் கடக்க வேண்டும் என்று நினைப்பவன். அதற்காக என்ன செய்யவும் தயாராக இருப்பவன்....”

ஜிப்ஸி க்ரிஷை அவனோடு ஒப்பிட்டுப் பேசியதை வேடிக்கையாக எண்ணிய விஸ்வம்  அவனை உனக்கெப்படி, எந்த அளவு தெரியும்?” என்று கேட்டான்.

ஜிப்ஸி சொன்னான். “ம்யூனிக் விமானநிலையத்தில் அவன் வந்திறங்கிய போது அவனைக் கொஞ்சம் ஆராய்ந்தேன்...”

”உனக்கு அப்படி நேரில் போய் ஆராய்ந்தால் தான் தெரியுமா? இருந்த இடத்திலிருந்து எல்லாமே தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவன் நீ என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்...”

ஜிப்ஸி சிரித்தான். “நான் என்ன கடவுளா, இருந்த இடத்திலிருந்தே எல்லாம் தெரிந்து கொள்ள? யாருமே கவனம் செலுத்துகிற விஷயங்களைத் தான் தெரிந்து கொள்ள முடியும். அதுவும் ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நேரில் பார்த்துக் கவனம் செலுத்துவது சுலபம்”

“பின் எப்படி உனக்கு அந்த ரகசிய ஆவணம் கர்னீலியஸிடம் இருப்பது தெரிந்தது?’

“இந்த சர்ச்சிற்கு நாம் வந்து சேர்ந்த போது இங்கே விசேஷ சக்தி அலைகளை நான் உணர்ந்தேன். அதனால் இதற்குச் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கவனிக்கத் தோன்றியது. அப்போது அகப்பட்டது தான் அந்தத் தகவல்...”

கேட்டதற்கெல்லாம் அவன் பதில் சொன்னாலும் அவன் மேலோட்டமாகத் தான் பதில் சொல்வது போல் தோன்றியது. ஆழமாகவும், விளக்கமாகவும் சொல்வதை அவன் தவிர்க்கிறான்.... விஸ்வம் கேட்டான். ”நான் என்ன கடவுளா என்று கேட்டாயே. உண்மையில் கடவுள் இருக்கிறாரா?”

ஜிப்ஸி சொன்னான். “தெரியவில்லை”

மனிதனைக் காட்டிலும் அறிவிலும், சக்திகளிலும் பல மடங்கு உயர்ந்த இவனுக்கே கடவுள் இருக்கிறாரா என்பதில் சந்தேகம் இருக்கும் போது,  மனிதர்களில் பலர் கடவுளை ஆணித்தரமாக எப்படி நம்புகிறார்கள் என்று ஒரு நிமிடம் வியந்த விஸ்வம் இப்போதைக்கு அவசியமில்லாத அந்த விஷயத்தை விட்டு க்ரிஷ் குறித்து தனக்கு எழுந்த சந்தேகத்தைக் கேட்டான். “அவனிடம் ஏதாவது விசேஷ சக்திகள் இருக்கிறதா?” ஹரிணியை மனோகர் கடத்திய போது அந்த இடத்தை செந்தில்நாதன் கண்டுபிடித்தது க்ரிஷின் உதவியால் தான் என்று கண்டுபிடித்திருந்த விஸ்வம் அந்தச் சக்திகளின் அளவையும் அறிந்து கொள்ள ஆசைப்பட்டான்.

அவன் உணர்வுநிலை கூர்மையாகவும், தூய்மையாகவும் இருக்கிறது.  ஆனால் சக்திகளிலும், அதன் பிரயோகத்திலும் உனக்கு அவன் சரிசமமாகவே மாட்டான்... காரணம் அவனுடைய முயற்சிக் குறைவு அல்ல. அவனுக்கு ஈடுபாடுள்ள விஷயங்கள் வேறு பலவும் இருக்கின்றன என்பது தான்...”

சரிசமமாக இல்லாதவன் முக்கியமான நேரங்களில் ஏதாவது செய்து ஜெயித்து விடுகிறானே என்று  எண்ணிய விஸ்வம் சிறிது நேரத்தில் இல்லுமினாட்டியின் தலைமைச் செயற்குழுவுக்கு மின்னஞ்சலில் கடிதம் எழுத ஆரம்பித்தான். அவன் விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்கு டாக்சியில் வந்து கொண்டிருந்த போது தான் வாங் வே அவனிடம் பேசி இருந்தார். அதனால் முதல் வேலையாக அவர் சொன்னதை எழுதி அனுப்ப நினைத்து அதில் ஈடுபட்ட போது ஜிப்ஸி ஓட்டல் அறையின் ஜன்னல் அருகே நின்று வெளியே வேடிக்கை பார்க்கும் பாவனையில் பல சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தான்.

தலைமைக்குழுவுக்கு விஸ்வம் அனுப்பிய மின்னஞ்சல் சுருக்கமாக இருந்தது.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு,

விஸ்வத்தின் வணக்கங்கள். நான் உடல்நலத்தில் தற்போது ஓரளவு தேறியுள்ளேன். தேறியவுடன் என் மனதில் எழுந்த ஒரே ஆவல் தங்களையும், நம் தோழமை உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச வேண்டும், விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும் என்பது தான். அடுத்த பொதுக்குழுக் கூட்டம் எப்போது, எங்கே என்று தெரிவித்தால் நான் கலந்து கொண்டு இல்லுமினாட்டியாக என் கடமையை நிறைவேற்ற விரும்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
விஸ்வம்

இந்தச் சுருக்கமான கடிதம் போதுமல்லவா என்று கேட்க விஸ்வம் திரும்பி ஜிப்ஸியைப் பார்த்தான். அவன் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்ததைப் பார்த்து இவனுக்கும் கூட யோசிக்க எத்தனையோ இருக்கும் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.


தே சமயத்தில் க்ரிஷும் ஜிப்ஸியைப் பற்றித் தான் ஜான் ஸ்மித்துடனும், விஸ்வேஸ்வரய்யாவுடனும் ஆராய்ந்து கொண்டிருந்தான். இம்மானுவல் அவனுடைய ஃபைலில் சேகரித்திருந்த வித்தியாசமான சக்தி அலைகளைப் பற்றி தான் அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். விஸ்வேஸ்வரய்யா அந்த அலைகளிலும் சூட்சுமமான சின்னச் சின்ன வித்தியாசங்களைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். ”... இந்த அலைவரிசைகளின் வீச்சில் உள்ள அடர்த்தி எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை.  சில சமயங்களில் அதிகமாக இருக்கிறது. சில சமயங்களில் குறைவாக இருக்கிறது. பாருங்கள் அந்த அளவீடுகளிலும் அந்த வித்தியாசம் தெரிகிறது..” என்று சொல்லி அதில் குறித்து வைத்திருந்த அளவீட்டு எண்களைக் காண்பித்தார்.

ஜான் ஸ்மித் கேட்டார். “அதற்கு என்ன அர்த்தம்?”

விஸ்வேஸ்வரய்யா சொன்னார். “அந்தக் கூட்டாளி வெளிப்படுத்தும் அலைவரிசைகளிலும் வித்தியாசம் தெரிகிறது என்றால் அவன் பயன்படுத்தும் சக்திகள் மாறுபடுகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம். நம் விஸ்வம் தன்னுடைய சக்திகளை மிகவும் கவனமாக யோசித்துச் செலவு செய்கிறான் என்று நாம் புரிந்து கொண்டது அவனுக்கு மட்டுமல்ல அவன் கூட்டாளிக்கும் பொருந்துகிறது என்றும் சொல்லலாம்.... அவன் பயன்படுத்தும் சக்தி அலைகள் செயற்கைக்கோளின் கருவிகளில் தெரியும் என்பதால் தெளிவாகத் தெரியாதபடி  அவன் அவ்வப்போது கலைத்துப் பரப்பியும் விடுகிறான் போல் தோன்றுகிறது... ஆனாலும் கூட அவன் பரப்பி விடுவதால் தெளிவில்லாமல் மங்கலாகத் தெரியும் அலைகளில் உள்ள அடர்த்தி வித்தியாசத்தை அவன் மாற்ற முடியவில்லை. அதை நீங்கள் கவனித்தால் தெரியும்....” அவர் சில நாட்களை உதாரணமாக அந்த ஃபைலில் காட்டினார்.    

க்ரிஷ் யோசித்த போது ஒரு புதிர் விலகுகிற மாதிரி அவனுக்குத் தோன்றியது. அவன் சொன்னான். “நான் நினைக்கிறேன், அவன் அக்‌ஷய் வரும் போது ஃபோட்டோ எடுத்த பின் அந்த உருவத்தைக் கலைத்திருக்க வேண்டும். அப்படிக் கலையும் போது ஏற்படும் மாற்றங்கள் காமிராவில் தெரிய வாய்ப்பிருக்கிறது என்பதால் தான் அந்தக் காட்சி பதிவாவதை அவன் விரும்பாமல் அதைச் செயல் இழக்க வைத்திருக்கலாம்...”

விஸ்வேஸ்வரய்யா சொன்னார். “இருக்கலாம்... ஆட்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் தெரியும் என்றாலும் எல்லார் கவனமும் அவர்கள் வரவேற்க வந்த பயணிகள் மீதிருக்கும் என்பதால் அதைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான். காமிராப் பதிவாகும் போது அது காட்டிக் கொடுத்து விடும் என்று நினைத்திருக்கலாம்...”

க்ரிஷுக்கு அது சரியென்று தோன்றியது. பின் கேட்டான். “நீங்கள் என் வேற்றுக்கிரகவாசி நண்பன் பூமிக்கு வந்திருந்த போது கண்ட அலைவரிசைகளில் இது போன்ற வித்தியாசங்கள் இருக்கவில்லையா?”

விஸ்வேஸ்வரய்யா சொன்னார். “இருக்கவில்லை. அதன் அலைவீச்சும் அதிகம். அடர்த்தியும் அதிகம். விஸ்வத்தின் கூட்டாளி போல சக்தி வெளிப்பாடுகளில் சிக்கனமாய் உங்கள் நண்பன் இருக்கவில்லை... அவனிடம் சக்தி தாராளமாக இருக்கிறது போலிருக்கிறது... ”

ஜான் ஸ்மித் கேட்டார். “க்ரிஷின் நண்பன், விஸ்வத்தின் நண்பன், இந்த இருவர் அலைவரிசைகளிலும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா? அடர்த்தி, அதிகம், குறைவு என்கிற வித்தியாசத்தை விடுங்கள், நான் கேட்பது இரண்டும் ஒரே ரகமானதா?”

விஸ்வேஸ்வரய்யா சொன்னார். “இல்லை”

க்ரிஷ் சொன்னான். “அப்படியானால் இருவரின் கிரகங்களும் வேறு வேறாக இருக்க வேண்டும்....”

இப்படி இரண்டு கிரக ஏலியன்கள் ஒரே சமயத்தில் பூமிக்கு வந்திருப்பது எதில் கொண்டு போய் முடியுமோ என்று ஜான் ஸ்மித் கவலைப்பட்டார்.

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Two Aliens!!! Interesting. But now I worry very much about Washington events. Daringly Viswam wrote a mail also to Illuminati. What next? Eagerly waiting.

    ReplyDelete
  2. Eagerly waiting for next episode

    ReplyDelete
  3. ஜிப்ஸி சில விசயங்களுக்கு தெரியவில்லை என்று கூறுகிறான்...
    ஆனால், கிரிஷ் நண்பன் எதை கேட்டாலும் அதற்கான விளக்கம் கொடுப்பான்...

    கிரிஷ் நண்பன் அலைவரிசையில் மட்டும் அதிகம் இல்லை... அவன் திறனும் அதிகம் தான்...

    ReplyDelete