சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 8, 2020

சத்ரபதி 128


ள்ளிரவில் முவாசிம் எழுப்பப்பட்டான். அவனுடைய காவலாளி சொன்னான். ”இளவரசே! டெல்லியிலிருந்து தங்கள் நண்பரிடமிருந்து ஒரு வீரன் வந்திருக்கிறான். காலை வரை காத்திருக்க முடியாதென்றும், உடனே தங்களுக்குத் தெரிவித்தாக வேண்டிய அவசரத்தகவல் என்றும் கூறுகிறான்.”

உறக்கம் தெளிந்த முவாசிம்முக்கு முதலில் மனதில் தோன்றியது சக்கரவர்த்தி இறந்து விட்டார் அல்லது இறக்கும் தறுவாயில் இருக்கின்றார் என்ற செய்தியாக இருக்கும் என்ற சந்தேகமே. அரியணை ஏறக் காத்திருக்கும் இளவரசன் என்ற வகையில் அவன் கேட்கக் காத்திருக்கும் தகவல் அது தான். அவசரமாக “உடனே உள்ளே அனுப்பு” என்று கட்டளையிட்டு விட்டு அவன் பரபரப்பாகக் காத்திருந்தான்.

உள்ளே வந்து வணங்கி நின்ற வீரன் அவனுடைய மிக நெருங்கிய நண்பனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். நீண்ட காலம் அந்த நண்பனிடம் பணி புரிபவன். அவனிடம் முவாசிம் பரபரப்புடன் கேட்டான். “சொல் வீரனே. சக்கரவர்த்திக்கு என்ன ஆயிற்று?”

அந்த வீரன் “சக்கரவர்த்தி பூரண ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கிறார்” என்று தெரிவித்தவுடன் ஏமாற்றமடைந்த முவாசிம் “பின் என்ன அவசரத் தகவல்” என்று கேட்டான்.

அந்த வீரன் சொன்னான். “சக்கரவர்த்தி சிவாஜியுடன் போட்டிருக்கும் அமைதி ஒப்பந்தத்தை முறிக்க விரும்புகிறார். சிவாஜியையும், இங்கிருக்கும் அவரது படைத்தலைவரையும், அதிகாரிகளையும் கைது செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார். அவரிடமிருக்கும் கோட்டைகளையும் மீட்கச் சொல்லியிருக்கிறார். அவர் உத்தரவுடன் ஒரு தூதன் வந்து கொண்டிருக்கிறான். நாளை மாலைக்குள் அவன் இங்கு வந்து சேரலாம்.”

முவாசிம் திகைத்தான். “ஏன் இந்த உத்தரவு?”

“சிவாஜியும், நீங்களும் கூட்டுச் சேர்ந்து சதி செய்வதாய் சக்கரவர்த்திக்குச் சந்தேகம் எழுந்திருக்கிறது”

தன் தந்தைக்குப் புத்தி பேதலித்து விட்டதோ என்ற சந்தேகம் முவாசிமுக்கு வந்தது. திகைப்பிலிருந்து மெல்ல மீண்டவனாய்ச் சொன்னான். “நன்றி வீரனே. என் நண்பனிடமும் நன்றி தெரிவிப்பாயாக.” என்று கூறி ஒரு சிறிய பொன்முடிச்சையும் அவனிடம் தந்து அனுப்பினான். பின் அவசர அவசரமாக ப்ரதாப்ராவ் குசாரை வரவழைத்து விஷயத்தைச் சொன்னான்.

ப்ரதாப்ராவ் குசாரும் திகைத்தான். முவாசிம் சொன்னான். “அன்பரே, சிவாஜியிடம் சொல்லுங்கள். இதில் என்னுடைய பங்கு எதுவுமில்லை. சக்கரவர்த்தியின் ஆணை வந்து விட்டால் நான் மீறிச் செயல்பட முடியாது. அதனால் அதற்கு முன் நீங்களும் உங்கள் படையும் இப்போதே தப்பித்துச் சென்று விடுங்கள்….”

ப்ரதாப்ராவ் குசார் “நன்றி இளவரசே” என்று சொல்லித் தலைவணங்கி விட்டுச் சென்றான்.

சிறிது நேரத்தில் மராட்டியக் குதிரைப்படையும், ப்ரதாப்ராவ் குசாரும், மற்ற அதிகாரிகளும் தௌலதாபாதிலிருந்து வேகமாகப் புறப்பட்டார்கள்.

மறுநாள் மதிய வேளையில் ஔரங்கசீப்பின் தூதன் அங்கு வந்து சேர்ந்தான். முவாசிம்மிடம் அவன் தந்த மடலில் ஔரங்கசீப் எழுதியிருந்தான். “அன்பு மகனே. சிவாஜியும் அவன் ஆட்களும் நம் ஆட்சிக்கு எதிராகச் சதித்திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக நமக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. அதனால் அவனிடம் முன்பு போட்ட அமைதி ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் அர்த்தமில்லை. அவன் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்ட கோட்டைகளையும், நாம் அவனுக்குத் தந்த கோட்டைகளையும், நிலப்பகுதிகளையும் திருப்பி எடுத்துக் கொள்ள உத்தரவிடுகிறேன். அங்கிருக்கும் அவனுடைய படைத்தலைவனையும், அதிகாரிகளையும் கைது செய்து சிறையிலடை. படையை நம்முடன் இணைத்துக் கொள். அதற்கு சம்மதிக்க மறுக்கும் வீரர்களையும் சிறையிலடை. முடிந்தால் பேச்சு வார்த்தை என்னும் பெயரில் சிவாஜியை அழைத்து அவனையும் சிறைப்பிடிக்க முயற்சி செய். எல்லாவற்றையும் நான் சொன்னபடியே அனுசரித்துச் செய்து விரிவாகத் தகவல் அனுப்பு. இது என் ஆணை”

இங்கு என்ன நடக்கிறது என்பதை இந்தத் தூதன் விரிவாக அங்கே தெரிவிப்பான் என்பதை அறிந்திருந்த முவாசிம் கம்பீரமாகத் தன் படைத்தலைவர்களை அழைத்து சக்கரவர்த்தியின் ஆணையைத் தெரிவித்து உடனே நிறைவேற்றும்படி கட்டளையிட்டான்.

படைத்தலைவர்கள் மராட்டியப் படைத்தலைவனையும், அதிகாரிகளையும், படைகளையும் காணவில்லை என்று சிறிது நேரத்தில் வந்து அறிவித்தவுடன் “உடனே சென்று தேடுங்கள். கைது செய்தோம் என்ற செய்தியோடு என்னை வந்து சந்தியுங்கள்” என்று முவாசிம் மறுபடி கட்டளையிட்டான். போய்த் தேடியும் எங்கும் அவர்களைக் காணோம் என்று தகவல் வந்தவுடன் சக்கரவர்த்திக்கு முவாசிம் கடிதம் எழுதினான்.

“உலகாளப் பிறந்த மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தியே. எனதருமைத் தந்தையே. சிவாஜியையும், அவன் சதித்திட்டங்களையும் நுட்பமாய் தாங்கள் அறிந்து சொன்னதில் நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனே அவன் ஆட்களைக் கைது செய்ய உத்தரவிட்டேன். ஆனால் நீங்கள் முன்பே கூர்மதியால் உணர்ந்ததை மெய்ப்பிக்கும் விதமாக அவன் படைத்தலைவனும், அதிகாரிகளும், படையினரும் இரவோடிரவாகத் தப்பித்துச் சென்று விட்டார்கள். நன்றி கெட்ட துரோகிகள் தங்கள் சதித்திட்டங்கள் கசிந்து விட்டதென்று முன்னமே யூகித்திருப்பார்கள் போலத் தெரிகிறது. தாங்கள் ஆணையிட்டதற்கிணங்க அவனிடமிருந்து கோட்டைகளையும், நிலப்பகுதிகளையும் மீட்க என் உள்ளமும் துடிக்கிறது. ஆனால் இப்போதுள்ள படைகள் அந்தத் துரோகியுடன் போரிட்டு வெல்லப் போதாதவை. கூடுதல் படையும், படைத்தலைவர்களையும் தாங்கள் அனுப்பி வைத்தால் தங்கள் ஆணையை நிறைவேற்றி அந்தத் துரோகிகளுக்குப் பாடம் புகட்ட எனக்கு உதவியாக இருக்கும்…..”

அந்தக் கடிதத்தை ஔரங்கசீப்பின் தூதனிடமே தந்தனுப்பி விட்டு முவாசிம் தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினான்.


ப்ரதாப்ராவ் குசார் படையுடன் திரும்பி வந்து சொன்னதை எல்லாம் கேட்டு சிவாஜி ஔரங்கசீப் மீது கடுங்கோபம் அடைந்தான். முவாசிம் தந்தையைப் போலவே வஞ்சகனாக இருந்திருந்தால் இன்னேரம் தன் குதிரைப்படையையும், ப்ரதாப்ராவ் குசாரையும் அநியாயமாய் இழந்திருக்க வேண்டியிருந்திருக்கும் என்று எண்ணுகையில் சிவாஜிக்கு ஆத்திரம் வந்தது. காரணமே இல்லாமல் அபாண்டமாய் குற்றம் சாட்டி கைது செய்ய உத்தரவிட்ட ஔரங்கசீப்புக்குத் தகுந்த பாடம் உடனடியாகப் புகட்ட வேண்டும் என்று அவன் உறுதியாக நினைத்தான். ராஜ்கட் கோட்டையின் மேல் தளத்தில் நின்றிருந்த அவன் கண்கள் தூரத்தில் தெரிந்த சிங்கக்கோட்டை மீது தங்கின. மிக வலிமையான கோட்டை. ஒரு காலத்தில் அவனிடமிருந்த அந்தக் கோட்டை இப்போது முகலாயர்களிடம் இருக்கிறது….. உடனே தன் ஒற்றர் தலைவனை வரவழைத்தான்.

ஒற்றர் தலைவன் வந்து வணங்கி நின்றான்.

சிவாஜி அவனிடம் சொன்னான். “இந்த சிங்கக்கோட்டையை நான் திரும்பக் கைப்பற்ற வேண்டும். முடியுமா?”

ஒற்றர் தலைவன் யோசிக்காமல் சொன்னான். “முடியாது அரசே”

சிவாஜி மெல்லச் சொன்னான். “அதாவது எளிதில் முடியாது என்று சொல்ல வருகிறாய். சரிதானே?”

ஒற்றர் தலைவன் முகத்தில் புன்னகை அரும்பியது. ”ஆம் அரசே”

சிவாஜியும் புன்னகைத்தான். பின் கேட்டான். “என்ன காரணங்கள்?”

அந்தச் சிம்மக் கோட்டை சிவாஜியிடம் முன்பு இருந்த கோட்டை. அவன் அவ்வப்போது வாழ்ந்த கோட்டை. அதன் வலிமைகளை அவன் அறிவான். ஆனாலும் அவன் கேட்கிறான் என்றால் தெரிந்ததைச் சரிபார்த்துக் கொள்ளவும், இப்போதைய அதன் நிலவரத்தைத் தெரிந்துக் கொள்ளவும் தான் என்பதை ஒற்றர் தலைவன் அறிவான். அதிலும் கூட அவன் நிறைய அறிவான். ஆனால் அவன் அறியாமல் ஏதாவது தகவல்கள் விட்டுப் போயிருந்தால் அவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கேட்கிறான் என்பதும் புரிந்திருந்த ஒற்றர் தலைவன் சொல்ல ஆரம்பித்தான்.  

“சிங்கக் கோட்டையை ராஜா ஜெய்சிங் உதய்பான் என்ற ராஜபுதனத்து வீரர் வசம் ஒப்படைத்து விட்டுப் போயிருக்கிறார். தகுந்த எஜமானனைச் சரியாகத் தேர்வு செய்ய ராஜா ஜெய்சிங் தவறி விட்டிருந்தாலும், தகுந்த ஆட்களைத் தேர்ந்தெடுத்து பொறுப்புகளில் இருத்தி வைப்பதில் என்றுமே தவறியதில்லை. உதய்பான் உடல்வலிமையில் ராட்சசன். சிறந்த போராளி. அவனைப் பணம் கொண்டோ வேறு விதங்களிலோ நாம் விலைக்கு வாங்க முடியாது. அவன் பிள்ளைகளும் மிக வலிமையானவர்கள். சிங்கக் கோட்டையை நம்மிடமிருந்து பெற்ற பிறகு ராஜா ஜெய்சிங் கூடுதலாய் வலிமைப்படுத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. உள்ளே உள்ள மாற்றங்கள் நமக்குத் தெரியாது என்றாலும் கோட்டைக்குப் போகும் எல்லா வழித்தடங்களையும் நோக்கி குண்டுகள் பொழியும்படி கோட்டை மீது நாம் வைத்திருந்த பீரங்கிகள் புதுப்பிக்கப்பட்டுத் தயார் நிலையில் இருப்பது தெரிகிறது. வேண்டுமளவு வெடிகுண்டுகளையும் அங்கே சேமித்து வைத்திருக்கிறார்கள்….”

சிவாஜி கேட்டான். “பலவீனங்கள்?”

ஒற்றர் தலைவன் சொன்னான். “அவர்கள் மது மாமிசப் பிரியர்கள். இரவுகளில் விருந்து, கேளிக்கைகள் எப்போதும் நடப்பதாகக் கேள்வி”

ஒற்றர் தலைவனை அனுப்பி விட்டு நிறைய யோசித்து விட்டு சிவாஜி தன் நண்பன் தானாஜி மலுசரேயை 12000 வீரர்களுடன் உடனே புறப்பட்டு வர உத்தரவிட்டு ஆளனுப்பினான்.

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. Superb. How did Sivaji plan to get Singakkottai? I am eagerly waiting.

    ReplyDelete
  2. Please mention his age on every event. His story started with Shazahan. Now Shazahan grand son is ready for the throne. But shivaji son is still a child.

    ReplyDelete
    Replies
    1. Shahjahan is elder to Shahaji and Aurangazeb is 12 years elder to Sivaji. Muvasim is eldest son of Aurangazeb. But Sambaji is late born son after 3 daughters. Hence the seeming wide age difference.

      Delete
    2. Thanks for your Clarification. I didn't mean to highlight anything. We know you always think in 360 degrees before you write any statement. I just asked it will be great if you add his age as well. You described so much about his teenage. We imagined him in that way only like a young and charming prince. Give us some input to imagine him as an adult and a king.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அப்போது இரவு நேரத்தில் சிங்கக்கோட்டை சிவாஜியால் கைப்பற்றப்படும்....

    ReplyDelete